அரசாங்கத்தின் கடமையும் மக்களின் கடமையும் இப்படிச் சொன்னதால் பசுவதைத் தடுப்புச் சட்டம் வேண்டாமென்றோ, அல்லது அத்தனை பசுக்களுக்கும் அவை இயற்கையாக உ

அரசாங்கத்தின் கடமையும் மக்களின் கடமையும்

இப்படிச் சொன்னதால் பசுவதைத் தடுப்புச் சட்டம் வேண்டாமென்றோ, அல்லது அத்தனை பசுக்களுக்கும் அவை இயற்கையாக உயிர் பிரிகிற வரையில் நல்ல பராமரிப்பு அளிக்கப்படும் காலம் வருகிற வரையிலாவது பசுவதையைச் சட்டமூலம் தடுக்கக் கூடாதென்றோ சொல்வதாக அர்த்தம் செய்துகொண்டுவிடக்கூடாது. கோஹத்தித் தடுப்புச் சட்டம் எவ்வளவு சீக்கிரத்தில் முடியுமோ அவ்வளவில் கொண்டுவர வேண்டியதே. அது அரசாங்கத்தார் பண்ண வேண்டியது. ஆனால் அதோடு முடிந்து விடாமல் மக்கள் கடமை என்றும் ஒன்று இருக்கிறது. அது கோ ஒரு நாளும் ஒட்டி உலர்ந்து நிற்க விடாமல், அதற்கு வேண்டிய அளவு தீனி போட்டும், ஸுகாதாரமான கொட்டில்களில் வாழுமாறு வைத்தும் ஸம்ரக்ஷிப்பதே பல காலமாக கோஹத்திக்கு அரசாங்கத் தரப்பில் தடுப்புச் சட்டம் போட வேண்டும் என்று பல பேர் வற்புறுத்தி, கிளர்ச்சியெல்லாங்கூடப் பண்ணிவருகிறார்களே தவிர மக்கள் தரப்பில் கோஸம்ரக்ஷணைக்கு என்னவெல்லாம் பண்ணவேண்டுமோ அதை வற்புறுத்தி விசேஷமாக எதுவும் சொல்லவோ செய்யவோ இல்லை. இந்த விஷயத்தில் நானே என் கடமையை ஸரிவரப் பண்ணவில்லை. நம் கடமை என்ற இந்த அம்சத்தை அழுத்தி எடுத்துக் காட்ட வேண்டுமென்றுதான் எதிர்த்தரப்பாரின் குற்றச் சாட்டிலும் நியாயமில்லாமலில்லை என்று சொன்னேன். மொத்தத்தில் அரசாங்கச் சட்டம் அவச்யம்தான்; அதே அளவுக்கு மக்கள் உரிய முறையில் கோக்களை அவற்றின் கடைசிக் காலம் வரையில் நன்கு நடத்தவேண்டியதும் அவச்யம் என்றே சொல்ல வந்தேன்.

ஒரு பக்கம் பசுவைத் தெய்வமாகக் காட்டி கோபூஜை செய்யும் மதஸ்தர்களாக நாம் இருக்கிறோம்; இன்னொரு பக்கம் மாம்ஸத்துக்காகவும், தோலுக்காகவும் ஏராளமான கறவை நின்ற கோக்களை ஹத்திக்கு அனுப்பிக்கொண்டும் இருக்கிறோம்; அல்லது அவற்றை வயிறு வாடி வதங்கி நசியுமாறு வைத்திருக்கிறோம். இந்த ‘ஹிபாக்ரிஸி’ நமக்குப் பெரிய களங்கம். தானாக உயிர் பிரிகிற வரையில் கோக்களை நல்லபடி வைத்துக் காப்பாற்றாத வரையில் நம்மை ஹிந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதற்கே லாயக்கில்லை.