அத்தி
Latin Name: Ficus racemosa |
உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. நம் நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுபவை அத்தியும் (உதும்பரம்), பேயத்தியும் (காகோதும்பரம்) ஆகும். சீமை அத்தி (பல்கு) மத்தியதரைக்கடல் நாடுகளில் அதிகமாகப் பயிராகுவது. தற்போது இந்தியாவிலும் இதைப் பயிர் செய்கின்றனர். இவை உற்பத்தியாகும் இடங்களைக் கொண்டும் வெண்மை, கருப்பு, சிவப்பு என நிறங்களைக் கொண்டும் பிரித்தறியப்படுகிறது. இவற்றுள் வெண்மை, சிவப்பு ஆகிய இனத்தவை பெரும்பாலும் பழமாக உண்பதற்கும், கருப்புநிறத்தது மருந்துகளுக்கும், போதை தரும் பானம் செய்யவும் உபயோகிக்கப்படுகிறது. உற்பத்தியாகும் இடத்தில் பச்சையாக உபயோகிக்கப்படினும் கடைகளில் உலர்ந்த பழங்களே நமக்குக் கிடைக்கின்றன.
இவைகளை விசேஷ முரைப்படி இறக்கியோ அல்லது தானாக பழுத்து உதிரும் வரை காத்திருந்து சேமித்தோ பதம் செய்கின்றனர். தானாகப் பழுத்து உதிரும் நிலையில் இவை முக்கால் பங்கு உலர்ந்தே இருக்கும். இவ்விதம் சேமித்த பழங்களைத் தட்டுகளில் நெருக்கமில்லாமல் பரப்பி சிறிது கந்தகப்புகை காட்டிப் பின்னர் வெய்யிலில் சில நாட்கள் உலர்த்தி, அழுத்திச் சப்பையாகச் செய்து நடுவே துளையிட்டு நாரில் கோர்த்து வெளியிடங்களுக்கு அனுப்புகின்றனர். அவற்றின் மிருதுத் தன்மையையும், சுவையையும் பரிமளிக்கச் செய்ய உப்புக் கலவையில் நனைத்துப் பதப்படுத்திக் கட்டி வெளியிடங்களுக்கு அனுப்புவதும் உண்டு. இக்கனிகளுள் சிறிய வண்டுகள் இருக்குமாதலின் கவனத்துடன் உபயோகிக்க வேண்டும். இவை அனைத்தும் சற்றேறக்குறைய ஒரே குணங்கள் கொண்டவையெனினும் பேயத்தியைக் காட்டிலும் அத்தியும், அத்தியைக்காட்டிலும் சீமையத்தியும் தரத்திலும் குணத்திலும் சிறந்தவை.
இவை இனிப்புச் சுவையும் குளிர்ச்சி தரும் தன்மையும் துவர்ப்புச் சுவையும் காரணமாக வெளியேறிக் கொண்டிருக்கும் திரவங்களை ஓரளவு தடுத்து நிறுத்துகிறது. அதிகமான வயிற்றுப் போக்கு, பெண்டிருக்குத் தோன்றும் அளவுக்கு மீறிய மாதவிடாய்ப் போக்கு, வாய், மூக்கு மற்றும் மார்க்கங்கள் வழியே ரத்தமாக வெளியேறும் விரணங்கள் சுத்தமாவதற்கும் விரைவில் ஆறுவதற்கும் இந்த்த் துவர்ப்பு வகை செய்கிறது.
இனிப்புச் சுவை, குளிர்ச்சித் தன்மை, நெய்ப்புத் தன்மை ஆகியவை செயல்படுவதால் மனதிற்கு ஓர் தெளிவையும் உடலுக்கு புஷ்டியையும் ஏற்படுத்துவதுடன் மலச்சிக்கலையும் அகற்றுகிறது. பித்தத்தின் ஸஹஜநிலை மாற்றத்தால் தோன்றும் மயக்கம், (உடல் வெதும்பல்) அங்கங்களில் எரிச்சல், தண்ணீர் வேட்கை, ஆயாஸம், முதலியவையும் குணமடைகின்றன. உதடு, நாக்கு, வாய் இவற்றில் உண்டாகும் புண்ணும் வெடிப்பும் குணமடைகின்றன.
கபம் சுவாஸ நாளங்களை ஆங்காங்கு பற்றிக்கொண்டு அடைந்து இருமல், இழைப்பு முதலியவைகளை உண்டாக்குகின்றது. அந்த நிலைகளில் அத்திப் பழங்களை உபயோகிப்பதால் கபத்தின் அடைப்பு விடுவதுடன் இருமலும் குறைகிறது. கபமும் எளிதில் கோழையாக வெளியேறுகிறது.
இக்கனிகளில் பல உலோக சத்துகளுடன் இரும்புச் சத்தும் இருப்பதாக நவீன விஞ்ஞானிகள் ஆராய்ச்சியின் மூலம் தெளிந்துள்ளனர். இரும்புத் சத்து ரத்தத்தை உண்டாக்கவும், அதைப் பற்றிய கோளாறுகளைச் செப்பனிடவும் இன்றியமையாதது. அதனால் இக்கனிகளை ரத்தத்தை அதிகரிக்கவும், ரத்தத்தின் தரக் குறைவால் உண்டாகும் பாண்டு, காமாலை, வீக்கம், ஆகிய நிலைகளிலும் ரத்தத்தின் மற்ற கோளாறுகளால் உண்டாகும் அரிப்பு. சொரி, குஷ்டம் போன்ற தோலைப் பற்றிய வியாதிகளிலும் உபயோகிக்கின்றோம்.
இக்கனிகள் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உருப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. ஆகையால் ஈரல், குலைக்கட்டி கண்ட குழந்தைகளும் இக்கனிகளை உட்கொள்ளலாம். மூத்திராசயத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது.
ஆங்காங்கு இறுகிய கழிவுப் பொருட்களைப் பக்குவப்படுத்தி இளக்கி வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது. வைசூரி கண்ட நிலைகளில் இக்கனிகளை உபயோகிப்பதால் முத்துக்ள் விரைவில் தோன்றி தோஷங்கள் எளிதில் வெளியேறுகின்றன.
சிறுநீரில் சர்க்கரை உள்ளவர்கள் கூட இக்கனியை உபயோகித்து குணம் பெறலாம்.
தவிரவும் சுண்ணாம்பு, தாம்ரம், துத்தநாகம் இவற்றில் சத்துக்களும், A,C என்ற ஜீவசத்துக்கள் அதிகமாகவும், B வகையினது D என்ற ஜீவசத்துக்கள் குறைந்த அளவிலும் இக்கனிகளில் அமைந்திருக்கின்றன.
இக்கனிகளை அறைத்து கட்டிகளின் மேல் பழுப்பதற்காகப் பூசுவதுண்டு.
இவற்றை உபயோகிக்கும் விதம்
1. பழங்களைப் பிரித்துத் தேனிலும் பொடித்த கற்கண்டிலும் துவைத்து உட்கொள்ளலாம்.
2. பிரித்த பழத்தினுள் பொடித்த கற்கண்டுத் தூளைச் செலுத்தி இரவு பனியில் வைத்திருந்து காலையில் உண்டு வர சரீரத்தின் உஷ்ணம் தனியும்.
3. அத்திப்பழம், பாதாம்பருப்பு, அக்ரோட் பருப்பு, பிஸ்தாப்பருப்பு, சாரப் பருப்பு, பூனைக்காலி விதைப்பருப்பு, ஆப்பிள் விதை, ஏலக்காய், கல்கண்டு இவற்றை சமனெடையாக பொடிக்க வேண்டியவற்றைப் பொடித்தும், அறைக்க வேண்டியவற்றை அறைத்தும், பசுவின் நெய்யில் கலந்து, அத்துடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து ஒரு வாரம் ஊறிய பின்னர் தினம் 1 தோலா வீதம் காலையில் உட்கொள்வதால் பலம், புஷ்டி, வீர்யம் பெருகும். முன்கூறிய வியாதிகளில் நன்மை தரும்.
4. பசுமையான பழங்களைப் பிழிந்தெடுத்த ரஸத்துடன் அல்லது 8 பங்கு ஜலத்தில் நன்கு கொதிக்க வைத்து 2 அவுன்ஸ் மீதமாகக் காய்ந்தவுடன் கசக்கிப் பிழிந்து வடிக்கட்டி எடுத்த கஷாயத்துடன் சம அளவு சர்க்கரை சேர்த்துப் பானகமாகக் காய்ச்சிஉபயோகிக்கலாம். கோடைகாலங்களில் புத்துணர்ச்சி தரும் சிறந்த பானகமாகும் இது.
5. மேற்கூறிய பாகத்தையே மேலும் சிறிது எரித்து அதன் தடிப்பை அதிகமாக்கி ஜாம் போன்றும் உபயோகிக்கலாம்.
6. பழங்களை உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு அவ்வப்பொழுது பால் சர்க்கரை சேர்த்து உட்கொள்ளலாம்.
7. பழங்களைக் காப்பிக்கொட்டை வறுப்பதைப் போன்று வறுத்தப் பொடித்துக் காலை உணவாக உபயோகிப்பதும் உண்டு. ஆனால் இது ஆரோக்கியத்திற்கு அவ்வளவு ஏற்றதல்ல. பழங்களை வறுத்தால் அதன் ஸாரமும் கருகிவிடும்.
8. பழங்களை இரவில் வென்னீரில் ஊறப்போட்டுக் காலையில் பிழிந்து வடிகட்டிச் சாப்பிடலாம். அல்லது ஓரிரண்டு மணி நேரம் ஊறவைத்து உடன் கசக்கிப் பிழிந்தும் சாப்பிடலாம். சரீரத்தின் காங்கை குறையும். மலமிளகி வெளியாகும்.
सदाफलः पुष्पफलः केलूटः शीतवल्कलः।
यज्ञाङ्गो हेमदुग्धः स्यात् क्षीरवृक्ष उदुम्बरः॥ (अभिधानमञ्जरी)
उदुम्बरो जन्तुफलो यज्ञाङ्गो हेमदुग्धकः। (भावप्रकाशिका)
उदुम्बरः क्षीरवृक्षो हेमदुग्धः सदाफलः।
काळस्कन्धो यज्ञयोग्यो यज्ञीयः सुप्रतिष्ठितः॥
शीतवल्को जन्तुफलः पुष्पशून्यः पवित्रकः।
सौम्यः शीतफलं चेति मनुसंज्ञः समीरितः॥ (राजनिघण्टु)
गर्भसन्धानकृच्छीतो व्रणशोधनरोपणः।
फले स्वादुरसे मूले कषायो रूक्ष एव च॥ (मदननिघण्टु)
उदुम्बरो हिमो रूक्षो गुरुः पित्तकपास्रजित्।
मधुरस्तुवरो वर्ण्यो व्रणशोधनरोपणः॥ (भावप्रकाशिका)
उदुम्बरं कषायं स्यात् पक्वं तु मधुरं हिमम्।
कृमिकृत् पित्तरक्तघ्नं मूर्च्छादाहतृषापहम्॥ (धन्वन्तरिनिघण्टु)
औदुम्बरं फलमतीव हिमं सुपक्वं पित्तापहं च मधुरं श्रमशोफहारी।
आमं कषायमतिदीपनरोचनं च मांसस्य वृद्धिकरमम्रविकारकारी॥ (राजनिघण्टु)
उदुम्बरो हिमो रूक्षः कषायो मधुरो गुरुः।
भग्नसन्धानकृद्वर्ण्यो व्रणसोधनरोपणः॥
स्तम्भनानि कषायाणि श्ळेष्मघ्नानि हितानि च।
उदुम्बरशलाटूनि तृट्पित्तास्रहराणि च॥
उदुम्बरफलं बालं कषायं स्वादु शीतळम्।
तृण्मेहपित्तहृच्छर्दिप्रदरास्रस्रुतिं जयेत्॥
प्रौढं बहुमलं तस्य फलं गुरुतरं मतम्।
फलमौदुम्बरं पक्वं शीतळं मधुरं गुरु॥
क्षुत्तृष्णामेहहृद्रुच्यं श्ळेष्मकृत् रक्तनाशनम्। (कैय्यदेवनिघण्टु)
അത്തിവേര് വെട്ടിവാറ്റും നീരതിസാരപ്രമേഹജിത്।
തൃഷ്ണാദാഹാര്ദ്ദിതാനാഞ്ച തഥാസൃഗ്ദരിണാം ഹിതം॥
ഇളയതായുള്ള അത്തിക്കാ സറ്വാതിസാരനാശനം।
ജ്വരഘ്നം ദീപനം പഥ്യം പ്രമേഹഗ്രഹണീഹരം॥
അത്തിപ്പഴം തണുത്തുള്ളു വാതപിത്തഹരം പരം॥ (ഗുണപാഠം)
எஸ்.ஸுவாமிநாதன்,
டீன்,
ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை – 600123
போன் - 9444441771