ஆத்திசூடி ஒளவையார் தானே தர்ம போதனை பண்ணினவள் குழந்தைகள்தான் நாட்டுக்கு விதைமுதல் அவர்களை ஸரி செய்து விட்டால் எல்லாம் ஸரியாகி விடுமென்பதால் அவர்கள

ஆத்திசூடி

ஒளவையார் தானே தர்ம போதனை பண்ணினவள். குழந்தைகள்தான் நாட்டுக்கு விதைமுதல். அவர்களை ஸரி செய்து விட்டால் எல்லாம் ஸரியாகி விடுமென்பதால் அவர்களை முன்னிட்டே நீதி நூல்களை இயற்றித் தந்தாள். வேத தர்மத்தை, மநு தர்மத்தையே குழந்தைகளுக்குக் குட்டிக் குட்டிப் போதனைகளாகக் கொடுத்தாள். நம் மதத்துக்கு அச்சாணி, ‘தர்மம்’ என்ற கொள்கை. இதையே தமிழில் ‘அறம்’ என்பது. இதை வைத்தே ஒளவை “அறம் செய விரும்பு” என்று ஆத்திசூடியை ஆரம்பித்திருக்கிறாள். ”தர்மம் சர” – “அறத்தைச் செய்” – என்பது வேத கட்டளை. ”பூர்ண அதிகார ஸ்தானத்திலுள்ள வேதம் கட்டளை போடலாம்; கிழப்பாட்டி நாம் போடலாமா?” என்று ஒளவை அடக்கத்தோடு நினைத்தாள். அதனால், ‘இஷ்டமிருக்கிறதோ இல்லையோ, தர்மம் பண்ணித்தான் ஆகணும்’ என்று கட்டளை போட்டுக் ‘கம்பெல்’ செய்வதாக “அறம் செய்” என்று சொல்லாமல், “நீயாக இஷ்டப்பட்டு அறம் பண்ணேன்!” என்று குழந்தைகளை ‘நைஸ்’ பண்ணும் விதத்தில் “அறம் செய விரும்பு” என உபதேசித்திருக்கிறாள்!

‘ஆத்திசூடி’ என்று இந்த நூலுக்கு ஏன் பேர் என்றால், அது பரமேச்வரனுடைய ஒரு பேர். எந்த போதனைக்கும் முந்தி வரும் முதல் போதனை, பரமாத்மாவை நினைக்கப் பண்ணுவது. நம்முடைய கலாசாரத்தில் அவனை ஸ்மரிக்கப் பண்ணாமல் எதையும் எழுத ஆரம்பிக்கும் வழக்கமில்லை. சிருங்கார ரஸ ப்ரதானமான நாடகமானால் கூட அதன் ஆரம்பத்தில் பகவானை நமஸ்காரம் பண்ணும் ‘மங்கள ச்லோகம்’ இருக்கும். விஷயமறிந்தவர்கள் இதை ‘நாந்தி’ என்பார்கள். தமிழிலும் ‘கடவுள் வாழ்த்து’ இல்லாத நூலே கிடையாது. தமிழ் மக்கள் படிக்கும் முதல் நூலான ‘ஆத்திசூடி’யின் ஆரம்பத்தில் பரமேச்வரனை “ஆத்திசூடி” என்று குறிப்பிட்டு ஒளவை கடவுள் வணக்கம் செலுத்தியிருக்கிறாள்.

ஈச்வர சிரஸிலே உள்ள அநேக வஸ்துக்களில் பிறைச் சந்திரன், கங்கை, நாகம், கபாலம் முதலானவற்றோடு கொன்றை, ஆத்தி ஆகிய புஷ்பங்களும் இடம் பெறுகின்றன. இவற்றில் பிறைச் சந்திரன் விசேஷமானது. அது நிரம்பவும் அழகானது என்பதோடு ஈச்வரனின் அருள் மனஸைக் காட்டுவதாகவும் இருக்கிறது. யாரையாவது ரொம்பக் கொண்டாடினால் “தலைக்கு மேலே தூக்கி வெச்சுண்டு கூத்தாடறார்” என்கிறோம். பாபம் பண்ணிய சந்திரன், அதனால் தேய்ந்து மாய்ந்து போய், அப்புறம் கொஞ்சம் பச்சாதபப்பட்டுப் பரமேச்வரனின் காலில் விழுந்தவுடன், அவர் வாஸ்தவமாகவே அவனைத் தூக்கித் தம் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு ஆனந்தத் தாண்டவக் கூத்தாடியிருக்கிறார்! அந்தக் கோலத்தைத்தான் ‘சந்த்ர மௌளீச்வர்” என்று சொல்கிறோம். அந்த சந்த்ரமௌளீச்வரர் நம் மடத்தின் ஸ்வாமி.

இவரை நினைப்பூட்டுவது ‘ஆத்திசூடி’ என்ற பெயர். எப்படியென்றால், ஆத்திப் பூவானது வடிவமைப்பில் அசல் பிறைச் சந்திரன் போலவே இருக்கும். வர்ணத்திலும் அது கொன்றைப் பூவைப்போல் ஆழ்ந்த பவுன் மஞ்சளாக இல்லாமல் நிலா மாதிரி இளமஞ்சளாக இருப்பதாகும். ‘அகஸ்தி’ என்பதுதான் ‘ஆத்தி’யாகியிருக்கிறது. ‘ஆத்தி’ என்பதைவிடவும் ‘அகஸ்தி’ என்ற மூல வார்த்தையை தெளிவாகத் தெரிவிப்பதாக ‘அகத்திக்கீரை’ என்றும் சொல்கிறோம். பசுவுக்கும் பரமப்ரியமான இந்த ஆத்தி என்ற பரம ஒளஷதத்தை அகஸ்த்ய மஹரிஷிதான் முதலில் லோகத்துக்கு கொண்டு வந்தாரோ என்னவோ? பரமேச்வரனிடமிருந்து தமிழ் என்ற அம்ருதத்தைக் கொண்டு வந்து கொடுத்த அவரையும் குழந்தைகள் எடுத்த எடுப்பில் நினைக்கட்டும் என்றே, ஈச்வரனுக்கு எத்தனையோ நாமாக்கள் இருந்தாலும், தமிழ்ப் பாட்டி ‘ஆத்திசூடி’ என்று ஆரம்பித்திருக்கிறாள் போலிருக்கிறது. நம்முடைய மடத்து சந்த்ர மௌளீச்வரரையும் அது ஞாபகப்படுத்துவதால் எனக்கு ஒரு ஸந்தோஷம், ஒரு பெருமை.