Page load depends on your network speed. Thank you for your patience.

Loading...

மக்களின் உள்ள உயர்வில் அரசின் பொறுப்பு

மக்களின் உள்ள உயர்வில் அரசின் பொறுப்பு

பிரஜைகளின் உடல் நலத்திற்கும், உலகியல் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் வழிவகைகள் காண்பதான விவசாயம், பொருளாதாரம், உலகியலை மையப்படுத்திய கல்வி, சுகாதாரம், உள்நாட்டு வெளிநாட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றை அபிவிருத்தி செய்வது ஓர் அரசாங்கத்தின் முக்கியமான பொறுப்பு என்பது உண்மையாயினும், அதோடு பொறுப்பு முற்றிலும் முடிந்து விட்டதாகக் கருதுவதற்கில்லை. உடலைவிட முக்கியம் உள்ளமேயன்றோ? பிரஜைகளின் அந்த உள்ளமாம் உயிரை அபிவிருத்தி செய்வதை ஓர் அரசாங்கம் புறக்கணிக்க முடியுமா? உள்ளவுயர்வு பெறாத மக்கட்கூட்டம் வாழும் நாடு நாடாகுமா? 'உயர்ந்தோர் மாட்டே உலகு' என்பதன்றோ ஆன்றோர் - சான்றோர் அறிவுரை? எனவே, ஒரு நாட்டின் பரிபாலனத்திற்குப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கம், நாடு நாடாக இருக்கவேண்டுமாயின், மக்களின் உள்ளத்தை உயர்த்தவும் நிச்சயமாக உதவி புரியத்தான் வேண்டும்.

இந்த உள்ள உயர்வை அளிப்பது மதமாகவே இருப்பதால், அதன் அபிவிருத்தியில் அரசாங்கத்திற்குப் பங்கு இருக்கிறது என்பதும் நிச்சயம்.

உலகியலில் செய்யும் எந்த அபிவிருத்தியும் நிலைத்து நிற்பதான பயனும், பயனால் விளைவதான ஆனந்தமும் தரவில்லையென்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். இந்த அபிவிருத்தி தாற்காலிகமாகவே முடிவதாகவும், அதனைப் பெற மீண்டும் மீண்டும் போராடுவதாகவும், அப்போராட்டத்தில் பலவிதமான வர்க்கபேதப் போட்டி பொறாமைகளும் சண்டைகளும் எழுவதாகவும் - மொத்தத்தில் அமைதி குலைவதாகவே காண்கிறோம். இன்றைய கண்டுபிடிப்புகளால் உலகியல் சுக சாதனங்கள் கணக்கின்றிப் பெருகிக் கொண்டே போவதில், எத்தனை பெற்றாலும் திருப்தி பெறாமல் மேன்மேலும் அதே தேட்டத்தில் ஓடி, சாந்த வாழ்வு என்னவென்றே அறியாதவர்களாக இருக்கிறோம். 'சுவரை வைத்தே சித்திரம்' என்றபடி உடல் நலனை ஓம்பத்தான் வேண்டுமாயினும், 'சித்திரம் தீட்டவே இச்சுவர், உள்ளத்தின் உயர்வான உயிரின் நிறைவே அச்சித்திரம்' என்பதையும் நாம் மறவாது பொன்னேபோல் மனத்தில் பொதிந்து கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் நலிவும் அழுக்கும் உறும் உலகியல் சுவரைக் கெட்டிப்படுத்துவதும் அழகுபடுத்துவதுமான ஓயா முயற்சியிலேயே ஈடுபட்டு, அதோடு சேர்ந்துவரும் போட்டி - பொறாமைப் போராட்டத்தில் அமைதியிழந்து, மேன்மேலும் தேவை தேவையெனும் குறைவாழ்வில் வாணாளை வீணாளாக்குவதோடு முடிந்து விட்டோமாயின், நாம் ஆறறிவு பெற்றும் அறியாதாராகவே முடிந்த பரிதாபமாகத்தான் ஆகும். குறைவாழ்வை நிறைவாழ்வாகவும், போராட்டப் பொறாமையை அன்பு வழியில் நின்று பெரும் அமைதியாகவும், வந்து வந்து மறையும் தாற்காலிக இன்பத்தை நிரந்தர ஆனந்தமாகவும் மாற்றும் உள்ளத்தின் உயர்வு என்ற சித்திரத்தைச் சுவரின் மீது தீட்டிக் கொள்வதற்கு உபாயம் காண்பதே நாம் செய்ய வேண்டுவது.

உள்ளவுயர்வை நல்கவல்ல அந்த உபாயம் நல்லொழுக்கமாம் தர்மமும், தெய்வ பக்தியும், ஆத்ம சிந்தனையும் திரிவேணியாகக் கலக்கும்

மதவியலேயாகும்.

வலிவூட்டும் மூன்று மூலிகைச் சாறுகளின் கலவையான 'திரிபலா' என்றும் இம்மூன்று அங்கம் கொண்ட மதவியலைக் கூறலாம். அழியும் மூலிகைச் சாற்றினால் சித்திரம் தீட்டுவது போலின்றி, இந்த அழியாத சஞ்சீவினி மூலிகையால் மதவியல் சித்திரத்தை நாம் உலகியல் சுவரின் மீது தீட்டிக் கொண்டால், பிறவிப்பயன் பெற்று அமரமான பூரணவாழ்வின் பேரானந்தத்தைப் பெறுவோம்.

சுவரை நல்ல முறையில் கட்டித் தருவதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள அரசாங்கத்திற்கு, அது காரணமாகவே, அச்சுவரான உலகியல் முன்னேற்றத்திலே -யே நமது முழுக் கவனத்தையும் ஈடுபடுத்துவதான திட்டங்களை வகுத்து நம்முடைய வாழ்வின் நிறைவுக்கு ஊறு செய்யாமல், சுவரில் நம் கவனம் எந்த அத்தியாவசிய வரம்போடு நிற்க வேண்டுமோ, அந்த அளவுக்கே தானும் கட்டுப்பட்டு, நம்மையும் கட்டுப்படுத்திச் சுவரின் உத்தேசப் பயனான சித்திரமாகிய உள்ளத்தின் முன்னேற்றத்தில் நம் கவனத்தைத் திருப்பிவிடுவதில் நிச்சயமாகப் பங்கு உண்டு.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is உண்மையான 'ஸெக்யூலரிஸம்'
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  மத விஷயத்தில் அரசின் பங்குக்குள்ள வரம்
Next