வைத்தியத்திலும் ஆன்மிக லக்ஷ்யம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இது மட்டுமில்லை. இதுதான் முக்யமாக மேல் பார்வைக்குத் தெரிந்தாலும் உள்ளுக்குள்ளே இதிலும் பாரமார்த்திகமான லக்யத்தில் சேர்க்கிற ஒரு நோக்கம் இருக்கிறது.

எவ்வளவோ பாபம் பண்ணித்தான் இந்த ஜன்மாவை அடைந்து அலையாக அலைந்துகொண்டு, சாச்வத ஸெளக்யத்தை தெரிந்து கொள்ளாமல் உழன்று கொண்டிருக்கிறோம். இப்போதாவது புண்யங்களைப் பண்ணிப் பண்ணிப் பாபத்தைக் கரைக்க ஆரம்பிக்க வேண்டாமா? புண்ய கார்யங்களை, அநேக தர்மங்களைப் பண்ணியாக வேண்டும். அவற்றை இந்த உடம்பு இருக்கும்பொழுதுதான் செய்ய முடியும். சரீரம் இருந்தால் தான் பலவித பரோபகாரப் பணிகளைச் செய்யமுடியும். இருந்தால் மட்டும் போதாது. பலமுள்ளதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் பிறருக்காக நிறைய ‘ச்ரம் தான்’ பண்ணிப் பாபத்தைக் கரைத்துக் கொள்ள முடியும். கர்மாவைக் கழிப்பதற்காக இடுப்பொடிய யாகம் பண்ணுவது, அல்லது நவாவரண பூஜை பண்ணுவது, நடந்தே திருப்பதி மலை ஏறுவது, நூற்றியெட்டு ஆயிரத்தெட்டு பிராணாயாமம் செய்வது, தியானம் செய்வது என்றால் இதற்கெல்லாம் வியாதியும் வக்கையும் இல்லாத சரீரமிருந்தால்தானே முடியும்? நாம் நோயும் நொடியுமாயிருந்தால் பிறத்தியாருக்கு வேறு எத்தனை கவலை? அவர்களை மெனக்கிட வைத்து எவ்வளவு சிரமம் கொடுக்கிறோம்?

நமக்கு தேஹ உபாதையிருக்கிறபோது ஈச்வர த்யானம் எப்படி ஒருமுகப்பட்டுப் பண்ணுவது? ஜ்வரம், பல் வலி என்று வந்தால் எப்படிப் பூஜை பண்ணுவது?

சரீரத்தில் சக்தி இல்லாவிட்டால், ‘சார்தாம்’என்று ஒவ்வொரு திக்கின கோடியிலும் ஒரு க்ஷேத்ரமாக ஏகப்பட்ட புண்ய ஸ்தலங்களையும் புண்ய நதிகளையும் கொண்ட இந்த தேசத்தில் எப்படி க்ஷேத்ராடன தீர்த்தாடனங்கள் செய்வது? உடம்பிலே வலி அசக்தமென்றால் ஜபம் செய்ய முடியுமா? யோகம் முடியுமா? நிஷ்டை எங்கே? ஞானம் எங்கே?

இப்படியாக, பரமாத்ம ஸ்மரணைக்காகவே சரீரத்துக்கு வியாதி – வராமல் preventive-ஆகவும், வியாதி வந்தால் ஸ்வஸ்தப்படுத்திக் கொள்வதற்காகவும் மருந்துகளையும், பத்யங்களையும், ஆஹார விஹார முறைகளையும், மற்ற ஸுகாதார விதிகளையும் சொல்லிக் கொடுப்பதற்கு ஒரு சாஸ்திரம் தேவைப்படத்தான் செய்கிறது. அதுதான் ஆயுர்வேதம். தர்ம சாஸ்திர விதிகளின்படி ஒருத்தன் சுத்தமான வாழ்க்கை நடத்தி விட்டாலே preventive; எந்த வியாதியும் வராது. ஆனாலும் வைத்ய சாஸ்த்ரமும் இதில் கொஞ்சம் செய்ய வேண்டியதாயிருக்கிறது.

வியாதியின் கஷ்டம் தீர்கிறது மட்டும் போதாது. வியாதியில்லாமல் தீர்க்க ஆயுஸுடனும் இருக்க வேண்டும். அதற்கு இந்த வைத்ய முறை வழி காட்டுகிறது என்பதால் தான் இதற்கு ‘ஆயுர்வேதம்’ என்று பெயர். ‘எப்படியும் முடியப்போகிற ஆயுஸை எதற்கு விருத்தி பண்ணிக் கொள்ள யத்தனம் பண்ண வேண்டும்?’ என்றால் இதற்கும் காரணம் சொன்னேன். உடம்பை வைத்துக்கொண்டுதான் புண்யம் பண்ணிப் பாபத்தைப் போக்கிக்கணும், தர்ம அநுஷ்டானம் பண்ணிக் கர்ம சேஷத்தைக் கழிச்சுக்கணும் என்று சொன்னேன். இப்போது நமக்கு வாய்த்திருக்கிற இந்த உடம்பு நசிக்கிறதற்கு முந்தியே அப்படி “இருவினையப்பு, மல பரிபாகம்” என்று (சைவ ஸித்தாந்திகள்) சொல்கிறபடி கர்மாவை ஈடுகட்டி மும்மலங்களை1 அகற்றிக் கொள்ள வேண்டும்.

“ஏன் இந்த உடம்பு உள்ளபோதே, இன்னொரு ஜன்மா எடுத்து இன்னொரு உடம்பு வந்தால் அதை வைத்துக்கொண்டுதான் பண்ணுவோமே!” என்றால், அடுத்த ஜன்மாவில் வருகிற உடம்பு எப்படிப்பட்டதாயிருக்குமோ?” இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?” என்று மஹான்களே கதறியிருக்கிறார்களே? புண்ய கர்மாக்களைச் செய்ய எல்லா ஸெளகரியமும் பெற்றுள்ள மநுஷ்ய சரீரமாகத்தான் அடுத்த ஜன்மாவில் வாய்க்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்? மநுஷ்யப் பிறவியே லபித்தாலும் ஸத்கர்மா பண்ணுவதற்கு இப்போதிருக்கிற சக்தியும் புத்தியும் ஸெளகர்யமும் ஸந்தர்ப்பமும் surrounding -உம் அப்போது இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்? இப்போது கர்மபூமியான இந்த தேசத்தில் பிறந்து, இத்தனை சாஸ்திரம், க்த்திரம், ஸ்தோத்திரம், அநேக ஸாதனா மார்க்கங்கள், ஆசார்யன், மஹான்களின் உதாரணம் எல்லாம் கிடைத்திருக்கிற மாதிரியே மறுபடியும் கிடைக்குமென்று சொல்லமுடியுமோ ஆனபடியால் இந்த ஜன்மத்திலேயே, இப்போது வாய்த்திருக்கிற இந்த தேஹத்தை வைத்துக் கொண்டே சித்த சுத்தியைப் பெற்று ஜீவன் முக்திய அடையப் பிரயத்னம் பண்ணவேண்டும்.

சக்நோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்-சரீர-விமோக்ஷணாத் |

காம-க்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸுகீ நர: ||

(கீதை 5.23)

என்றே பகவானும் சொல்லியிருக்கிறார். “சக்நோதி இஹைவ” என்று ஆரம்பிக்கிறார். ‘இஹ ஏவ’ என்பதே ‘இஹைவ’என்றாயிருக்கிறது. ‘இஹ ஏவ’என்றால் “இங்கே இருக்கிறபோதே” என்று அர்த்தம். அப்புறம் “ப்ராக்-சரீர-விமோக்ஷணாத்” என்கிறாரே, அதற்கு “இந்த உடம்பு போவதற்கு முன்னாடியே” என்று அர்த்தம். “இங்கேயே இந்த உடம்பு போகிறதற்கு முந்தியே எவன் காம-க்ரோதங்களால் உண்டாகும் சலனத்தைத் தாங்குவதற்கு, அதாவது அதுகளால் தான் பாதிக்கப்படாமல் அவற்றை அடக்கி ஆள்வதற்கு வலியவனாக ஆகிறானோ அவன்தான் யோக ஸித்தி பெற்றவன்; அவன்தான் நிஜ ஸுகத்தைக் கண்டவன்”என்ற கருத்தையே இந்த ச்லோகத்தில் சொல்லியிருக்கிறார்.

காமமும் க்ரோதமும் போகத்தான், அதாவது சித்தம் சுத்தியாகிறதற்குத்தான் இத்தனை புண்ய கர்மாக்கள், மதாநுஷ்டானங்கள். இந்த சரீரம் விழுகிறதற்கு முந்தியே, இதைக் கருவியாக வைத்துக் கொண்டே, இவற்றைப் பண்ணிப் பண்ணி, உயிரும் உடலும் பிரிவதற்கு முன் காமமில்லை, க்ரோதமில்லை என்று ஆக்கிக்கொண்டு விட்டால் அப்புறம் உயிர் பிரிகிறபோது பேருயிர் என்கிறார்களே, அதில் போய்க் கலந்துவிடலாம். மறுபடி உடம்பு எடுக்க வேண்டாம். அப்படிச் செய்யாமல் உயிரை விட்டால் மறுபடி அது மாட்டு உடம்பில் புகுந்து கொள்ளுமோ, ஆட்டு உடம்பில் புகுந்து கொள்ளுமோ நமக்குத் தெரியாது. ஆகையால் காம க்ரோதாதிகளைப் போக்கிக் கொண்டுவிட்டோம், மன மாசுகளை முழுவதும் துடைத்துதெடுத்துவிட்டோம் என்று தெரிகறவரை இந்த சரீரத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கான பிரயத்தனத்தைப் பண்ணத்தான் வேண்டும். நாம் பிரயத்தனம் பண்ணியும் அவன் ஆயுஸை முடித்துவிட்டால் வேறு விஷயம். நம் கர்மா, அவன் லீலை அப்படி நடந்தால் நடந்துவிட்டுப் போகட்டும். அதில் நாம் பண்ணிக் கொள்கிறதற்கு எதுவுமில்லை.

‘சாவு அவன் கையில்தானிருக்கிறது என்றால் அப்புறம் நம் அளவில் நாம் ஆயுஸை நீடித்துக்கொள்ளப் பார்ப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது?’என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். அப்படிப் பார்த்தால், சாவு மட்டுந்தானா? நம்முடைய ஸகல விஷயங்களுமே, கல்யாணம், கார்த்திகை, உத்யோகம், ஸாதனை பண்ணுவது, நல்லது செய்வது, கெட்டது செய்வது எல்லாமே அவன் கையில்தானிருக்கிறது.

அந்த ஸூத்ரதாரி ஆட்டுவிக்காமல் நாம் என்னதான் பண்ண முடியும்? ஆனாலும் ஏதோ ஒரு விநோதமாக இதில் நமக்கே கொஞ்சம் ஸ்வயேச்சை, ஸ்வாதந்திரியம் இருந்து நாமாகப் புருஷ யத்தனம் பண்ணி இந்த மற்ற எல்லா விஷயங்களையும் நடத்திக் கொள்கிற மாதிரிதானே இந்த நாடகம் நடக்கிறது?அதனால் இதில், அவன் கையிலேயே இருக்கிற மற்ற எல்லா விஷயங்களிலும் நம் இஷ்டம், நம் பிரயாஸை இவற்றைக் கொண்டு நாமே செய்து கொள்கிற மாதிரிதான், மரணம் அவன் கையிலேயே இருந்தாலும் இந்தப் பிறவி நீங்குமுன் ஜனன மரணத்தைத் தாண்டுவதற்கான யோக்யதையை நாமே ஸம்பாதித்துக் கொண்டுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆயுஸ் ரக்ஷணை செய்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். இதற்காகவே உடம்பை ஜாக்ரதையாகக் காப்பாற்ற வேண்டும்.

இதற்கு உதவும்படியாகத்தான் அநேக ரிஷிகள் ஆயுர்வேத சாஸ்திரங்களைச் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

ஆயுர்வேதத்தில் இந்த விஷயம் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. “நாஸ்திகனுக்கு வைத்யம் செய்யாதே” என்று அதில் சொல்லியிருக்கிறது. அது இந்த உள்ளர்த்தத்தில்தான். கேட்கிறபோது, ‘இதென்ன? கருணையில்லாமல் இப்படிச் சொல்லியிருக்கே!’ என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் இப்படிச் சொன்னதே கருணையில்தான். வியாதியில்தான் கஷ்டம் தெரிகிறது. கஷ்டம் என்று வரும்போதுதான் எப்படியாவது மீள வேண்டுமென்ற தவிப்பில், ‘கடவுள் இருப்பது நிஜமானால், வேத சாஸ்திரம் நிஜமானால் என்னை அவன் காப்பாற்றட்டும்; நான் அப்புறம் சாஸ்திரப்படி பண்ணுகிறேன்’ என்று ஒரு நாஸ்திகன் பகவான் பக்கம் திரும்பத் தான் செய்வான். பகவானும் அவனை சொஸ்தப்படுத்தினாலும் படுத்துவான். அப்பர், கூன்பாண்டியன் மாதிரியானவர்கள் நாஸ்திகர்களானபோது, ஈச்வர ஸங்கல்பத்திலேயே அவர்களுக்கு வியாதி வந்து அப்புறம் ஈச்வர சக்தியிலேயே அவர்கள் குணமானதையும், அதனால் அநேகம் பேர் வேதத்துக்குத் திரும்பி ஆஸ்திகர்களாக ஆனதையும் பற்றிப் படிக்கிறோம். அந்தக் காலத்தில்தான் அப்படி நடந்தது என்றில்லை. இப்போதும் அநேக நாஸ்திகர்கள் வேங்கடாசலபதி, குருவாயூரப்பன், இல்லாவிட்டால் யாரோ ஒரு மஹான் அல்லது ஸித்த புருஷரின் அநுக்ரஹத்தால் ரொம்பவும் உக்ரமான ஏதோ ஒரு பிணி தீர்ந்ததில்தான் தெய்வநம்பிக்கை உள்ளவர்களாக மாறியிருக்கிறார்கள் என்று அவர்களே எழுதிப் படிக்கிறோம். வைத்தியமே இல்லை என்றால்தான் ஒரு நாஸ்திகன் பகவான் பக்கம் திரும்ப அதிகம் ‘சான்ஸ்’ உண்டு. பகவானுக்கும் இவனைக் காப்பாற்றுவதன் மூலம் இன்னம் அநேகரைத் திருப்பிக் கொள்ளும் ‘சான்ஸ்’ கிடைக்கும்! காப்பாற்றாவிட்டாலும் கடைசி காலத்தில் இந்த நாஸ்திகன் அவனை நினைத்தற்காக அடுத்த ஜன்மாவில் ஆஸ்திக்ய புத்தி உள்ளவனாகப் பிறப்பிப்பான்.

வைத்தியம் செய்து வியாதியைப் போக்காததால் ஒரு நாஸ்திகன் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டியதாகும் அல்லவா? இந்தக் கஷ்ட அநுபவத்தால் அவனுடைய பாபம் குறையும். இது ஒரு உபகாரந்தானே? பாபத்தைப் போக்கிக்கொள்ள அவன் வேறு எந்த அநுஷ்டானமும் பண்ணாதவனாச்சே!

நாஸ்திகனுக்கு வைத்யம் பண்ணி ஆயுஸை விருத்தி பண்ணுவதால் அவன் நாஸ்திக்ய பாபத்தையும் விருத்தி செய்து கொள்வதாகவே ஆகும். அவனால் ஊர் கெடுவதற்கும் ஜாஸ்தி வாய்ப்புத் தந்ததாகும். இந்த மஹா தோஷமெல்லாம் அவனுக்குச் சேர வேண்டாமென்ற கருணையால்தான் அப்படிச் சொன்னது. இந்த விஷயம் இருக்கட்டும்.

நான் சொன்னவற்றிலிருந்து என்ன ஏற்படுகிறதென்றால் மத ரீதியாகவும், வேதாந்த த்ருஷ்டியாகவும் பார்த்தால்கூட சரீர ஸம்ரக்ஷணம் அவசியந்தான். “தர்மத்தை ஸாதிப்பதற்குரிய கருவியாக இருப்பது இந்த சரீரமே அல்லவா? “சரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதநம்?” என்றே காளிதாஸன் எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறான்2. “சுவரை வைத்தே சித்ரமெழுதணும்” என்பது இதுவே. ஹோமத்துக்கு தர்ப்பையும் ஸமித்தும் நெய்யும் மற்ற ஆஹுதி திரவியங்களும் எப்படி ஸாதனமோ அப்படியே ஹோமம் பண்ணுகிற யஜமானனின் உடம்பு ஒரு ஸாதனம். இது இல்லாவிட்டால் எப்படி லோக க்ஷேமார்த்தம் வேத வேள்விகள் நடக்க முடியும்? இந்த வாழ்க்கையே ஒரு ஹோமமாகிறபோது அதிலே ஆஹுதிவாவதற்கே ரக்ஷித்துக்கொள்ள வேண்டிய ஸாதனமாக சரீரம் ஆகிறது.

‘நெல்லுதான் முக்யம், உமியை உதறிவிட வேண்டும்; ஆத்மாதான் நெல்லுமணி, சரீரம் உமி மாத்திந்தான்’ என்று ரொம்பவும் வேதாந்தமாகச் சொல்வதுண்டு. ஆனால் இந்த உமியையும் உதறிவிடாமல் ஹோமத்துக்கு என்று சேகரித்து வைக்கிறோம்! நெல்லை ஹவிஸ்ஸாக்கி ஆஹுதி பண்ணுகிறோமென்றால், அந்த ஆஹுதியை ஏற்றுக்கொள்கிற அக்னி விருத்தியாவதற்காக உமியையே பிரயோஜனப்படுத்துகிறோம்! அந்த உமியைப் போலவே இந்த சரீரத்தையும் ரக்ஷிக்க வேண்டும்.

மொத்தத்தில் இதுவரை நான் சொன்னதில் என்ன ஏற்படுகிறதென்றால், சரீரம் எக் கேடு கெட்டாலும் பொருட்டில்லை என்று ஆத்மாவிலே ஆணி அடித்த மாதிரி நிற்கிற பக்வம் வருகிறவரை, அல்லது அடுத்த பக்ஷமாக எத்தனை உடம்புக்கு வந்தாலும் அதை கவனிக்காமல் ஈச்வர த்யானம் பண்ணுகிற ‘ஸ்டெடினெஸ்’ வருகிற வரை, உடம்பை வியாதி வக்கையில்லாமல் காப்பாற்றிக் கொள்ள வேண்டியவர்களாகவே இருக்கிறோம்.

மீமாம்ஸை என்று ஒரு சாஸ்திரம். அதிலே பூர்வ மீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை என்று இரண்டு பிரிவு3. பூர்வ மீமாம்ஸை கர்ம மார்க்கத்தையும் அதைச் சேர்ந்த தர்மாநுஷ்டானங்களையும், உத்தர மீமாம்ஸை ஞான மார்க்கத்தையும் சொல்பவையாகும். இந்த இரண்டுக்கும் சரீர ரக்ஷணை செய்துகொள்ள வேண்டியதாயிருக்கிறது. ஸமாதியில் நிஷ்டை கூடுகிற ஸ்திதி உண்டாகிறவரை ஞானமார்க்கக்காரனும் அநேக ஞான நூல்களைப் படித்து ஆத்ம விசாரம் பண்ணுவதற்காக ஆரோக்யத்தைப் பேணிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

யோகத்தில் ராஜயோகம் பண்ணும்போது ஆஸனம், பிராணாயாமம் ஆகியவை நல்ல ஆரோக்யத்தையும் தருபவைதாம். ஹடயோகத்திலோ உடம்பை ஆச்சர்யமான சக்தி உள்ளதாக ஆக்கிக் கொள்கிறார்கள்.


1அணுவால் ஏற்படும் ஆணவ மலம், கர்மாவால் ஏற்படும் கார்மிக மலம், பேதப் பார்வையால் ஏற்படும் மாயா மலம் என்று மூன்று சைவ ஸித்தாந்தத்தில் கூறப்படுகிறது.

2 ‘குமாரஸம்பவம்’ 5.33

3 “தெய்வத்தின் குரல்” இரண்டாவது பகுதியில் “ ” என்ற உரை பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is உடம்பை பேணுவது எதற்காக?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  மணி, மந்திரம், ஒளஷதம்
Next