ஏன் பாலிய விவாஹம்? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

விவாஹம் என்ற ஸம்ஸ்காரத்துக்குப் பல உத்தேசங்கள் உண்டு. அதிலே முக்யமான ஒன்று, ஸ்திரீகளுக்குச் சித்த பரிசுத்தி ஏற்படப் பதி என்ற ஒரு பிடிப்பை ஏற்படுத்தித் தருவது. அதைப் பிடித்துக் கொண்டே அவர்கள் கடைத்தேறி விடுவார்கள். குருவிடம் பிரம்மசாரி சிஷ்யன் சரணாகதி பண்ணிப் பாப நிவிருத்தியடைந்து சுத்த மனஸோடு இருக்கிற மாதிரி இந்தக் கன்னிகையும் இவனிடம் இருக்க வேண்டும்.

நம்முடைய கர்மா, ஜன்மா எல்லாவற்றுக்கும் காரணம் மனஸின் சேஷ்டைதான். இந்த மனஸை வைத்துக் கொண்டு அதனுடைய இச்சைகளைப் பூர்த்தி பண்ணப் பாடுபடுவதில் தான் பாபங்கள் ஸம்பவிக்கின்றன; ஜன்மாக்கள் ஏற்படுகின்றன. மனஸை நிறுத்திவிட்டால் கர்மா இல்லை, ஜன்மா இல்லை, மோக்ஷம்தான். மனஸை நிறுத்துவது மஹாசிரமமான காரியம். அஷ்ட மஹாஸித்திகளைக் கூட அடைந்து விடலாம்; சிந்தையை அடக்கிச் சும்மா இருப்பதுதான் முடியாத காரியம் என்று [தாயுமானவர்] பாட்டுக்கூட இருக்கிறது. மனஸை நிறுத்த முடியாவிட்டாலும், அதைச் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக ஆடும்படி விடாமல் இன்னோரிடத்தில் அர்ப்பணம் பண்ணி விட்டால், அப்போது ‘தனக்காகப் பண்ணிக் கொள்வது’ என்பதால் ஏற்படும் பாபமும் ஜன்மமும் இல்லாமல் போகும். இன்னொருத்தர் ஆட்டி வைக்கிறபடி அவரிடம் மனஸை ஸமர்ப்பித்து விட்டோமானால் நமக்கு கர்த்தா என்கிற பொறுப்பில்லை. அதனால் ஏற்படும் பாப புண்யமும் ஜன்மாவில் இல்லை. “என் செயலாவது யாது ஒன்றுமில்லை” என்று ஈச்வரனிடத்தில் இப்படித்தான் மனஸை அர்ப்பிக்கச் சொல்கிறார்கள். ஆனால் அதைச் செய்பவர் கோடியில் ஒருத்தர்தான். இதையே ஒரு பெண்ணுக்குப் பதியை ஈச்வரனாகக் காட்டியிருக்கிற நம் தர்மத்தில் ஏராளமான ஸ்திரீகள் ஸுலபமாகச் செய்து கடைத்தேறியிருக்கிறார்கள். புருஷனை ஈச்வரனாக நினைப்பது கணவனே கண் கண்ட தெய்வம் என்ற கொள்கை, கல்லானாலும் கணவன் என்ற அடக்க ஸ்வபாவம், பாதிவ்ரத்யம் (கற்பு) , ஸெளமங்கலியம் (சுமங்கலித் தன்மை) , ஸுமங்கலியாகவே செத்துப் போக வேண்டும் என்ற தீவிர‌மான‌ பிரார்த்தனை ஆகிய இவைகள் அநாதி காலமாக நம் தேசத்து ஸ்திரீதர்மமாக, நம் தேசத்துப்பெண்களின் உத்தம ஜீவனத்துக்கு உயிர் நிலையாக இருந்து வந்திருக்கின்றது.

எந்தத் தேசத்திலும் உத்தம ஸ்திரீகள் இருந்திருப்பார்கள்தான். எந்த மதத்திலும் உயர்ந்த குணசாலினிகள் தோன்றியிருப்பார்கள். என்றாலும் மேலே சொன்ன விஷயங்கள் நம் தேசத்தின், நம் மதத்தின் நம் கல்ச்சரின் ஜீவாதாரமான ஒரு அம்சமாக இருப்பது போல் மற்ற இடங்களிலே சொல்ல முடியாது. ‘நாகரிகம்’ என்று சொல்லி கொண்டு இதை மாற்ற நினைப்பது நம்முடைய மஹோன்னதமான பண்பாட்டுக்கே ஆதாரமாக இருக்கப்பட்ட ஒரு ஆணிவேரை வெட்டி விடுகிற மாதிரியாகும்.

காதல் கீதல் என்று சித்த விகாரம் ஏற்படாமல், சரீர நினைப்பும் காமமும் வருகிறதற்கு முந்தியே ஒருத்தனை பர்த்தாவாக அடைந்தால்தான் குழந்தை உள்ளத்தில் உண்டாகிற பணிவினால் அங்கே உண்மையான சரணாகதி செய்து, “இவனே நமக்கு குரு; இவனே நமக்கு ஈச்வரன்” என்று இருக்க முடியும்.

ஆந்திர தேசத்திலும் மஹாராஷ்டிரத்திலும் இன்றைக்கும் ஸ்திரீகளுக்கு விரதங்கள் அதிகம். அவற்றில் ஒன்று கன்னிகைகள் பரமேச்வரனையே பதியாக நினைத்துப் பூஜிப்பது. பிறகு ஒருத்தன் பதியாக வருகிறான். அவனையே பரமேச்வரனாகப் பூஜிப்பது, இப்போது பத்னியாகிவிட்ட அந்த கன்னிகைக்கு விரதமாக ஆகிறது. பரமேச்வரனைப் பதியாகப் பூஜித்து, முடிவில் எவன் பதியாக வந்தாலும் அவனே பரமேச்வரன் என்று பாவித்துவிட வேண்டியது.

கேள்வி கேட்காமல், நம்பிக்கையின் பேரில்தான், அதாவது பால்யத்தில்தான் ஒருத்தனைப் பரமேச்வரனாக நினைக்க முடியும். விவரம் தெரியாத போது வந்த இந்த நம்பிக்கை மனஸில் ஊறி ஊறி, நம் ஸ்வாபாவிகமான ஸ்திரீதர்மத்தினால் மனஸில் உறுதிப்பட்டு விடுவதால், விவரம் தெரிந்த பின்னும் பதியே பரமேச்வரன் என்ற பக்தி நிலைத்து நின்றுவிடும். அவனிடத்திலேயே தன் மனஸை அர்ப்பணம் பண்ணித் தனக்கென்று மான அவமானம் எதுவும் இல்லாமல் ஒருத்தி இருந்துவிட்டால் அவளுடைய அஹம்பாவம் கரைந்து போய்விடுகிறது. அதுதான் ஜனன நிவிருத்தி, அது தான் மோக்ஷம். பக்தி, ஞானம், தபஸ், பூஜை, யக்ஞம், யோகம் என்ற எல்லாம் இந்த அஹங்கார நாசத்தைத்தான் உத்தேசமாகக் கொண்டிருக்கின்றன. இது ஒரு ஸ்திரீக்குப் பதிபக்தியால் ஸுலபமாக, இயற்கையாக ஸித்தித்து விடுகிறது.

இப்படி பாவித்து சரணாகதி பண்ணின நளாயினி, அநஸூயை, ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மியான ஸீதாதேவி, ஸதி என்ற பெயர் பெற்ற தாக்ஷாயிணியான பராசக்தி, ஸாவித்ரி, கண்ணகி, திருவள்ளுவரின் பத்தினி வாஸுகி முதலானவர்களைத்தான் நம் தேசத்தில் தெய்வங்களுக்கும் மேலாக வைத்திருக்கிறது. அவர்களை நினைத்தாலே நமக்கு வேறெதிலும் உண்டாகாத பெருமைப் புளகாங்கிதம் உண்டாகிறது- நமஸ்காரம் பண்ணுகிறோம். ஏன் இப்படி இருக்க வேண்டும் என்றால் சொல்லத் தெரியாது! “பதியே ஈச்வரன் என்பது பேத்தல்; ஸூபர்ஸ்டிஷன்; பெண்களை அடக்கி, நசுக்கி வைக்கிற கொடுமை” என்று எத்தனை ஆக்ஷேபித்தாலும், இப்படி இருப்பதுதான் இந்த தேசாசாரம். பாரத தேசம் என்றால் இங்கே ஹிமோத்கிரியும் கங்கையும் இருக்கிறதோ இல்லையோ? ஏன் இருக்க வேண்டும் என்றால் என்ன சொல்வது? அப்படித்தான் நம் தேசத்துக் கற்பரசிகளின் சரணாகதி வாழ்க்கையும். ஆல்ப்ஸ் மலையை ஐரோப்பியர்கள் நினைக்கிற மாதிரிதானா நாம் கைலாஸத்தை நினைக்கிறோம்? மிஸிஸிபியை அமெரிக்காக்காரன் நினைக்கிற மாதிரி தானா நாம் கங்கையை நினைக்கிறோம்? அதற்கெல்லாம் மேலாக இவற்றிலே தெய்விகத்தை அநுபவிக்கிறோம் அல்லவா? அப்படியேதான் அவர்களுக்கு ஒரு குடும்ப ஏற்பாடாக மட்டும் உள்ள தாம்பத்தியத்தில் நம் சாஸ்திரங்கள் ஒரு பெண்ணுக்கு ஆத்மாவையே சுத்தப்படுத்தித் தருகிற பரம ஸாதனமான சரணாகதியைப் பிசைந்து வைத்திருக்கிறது. சமூக ரீதியில் பெண்களுக்கு நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு இதற்குக் காரணமான பால்ய விவாஹத்தை மாற்றுவதனால் அவர்களுடைய ஆத்மாபிவிருத்திக்கு பெரிய ஹானியை உண்டாக்குகிறோம். சின்ன ஸெளகரியத்தை ஏற்படுத்திக் கொடுத்து மஹா பெரிய பிரயோஜனத்தை நஷ்டப்படுத்துகிறோம்.

பால்ய விவாஹம் பௌதிகமாகக் கெடுதல் என்பது வெறும் பேச்சு. குழந்தையாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டாலும் அப்புறம் அவள் சரீர ரீதியில் பக்குவமான பிறகுதான் தாம்பத்தியம் பண்ண அழைத்துக் கொள்ளப்படுவாள். அதுவும் தவிர தர்ச பூர்ணம் (அமாவாஸ்யை, பௌர்ணமி) போன்ற அநேக தினங்களில் பிரம்மசரிய நியமம் சொல்லியிருப்பதால் சரீரம், சித்தம் இரண்டுமே புஷ்டியோடு இருக்கும். இப்போதுதான் இந்தக் கட்டுப்பாடுகள் போய், சித்தவிகாரம், தேக பலஹீனம் இரண்டும் அதிகமாகி நரம்பு ஸம்பந்தமான டாக்டர்கள் நன்றாக விருத்தியாகும்படி ஆகியிருக்கிறது!

பால்ய விவாஹத்தினால் பால்ய விதவைகள் என்ற கொடூரமான களங்கம் ஏற்பட்டு ஹிந்து மதத்தையே மாசுபடுத்திவிட்டது என்பதுகூட மிகையான வாதம்தான் (exaggeration) பால்ய விதவைகள் இருக்க வேண்டுமானால் அவர்களுடைய கணவன்மார்கள் உயிரோடு இருந்தால் பதினைந்து வயசிலிருந்து இருபத்தைந்து வயசுக்குள் இருப்பார்கள். நான் கேட்டறிந்த மட்டில் இந்த 15-25 வயசு age-group-ல் சாவு ஏற்படுவது ரொம்பவும் குறைச்சல்தான். எனவே பால்ய விதவைகள் சொல்பமாகவே இருந்திருப்பார்கள். இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. ஒரு குழந்தை வைதவ்யம் அடைந்தது என்றால்கூட மனஸுக்கு வேதனையாகத் தான் இருக்கிறது. ஆனால் மொத்த பலனை பார்க்கும்போது இதற்கெல்லாம் விட்டுக் கொடுக்க வேண்டியதுதான்.

இப்போது பெண்ணுக்கு இருபது வயசுக்கு மேல் கல்யாணம் செய்து கொடுக்கிறபோதும் விதி இருந்தால் உடனே வைதவ்யம் வரத்தான் செய்கிறது. ஒரு ரயில் ஆக்ஸிடென்ட், ப்ளேன் ஆக்ஸிடென்ட் என்கிறபோது கல்யாணமாகி ஒன்று, இரண்டு மாஸங்களிலேயே ஜீவனை இழந்தவர்களும் அதில் பலர் இருப்பதைப் பார்த்து ரொம்பவும் கஷ்டப்படுகிறோம், வைதவ்யத்தைத் தடுப்பதற்காக பால்ய விவாஹத்தைத் தடுத்து விடலாம் என்றால், பிற்பாடு வயசு வந்தபின் கல்யாணமானவுடனே வைதவ்யம் வராமல் ‘காரன்டி’ தர நமக்குச் சக்தியில்லையே!

நம் தேசாசாரப்படி ஸ்திரீகள் பதியை ஈச்வரனாக பாவித்து அதன் மூலமாக மஹா பெரிய பலனான ஜன்ம நிவிருத்தியை அடைய வேண்டுமானால் சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதுதான் வழி. அதை விட்டுவிட்டு, “பெண்கள் நிறையப் படிக்கிறார்கள்; உத்யோகம் பார்க்கிறார்கள்; தங்கள் மனசுப்படி கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள்; இதெல்லாம் நம்முடைய progress (முன்னேற்றம்)” என்று சொல்பவர்கள் சொன்னாலும், எனக்கென்னவோ இந்தப் பெண்கள் இப்படிப் பலர் கண்ணில் பட்டுக்கொண்டு, சித்த விகாரங்களுக்கு ரொம்பவும் ஆளாகிற சூழ்நிலையிலே மாட்டிக் கொண்டிருக்கிறார்களே என்றுதான் ஓயாத கவலையாக, பயமாகக் கூட, இருக்கிறது.

‘கட்டுப்பெட்டிகளாக இருந்து கொண்டு இப்படி பெண்களை கட்டுப்பாடு பண்ணி, பால்ய விவாஹம், பால்ய வைதவ்யம் போன்ற கொடூரங்களுக்கு ஆளாக்குகிறார்களே’ என்று சீர்திருத்தக்காரர்கள் கோபித்துக் கொண்டு, பெண்களுடைய சமூக உரிமை போகிறது என்று அழுதால், எனக்கோ, ‘இவர்கள் சீர்திருத்தம் என்கிற பெயரில் நம் பெண்களின் மகத்தான குலதனமான கற்புக்கு ஹானி உண்டாகும்படியான ஹேதுக்களை ஏற்படுத்துகிறார்களே’ என்று அதைவிடக் கோபம் வருகிறது; அழுகை வருகிறது. ‘ஸ்திரீகள் கெட்டுப் போனால் குலக்ஷயம்தான்; லோகமே போய் விடும்; எல்லாரும் நரகத்துக்குப் போகவேண்டியதுதான்: ‘ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ண ஸங்கர:| ஸங்கரோ நரகாயைவ* என்று அர்ஜுன‌னுக்கு அழுகை வ‌ந்த‌ மாதிரி வருகிற‌து.

இக்காலப் பெண்களும் இதற்கு ஸம்மதித்திருக்கிறார்களே, பெற்றவர்களும் அங்கீகரித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே என்பதுதான் மனஸைச் சுடுகிறது.

எல்லா ப்ராக்ரெஸ்ஸையும் எல்லா அட்வான்ஸையும் விட நம் பெண் குழந்தைகள் கெட்டுப் போய்விடக் கூடாதே என்பதுதான் எனக்குப் பெரியதாக, அதே கவலையாக, இருக்கிறது. படிப்பதாலும் உத்யோகம் பார்ப்பதாலும் அப்படியொன்றும் நம் பெண்கள் சித்தம் கெட்டு விடவில்லை என்று எனக்கு ஆறுதல் சொல்கிறார்கள். எனக்கும் அந்த நம்பிக்கை போகவில்லை. ஆனாலும் இப்படி கண்டபடி திரிகிறார்களே, கெட்டுப் போக நிறைய சான்ஸ் இருக்கிறதே, கெடுப்பதற்கு என்றே ஸினிமாவும் நாவலும் பத்திரிகைகளும் இருக்கிறதே என்று பயப்படுகிறேன். அவ்வப்போது கன்னாபின்னா என்று நடந்து விடுகிற சங்கதிகளும் வருகின்றன. தப்பு நடந்து பிறகு அதை என்ன பண்ணி மாற்றுகிறது? இப்படி ஒன்று, இரண்டு கேஸ்கள் கூட நடக்க இந்த தேசத்தில் விடலாமா? என்று மனஸு கொதிக்கிறது. தாயார்-தகப்பனார்களுக்குத் தங்கள் பெண்களைப் பற்றி இருக்க வேண்டிய கவலை, பயம் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து நான்தான் படுகிறேன் போலிருக்கிறது! எல்லாரும் கெட்டுப் போக வேண்டாம். ஆனாலும் ஒரு பால்ய விதவை உண்டானால்கூட களங்கம் என்று சீர்திருத்தக்காரர் சொன்னால், ஒரே ஒரு பெண் கெட்டுப் போனால்கூட அதைவிட ஆயிரம் மடங்கு களங்கம் என்று நான் பயப்படுகிறேன்.

வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை

நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை

மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே.

என்று சொல்லியிருக்கிறது. இதிலே ‘நீதி மன்னர் நெறி’ என் ஜூரிஸ்டிக்ஷனில் [அதிகார எல்லைக்குள்] இல்லாத விஷயம். அதனால் அதைப் பற்றி நான் கவலையோ, ஸந்தோஷமோ படுவதற்குப் பொறுப்பாளி இல்லை. ஆனால் வேதியரை வேதம் ஓதப் பண்ணுவதும், மாதர்களை கற்பு நெறி தவறக்கூடிய ‘சான்ஸ்’ களுக்குக் காட்டிக் கொடுக்காமல், காமம் புகுமுன்பே பதியை ஈச்வரனாக பாவிக்கக் கொடுத்து, அப்புறம் அவன் ஒருத்தனையன்றி மனஸ் கொஞ்சங் கூடச் சலிக்காத பாதிவ்ரயத்யத்தை ஏற்படுத்தித் தருவதும் என் பொறுப்புதான். இந்த இரண்டுக்கும் என்னாலானதைச் செய்ய வேண்டும் என்றுதான் ஓயாமல் நினைத்துக் கொண்டு எதையாவது திட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறேன். Goal ரொம்பவும் எட்டத்தில்தான் இருக்கிறது. என் பிரயத்தனத்தைவிட ஜாஸ்தி வேகத்தோடு அது விலகி விலகிப் போய்க் கொண்டேயிருக்கிறது. அதற்காக இந்த ரேஸில் நான் ஓய்ந்து விடக்கூடாது. அல்லது இப்போது வந்திருக்கிற நாகரிகப் போக்குகள் தான் சரி என்று ‘ஆமாம் பூசாரி’ யாகத் தலையாட்டி விடவும் கூடாது. ‘போனது போனது தான்; சீர் செய்து சாத்தியப்படாது. இப்போது ஏற்பட்டிருக்கிற கலிப் பிரவாஹத்தைத் தடுத்து மாற்றுவது நடக்காத காரியம்’ என்று விட்டு விடுவதற்காக என்னை இங்கே [பீடத்தில்] உட்கார்த்தி வைத்திருக்கவில்லை. அநாதி காலமாக இந்த தேசத்தில் உயர்ந்த நிலையில் இருந்து வந்திருப்பதும், இரண்டாயிரம் வருஷமாக இந்த மடம் பரிபாலித்து வந்திருப்பதுமான வேத அபிவிருத்தியையும் ஸ்திரீதர்மங்களையும் என் காலத்தில் நான் வாயை மூடிக்கொண்டு வாரிக்கொடுத்துவிட்டு ‘ஜகத்குரு’ பட்டம் சூட்டிக்கொண்டு, ஸாக்ஷாத் பகவத்பாதாளின் பெயரை வைத்துக் கொண்டிருந்தால் அதைவிடப் பெரிய தோஷம் இல்லை. பகவான் [கீதையில்] சொன்ன மாதிரி ஜயாபஜயம் அவன் கையில் இருக்கிறது என்று விட்டுவிட்டு, நான் பாட்டுக்கு முன் வைத்த காலைப் பின் வைக்காமல், என் பிரயத்தனத்தை விடாமல் பண்ணிக் கொண்டேதான் போக வேண்டும். ரிஸல்ட் என்னுடைய ‘ஸின்ஸரிடி’யையும், அந்தரங்க சுத்தத்தையும், தபஸையும் பொறுத்து அமையும். கணிசமான பலன் இதுவரைக்கும் ஏற்படவில்லை என்றால் என் ஸின்ஸிரிடி போதவில்லை, என் மனஸ் சுத்தமாகவில்லை, என் தபஸ் குறைச்சல் என்றுதான் அர்த்தம். லோகம் என்னை எத்தனை ஸ்தோத்திரம் பண்ணினாலும் எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது.

எல்லாம் போய்விட்டது என்றால் நான் இதைக்கூடச் சொல்ல வேண்டாம்; ஒரு யத்தனமும் பண்ணவேண்டாம், மடத்தைக் கலைத்து விடலாம். ஆனால், போய்விட வில்லை. ஒரு சின்ன பொறி அளவுக்காவது இருக்கிறது. அதுகூட இல்லையானால் நான் இத்தனை சொல்வதைக் கேட்டுக் கொண்டு நீங்கள் இவ்வளவு பேர் உட்கார்ந்து கொண்டேயிருக்க மாட்டீர்கள். நான் சொல்கிறபடி நீங்கள் செய்வதோ, செய்யாததோ ஒரு பக்கம் இருக்கட்டும். என்னை இவ்வளவு தூரம் சொல்லவாவது விட்டு எதிர்த்து கோஷம் போடாமல், பொறுமையோடு கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களோ இல்லையோ? அதனால்தான் ஒரு பொறியாவது இருப்பதாக நம்பிக்கொண்டு, அதை எப்படியாவது விலா வெடிக்கிற மட்டும் ஊதி ஊதிக் கொஞ்சம் ஜ்வாலை வரும்படிச் செய்ய முடியுமா என்று முயன்று கொண்டிருக்கிறேன். ஜனங்களின் புதுப்போக்குப்படியே நானும் போவது என்றால் அது பகவத்பாதாளுக்குப் பண்ணுகிற துரோகந்தான்.

மனஸிலிருப்பதைக் கொட்டித் தீர்த்தால்தானே நல்லது? பரஸ்பரம் நீங்கள் என்னிடம் பக்தி செய்வதும், நான் ஆசீர்வாதம் செய்வதும் இருக்கட்டும். அது இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனாலும் இந்த மடம் எதற்காக ஏற்பட்டது என்று சொல்லி, அந்த வழியில் உங்களைப் போகப் பண்ணாமல், உங்கள் பணத்தை மட்டும் நான் வாங்கிக் கொண்டால் அது பிடுங்கியடித்துத் தின்கிற காரியந்தான் என்பதால் மனஸை விட்டுச் சொன்னேன்.

வேத ரக்ஷணத்துக்காகப் பண்ணின முயற்சிகளில், போட்ட திட்டங்களில், பராசக்தியின் அநுக்கிரஹத்தால் ஓர‌ள‌வு நல்ல பலன் ஏற்பட்டிருக்கிறது. வீட்டுக்கு வீடு அத்யயனம் இருக்கும்படி பண்ண முடியாவிட்டாலும், அடுத்த தலைமுறைக்கு அத்யயனம் என்ற ஒன்றே இல்லாமல் போய் விடுமோ என்ற நிலைமை மாறி, இப்போது அநேக வித்யார்த்திகள் தேசம் முழுதும் பல பாடசாலைகளில் அத்யயனம், வேத பாஷ்யம் எல்லாம் படித்துப் பாஸ் செய்து வருகிறார்கள்.

இந்தக் கன்யா விவாஹந்தான் சட்டமாகவே வந்து கையை ரொம்பவும் கட்டிப் போட்டுவிட்டது. அரசாங்கச் சட்டத்துக்கு அடங்கித்தான் ஆகவேண்டும். ஒரு பெண்ணுக்கு மனோபாவ விகாரம் இல்லாத காலத்திலேயே ‘இதுதான் தெய்வம்’ என்று நினைக்கும்படியாக ஒரு புருஷனின் கையில் பிடித்துக் கொடுத்து, அந்தப் பழக்கம் ஊறிய பிறகு அதாவது விகாரம் உண்டாகிற காலத்தில் தன் சரீரத்தை அர்ப்பணம் செய்து கொள்ளும்படிச் செய்யவேண்டும் என்கிற தர்ம சாஸ்திரத்தின் நிரந்தரமான சட்டத்துக்கு விரோதமாகத்தான் அரசாங்கச் சட்டம் இருக்கிறது என்றாலும்கூட சட்ட மறுப்பு பண்ணு என்று சொல்வது சரியில்லைதான். அதனால் எறும்பு ஊறக் கல் தேயும் என்கிற மாதிரி நாம் விடாமல் எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருந்து அவர்களுடைய மனஸ் மாறுகிறதா என்று பார்க்க வேண்டியதுதான்.


* கீதை 1.41-2.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is எட்டு வித விவாஹங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  நாம் இப்போதே செய்ய வேண்டியது
Next