குருக்கள் மோசடியும் ஈசன் தந்த தண்டனையும் பரந்தாரீ ஏரியோடு கால்வாய் முடிந்துவிட வேண்டும் என்று புரிந்துகொண்ட பிரம்மசாரி உடனே ஸ

குருக்கள் மோசடியும் ஈசன் தந்த தண்டனையும்
பரந்தாரீ ஏரியோடு கால்வாய் முடிந்துவிட வேண்டும் என்று புரிந்துகொண்ட பிரம்மசாரி உடனே ஸ்வர்ணத்தை எடுத்துக்கொண்டு வருவதற்காக அம்பாஸமுத்திரத்திற்கு ஓடினான். பொதுத் தொண்டு என்றால் இப்படித்தான் ஒய்ச்சலில்லாமல் ஓடியாடியாக வேண்டும்! அதிலே எத்தனையோ இடைஞ்சல், தோல்வி எல்லாமும் வந்தால் அதையும் முழுங்கிக் கொள்ளத்தான் வேண்டும்!
பிரம்மசாரிக்கு இப்போது அப்படித்தான் ஏற்பட்டது. அம்பாஸமுத்ரக் குருக்கள் திருப்பிக் கொடுத்த மூட்டையை அவன் பிரித்துப் பார்த்தால் அதில் ஸ்வர்ணத்தினாலான துவரை மணிக்குப் பதில் அசல் துவரம் பருப்புக்கள் தானிருந்தன! வெறும் துவரம்பருப்பு மூட்டையைக் கொடுத்துவிட்டு அந்தக் குருக்கள் “இதுதான் நீ தந்தது” என்று ஒரேயடியாக சாதித்துவிட்டார்.
பிரம்மசாரி ராஜாவிடம் ஓடினான். அம்பாஸமுத்திரமும் அப்போது கேரள ராஜ்யத்தில்தான் இருந்ததால் தானம் கொடுத்த பழைய ராஜாவிடமேதான் போய் முறையிட்டான்.
ராஜாவுக்கு பிரம்மசாரியின் பெருமை ஏற்கனவே தன்னுடைய வியாதி தீர்த்தபோது கொஞ்சம் தெரிந்ததென்றால் இப்போது பூர்ணமாய்த் தெரிந்தது. தானம் வாங்கின அவ்வளவு ஸ்வர்ணத்தையும் பொதுஜனப் பணிக்கே அவன் செலவழிக்கவிருந்ததாலும், அந்த ஸ்வர்ணம் தன்னுடையதாதலால் தனக்கும் கிஞ்சித் புண்யம் லபிக்குமென்பதாலும் ராஜாவுக்கு ஒரு கூடுதலான ஈடுபாடு பிறந்தது. ஆனாலும் ஸ்வர்ணத்துக்குப் பதில் துவரம் பருப்பைக் கொடுத்தவர் சிவாசாரியாராதலால் அவரிடமும் மரியாதை தப்பக் கூடாதென்று நினைத்து அவரைக் கூப்பிட்டனுப்பி நல்ல வார்த்தையாகச் சொன்னான்.
அந்த மனுஷ்யரோ பழைய பல்லவியையே பாடினார்.
அவரை ஸத்ய ப்ரமாணம் பண்ணவைக்க ஒன்று தான் வழியென்று ராஜாவுக்குத் தோன்றியது. அதைச் சொன்னான். “அப்படியானால் சரி; நீர் பூஜை செய்கிற கச்யபேச்வர மஹாலிங்கத்தைத் தொட்டுக்கொண்டே ப்ரமாணம் பண்ணும்; நம்புகிறோம்” என்றான்.
குருக்கள் ஒப்புக் கொண்டார். ஏனென்றால் மந்திர சாஸ்திரத்தால் ரொம்பவும் கெட்டிக்காரரான அவர், தம் மனஸுக்குள் தந்திரமாக ஒரு திட்டம் போட்டுக்கொண்டு விட்டார். ஆலயங்களில் ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேகம் பண்ணும் போது என்ன செய்கிறார்கள்? மூர்த்திகளிடமுள்ள கலைகளை, அதாவது நமக்கு ப்ராணன் மாதிரி அந்த விக்ரஹங்களில் பிராண ப்ரதிஷ்டை ஆகியுள்ள தெய்வாம்சங்களைக் ‘கலாகர்ஷணம்’ என்கிற சடங்கால் கும்பத்திலே ஆகர்ஷித்து வைத்து விடுவார்கள். அப்போது விக்ரஹத்தில் தெய்வசக்தி இல்லை. அதற்குப் பூஜை பண்ண வேண்டாம். அதை சாக்கால் மூடிவிட்டு, அது இருக்கிற இட்த்தை வெட்டி, கொத்தி ரிப்பேர் செய்யலாம் என்றாகிவிடுகிறது. ‘இதே போல நாமும் ப்ரமாணம் பண்ணுவதற்கு முந்தி ரஹஸ்யமாக கச்யபேச்வர ஸ்வாமியின் கலைகளைக் கோவிலுக்குப் பக்கத்திலிருக்கும் புளிய மரத்தில் ஆகர்ஷித்து வைத்துவிட்டு, வெறும் கல்லாகிவிட்ட லிங்கத்தைத் தொட்டுக்கொண்டு ஸ்தயம் பண்ணிவிடலாம்’ என்று அந்தக் குருக்கள் திட்டம் போட்டுக்கொண்டார்.
திருவொற்றியூரில் ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஏதோவொரு காரணத்தினால் சங்கிலி நாச்சியாருக்குப் பொய்ப் ப்ரமாணம் பண்ணித்தர நேர்ந்தபோது முன்கூட்டியே ஸ்வாமியிடம், “நீ அப்போது மூலஸ்தானத்தில் இல்லாமல் வெளி ப்ராகாரத்து மகிழ மரத்தில் போய் இரு” என்றார்; ஸ்வாமி அவர் கிட்டேயும் ‘ஸரி ’ என்று தலையாட்டிவிட்டு, அன்றைக்கு ராத்திரியே சங்கிலி நாச்சியார் ஸ்வப்னத்திலேயும் போய் விஷயத்தை அம்பலமாக்கிவிட்டார்: “நீ ஒன்றும் தெரியாதவள் மாதிரி, ஸுந்தரனிடம், ‘ஸ்வாமி ஸ்ன்னிதானத்திலே போய் ஸத்யம் பண்ண வேண்டாம்; இந்த மகிழ மரத்தின் கீழே பண்ணினாலே போதும்’ என்று சொல்லு” என்று கோழி சொன்னார் – என்ற கதை தெரிந்திருக்கலாம். இங்கே தொண்டை மண்டலத்தில் நடந்த மாதிரியே நம் கதையில் கேரள ராஜ்யத்திலும் நடந்த்து!
குருக்கள் ப்ரமாணம் பண்ணவிருந்ததற்கு முதல் நாள் ராத்ரி, ஸ்வாமி பிரம்மசாரியின் ஸ்வப்னத்தில் தோன்றி “நாளைக்கு என்னைக் குருக்கள் புளிய மரத்தில் கலாகர்ஷணம் பண்ணி வைத்திருப்பார். அதனால் புளிய மரத்தைத் தொட்டுக்கொண்டு அவர் ப்ரமாணம் பண்ணினாலே போதும் என்று சொல்லிவிடு: என்று சொன்னார்.
மறுநாள் பிரம்மசாரி, குருக்கள், ராஜா, ஊர் ஜனங்கள் எல்லாரும் கோவில் வாசலில் கூடினார்கள். ஸந்நிதானத்துக்கு எல்லாரும் போக இருந்த போது, பிரம்மசாரி, ஸ்வாமி சொல்லிக் கொடுத்தது போலவே, ‘இத்தனை காலமாக ஸ்வாமியைத் தொட்டுப் பூஜை பண்ணிக் கொண்டிருக்கற ஒரு சிவாச்சாரியாரிடம் போய் அந்த ஸ்வாமி மேல் கை வைத்துக் கொண்டு ஸத்யம் பண்ணு என்று கேட்பது அபசாரமாகப் படுகிறது. அதோடு என்னுடைய அல்ப வ்யவஹாரத்துக்குப் பரமேச்வரனை இழுப்பதும் முறையாகத் தோன்றவில்லை ஆனதால் அவர் இந்தப் புளிய மரத்தைத் தொட்டுக்கொண்டு ப்ரமாணம் பண்ணினாலே போதும். பச்சை மரத்தைத் தொட்டுக்கொண்டு பச்சைப் பொய் சொல்ல எவரும் துணிய மாட்டார்களல்லவா?” என்றான்.
அவனுடைய பெருந்தன்மையைப் பார்த்து எல்லாரும் ஆஹாகாரம் செய்தார்கள். இது ஸ்வாமி ஆடின நாடகத்தினால் அவனுக்கு கிடைத்த லாபம்!
ராஜா குருக்களைப் பார்த்து, “பிரம்மசாரி சொல்வது யுக்தமாகத்தான் இருக்கிறது. ஆனபடியால் இந்தப் பச்சை மரத்தைத் தொட்டுக்கொண்டு ஸத்யம் பண்ணும்” என்று தீர்ப்புக் கொடுத்து விட்டான்.
அந்த நிலவரத்தில், எதற்கும் துணிந்த குருக்கள் அதே போலத் தாம் ஸ்வாமியை ஆவாஹனம் பண்ணி வைத்திருந்த அந்த வ்ருஷ்ஷத்தைத் தொட்டபடியே ப்ரமாணம் பண்ணினார். “இந்தப் பிரம்மசாரி என்னிடம் கொடுத்து வைத்திருந்த அதே மூட்டையை, நான் அப்படியேதான் அவரிடம் திருப்பிக் கொடுத்தேன். இது ஸத்யம்” என்று அவர் சொன்னார்.
சொன்னாரோ இல்லையோ, உடனே அங்கே ஒரு ஜ்வாலை அவரைச் சுற்றி எழுந்த்து; அதிலே அவர் பஸ்மமாகிவிட்டார்!
யார், எந்தத் தப்புப் பண்ணினாலும் பொறுக்கலாம். ஆனால் தன்னை நம்பி ஒரு பொருளை ஒப்படைத்தவனை மோசம் பண்ணுவது, அப்புறம் ஸத்யத்துக்கும் தந்திரமாக மோசம் பண்ணப் பார்ப்பது, எல்லாவற்றுக்கும் மேல் ஜனங்களின் பாப பரிஹாரார்த்தம் தாம் பூஜை பண்ணுகிற ஸ்வாமியையே தம்முடைய மோசடிக்கு உடந்தையாக்கிக் கொள்ளப் பார்ப்பது என்பதாக குருக்கள் வரம்பு மீறிப் பண்ணிக்கொண்டே போனதால்தான் ஸ்வாமி அவரை எரித்து விட்டார்.
இதைப் பார்த்து மலைத்துப் போன ராஜாவுக்கும் மற்றவர்களுக்கும் பிரம்மசாரி விஷயத்தைச் சொன்னான். உடனே ராஜா குருக்கள் வீட்டை நன்றாகச் சோதனை போடப் பண்ணினான். ஸ்வர்ண் மூட்டை அகப்பட்டது. ஒரு முறை தானம் கொடுத்த்தையே மறுபடியும் பிரம்மசாரிக்கு மீட்டுக்கொடுத்து ரொம்பவும் ச்ந்தோஷப் பட்டான் ராஜா.
குருக்களை தகனம் பண்ணி விட்டதால், கச்யபேச்வரருக்கு ’தரஹகேச்வரர்’ என்று புதிதாக ஒரு பெயர் ஏற்பட்டது. இன்றைக்கும் பேச்சு வழக்குத் தமிழில் அவரை ‘எரிக்கட்டிச்சாமி’‘, ‘எரிச்ச முடியார்’, ‘எரிச்சாவடையார்’ என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்த ஊரிலே எனக்குத் தெரிந்த ஸமீபகாலம் வரையில் ஸாமான்ய ஜனங்கள் குற்றம் செய்த்தாக நினைத்தவர்களை இந்த ஸ்வாமி முன்னால் ஸத்யம் பண்ணச் சொல்லும் வழக்கம் இருந்திருக்கிறது. கோர்ட்டில் கூசாமல் பொய் சொன்னவர்கள் கூட இங்கே நிஜத்தைக் கக்கிவிடுவார்களாம்.