ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்



ஆயுர்வேதம்


உடல் அரிப்பு நீங்க …
- டா. சுவாமிநாதன், ஶ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, நசரத்பேட்டை, சென்னை

மனிதர்களின் நோய்களுக்குக் காரணம் இரு வகைப்பட்டது. சாதாரணம், அசாதாரணம் என்று. அவரவரின் தவறான உணவு முறையாலும், நடவடிக்கைகளாலும் உடல்நிலை கெட்டு நோய் ஏற்படுதல் அசாதாரணக் காரணம். நாம் தங்கியுள்ள ஊரில் காற்று, தண்ணீர், ஆகாயம், பூமி, பருவ காலம் போன்றவை, ரசாயனத் தொழிற்சாலைகளாலும், பார்த்தீனியம் போன்ற விஷச்சத்து நிறைந்த செடிகளாலும் கேடுற்று அதன் மூலமாக பொதுவாக பலருக்கும் நோய் வருவது சாதாரண காரணமாகும். இவற்றில் நீங்கள் எதன் மூலமாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

மீன் குழம்பைச் சாப்பிட்டவுடன் பால் குடிப்பது, தயிரைச் சூடாக்கிச் சாப்பிடுவது, இரவில் தயிரைச் சாப்பிடுவது, முருங்கைக் கீரை, காலிஃபிளவர் போன்றவற்றை சூடான தண்ணீரில் அலசாமல் சமைத்தல், புளிப்புச் சுவை அதிகமுள்ள உணவை விரும்பிச் சாப்பிடுதல், வெயிலில் அலைந்து அதனால் உடற்சூடு அதிகமாகியுள்ள நிலையில் உடன் குளிர்ந்த நீர், மோர், குளிர் பானங்களைக் குடித்தல், பகலில் சாப்பிட்டதும் படுத்து உறங்குதல் போன்ற தனி நபர் செய்யும் தவறான காரணங்களாலும், தொழிற்சாலைக் கழிவுகளால் அப்பகுதியிலுள்ள நீர்நிலை பாதிக்கப்பட்டு அந்த நீரையே குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்துவதாலும், காற்றின் மூலம் பரவும் நுண்ணிய துகள்கள், மகரந்தங்கள் போன்றவற்றைச் சுவாசிக்க நேர்வதாலும் நீங்கள் குறிப்பிடும் உபாதை ஏற்படுகிறது.

மேல் குறிப்பிட்டுள்ள காரணங்களைத் தவிர்க்க முயற்சிக்கவும். மேலும் நீங்கள் வசித்து வரும் இடம் ரசாயனத் தொழிற்சாலைக் கழிவுகள் நிறைந்த இடமாயிருந்தால், வேறு ஏதேனும் பகுதிக்கு சிறிது காலம் மாறி சுத்தமான காற்றும், நீர்நிலையும் கிடைக்கும்படி செய்து கொண்டால் உடல் உபாதை குறைய வாய்ப்பிருக்கிறது. விஷ ஜந்துக்கள் ஏதேனும் நீங்கள் அறியாத நிலையில் தீண்டியிருந்தாலும் தோல் பகுதியில் ஊரலும் தடிப்பும், அரிப்பும் ஏற்பட வாய்ப்புண்டு, உணவு முறையில் கீழ்க்காணும் வகையில் மாற்றம் செய்து கொள்ளவும்.

காலை: உடைத்த அரிசியை உப்புமாவாகச் சாப்பிடவும். புதினா சட்னி (அ) பொட்டுக்கடலை சட்னி.
மதியம்: சூடான புழுங்கலரிசி சாதம், சுட்ட புளி, வறுத்த உப்பு ஆகியவற்றைக் கொண்டு சமைக்கப்பட்ட சின்ன வெங்காய சாம்பார், கேரட் (அ) பருப்பு உசிலி மிளகு ஜீரகம் சேர்ந்த எலுமிச்சம் பழம் ரசம், பூசணிக் கூட்டு, நன்கு கடைந்த வெண்ணெய் நீக்கிய மோர், நார்த்தங்காய் வத்தல்.
இரவு: சுக்கா ரொட்டி (கோதுமை) வேகவைத்த கறிகாய் கூட்டு (கத்தரிக்காய் தவிர்க்கவும்).
ஆயுர்வேத மருந்துகளில் ஆரக்வாதி கஷாயம் 15 மிலி., 60 மி.லி., சூடான தண்ணீர் கலந்து ஒரு வில்வாதி மாத்திரையை அரைத்துச் சேர்த்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலை இரவு உணவிற்குப் பிறகு கதிராரிஷ்டம் 30 மி.லி. சாப்பிடவும். உடல் மற்றும் தலைக்குத் தேய்த்துக் குளிக்க நால்பாமராதி தைலம் பயன்படுத்தவும். இம்மருந்துகள் 48 நாட்கள் வரை சாப்பிடலாம். கோட்டக்கல் ஆர்ய வைத்யசாலைகளில் இம்மருந்துகள் கிடைக்கும்.

பித்தத்தின் சீற்றம் இரத்தத்தில் கலப்பதாலேயே நீர்க் கொப்புளங்கள் ஏற்படுகின்றன. பித்தம் சீற்றமடையக் காரணங்களாக சினம், வருத்தம், அச்சம், பட்டினி கிடத்தல், உப்பு, புளி, காரம் மிகுந்த உணவு, நல்லெண்ணெய், புண்ணாக்கு, கொள்ளு, கடுகு, பூண்டு, வெங்காயம், முள்ளங்கி, மீன், வெள்ளாட்டுக்கறி, தயிர், திரிந்த மோர், மதுபானம் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தினால் பித்தம் சீற்றமடைந்து இரத்தத்தைக் கெடுக்கின்றது. இவ்வாறு இரத்தம் கெட்டுப்போன நிலையில் பகல்தூக்கம், நெருப்பின் அருகே வேலை, வெயில், சோர்வு, அஜீரணத்தைத் தரும் உணவு போன்றவற்றால் இரத்தம் மேலும் கேடடைந்து தோலில் நீர்க்கொப்புளத்தைத் தோற்றுவிக்கின்றன.

இந்நோயின் தன்மை வெளிப்புறம் தெரிந்தாலும் அந்நோயின் வேர்ப் பகுதி இரத்தத்தில் கலந்திருப்பதால் மேல் பூச்சு மருந்துகளால் மட்டுமே இதைக் குணப்படுத்த இயலாது. உட்புறக் கழிவுகளை அகற்ற முதலில் குடல் சுத்தி மருந்துகள் சாப்பிடுவது அவசியம். படோலகடுரோஹிண்யாதி கஷாயம் 15 மிலி. 60 மிலி சூடான தண்ணீர் கலந்து ஒரு கண்மத பஸ்மம் என்னும் கேப்ஸ்யூலுடன் (கோட்டக்கல் ஆர்ய வைத்யசாலையில் கிடைக்கும்) காலை, மாலை வெறும் வயிற்றில் 2 வாரங்கள் சாப்பிடவும். இதன்மூலம் கெட்டுள்ள பித்தநீர் குடலுக்குத் திரும்புவதால் கொப்புளங்களிலுள்ள நீரும் வற்றிவிடும். குடலுக்கு வந்துள்ள பித்தநீரை வெளியேற்ற மாணிபத்ரம் எனும் லேஹ்யத்தைக் காலையில் பசி உள்ள நிலையில் 15-20 கிராம் நக்கிச் சாப்பிடவும். அடிக்கடி சூடான தண்ணீரை மெதுவாகப் பருகவும். ஓர் இடத்த்ல் அமராமல் உலாத்தவும். 5-6 முறை நீர் பேதியாக ஆன பிறகு சூடான மிளகு ரசம், சுட்ட அப்பளம் சாப்பிடவும். அதன்பின்னர் சூடு செய்த மோரில் நல்லெண்ணெயில் தாளித்த கடுகு வெந்தயம், கறிவேப்பிலை கலந்து சாதத்துடன் சாப்பிடவும். குடல் சுத்தம் செய்த மறுநாள் முதல் மதுஸ்நுஹீ ரசாயனம் எனும் மருந்தை ஒரு ஸ்பூன் அளவு (5 கிராம்) காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

உங்களுக்கான பத்திய உணவு:
காலை: சூடான சாதத்துடன் பருப்பு நெய் பிசைந்து வேப்பம்பூ ரசம் (அ) தக்காளி ரசத் தெளிவு, மணத்தக்காளிக் கீரை, வாழைப்பூ வடகறி, கடைந்த மோர்.
மதியம்: சுண்டைக்காய் சாம்பார் சாதம், எலுமிச்சம் பழம் ரசம், கடைந்த மோர்.
இரவு: கோதுமை ரவா உப்புமா, சப்ஜி.
இவ்வகை உணவில் குடலில் தங்கியுள்ள வேண்டாத நீர்க்கசிவுகள், கிருமிகள் போன்றவை வெளியேறிவிடும். இவையெல்லாம்  சாத்தியப்படுமா? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த உபாதைக்கு இவைதான் பத்திய உணவு, முடிந்தவரை நீங்கள் முயற்சி செய்யவும்.

Home Page ஆயுர்வேதம்