ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்



ஆயுர்வேதம்


புகையிலை சுறுசுறுப்பின் எதிரி
- டா. சுவாமிநாதன், ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை, சென்னை

நிகோடின் புகையிலையின் முக்கியச் சத்து. இதுதான் புகையிலையைப் பகையிலையாகக் காட்டுகிறது. நிகோடின் நரம்பு மண்டலத்தில் வேலை செய்யும் கடும் விஷம். இரைப்பையிலுள்ள தசை இயக்கத்தை புகையிலை தணித்து விடுகிறது. அதனால் பசி மந்தமாகி அதன் பலனாக உடல் புஷ்டி படிப்படியாகக் குறைந்து விடுகிறது. இரைப்பையில் வேக்காளத்தை ஏற்படுத்தி புளிப்பு அதிகமாகச் சேர்ந்து தொண்டை எரிச்சல், மார்பு, வயிறு மற்றும் குடல் எரிச்சல் ஆகியவை ஏற்படுகின்றன. நாளடைவில் இந்த எரிச்சல் வாய்ப்புண், இரைப்பை, குடல் புண்களைத் தோற்றுவிக்கின்றன. உடல் திடமும், பதட்டமின்மையும், நெஞ்சுரமும், சகிப்புதன்மையும் புகையிலை போடுவதால் குறைகின்றன. நிகோடின் ரத்தக் குழாய்களைச் சுருங்க வைக்கிறது. மது அவற்றை விரிய வைக்கிறது. ஆகவே மதுவும் புகையிலையும் சேர்ந்தால் உடலுக்கு இரண்டும் கெட்டான் நிலை.

புகையிலை பழக்கத்திலிருந்து மீள முடியாமல் அவதியுறுபவர்களுக்கு மாற்று வழியாக தாம்பூலத்தைக் குறிப்பிடலாம். பொதுவாகவே உணவுக்குப் பிறகுதான் புகையிலையை வாயில் அடக்கிக் கொள்ளத் தோன்றுகிறது. அதற்குக் காரணம் உணவு சாப்பிட்டதும் வாயின் உமிழ் நீர் கலவையும் இரைப்பையில் முதலில் சுரக்கும் ஜீரணத் திரவக் கலவையும் ஜீரண ஆரம்ப நிலையில் கபத்தை உண்டாக்குகின்றன. வாயில் அதிக நீர் ஊறுவது, குழகுழப்பு, எதுக்களிக்கும் உணர்ச்சி போன்றவை இந்தக் கபத்தால் ஏற்படுகின்றன. இவற்றிற்கு நேர் எதிரிடையான குணங்களைக் கொண்ட புகையிலை மீது அந்தச் சமயத்தில் நாட்டம் ஏற்படுவது இயற்கையே. அது போன்ற நேரத்தில் புகையிலை தவிர்த்து அதற்குப் பதிலாக வால்மிளகு, பச்சைக் கற்பூரம், கிராம்பு, ஏலம், ஜாதிக்காய், வாசனைச் சோம்பு கலந்த இரண்டு இளம் தளிர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சுவைப்பது சொர்க்கத்தில் கூட நாம் அனுபவிக்க முடியாத சுகத்தைத் தரும் என்று முனிவர்கள் கூறுகின்றனர். இவை மணமூட்டவும் நாக்கிற்கு விறுவிறுப் பூட்டவும் மொற மொறப்பைத் தரவும் செய்கின்றன.

பாக்கைச் சற்று அதிகமாகச் சேர்த்துக் காலையில் தாம்பூலம் போடுவதால் மலம் சிரமமின்றிப் போகும். பகலில் சுண்ணாம்பைச் சற்று அதிகமாகச் சேர்க்க நல்ல பசி, ஜீரண சக்தி உண்டாகும். இரவில் வெற்றிலையை அதிகமாக்கிக் கொள்ள வாய் மணம் குறையாது. அழுக்கும் அழுகலும் வாயில் தங்காது.

நல்ல பசி வேளையில் தாம்பூலம் போடக்கூடாது. பசியைத் தூண்டக்கூடியதாயினும் துவர்ப்பு வறட்சி மிக்கதானதால் ஜீரணத் திரவக் கலவை குறைந்து விடும். ஆகவே, உணவுக்குப் பிறகே தாம்பூலம் போடுவது நல்லது.

தாம்பூலத்தில் சேர்க்கப்படும் சோம்பு வயிற்றுப் புரட்டலைக் குறைக்கும். ஜாதிக்காய், கிராம்பு, ஏலம், பச்சைக் கற்பூரம் முதலியவை மணமூட்டுபவை. ஜீரண சக்தி அளிப்பவை. மனக் களிப்பூட்டுபவை. உண்ட களைப்பு ஏற்படாமல் சுறுசுறுப்புடன் சோர்வில்லாமல் இருக்கச் செய்யும்.

சிலர் விடியற்காலையில் தாம்பூலம் போடுவார்கள். அவர்கள் குளிர்ந்த நீரில் வாயை நன்கு கொப்பளித்த பிறகு தாம்பூலம் போட வேண்டும். அப்போது முதலில் ஏற்படும் உமிழ்நீர்க்கலவையை விழுங்காமல் துப்பி விட வேண்டும். அதன் மூலம் வாயிலுள்ள அழுகல் கிருமி போன்றவை அழிந்து விடும். அதன் பின்னர் வரும் வெற்றிலைச் சாற்றை விழுங்கி சக்கையைத் துப்பிவிட குடல் சுறுசுறுப்படையும். தாம்பூலத்தின் ஆரோக்கியமான குணங்களைப் பெற நீங்கள் ஒரு போதும் அதனுடன் புகையிலை சேர்க்கக் கூடாது.

Home Page ஆயுர்வேதம்