Page load depends on your network speed. Thank you for your patience.

Loading...

திலகவதியாரும் திருநாவுக்கரசரும் அந்தக் கதையைக் கொஞ்சம் சொல்கிறேன் அப்பரால் அந்தப் பல்லவ ராஜா சமணத்தை விட்டு சை

திலகவதியாரும் திருநாவுக்கரசரும்
அந்தக் கதையைக் கொஞ்சம் சொல்கிறேன். அப்பரால் அந்தப் பல்லவ ராஜா சமணத்தை விட்டு சைவம் தழுவினது பின் கதை. முன்னாடி, அப்பரே சைவத்தை விட்டுவிட்டுச் சமணத்துக்குப் போயிருந்தவர்தான். அப்படிப்பட்டவர் சைவசமயக் குரவரில் ஒருவராக, நால்வரில் ஒருவராக – நெஞ்சுருகி நெஞ்சுருகி, கேட்கிற நம்முடைய நெஞ்சம் உருகும்படி தேவாரம் பாடி ஸாக்ஷாத் ஈச்வரனிடமே வாகீசர், நாவுக்கரசர் என்று பட்டம் வாங்கினவராக – ஆனாரென்றால் இப்படி அவரை ‘ரீ-கன்வெர்ட்’ பண்ணின பெருமையும் ஒரு ஸ்திரீக்குத்தான் போகிறது.

அப்பர் சமணராக இருந்த அப்போது அவருக்கு அந்தப் பேரோ, திருநாவுக்கரசு சுவாமிகள் என்ற பேரோ கிடையாது. தர்மஸேனர் என்ற பேரே இருந்தது. அதுவும் அவருக்கு அப்பா அம்மா வைத்த பெயரில்லை. பெற்றோர் வைத்த பெயர் மருள்நீக்கியார் என்பது. மருள் என்பது மாயை. அப்புறம் இவருக்கே ஏதோ மாயை உண்டாகித் தான் சைவத்தை விட்டு ஜைனத்துக்குப் போய் அந்த மதத்தில் ரொம்ப கற்றுத் தேர்ந்து ஆசார்ய ஸ்தானம் அடைந்து ‘தர்மஸேனர்’ என்று பேர் வைத்துக்கொண்டார். அவரை மறுபடி வைதிக மதத்திற்குத் திருப்பியது அவருடைய தமக்கைதான். ‘திலகவதி’ என்பது அவள் பெயர். ‘திலகவதியார்’ என்று மரியாதையாகச் சொல்வார்கள். இவளுக்கும் இதையே காரணப் பெயராகச் சொல்லும்படி ‘மாதர் குல திலகம்’ என்கிறபடி இருந்தாள்.

இவளுடைய பாதிவ்ரத்யம் (கற்பு நெறி) ஆச்சரியமானது. கல்யாணமான அப்புறம் பதியிடம் பரம பக்தி வைத்த உத்தம ஸ்திரீகள் பலர் இருந்திருக்கிறார்கள். என்றால், திலகவதியோ தனக்கு நிச்சயம் பண்ணிய வரன் கல்யாணம் நடக்கு முன்பே மரணமடைந்து விட்டதற்காகத் தானும் ‘ஸதி’ தர்மப்படி பிராணனை விட்டுவிட நினைத்தவள். அவள் குழந்தையாயிருக்கிறபோதே கலிப்பகையார் என்ற சேனாதிபதியை அவளுக்குப் பெற்றோர் நிச்சயம் செய்திருந்தார்கள். அப்புறம் கலிப்பகையார் ஏதோ யுத்தம் என்று வடதேசம் போய்விட்டார். அவர் திரும்பி வந்து இவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளுவதற்கும் முன்பாகவே இவளுடைய தகப்பனார் கண்ணை மூடிவிட்டார். உடனே பரம பதிவிரதையான தாயாரும் உடன்கட்டை ஏறிவிட்டாள். திலகவதி, அவளுடைய தம்பி மருள்நீக்கி இரண்டுபேருக்கும் அப்போது சிறு வயதுதான். அப்படி இருந்தும் அந்த அம்மாள் இவர்கள் என்ன ஆவார்களோ என்று நினைக்காமல் பதி பக்தியினால் தானும் புருஷனோடு உயிரை விட்டு விட்டாள்.

இப்படி அப்பா அம்மா இரண்டு பேரும் போய், கன்யாப் பெண்ணும் தம்பியும் நிர்க்கதியாயிருக்கும் போது இடிக்கு மேல் இடிமாதிரி யுத்தரங்கத்திலே இருந்து சேதி வந்தது – கலிப்பகையும் வீரஸ்வர்க்கம் அடைந்துவிட்டானென்று. அப்போது தான் ஆச்சரியமான பதி விரதா தர்மத்தோடு திலகவதி, ‘அவரை எனக்குப் பதி என்று பெற்றோர்கள் நிச்சயம் பண்ணிவிட்டதால் என்னை அவருக்கு மனஸினால் கன்யாதானம் பண்ணிக்கொடுத்துவிட்டதாகத்தான் அர்த்தம். அதனால் நானும் இப்போது என் தாயார் காட்டிய வழியில் பதியின் பின்னே போகிறேன்” என்று பிராணத் தியாகத்துக்குப் புறப்பட்டு விட்டாள். இவளுக்கென்று அவரிடம் காதல், கீதல் கூட இல்லை; அப்படி இருந்தாலாவது தன் மனஸை அவருக்கு அர்ப்பித்து விட்டதால், அவர் போன பின் இவளால் ஜீவிக்க முடியவில்லை என்பது நியாயந்தான் எனலாம்.  இவளோ தாயார் தகப்பனார் நிச்சயம் பண்ணி விட்டார்கள் என்ற ஒன்றுக்காகவே அந்த வரனைப் பதியாகக் கொண்டுவிட்டாள்.

இப்படி இவள் உயிரை விடுகிறேன் என்று புறப்பட்டபோது மருள்நீக்கி ரொம்ப அழுதார். தாயார்-தகப்பனார் போன பின் தமக்கையின் ரக்ஷ்ணையே நம்பியே தான் வாழ்வதாகவும், சின்னப் பையனான தன்னைத் தனியாய் விட்டு விட்டு அவளும் போகிறாளென்றால் அவளுக்கு முந்தி தான் தற்கொலை பண்ணிக் கொள்வேன் என்றும் தீர்மானமாகச் சொன்னார்.

தம்பி இப்படிச் சொன்னதும் அவள் மனஸை மாற்றிக் கொண்டாள். பிராணனை விடா விட்டாலும், இனி வேறு எவரையும் பதியாக வரிப்பதில்லை என்று திடமாக நிச்சயித்துக்கொண்டு, வைதவ்ய (விதவைகளுக்குரிய) ஆசாரத்தை மேற்கொண்டு சிவபக்தி, சிவாலயப் பணி செய்துகொண்டு தபஸ்வினியாக வாழ்நாளைக் கழிக்க ஆரம்பித்தாள். தம்பியையும் பொறுப்போடு கவனித்து வளர்த்தாள்.

கொஞ்சம் வயதானதும் மருள்நீக்கியார் மேலே படிப்பதற்காகப் பிறந்த ஊரான திருவாமூர் கிராமத்தை விட்டுத் திருப்பாதிரிப்புலியூருக்கு – திருப்பாப்புலியூர் என்று பேச்சிலே சொல்லுவது – போனார். பாடலி விருக்ஷம் என்பதைத் தமிழில் பாதிரி மரம் என்பார்கள். அந்த மரம் ஸ்தல விருக்‌ஷமாக இருந்த ஊருக்குத் திருப்பாப்புலியூர் என்றும், பாடலீபுத்ரம் என்றும் பெயர். வடக்கே அசோகனுடைய பாடலீபுத்ரம் மாதிரி தெற்கே இது. படிக்கப்போன மருள்நீக்கியார் அங்கே சமணர்கள் பெரிய கல்விசாலை வைத்திருப்பதைப் பார்த்தார். கல்வியறிவைப் பொது மக்களுக்கெல்லாம் பரப்புவதில் சமணர்கள் நிறையத் தொண்டு செய்திருக்கிறார்கள். சமண முனிவர்கள் வாழ்கிற இடத்துக்கு உள்ள ’பள்ளி” என்ற பெயரே இப்போதும் ஸ்கூலுக்குப் பேராக இருக்கிறது!

மிஷனரிகள் வைக்கிற ஸ்கூலில் சேர்ந்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய மதத்துக்கு இழுக்கப்படுகிற மாதிரி, மருள்நீக்கியாரின் கதையும் ஆயிற்று.  நல்ல புத்திமானான அவரை ஜைனர்கள் தங்கள் மதத்தில் இழுத்துக் கொண்டு விட்டார்கள். அவரும் அதில் ஒரு ஆசாரியராக ஆகி, தர்மஸேனர் என்ற பெயரில் புகழோடு இருந்து வந்தார்.  முக்யமாக, அப்போது பல்லவ ராஜா மஹேந்திர வர்மாவே சமணனாக இருந்ததால் royal patronage-ல் அந்த மதம் அப்போது செல்வாக்கு அடைந்திருந்தது.

இங்கே திலகவதி திருவாமூரை விட்டுக் கொஞ்சம் தள்ளிக் கடில நதிக்கு வட கரையில் பண்ணுருட்டிக்குப் பக்கத்தில் உள்ள திருவதிகை என்கிற பெரிய சிவ ‌ஷேத்திரத்துக்கு வந்து, அங்கே கோவிலைப் பெருக்கி மெழுகுவது, நந்தவனத்திலிருந்து பூப்பறித்து மாலை தொடுத்துத் தருவது முதலான சிவ புண்ணியங்களைப் பண்ணிக் கொண்டிருந்தாள்.

தம்பி சைவத்தை விட்டு விட்டு வேறே மதத்துக்குப் போய்விட்டானென்று அவள் கேள்விப்பட்டாளோ இல்லையோ ஏற்கனவே தாயார், தகப்பனார், பதியாக வரிக்கப்பட்டவர் ஆகியவர்கள் செத்துப்போனதை விட இதுதான் அவளுக்குத் தாங்க முடியாத கஷ்டமாயிற்று. ஸதா ஸர்வதா ஈச்வரனிடத்தில், “இப்படி வேத தர்மத்தை விட்டு வேறு வழியில் போய் விழுந்திருக்கிற ஸஹோதரனை நீதான் கை தூக்கிவிட வேண்டும்” என்று கதறிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள்.

அவள் இதில் எவ்வளவு தீவிரமாகத் தவித்திருக்க வேண்டும் என்பது ஸாக்‌ஷாத் சிவபெருமானே அவளுடைய ஸ்வப்னத்தில் ப்ரஸன்னமானதிலிருந்து தெரிகிறது.  கனவில் ஈஸ்வரன் வந்து, “கவலைப்படாதேயம்மா! போன ஜன்மாவில் உன் தம்பி பண்ணின தபஸில் கொஞ்சம் குறையேற்பட்டதால்தான் இப்போது பர மதம் சேர்ந்திருக்கிறான்.  அந்தக் கர்மா தீருவதற்காக அவனுக்குக் குலை நோயைத் தண்டனையாகக் கொடுத்து அதன் வழியே அவனை என்னிடம் திருப்பிக் கொள்வேன்” என்று வாக்குக் கொடுத்தார்.

குலை நோய் என்பது ஒரு வயிற்று உபாதி.  குடலை முறுக்கிப் பிழிந்து வலியெடுக்கும். பிழிந்தால்தானே அழுக்கு – கர்மா – போகும்?

தர்மஸேனர் சூலை நோயில் அவஸ்தைப்பட்டார். அவரோடு கூட இருந்த சமணர்கள் என்னென்னவோ வைத்யம், மாந்த்ரீகம் எல்லாம் பண்ணியும் பிரயோஜனமில்லாமல் போயிற்று.

பிராணனே போய்விடும் போலத் துடித்துக்கொண்டிருந்த தர்மசேனருக்கு அக்காவைப் பார்க்க வேண்டுமென்று ரொம்பவும் ஆசையாயிற்று. அவளிடத்தில் அவருக்கு மிகவும் பாசம். மதம் மாறினது அவளுக்குப் பிடிக்காது என்றே இத்தனை காலம் அவளைப் பார்க்காமல் இருந்தார். இப்போது உயிரே போகிறது என்கிறபோது கண்ணை மூடுமுன் அவளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவே அவளுக்கு ஆள் அனுப்பினார்.

இவருக்கு அவளிடமிருந்ததைவிட அவளுக்கு இவரிடம் வாஞ்சை ஜாஸ்தி. இவருக்காகத்தான் அவள் தன் உயிரை விடாமல் வைத்துக் கொண்டதே. ஆனாலும் இப்போது ஆள் வந்து சேதி சொன்னதும், அவள் என்ன பண்ணினாள்? தம்பியிடமிருந்த அபிமானத்தையும்விட அதிகமாக அவளுக்கு மதாபிமானம் இருந்தது. அதனால் உயிருக்குயிரான தம்பி உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த அந்த சமயத்திலும் அவள் மனசைக் கல்லாக்கிக் கொண்டு, ‘ஜைன வேஷத்திலிருக்கிற என் தம்பியை நான் பார்க்க மாட்டேன். அவன் இருக்கிற சமணப் பள்ளிக்குள் காலெடுத்து வைக்கவும் மாட்டேன்” என்று சொல்லி அனுப்பி விட்டாள்.

நம்முடைய ஸ்திரீகளுடைய மதப் பற்று எப்படிப் பட்டது என்று இங்கே ‘பெரிய புராண’த்தின் வாயிலாகத் தெரிந்து கொள்கிறோம்.

தர்மஸேனருக்குத் தாங்கள் செய்த மந்திர தந்திரம், வைத்தியம் எதுவும் பலிக்காமல் போனதும் பாடலிபுத்ரத்துச் சமணர்கள் இவரால் நம் பெயர் கெட்டுவிடப் போகிறதே என்று அவரைக் கைவிட்டு விட்டார்கள்.

திருவதிகைக்கு அவர் அனுப்பியிருந்த ஆள் திரும்பி வந்து திலகவதி வர மறுத்துவிட்டாள் என்று சொன்னான்.

மருள்நீக்கியாரை நடுவே மூடி தர்மசேனராக்கியிருந்த மருளும் நீங்குவதற்குக் காலம் வந்தது. அக்காவின் காலில் போய் விழுந்து விடுவோம் என்று அவருக்குத் தோன்றியது. ஜைன வேஷத்தில் தன்னைப் பார்க்க அவள் ஸஹிக்கமாட்டாள் என்பதால் அதுவரை உடுத்திக்கொண்டிருந்த பாயை அவிழ்த்து வேஷ்டி கட்டிக்கொண்டு, மயில் பீலியையும் போட்டுவிட்டுத் திருவதிகைக்குப் போனார்.

அங்கே தபஸ்வினியாக உட்கார்ந்திருந்த அக்காவை நமஸ்காரம் பண்ணி, “இந்தச் சூலை நோயின் சித்ரவதை தீர நீதான் கதி” என்றார்.

அன்பு மனஸ் கொண்ட அவளுக்கு உள்ளம் உருகிவிட்டது. ”வயிற்று வலி நிவிருத்திக்காகவும், அதைவிட நாஸ்திக நிவிருத்திக்காகவும் திருநீறு தருகிறேன்” என்று சொல்லிப் பஞ்சாக்ஷரத்தால் மந்திரித்து விபூதி கொடுத்தாள்.

‘மதக் கொள்கை எப்படி வேண்டுமானாலும் போகட்டும், வியாதி தீர்கிறதென்றால் சரி” என்று குழந்தையை மசூதிக்குத் தூக்கிக்கொண்டு போய் ஊதிக்கொண்டு வருகிறோமல்லவா?  இவரோ இன்னம் பக்குவப்பட்டவர். அக்காள் கொடுத்த விபூதியை பய பக்தியோடு உடம்பு முழுக்கப் பூசிக்கொண்டார்.

சூலை தீரச் சூலபாணிதான் கதி என்று தம்பியை அழைத்துக்கொண்டு கோயிலுக்குப் போனாள் திலகவதி.

அங்கே வயிற்றுவலி ஒரு பங்கு என்றால், பர மதத்துக்குப் போனோமே என்ற பச்சாதாபம் அதைப் போலப் பல மடங்கு மனஸில் வேதனை தர, மருள்நீக்கியார் போய் மனஸார மன்னிப்பு வேண்டினார். பச்சாதாபப்பட்டு விட்டால் ஈச்வராநுக்ரஹம் கிடைத்துவிடும். அப்படி மருள் நீக்கியாருக்குக் கிடைத்த ஈசனருளினாலேயே தமிழ் தேசத்துக்கும் மகா பாக்யம் கிட்டிற்று. அவருக்கு ஸ்தோத்திரம் பாடும் சக்தி வந்து, “கூற்றாயினவாறு விலக்ககில்லீர்” என்று பதிகம் பாடி விண்ணப்பிக்க ஆரம்பித்து விட்டார்.  அவருக்கு வந்த பெரிய கஷ்டத்திலிருந்தே நமக்கெல்லாம் தேவாரம் கிடைக்கப் பண்ணிவிட்டான் பகவான்!

சூலை நோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. அப்போது அவர் செய்த பதிகத்தைக் கேட்டு மெச்சிய திருவதிகை வீரட்டானேச்வரர் அவருக்கு நாவுக்கரசர் – வாகீசர் – என்ற புதுப் பெயரை வைத்து, கடல் மடையாக அன்றிலிருந்து அநேகம் தேவாரங்களைப் பாட அருள் பண்ணினார்.

அவருக்கு ‘அப்பர்’ என்று பெயர் வைத்தது ஞான சம்பந்தமூர்த்திகள்.

இது பிற்பாடு நடந்த சம்பவம். இதற்கு முந்தி, பாதிரிப்புலியூர் ஜைனர்கள் தங்களுடைய தர்மசேனர் ஈச்வராநுக்ரஹத்தால் சூலை தீர்ந்து, உடனே ஈச்வர பக்தியை எங்கேயும் பரப்பக்கூடிய தேவாரங்களைப் பாட ஆரம்பித்து விட்டார் என்று அறிந்ததும், தங்கள் மதத்துக்கு ஆபத்து வந்து விட்டது என்று பயந்து, மஹேந்திர வர்ம பல்லவனிடம் போய் ஏதோ இல்லாததும் பொல்லாததுமாகக் கோள் சொன்னார்கள்.  அதைக் கேட்டுக் கொண்டு அவனும் திருநாவுக்கரசு ஸ்வாமிகளைச் சுண்ணாம்புக் கால்வாய்க்குள் தள்ளினான். அங்கேயும் ஈச்வரனின் பாத கமலங்களை அவர் ஸ்மரித்துக் கொண்டிருக்கக் காள்வாயே ஏர்-கண்டிஷன் பண்ணின மாதிரி ஆகிவிட்டது.  ஸுஸ்வரமான வீணா கானத்தையும், ஸ்வச்சமாக வீசுகிற சந்திரிகையையும், மந்தமாருதத்தையும், வஸந்த காலத்தின் மாதுர்யத்தையும் வண்டுகள் ரீங்காரம் செய்கிற ஒரு குளிர்ந்த தடாகத்தின் இனிமையையும்  ஒன்றாகச் சேர்த்து அநுபவித்தால் எத்தனை இன்பமாயிருக்குமோ அப்படிப்பட்ட பரமேச்வர பாதாரவிந்த அநுபவத்தை அந்தக் கொதிக்கிற காளவாய்க்குள் தாம் அநுபவிப்பதாக அவர் ஆனந்தமாகப் பாடினார்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
         வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
          மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
         ஈசன் எந்தை இணையடி நீழலே
தன் தண்டனை அவரை ஒன்றும் பண்ணவில்லை என்றதும் ராஜாவுக்கு இன்னும் கோபம் வந்தது. அவருக்கு விஷம் கொடுக்கப் பண்ணினான். அப்புறம் யானையை விட்டு இடறப் பண்ணினான். எதனாலும் அவரைப் பாதிக்க முடியவில்லை.  அப்புறம் கல்லிலே அவரைக் கட்டி ஸமுத்திரத்திலே கொண்டு போய் போடப் பண்ணினான்.
சொற்றுணை வேதியன்” என்று அப்போதுதான் அவர் தேவாரம் பாடினார்.
அவனுடைய அருள்துணை ஸமுத்திரத்தில் கல்லைக் கட்டி இறக்கின போதும் காப்பாற்றாமல் விடாது என்று கானம் செய்தார்.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
        பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைத்தொழக்
        கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
        நற்றுணை யாவது நமச் சிவாயவே.
இப்படிப் பஞ்சாக்ஷரத்தின் துணையை நம்பி இவர் ஜபித்துக் கொண்டிருக்க சிவபெருமான் அருளில் அந்தக் கல்  தூணே தெப்பமாக மிதந்து வந்து கரையிலே அவரை ஒதுக்கியது. இப்போதும் அந்த இடத்துக்குக் ‘கரையேற விட்ட குப்பம்’ என்று பெயர் இருக்கிறது. இதுவும் திருப்பாப்புலியூர் கிட்ட உள்ளதுதான்.

இந்த அற்புதத்தைப் பார்த்ததும் மஹேந்திர வர்மாவுக்குக் கண் திறந்தது. அவனும் ஜைன மதத்தை விட்டு வைதிக மதத்திற்குத் திரும்பி விட்டான்.

ராஜா வைதிக ஸமயத்துக்கு வந்ததும் பல்லவ ராஜ்யம் முழுதும் வேதநெறி தழைத்தோங்க ஆரம்பித்துச் சமணம், பெளத்தம் முதலிய புற சமயங்கள் மங்க ஆரம்பித்தன. அவன் வைதிக சமயத்திற்கு வந்ததற்குக் காரணம் அப்பர் ஸ்வாமிகள் என்றால் அவரே அப்படி வைதிகத்துக்கு வந்ததற்குக் காரணம் திலகவதியார்தானே? அப்பரால் நடந்த மஹா பெரிய மதத் தொண்டுக்கு அவள்தான் வித்து.