தர்ம சக்கரம் சுழலும் தொடர்பாதை; தியாகம

தர்ம சக்கரம் சுழலும் தொடர்பாதை; தியாகமே அதன் ஸாரம்

”அன்னத்திலிருந்து உயிர்கள் உண்டாகின்றன” என்று பகவான் இத்தொடரை ஆரம்பிக்கிறார். இவ்வன்னம் என்பது யாது, அதற்கு எதனால் இம்முக்கியத்துவம் எனப் பார்ப்போம்.

தன்னலம் பாராது பிறர்க்கென உடைமைகளை ஆக்கும் தியாகமே சநாதன வேத தர்மம் வகுத்தளிக்கும் நமது வாழ்க்கைத் தருமம். அத் தியாகமே யாகம் எனப்படுகிறது. ‘யாகம்’ என்பது எல்லா சிறந்த வஸ்துக்களையும் தனக்கென்றில்லாமல் தியாகமாக அக்கினியில் அர்ப்பணித்து, அத் தீக்கடவுளின் மூலம் அவை உலகப் பேரரசனான ஈசனின் அதிகாரிகளாக அவ்வுலகை பரிபாலிக்கும் தேவர்களைச் சென்றடைந்து, அதற்குப் பிரதியாக அவர்கள் ஜீவகுலம் முழுதற்கும் மேன்மை பொருந்திய இன்ப வாழ்வுக்கான சகலத்தையும் அருளுமாறு செய்ய உதவும் வைதிகச் சடங்கே, மேநாட்டினரும் யாகம், அதன் அடிப்படையான தியாகம் ஆகிய இவ்விரண்டையும் sacrifice என்றே கூறுவது கவனத்திற்குரியது. இத் தியாக தர்மத்தைப் புரியவும், நாம் உயிரைக் காத்துக் கொண்டு வாழ்ந்தால்தான் முடியுமாதலின், பிறர்க்களிப்பதை முக்கியமாகக் கொண்டு அதற்கு எஞ்சியதை அத்தியாவசியச் சுயநுகர்ச்சிக்கு நாமும் ஏற்பதாக வெகு சிக்கன வாழ்க்கையை நடத்த வேண்டும். அவ்வாறு எஞ்சியதை, தேவர் உண்டு மிகுதி வைத்த பிரசாதம் என்ற புனித எண்ணத்துடன் ஏற்றுப் புனித வாழ்வு வாழ வேண்டும். இதுவே வேத தர்ம விதி. உ-ம்: உபநிஷத வரிசையில் முதலிடம் பெறும் ‘ஈச’த்தின் முதல் மந்திரமே. ‘சொந்த நுகர்ச்சியால் ஒரு பொருளிலிருந்து மனிதன் நிறை பயனைப் பெறவியலாது; பிறருக்குத் தியாகம் செய்தே, தியாகம் செய்த பொருளிலிருந்து பெறக்கூடிய நிறைபயனை அடைவாயாக!” என்ற கருத்தினைக் கூறி, அதில் மாந்தரைச் செயற்படத் தூண்டும் ஒப்பற்ற மந்திரம். இவ்வாறு ஈத்துவப்பதில் (ஈந்து உவப்பதில்) அன்னம் வழங்குதலே முதலிடம் பெறுகிறது. ஏனெனில் அன்னத்தினால்தானே உயிர்கள் உண்டாகி வளர்கின்றன? இதுவே (கீதையில்) பகவான் கூறும் காரண விளைவுத் தொடர்ச்சியில் “அன்னத்திலிருந்து உயிர்கள் உண்டாகின்றன” என்ற வாசகமாக முதலிடம் பெறுகிறது.

அவ்வன்னம் எதிலிருந்து உண்டாகின்றது? மழையினால், மழை பெய்து பயிர் பச்சை வளருவதால். “மழையிலிருந்து அன்னம்” என்று பகவான் தொடர் சங்கிலியில் இரண்டாவது இணைப்பைக் கோக்கிறார்.

மழை எதிலிருந்து உண்டாகிறது? முன்னரே கூறியவாறு, சர்வலோக சக்கரவர்த்தியாம் ஈசனின் ஆக்ஞைப்படிச் செயலாற்றும் அதிகாரிகளான – இயற்கைச் சக்திகள் என நாம் கருதுகின்ற – தேவர்களுக்கு, உலக மாந்தரின் நலன் கருதியே நாம் உடைமைகளைத் தீயிலிட்டு தீக் கடவுள் மூலம் சேர்ப்பிக்கும் தியாகமாம் யாகச் சடங்கினால் அவர்கள் பிரீதியுறுகிறார்கள். அதற்குப் பிரதியாகவே உலகுக்கு அவர்கள் பலவித நலன்களைப் புரிவதில் முக்கியமாக உயிரளிக்கும் உணவுக்கானவற்றை உற்பத்தி செய்ய உதவி புரியும் மழையைப் பொழிகின்றனர். “யாகத்திலிருந்து மழை” என்பது தொடர் வரிசையில் மூன்றாவது அம்சம்.

யாகம் எதிலிருந்து உண்டாயிற்று? தியாகம் என்ற உள்ளக்கருத்தை மந்திர சக்தியுடன் கூடிய யாகம் முதலிய கருமங்களாக ஆக்கியதால்தான். “கருமத்திலிருந்து யாகம்” என்பதே தொடரில் நான்காவது அம்சம்.

மந்திர மகிமையால் வலிவு பெற்ற அக்கர்மங்கள் எதிலிருந்து உண்டாயினவெனில், வேதத்திலிருந்தே. “வேதத்திலிருந்து கருமம்” என்று ஐந்தாவது அம்சமாக பகவான் தொடர்சங்கிலியில் கோக்கிறார்.

அவ்வேதம் எதிலிருந்து உண்டாயிற்று? உண்டாவது, அழிவது என்பதின்றி என்றுமுள வேதம், பரமாத்மாவின் மூச்சாக அவருடனேயே பிரிவறச் சேர்ந்திருப்பது. இதனை பகவான் ஆறாவது அங்கமாக, “பரமாத்மாவிலிருந்து வேதம்” எனக் கூறி, ஆதி மூல காரணத்துடன் ‘காரணம்-விளைவு’ என்ற தத்துவத் தொடரைப் பூர்த்தி செய்கிறார்.

ஆயினும் உபதேசத்தைப் பின்னரும் தொடர்ந்து மானுடனைப் பொறுத்த மட்டில் அவ்வேதம் நிலை கொள்வது அவனது தியாகத்திற்குக் காரிய உருவமாகவுள்ள யாகத்திலேயே என்று சொல்கிறார். தனக்கென வாழாது பிறர்க்குரியாளாராக, நமது உடைமைகளைச் சுருக்கி வாழ்வதே நமக்காக பகவான் விதித்த தர்மம் என்று இங்கு தெளிகிறோம். ஆறு அங்கங்களில் மூன்றாவதாகவுள்ள தியாக யாகத்தையே முடிவிலும் அவர் திரும்பக் கூறியிருப்பதிலிருந்து இது ஐயமறத் தெளிவாகத்தானே செய்கிறது?

இத்தர்ம சக்கர முறைபாட்டை மீறி, சொந்த அநுபோகத்திற்காகவே வாழ்பவர் ஆயுள் முழுதும் பாபத்தையே சம்பாதித்து வாணாளை வீணாளாக்கி முடித்தவராவர் என்று எச்சரிக்கையும் விடுக்கின்றார்.

தமிழ் மறையாம் திருக்குறளின் ஆரம்ப அதிகாரமான கடவுள் வாழ்த்தில் ‘அறவாழி (அற – தர்ம; ஆழி – சக்கரம்) அந்தணன்’ எனக் கூறப்படும் தர்ம சக்கரம் தாங்கிய பகவானேதான் இன்றில்லாவிடினும், சமீப எதிர்காலத்திலேனும் நம் கண்களைத் திறந்து வைத்து நாம் வீணராகாது அவனது உபதேசப்படி சொந்த உடைமைப் பெருக்கத்தை விடுத்து, உலகுக்கு உதவி செய்யவே வாழும் தியாக தர்மத்தை மேற்கொள்ள அருள் புரிய வேண்டும்.

நமக்குக் கிடைத்துள்ள அரசியல் சுதந்திரம் இவ்வாறு அவரருளால் நமது தேசத்திற்கே உரிய ஸ்வ-தந்திரமாகி அரிய பயன்களாகிய அறத்தையும், அற வாழ்வின் தேவைக்கேற்ற அத்தியாவசியப் பொருளையும், அறத்துக்கு மாறுபடாத பயன்களைத் தரும் இன்பத்தையும், பேரின்பமான வீட்டையும் அளிக்கட்டும்!