ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்



ஆயுர்வேதம்


தைராய்டு உபாதயைத் தீக்கலாம்
- டா. சுவாமிநாதன், ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை, சென்னை

தைராய்டு சுரப்பிலிருந்து சுரக்கும் ‘தைராக்சின்‘ எனும் ஹார்மோன் மிக முக்கியமானது. உடலில் ஏற்பட வேண்டிய சமச்சீரான ரசாயன மாற்றங்களை இது செய்கிறது. அதிக அளவிலோ குறைந்த அளவிலோ தைராய்டு சுரப்பி வேலை செய்யும் நிலையில் பலவித இன்னல்களை உடலில் விளைவிக்கின்றது.

ஹைபர்தைராய்டிசத்தில் அதிக அளவில் சுரக்கும் ஹார்மோன்களால் திசுக்களின் பணி துரிதப்படுகிறது. இதனால் சத்து சேராமையும், இதயப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. Grave`s Disease எனும் உபாதையை அதிக அளவில் பெண்களுக்கு ஏற்படுத்தும் இந்த ஹார்மோன் விரைவில் உணவைச் செரிக்கச் செய்து, பசியை மேன்மேலும் தூண்டிவிடும். எவ்வளவு சாப்பிட்டாலும் போதாது என்ற நிலை ஏற்படும். ஆனாலும் உடல் எடை குறையும். நரம்புத்தளர்ச்சி, பொறுமையின்மை, இதயத்துடிப்பு அதிகரித்தல், மூச்சிரைப்பு, தசைகளில் தளர்ச்சி, கழுத்தில் தைராய்டு பகுதி வீங்கும். கண் பெரிதாகி வெளியே உந்தியிருத்தல் போன்றவை காணும். இதற்கு ஆயுர்வேத மருந்துகளாகிய சுகுமாரம் கஷாயம் + வரணாதி கஷாயம் உதவிடக்கூடும். 7.5 மிலி. வீதம் கஷாயம் + 12 ஸ்பூன் சூடான தண்ணீர் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிடலாம்.

ஆயுர்வேதம் இதை ‘கலகண்டம்‘ என்ற உபாதை என்கிறது. மூவகைத் தோஷங்களாகிய வாத பித்த கபங்களில் நிலம் மற்றும் நீரின் தன்மை அதிகம் கொண்ட இனிப்புச் சுவையை உணவில் அதிகம் சேர்ப்பவர்களுக்கு கபம் எனும் தோஷம் சீற்றமடைந்து ரசம் எனும் தாதுவிலிருந்து பிரியாமல் உடல் முழுவதும் சுற்றி வரும்போது தொண்டை, கழுத்து ஆகிய பகுதிகளில் தங்கிக் கசிவுகளை உண்டாக்கி இயற்கை காரியங்களுக்குத் தடை செய்கின்றது. கழுத்துப்பகுதியில் தனிப்பட்ட வளர்ச்சி ஏற்படுவதுதான் ‘கலகண்டம்‘ எனும் உபாதை மேற்குறிப்பிட்ட கஷாயங்கள் கசிவு மற்றும் வீக்கத்தை நீக்கக்கூடியவை.

‘ஹைபோதைராய்டிசம்‘ என்பது ஹார்மோன் சுரப்பது குறைந்து விட்டது என்ற பொருளைக் குறிக்கிறது. இதிலும் தைராய்டு வீங்கியே காணும். உடல் சோர்வு, பருமன், மன அழுத்தம் போன்றவை ஏற்படும். இந்த உபாதை கருத்தரிக்கும் பெண்களுக்கு ஏற்பட்டால் அது குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும். குழந்தை குள்ளமான உருவமாகவே இருக்கும். யுவ யுவதிகளுக்கு இந்த உபாதை ஏற்பட்டால் இதயத் துடிப்பும் மூச்சு விடுவதும் சாதாரண நிலையை விடக் குறைந்து விடும். வியர்வையும் அதிகம் வராது. உடல் பருத்து, தோல் தடித்து, குரல் கம்மிவிடும். தைராய்டு வீக்கத்தில் ஜயோடின் அளவை உணவில் சீராக அமைத்துக் கொள்வதே நல்லது என்று நவீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த உபாதையில் கால்சியம் சத்து குறைந்து பாஸ்பரஸ் சத்து ரத்தத்தில் அதிகரிக்கக்கூடும். பாலிலிருந்து தயாரிக்கப்படும் பதார்த்தங்களில் பாஸ்பரஸ் அதிகமுள்ளதால் அவற்றை நீக்க வேண்டும்.

உடலில் ஒரு பகுதியிலிருந்து சுரக்க வேண்டிய அம்சம் குறைந்து அப்பகுதியை வறட்சியுறச் செய்து தடையை ஏற்படுத்தும் செயலை வாத தோஷமே செய்வதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. ஆனால் கழுத்துப்பகுதி இயற்கையாகவே கபத்தின் இருப்பிடமாகையால் ஆயுர்வேத மருந்து வாத கபங்களை நீக்கும் மருந்தாக இருத்தல் நலம் தரும். அந்த வகையில் குக்குலு திக்தகம் கஷாயம் 15 மிலி + 60 மிலி. சூடான தண்ணீர், ஒரு காஞ்சநாரகுக்குலு எனும் மாத்திரையுடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட நல்லது. மூலகாத்யாரிஷ்டம் 30 மிலி. களை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிடலாம். மருந்துகள் கோட்டக்கல் ஆர்ய வைத்யசாலை கடைகளில் கிடைக்கும். சுமார் 48 நாட்கள் சாப்பிடலாம்.

Home Page ஆயுர்வேதம்