ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்



ஆயுர்வேதம்


தோல் அரிப்பு நீங்க…
- டா. சுவாமிநாதன், ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை, சென்னை

தோலில் ஏற்படும் அரிப்பு, சொரி, சிரங்கு  போன்ற உபாதைகளுக்கான காரணங்களை ஆயுர்வேதம் கீழ்க்காணும் வகையில் எடுத்துரைக்கிறது.

பயம், உழைப்பு, வெயிலில் அலைந்த பின் உடனே குளிர்ந்த நீரில் நீராடுதல், தானாக வரும் வாந்தியை அடக்குதல், உணவு செரிமானமாகாத நிலையில் கலவி இன்பம் கொள்ளுதல், வயிறு புடைக்கச் சாப்பிட்டு பகலில் படுத்து உறங்குதல், தேன், கரும்புச்சாறு, மீன், எலுமிச்சம் பழம், முள்ளங்கி, மணத்தக்காளி இவற்றை அதிக அளவில் எப்போதும் பயன்படுத்துதல், புது அரிசி, கேழ்வரகு ஆகியவற்றை சாதமாக வடித்து பால், தயிர், மோர் ஆகியவற்றில் ஒன்றுடன் கலந்து அதிகம் பயன்படுத்துதல், அஜீரண நிலையில் மேலும் உண்பது போன்றவற்றால் மூன்று தோஷங்களாகிய வாதம், பித்தம், கபம் ஆகியவை சீற்றமடைந்து ரத்தம், மாமிசம், தூய நிண நீர் மற்றும் தோல் ஆகிய பகுதிகளைக் கெடுத்து தோல் உபாதைகளை ஏற்படுத்துகின்றன.

ஆயின்மென்ட், தைலம் தேய்த்தல் போன்ற மேல் பூச்சு மருந்துகளால் இந்நோய் மாறுவதற்கு வாய்ப்பில்லை. தோலில் ஒரு சிறிய பகுதியைப் பாதிக்கும் உபாதைகளுக்கு அந்தப் பகுதியிலிருந்து ரத்தத்தைக் கொத்தி, எடுப்பதால் மட்டுமே இந்நோய் தீர வாய்ப்பிருக்கிறது. புற்று போல் வளர்ந்துள்ள பகுதியில் வேப்பிலையையும், மஞ்சளையும் அரைத்து தொடர்ந்து சில நாட்கள் பற்றுப் போட்டுவர அந்தப் பகுதி மிருதுவான நிலையை அடையும். அதன்பிறகு ரத்தப் பரிசோதனைக் கூடங்களில் கிடைக்கும் Lancet Needle என்னும் ஊசியினைக் கொண்டு ரத்தத்தைக் கொத்தியெடுக்க எளிதாக இருக்கும். கெட்டுப் பதனழிந்த நிலையிலுள்ள நிண நீரும். ரத்தமும் வெளியேற்றப் பட்டால் அரிப்பு நின்று விடும். அதன்பிறகு ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய நால்பாமராதி அல்லது ஜாத்யாதி தைலத்தை பஞ்சில் நனைத்து கொத்தப்பட்ட பகுதியில் ஊறவைக்க வேண்டும். தோல் மிருதுவாகி புற்று போன்ற பகுதி அழுங்கிவிடும்.

தோல் உபாதையால் அவதியுறும் நபர்களுக்கு பொதுவாகவே மருந்தும் பத்தியமும் மிக முக்கியமானவை. மருந்துகளில் ஆரக்வதாதி கஷாயம், 1 வில்வாதி குளிகையுடன் சாப்பிட உகந்தது. 15 மிலி. கஷாயம், 60 மிலி. வெது வெதுப்பான தண்ணீர், 1 மாத்திரை வில்வாதி குளிகையை அதனுடன் அரைத்துச் சேர்த்து காலை, மாலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாள்கள் சாப்பிடவும். காலை, இரவு உணவிற்குப் பிறகு 30 மிலி. கதிராரிஷ்டம் சாப்பிடவும்.

கத்தரிகாய், நல்லெண்ணெய், தயிர், புலால் உணவு, புளிப்பான ஊறுகாய் போன்றவற்றை உணவில் தவிர்ப்பது நலம். பகல் தூக்கம் அரிப்பை அதிகப்படுத்தும் என்பதால் அதைத் தவிர்க்கவும். ரத்தத்தைக் கொத்தி வெளியேற்றும் முறையை நீங்களே செய்து கொள்வது கடினம் என்பதால் தகுந்த ஆயுர்வேத மருத்துவமனையில் இந்தச் சிகிச்சையைச் செய்து கொள்வது நலம். கொத்தும்போது அதிகமான ரத்தப் பெருக்கை உடனடியாக நிறுத்த கோலரக்கு எனும் கொம்பரக்கை பொடி செய்து தூவப் பலன் தரும்.

Home Page ஆயுர்வேதம்