தெய்வ ஸாக்ஷி வேதாந்தத்தில் ‘ஸாக்ஷி’ ”கடவுள் ஸாக்ஷியாகச் சொல்லுகிறேன்” என்று பாமர ஜனங்கள் கூடச் சொல்கிற வழக்கமி

தெய்வ ஸாக்ஷி
வேதாந்தத்தில் ‘ஸாக்ஷி’

”கடவுள் ஸாக்ஷியாகச் சொல்லுகிறேன்” என்று பாமர ஜனங்கள் கூடச் சொல்கிற வழக்கமிருக்கிறது. ஸமஸ்த லோகங்களிலும் நடக்கிற சின்னச் சின்ன கார்யங்கள் உள்பட ஸகலத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறவன் பரமாத்மா.

ஆத்மா என்று வேதாந்த ஸாஸ்திரங்களில் சொல்கிறபோது அங்கே கார்யம் என்பதே கிடையாது. ஆனாலும் அங்கேயுங்கூட ஆத்மாவை ‘ஸாக்ஷி மாத்திரமாக இருப்பது’ என்றே சொல்லியிருக்கும். அந்த இடத்தில், நாம் நடைமுறை லோகத்தில் சொல்கிற ஸாக்ஷி மாதிரி ஆத்மா ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தமில்லை. தனக்கு வேறே ஒன்று இருப்பது, தான் அதைப் பார்ப்பது என்ற கார்யத்தைப் பண்ணுவது என்பதெல்லாம் அத்வீதியமான (இரண்டற்ற) ஆத்மாவுக்குக் கிடையாது.

பின்னே ஏன் அதை ஸாக்ஷி என்று சொல்லியிருக்கிறதென்றால்: ஸாக்ஷி என்பவன் கார்யம் பண்ணுகிறதில்லை. நடக்கிற வியவஹாரத்தில் அவன் நேராகப் பங்கெடுத்துக் கொள்வதில்லை. ஆனாலும் அவன் இருக்கிற இடத்தில் தான் அந்தக் கார்யம், வியவஹாரம் நடக்கிறது. தான் பங்கெடுத்துக் கொள்ளாமல் தனக்கு முன்னே நடக்கிறதை அவன் பார்த்துக் கொண்டு மட்டுமிருக்கிறான். ஆத்மா இல்லாத இடமேயில்லையானபடியால், வியவஹார தசையில் லோகத்தில் நடக்கிற ஸகல கார்யங்களும் ஆத்மாவின் ஸந்நிதானத்தில்தான் நடக்கிறது. ஆனாலும் ஆத்மா அதிலே பங்கு கொள்கிறதில்லை. இந்தப் பாயிண்டை மட்டும் வைத்துக் கொண்டு அதை ஸாக்ஷி என்று சொல்லியிருக்கிறது.

ஒரு ஆஸாமியை ஸாக்ஷி என்று சொல்வதற்கும் ஆத்மாவை ஸாக்ஷி என்று சொல்தற்கும் இரண்டு பெரிய வித்யாஸங்கள் இருக்கின்றன.

ஒன்று, ஆஸாமி தனக்கு முன்னாடி நடப்பதைப் பார்க்கிற மாதிரி ஆத்மா பார்க்கிறதில்லை. அது நிஷ்க்ரியமானது (கார்யமில்லாத்து). பார்ப்பதும் ஒரு கார்யம் தானே? அந்தக் கார்யமும் ஆத்மாவுக்குக் கிடையாது. ஸாக்ஷியாயுள்ள ஆஸாமியின் லக்ஷ்ணமாக இரண்டு ஸமாசாரம் சொல்வார்கள் : ‘அவன் participant இல்லை’ – அதாவது கார்யத்தில் பங்கு கொள்பவன் இல்லை; spectator, ‘பார்வையாளந்தான்’ என்பார்கள். இந்த இரண்டில் ‘participant இல்லை’ என்பது மாத்திரந்தான் ஆத்மாவுக்குப் பொருந்தும். அது spectatorம் இல்லை! இது ஒரு பெரிய வித்யாஸம்.

இன்னொரு வித்யாஸம், ஸாக்ஷியாக உள்ள ஆஸாமி இருந்தால் தான் அவன் பார்க்கிற கார்யம் நடக்கும் என்றில்லை. எத்தனையோ கார்யங்கள் ஒருத்தர் ஸாக்ஷியும் இல்லாமல் தான் நடக்கிறது. கார்யம் பாட்டுக்கு நடப்பது சில ஸமயங்களில் ஒரு ஆஸாமி பாட்டுக்கு அதைப் பார்ப்பது என்றுதான் இருக்கிறதே தவிர, ஸாக்ஷி இருந்தால்தான் கார்யமே நடக்கும் என்று இல்லவேயில்லை. ஆனால் ஆத்மா விஷயத்தில் பார்த்தாலோ, ஸகல கார்யங்களுக்கும் ஆதார் சக்தியே ஆத்மாதான் என்று தெரிகிறது! லோகம், ஜீவராசிகள் அத்தனைக்கும் அடிப்படை, ஒன்றே ஒன்றான அந்த ஆத்மாதான். அது இல்லாவிட்டால் இதுகள் எதுவுமே இல்லை; இதுகளே இல்லாத்தால் இதுகள் செய்கிற எந்தக் கார்யமும் இல்லை.

வேடிக்கையாக இருக்கிறது: ஆத்மாவுக்குக் கார்ய ஸம்பந்தமேயில்லை; அது நிஷ்க்ரியமானது; ஆனால் அது இல்லாவிட்டால் ஒரு கார்யமுமில்லை! ஸாக்ஷியாக உள்ள ஆஸாமி மாதிரி அது ஒரு கார்யத்தில் பங்கு எடுத்துக் கொள்கிறதில்லை. அதே ஸமயத்தில், மநுஷ்யர்களில் ஸாக்ஷி என்று இருக்கிற எந்த ஆஸாமியும் அது மாதிரிதான் பார்க்கிற கார்யத்துக்கு அடிப்படையான ஆதார சக்தியாக இருக்கவுமில்லை.

இப்படி பேதங்கள் இருந்தாலும் ‘ஒரு கார்யம் நடக்கிற போது அங்கே அதில் நேராக ஈடுபடாதவராக வெறுமனே இருப்பது’ என்ற அம்சத்தில் ஸாக்ஷியாயுள்ள ஆஸாமிக்கும் ஆத்மாவுக்கும் ஒற்றுமை இருப்பதாலேயே ஆத்மாவை ‘ஸாக்ஷின்’ என்று சொல்லியிருப்பது.

நன்றாகப் பூந்து (புகுந்து) புறப்பட்டுப் பார்த்தால், ஆத்மா ஸாக்ஷி கூட இல்லை. ஆத்மாவாக இருக்கிற மாதிரி நிலையில்… ஸதாவுமே உள்ள ஸத்தியமான நிலைதான் அது. அப்படித் தெரியாமல் மாயை மயக்கி வைத்திருக்கிறது. அதனால் அந்த மாயை போவதற்காக ஸாதனை என்று ஒன்றைப் பண்ணி, ஈச்வர கிருபை இருந்தால் ஸித்தியாகி, ஆத்மாவாக மட்டுமே இருக்கிற ஸமாதி என்ற ஒன்றைப் பெற வேண்டியிருக்கிறது. அந்த ஸமாதி நிலையில் லோகம், ஜீவராசிகள், காலம், கார்யம் என்ற எதுவுமே அடியோடு இல்லை என்றுதான் ஆகியிருக்கும். ‘லோகமேயில்லை, space (இடம்) என்ற concept (கருத்தே) இல்லை’ என்கிறபோது, ‘எந்தக் கார்யமும் நடக்கிற இடத்தில் ஆத்மா இருக்கிறது’ என்றால் அர்த்தமேயில்லை. கார்யம் என்பதும் இல்லவேயில்லை என்கிறபோது கார்யத்துக்கு ஆதாரமாக ஆத்மா இருப்பதாகச் சொல்கிறதும் அர்த்தமில்லாத்துதான். மாஜிக்கில் ஒரு அரண்மனை இருக்கிறதாக ஜாலக் காட்சி காட்டினால் அந்த அரண்மனைக்கு ஆதாரமாக மட்டும் நிஜமான ஒரு அஸ்திவாரம் இருக்கணுமா என்ன?

ஆனபடியால் அத்வைத ஸாஸ்திரங்களை ஸரியாகப் புரிந்து கொண்டு பார்த்தால், அஸலான ஆத்மாவையே ஸாக்ஷி என்று சொல்லவில்லை என்று தெரியும். அந்த அஸல் ஆத்மா, மாயையோ கீயையோ எதுவோ ஒன்றால் இப்போது நாமிருக்கிற மாதிரி ஒரு ஜீவன் என்று ஆகியிருக்கோல்லியோ? வாஸ்தவத்தில் மாறுபாடே அறியாத ஆத்மா, ஜீவன் என்பதாக மாறவுந்தான் இல்லை. மாறாவிட்டாலும் நடைமுறையிலே அப்படி ஆனதாகத் தோன்றவாவது தோன்றுகிறதோ இல்லையோ? மாயையிலேயே முழுக்க முழுகிப் போயிருக்கும் இந்த ஜீவனுக்கு மாயா ஸம்பந்தமேயில்லாத ஆத்மாவைப் படிப்படியாகக் காட்டிக் கொண்டே போகிற போதுதான் ஒரு உசந்த ஸ்டேஜில், ஆனாலும் முடிந்த முடிவான ஆத்ம ஸாக்ஷாத்காரத்துக்குக் கீழ்ப்பட்ட ஸ்டேஜில், ‘லோகம், கார்யம், தனி மநுஷ்ய ஜீவன் என்றெல்லாம் இருக்கிற மாதிரி இருந்தாலும், தெரிகிற மாதிரித் தெரிந்தாலும் உன் ஆத்மா அந்த எதிலும் ஸம்பந்தப்படவில்லை. ஸாக்ஷி மாத்திரமாகப் பட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கிறது. ஸாக்ஷியாக பார்க்கிற அந்தக் காட்சிக்கும் அதுதான் ஆதாரம்’ என்று சொல்வது. அதற்கும் மேல் ஸ்டேஜில், ‘பார்க்கிறதென்பதும் இல்லையப்பா! கார்யம் பாட்டுக்கு நடக்கிறது; ஆதம் சக்தியின் ஸந்நிதான விசேஷத்தாலேயே நடக்கிறது. ஆனால் ஆத்மா அதைப் பார்க்கிறதென்பதும் இல்லை. கான்வாஸை ஆதாரமாக வைத்து அதன் மேலேயேதான் ஆயில் பெய்ன்டிங் பண்ணியிருந்தாலும், அந்தச் சித்திரம் வர்ணிக்கிற கார்யத்தில் கான்வாஸ் பங்கெடுத்துக் கொள்கிறதா? அப்படித்தான் இதுவும் என்பது. அதற்கும் மேலே தத்வத்தை உள்ளபடிக் காட்டி முடிக்கிற போது, ‘கார்யமும் இல்லையப்பா! ஆதாரம், ஆதார சக்தி என்கிறதுகளும் இல்லை. ஆத்ம சக்தி என்கிறதே இல்லை. ஆத்மசாந்திதான், சாந்த ஸமாதிதான் முடிந்த முடிவு’ என்பது.

ஸாக்ஷி என்று ஆரம்பித்துவிட்டு, என்னவோ வேதாந்தமாக இழுத்துக்கொண்டு போனபடி கொஞ்சம் ‘மெடஃபிஸிக்ஸ்’ சொன்னேன். நான் ஆரம்பித்தது கதை சொல்வதற்குத்தான். உங்களுக்கும் கதாருசி ‘மெடஃபிஸிக்ஸ்’ல் இருக்குமோ இருக்காதோ? ஆனாலும் நாம் நிஜம், ரொம்ப ரொம்ப நிஜம் என்று நினைக்கிறதெல்லாமும் கதையாகப் போய் விடுகிற நிஜமான நிஜத்தில் அந்த மெடஃபிஸிக்ஸ்தான் நம்மைக் கொண்டு சேர்க்கிறது. ஆசார்யாள் நமக்கு அநுக்ரஹம் பண்ணியிருக்கும் நிரந்தரமான ஸ்ரீ அதுதான். உத்தேசிக்காமலே அதைச் சொல்லும்படி ஆனதிலும் ஸந்தோஷந்தான். உத்தேசித்தபடி இப்போது கொஞ்சம் கதை சொல்கிறேன். பரமார்த்தத்திலிருந்து வியவஹாரத்துக்கு வருகிறேன்.