வேத, சாஸ்த்ரங்களில் தான தர்மம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

‘எண் நான்கு அறம்’ என்று முன்னே சொன்ன முப்பத்திரண்டு மட்டுமில்லாமல் வேத சாஸ்திரங்களில் ஏராளமான தானங்களைச் சொல்லியிருக்கிறது. ராஷ்ட்ரகூட ராஜ்யத்தில் முக்யமான ஸ்தானத்தில் இருந்த ஹேமாத்ரி என்றவர் இந்த தானங்களையெல்லாம் தொகுத்து ஒரு புஸ்தகம் எழுதியிருக்கிறார். ”தான ஹேமாத்ரி” என்றே அதற்குப் பெயர். எழுநூறு வருஷங்களுக்கு முன் எழுதிய இந்தப் புஸ்தகத்துக்கு ஆதாரம் அதற்கும் இருநூறு வருஷங்கள் முந்தி லக்ஷ்மீதரர் எழுதிய ‘க்ருத்ய கல்பதரு’. இப்போது ‘கனோஜ்’ என்கிற கான்யகுப்ஜத்தில் வஸித்தவர் இந்த லக்ஷ்மீதரர். அதிலே சொல்லாத தானமே இல்லை. ‘வித்யா தானம்’ என்று படிப்புத் தருவது, அணைகள் கட்டி ஜனங்களுக்கு உபகாரம் பண்ணுவது முதலான ஸோஷல் ஸர்வீஸ் எல்லாவற்றையுமே அதில் தானம் பண்ணுவது என்று சொல்லியிருக்கிறது.

வேதத்திலும் தான மஹிமை எங்கு பார்த்தாலும் சொல்லியிருக்கிறது. வேத சிரஸான உபநிஷத்துக்களில் ரொம்பப் பெரிசானது ‘ப்ருஹதாரண்யகம்’- அந்தப் பேருக்கு அர்த்தமே ‘பெரிய காடு’ என்பது. அப்படிக் காடாக விரிந்த அந்த உபநிஷத்தில் (5.2) ஒரு கதை வருகிறது. உபநிஷத்துக்களில் தத்வங்கள் (ஃபிலாஸஃபி) அப்படியே கொட்டிக் கிடப்பது மட்டுமில்லை;நடுநடுவே ரஸமான கதைகள் வரும். இந்தக் கதைகளின் மூலமும் ஒரு பெரிய தத்வம் பிரகாசிக்கும். அப்படி ‘ப்ருஹதாரண்யக’த்தில் கொடையைப் பற்றி ஒரு கதை வருகிறது.

தேவர்கள், அஸுரர்கள், மநுஷ்யர்கள் எல்லாருமே பிரம்மாவுக்கு ஒரே மாதிரி குழந்தைகள்தாம். பரமாத்மாவுக்கு பல தினுஸான லீலை வேண்டியிருக்கிறது. நல்லது கெட்டதுகளை மோதவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கிறது. அதற்காக அவர் பிரம்மாவைக் கொண்டு தேவஜாதி, அஸுரஜாதி, மநுஷ்யஜாதி முதலானவைகளை ஸ்ருஷ்டிக்கச் செய்கிறார். இந்த மூன்று ஜாதிக்கும் நல்லதைச் சொல்ல பிரம்மா கடமைப்பட்டிருக்கிறார்.

ஒரு ஸமயம் தேவர்கள் எல்லோரும் பிரம்மாவிடம் போய், ”எங்களுக்குச் சுருக்கமாக ஒரு உபதேசம் பண்ணுங்கள்” என்று ப்ரார்த்தித்துக் கொண்டார்கள்.

ப்ரம்மா,”த”என்ற ஒரே ஒரு அக்ஷரத்தை மட்டும் சொல்லிவிட்டு, ”இதுதான் உபதேசம். இதற்கு அர்த்தம் புரிந்து கொண்டீர்களா?” என்றார்.

நம்மிடத்திலே இருக்கிற தப்பு நமக்கே நன்றாகத் தெரியுமானதால் யாராவது ரொம்ப ஸுக்ஷ்மமாக, ஸுசனையாக எடுத்துக் காட்டினால்கூட உடனே புரிந்து கொண்டு விடுவோம்.

இந்த ரீதியில் தேவர்களுக்கு, ப்ரம்மா ”த” என்று சொன்னவுடனேயே அதற்கு இன்னதுதான் அர்த்தமாக இருக்கும் என்று புரிந்துவிட்டது. தேவர்களிடம் இருக்கிற பெரிய கோளாறு இந்த்ரிய நிக்ரஹம் (புலனடக்கம்) இல்லாததுதான். தேலோகம் ஆனந்த லோகமல்லவா? அங்கே ஸுகவாஸிகளாக மனம்போனபடி இருப்பது தேவர்களின் வழக்கம். ஆனபடியால், ”இந்த்ரியங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றுதான் ப்ரம்மா பண்ணுகிறார் (குறிப்பால் உணர்த்துகிறார்) என்று புரிந்து கொண்டார்கள்.

”புரிந்துவிட்டது. ‘தாம்யத’ என்று தாங்கள் உபதேசித்துவிட்டீர்கள்” என்று பிரம்மாவிடம் சொன்னார்கள்.

தமம், சமம் என்று இரண்டு உண்டு. இரண்டும் அடக்கத்தைக் குறிப்பது. புலனடக்கம், மனஸடக்கம் என்ற இரண்டைக் குறிப்பிட தமம், சமம் என்று ஒரே ‘அடக்க’த்திற்கான இரண்டு வார்த்தைகளைச் சொல்வது. சமம் தமம் முதலான ஆறு குணங்களை ”சமாதி ஷட்க ஸம்பத்” என்று பெயரிட்டு ஸாதகர்களுக்கெல்லாம் நம் பகவத்பாதாள் விதித்திருக்கிறார். சமத்தோடு கூடிய நிலைதான் சாந்தி. தமத்தில் அடங்கியிருப்பது தாந்தி. ஒன்றை மட்டும் சொன்னால் அதுவே இரணடுவித அடக்கத்தையும் குறிக்கும்.

”தாம்யத” என்றால் ”தமத்தைச் செய்யுங்கள். அதாவது இந்த்ரியங்களையும் மனஸையும் கட்டுப்பாடு (control) பண்ணிக் கொள்ளுங்கள்” என்று அர்த்தம்.

ப்ரும்மா ”த”என்று சொன்னது ‘தாம்யத’வுக்கு abbreviation (சுருக்கம்) என்று தேவர்கள் அர்த்தம் பண்ணிக் கொண்டார்கள்.

ஒரு முழு வார்த்தையைச் சொல்வதைவிட அதில் முதல் எழுத்தை மட்டும் சொன்னால் அதற்கு ஜாஸ்தி சக்தி இருக்கிறது. சர்ச்சில்கூட ”வி” ஃபார் விக்டரி ” என்று சொல்லி, எங்கே பார்த்தாலும் அந்த ‘வி’யை மந்த்ரம் மாதிரிப் பரப்பினார்.

”நீங்கள் அர்த்தம் பண்ணிக் கொண்டது ஸரிதான்” என்று சொல்லி ப்ரம்மா தேவர்களை அனுப்பினார்.

மநுஷ்யர்களுக்கும் இதேமாதிரி உபதேசம் வாங்கிக் கொள்கிற ஆசை வந்தது.

அவர்களும் பூர்வகாலத்தில் ப்ரம்மாவை நெருங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அதனால் அவரிடம் போய், ”உபதேசம் பண்ணுங்கள்”என்று வேண்டிக் கொண்டார்கள்.

மறுபடியும் ப்ரம்மா ”த”என்ற அதே சப்தத்தை மட்டும் சொன்னார்.

மநுஷ்யர்களுக்கும் தங்கள் குற்றம் உள்ளுக்குள் உறுத்திக் கொண்டிருந்ததால், தங்களுக்கு அத்யாவச்யமான உபதேசம் இன்னது என்று பளிச்சென்று புரிந்து கொண்டார்கள்.

”அர்த்தம் தெரிந்ததா?”என்று ப்ரம்மா கேட்டவுடன்,

”தெரிந்து கொண்டோம் – ‘தத்த’ என்று உபதேசம் பண்ணியிருக்கிறீர்கள்”என்றனர்.

”தத்த” என்றால் ”கொடு”, ”தானம் பண்ணு”என்று அர்த்தம். ‘தத்தம் பண்ணுவது’, தத்து கொடுப்பது’முதலான வார்த்தைகள் வழக்கத்தில்கூட இருக்கின்றனவே!

”ஆமாம், நீங்கள் ஸரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்” என்று ப்ரம்மா மநுஷ்ய ஜாதியிடம் சொல்லி அனுப்பி வைத்தார்.

தேவர்களும் மநுஷ்யர்களும் உபதேசம் வாங்கிக் கொண்டால் அஸுரர்கள் மட்டும் சும்மாயிருப்பார்களா? அவர்களும் ப்ரம்மாவிடம் வந்து உபதேசம் கேட்டார்கள். அவரும் பழையபடி அந்த ‘க்ரிப்டிக்’ (சுருக்கமான) ”த” உபதேசத்தை பண்ணினார். ”புரிந்ததா?” என்று கேட்டார்.

அஸுரர்களும் உடனே, ”புரிந்து விட்டது ‘தயத்வம்’ என்று உபதேசம் பண்ணிவிட்டீர்கள்” என்றனர்.

ப்ரம்மாவும், ”ஆமாம்” என்றார்.

‘தயத்வம்’ என்றால் ‘தயையோடு இருங்கள்’ என்று அர்த்தம்.

இரக்கமில்லாதவர்களைத்தானே அரக்கர் என்று சொல்லியிருக்கிறது? கொஞ்சம்கூட தயா தாக்ஷிண்யம் இல்லாத க்ரூர ஸ்வபாவம்தான் அஸுரர்களின் இயற்கை. அதனால் ‘த’வுக்கு இப்படி அர்த்தம் பண்ணிக் கொண்டார்கள்.

இடி இடிக்கிறபோது ”ததத”என்கிற மாதிரி சப்தம் கேட்கும். ”தாம்யத – தத்த – தயத்வம்” என்பதுதான் அந்த மூன்று ‘த’.
இது ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருகிற கதை.

நம் சங்கர பகவத் பாதாள் இதற்கு பாஷ்யம் எழுதுகிறபோது, ”இங்கே தேவர் அஸுரர் என்று சொன்னதெல்லாமும், மநுஷ்யர்களுக்கு வேறல்லர். மனிதர்களிலேயே எல்லா நல்ல குணமும் இருந்தும் புலனடக்கம் இல்லாதவர்கள் தேவர்கள்; கொடுக்கிற ஸ்பாவமேயில்லாமல் லோப குணத்தோடு இருப்பவர்கள் அஸல் மநுஷ்யர்கள்; ஹிம்ஸை பண்ணிக்கொண்டு க்ரூரமாக இருக்கிற மனிதர்களே அஸுரர்கள். ஆனதால் மூன்று உபதேசங்ளும் நமக்கே ஏற்பட்டவை என்றுதான் நாம் அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்.

வாஸ்தவந்தான். ஆனாலும் இங்கே சொல்லியிருப்பதிலிருந்து மனிதவர்க்கத்துக்கு என்று ப்ரத்யேகமாக இருக்கிற பெரிய குறைபாடு லோபித்தனம்தான் என்று தெரிகிறது. இந்த்ரிய மனோ நிக்ரஹம் பண்ணினவர்களாகவும், க்ரூர ஸ்வபாவம் துளிக்கூட இல்லாமலும்கூட மனிதர்கள் தங்களை உயர்த்திக்கொண்டு விடலாம். ஆனால் இப்படிப்பட்டவர்கள்கூடப் பொருளை எடுத்துக் கொடுப்பது, தானம் செய்வது என்றால் கொஞ்சம் பின்னேதான் நிற்கிறார்கள். பொருளில் பற்றை விடுவது தான் மநுஷ்யனுக்கு மஹா கஷ்டமாக இருக்கிறது. இதனால்தான் மனிதனுக்கு முக்யமாக ” தத்த – தானம் பண்ணு ” என்று வேதத்தின் முடிவில் இருக்கப்பட்ட உபநிஷத்தே உபதேசம் பண்ணுகிறது.

நம்மில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்த்ரத்தை உபதேசம் வாங்கிக் கொள்கிறோம். சிலர் (சிவ) பஞ்சாக்ஷரீ எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் (நாராயண) அஷ்டாக்ஷரீ எடுத்துக் கொள்கிறார்கள். இப்படியே (முருகனுக்கான) ஷடக்ஷரீ, ராம மந்த்ரம், க்ருஷ்ண மந்த்ரம், அம்பாள் மந்த்ரங்கள் என்று பல இருக்கின்றன. இவற்றை அவரவர் தங்கள் இஷ்டப்படி எடுத்துக் கொள்கிறார்கள். ஆனாலும் நம் அத்தனை பேருக்கும், மநுஷ்ய ஜன்மா எடுத்த ஸகலருக்கும், வேத சிரஸான உபநிஷத்திலேயே உபதேசித்துள்ள மந்த்ரம் ” தத்த : – தானம் பண்ணு; நல்ல கொடையாளியாக இரு”என்பதுதான். நம் இஷ்டம், இஷ்டமில்லை என்பதற்கெல்லாம் இடமில்லாமல், இது நமக்கு வேதம் போட்டிருக்கிற ஆஜ்ஞை!மற்ற மந்த்ரங்களை ஜபிக்க வேண்டும். இந்த ”தத்த” மந்த்ரத்தைக் காரியத்தில் பண்ணிக் காட்ட வேண்டும்.

இந்த உபதேசம் வருகிற ப்ருஹதாரண்யக உபநிஷத் என்பது சுக்ல யஜுர் வேதத்தைச் சேர்ந்தது. நாலு வேதங்களுக்குள் இன்று தேசம் முழுக்க ரொம்பவும் அநுஷ்டானத்திலிருப்பது யஜுர்வேதம்தான். அதில் சுக்லம், க்ருஷ்ணம் என்று இரண்டு பிரிவு உண்டு. வட இந்தியா முழுவதிலும் பெரும்பாலும் அநுஷ்டானத்தில் இருப்பது சுக்ல யஜுஸ்;தென்னிந்தியாவில் ரொம்பவும் அநுஸரிக்கப்படுவது க்ருஷ்ணயஜுஸ். சுக்ல யஜுஸைச் சேர்ந்த ப்ருஹதாரண்யக உபநிஷத்திலிருந்து தானத்தைப் பற்றி சொன்னேன். இதேமாதிரி க்ருஷ்ண யஜுஸில் உள்ள தைத்திரீயோபநிஷத்திலும் (1.11.3) தானத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறது.

அது என்ன சொல்கிறது? ”சிரத்தையோடு தானம் கொடுக்க வேண்டும். அசிரத்தையோடு கொடுக்கக் கூடாது” என்கிறது. ஸ்ரீயை (அதாவது செல்வத்தை) க் கொடுக்கும்போதே மனஸை ஸ்ரீயாக (லக்ஷ்மீகரமாக, மங்களமாக, ஸந்தோஷமாக) வைத்துக்கொண்டு கொடுக்க வேண்டும் என்கிறது. முகத்தைச் சுளிக்காமல் கொடுக்க வேண்டும். ஸ்ரீயின் நிறைவுதான் ‘ச்ரேயஸ்’ என்பது. மனஸில் ஸ்ரீயுடன், மனமலர்ச்சியுடன், கொடுத்தால் இந்த தானத்தின் பலனாக ‘ச்ரேயஸ்’ கிடைக்கிறது. இன்னம் ஜாஸ்தி கொடுப்பதற்கு நம்மால் முடியவில்லையே என்று வெட்கத்தோடு கொடுக்க வேண்டும். ஹ்ரீயுடன் கொடு என்கிறது உபநிஷத். ‘ஹ்ரீ’ என்றால் வெட்கம், லஜ்ஜை என்று அர்த்தம். புருஷ ஸூக்தத்தில் பகவானுக்கு ஹரீ , ஸ்ரீ (லக்ஷ்மி) என்று இரண்டு பத்னிகள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறது. இங்கேயும் லக்ஷ்மியை, அதாவது பொருளைத் தரும்போது, ”ஸ்ரீயோடு கொடு”, ”ஹ்ரீயோடு கொடு” என்று சொல்லியிருக்கிறது. வெட்கம் இரண்டு காரணத்துக்காக. ஒன்று, இன்னும் ஜாஸ்தி தரமுடியவில்லையே என்று; இரண்டாவது, தானம் பண்ணுவது வெளியிலேயே தெரியக்கூடாது என்ற கெனரவமான கூச்சம். வெளியில் தெரிந்தால் மற்றவர்களும் ‘தேஹி’ என்று பிடுங்குவார்களோ என்பதால் அல்ல. இவன் தர்மிஷ்டன் என்று நாலு பேருக்குத் தெரிந்து நம்மை ஸ்தோத்ரம் பண்ண ஆரம்பித்தால் நமக்கு அஹம்பாவம் வந்துவிடும். அது தானத்தின் பலனையெல்லாம் சாப்பிட்டு விட்டுப் போய்விடும்.

தானம் பண்ணிவிட்டு நாம் நம் பெயரைப் பேப்பரில் போட்டுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனாலும், ‘எப்படியாவது நாலு பேருக்கு நாம் தானம் பண்ணினதை நைஸாகத் தெரியப்படுத்த வேண்டும்’ என்கிற எண்ணம் உள்ளூர இருந்தால் அதுவும் தோஷம்தான். அந்த நாலுபேர் நாம் தானம் பண்ணினதற்காக ஒரு பங்கு கொண்டாடினால், அதோடு, ”பண்ணின தானத்தை வெளியிலேயே தெரிவிக்காமல் எத்தனை உத்தமமான குணம்!” என்று பத்து பங்கு ஸ்தோத்திரம் பண்ணுவார்கள். மனஸுக்குள் நாம் இந்த ஸ்தோத்திரத்துக்கு ஆசைப்பட்டுவிட்டால், பேப்பரில் போட்டுக் கொள்வதைவிட இதுவே பெரிய தோஷமாகிவிடும். ஆனாலும் இப்படியெல்லாம் ஆசை, கீசை தலைதூக்கிக்கொண்டுதானே இருக்கிறது? அது தலையைத் தூக்கவொட்டாமல் அழுத்தி வைக்க என்ன பண்ணலாம்? ஒன்று பண்ணலாம் என்று தோன்றுகிறது. அதாவது, ‘தானம் வாங்குகிறவன் நமக்கு அந்நியன் இல்லை; நம்மவனேதான்’ என்ற உணர்ச்சியை நன்றாக வளர்த்துக்கொண்டுவிட்டால் கொடுத்ததை வெளியில் சொல்லவே தோன்றாது. நம் குழந்தைக்கு அல்லது நெருங்கிய பந்துக்களுக்கு நாம் ஏதாவது செய்தால் அதை வெளியில் விளம்பரம் செய்து கொள்வோமா? அதே மாதிரிதான் எவரும் நமக்கு பந்துதான். ஸகல ஜந்துக்களும் ஒரே பார்வதி பரமேஸ்வராளின் குழந்தைகள்தான். அதனால் நாம் ‘தானம் கொடுக்கிறோம்’ என்ற வார்த்தையைச் சொல்வதுகூடத் தப்புதான். ‘பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோம்’ என்று அடங்கி, பவ்யமாகக் கொடுக்க வேண்டும். எங்கே இதிலும் ஓர் அஹங்காரம் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டு கொடுக்க வேண்டும். ” பியா தேயம் ” என்கிறது உபநிஷதம். ”பியா” என்றால், ‘பயந்துகொண்டு’ என்று அர்த்தம். ஸாதாரணமாக, வாங்குகிறவன்தான் பயந்து கொண்டு நிற்பான்;கொடுக்கிறவன் அதட்டிக்கொண்டு கொடுப்பான். வாஸ்தவத்தில் கொடுக்கிறவன்தான் பயப்பட வேண்டும் என்கிறது உபநிஷத். கடைசியாக, ‘ஞானத்தோடு’ கொடுக்க வேண்டும் என்று முடிக்கிறது. ‘ஸம்வித்துடன் என்று சொல்கிறது. ‘ஸம்வித்’ என்றால் ‘நிறைந்த ஞானம்’ கொடுக்கிறவன், வாங்கிக் கொள்கிறவன் இரண்டு பேர்வழிகளும் வாஸ்தவத்தில் ஒருவனேதான் என்ற அறிவுதான் அந்த ‘ஸம்வித்’.

வேதத்தில் கொடையைப் பற்றி இவ்வளவு சொல்லியிருக்கிற மாதிரியே கீதையிலும் (அத்.17) பகவான் சொல்லியிருக்கிறார். அவர் தானத்தில் மூன்று தினுஸு சொல்லியிருக்கிறார். ஒன்று ஸாத்விகம் – உத்தமமானது;இரண்டாவது ராஜஸம் – மத்யமமானது;மூன்றாவது தாமஸம் – அதமமானது. துளிக்கூட ப்ரதி உபகாரத்தை எதிர்பார்க்காமல், தகுந்த பாத்திரத்துக்குத் தகுந்த இடத்தில், தகுந்த காலத்தில் தருவதுதான் ‘ஸாத்விகம்’. தானம் செய்வதால் கிடைக்கிற புண்ய பலனையும், தானம் வாங்கினவன் செய்கிற ப்ரதி உபகாரத்தையும் நினைத்துக்கொண்டு, பொருளில் பற்றுப் போகாததால் உள்ளுக்குள் கொஞ்சம் கஷ்டப்பட்டுக் கொண்டே கொடுக்கிற தானம் ‘ராஜஸம்’என்ற வகையைச் சேர்ந்தது. பாத்திரமில்லாதவர்களுக்குத் தகாத இடத்தில், தகாத காலத்தில், அவமானப் படுத்திக் கொடுப்பது ‘தாமஸம்’ இப்படி க்ருஷ்ண பரமாத்மா தானத்திலேயே distinguish (பாகுபாடு) பண்ணுகிறார்.

புராணங்களிலும் எங்கு பார்த்தாலும் தானத்தின் மஹிமை சொல்லியிருக்கிறது. இன்ன மாஸத்தில், இன்ன இடத்தில், இன்னாருக்கு இன்ன தானம் பண்ணினால் இன்ன பலன் என்று நிறையைச் சொல்லியிருக்கிறது – துலா மாஸத்தில் தானம் விசேஷம்;கங்காதீரத்தில் தானம் விசேஷம் என்கிறாற்போல தர்ம சாஸ்த்ரங்ளிலும், திருக்குறள், ஆத்திசூடி முதலான நீதி நூல்களிலும் அப்படியே ஈகையின் சிறப்பை விஸ்தாரமாகச் சொல்லியிருக்கிறது. ஈகை, தானம் என்பதெல்லாம் என்ன? பரோபகாரத்தின் ஒரு ரூபம் தானே?

ஆனபடியால், ‘ஹிந்து மதத்தில் பரோபகாரத்தைப் பற்றி ஒன்றுமில்லை – ஆசாரம், அநுஷ்டானம், பூஜை, யோகம், ஆத்மவிசாரம் இதுகள்தான் உண்டு’ என்று நினைப்பது கொஞ்சம்கூட ஸரியில்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is நரகவாஸிக்கும் நலன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  விதிவிலக்கானவர்கள் -  -
Next