கண்ணனிடம் முறையீடு அப்புறம் பகவான் கிருஷ்ணாவதாரம் பண்ணினார் எளியவர்களுக்குள் எளிய இடைப் பசங்களோடும் கோபிகா ஸ்தி

கண்ணனிடம் முறையீடு

அப்புறம் பகவான் கிருஷ்ணாவதாரம் பண்ணினார். எளியவர்களுக்குள் எளிய இடைப் பசங்களோடும் கோபிகா ஸ்திரீகளோடும் பரம பிரேமையோடு உறவாடிக் கொண்டே, அதிமாநுஷ்யமான அற்புதங்களையும் பண்ணினார். பூதனையிலிருந்து ஆரம்பித்து அநேக அஸுரர்களை அதி பால்யத்திலேயே ஹதம் பண்ணினார். இந்த இந்திரனே ஏழு நாள் மழை பெய்துவிட்டு ஓய்ந்து போய்த் தன் காலில் விழுந்து சரணாகதி பண்ணி, கோவிந்த பட்டாபிஷேகம் செய்யும்படியாக்க் கோவர்த்தன கிரியைச் சுண்டு விரலில் தூக்கி, கோக்களையும், கோபர்களையும் ரக்ஷித்தார்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் ப்ரம்மா, ‘இதென்ன நம் தகப்பனாரான பரமாத்மா இப்படி மாயத்தில் மாட்டிக் கொண்டு, மாடு மேய்த்துக் கொண்டு திரிகிறாரே! இந்த மந்தையையெல்லாம் நாம் மறைத்து விட்டாலாவது அவருக்கு மாயை போகுமா?’ என்று தப்பாக நினைத்து, ஆநிரை முழுதையும், ஆயப் பசங்கள் அத்தனை பேரையும் கடத்திக் கொண்டே போய்விட்டார்!  ஷண காலத்தில் பாலகிருஷ்ணன் அவ்வளவு பேருக்கும் ‘டூப்ளிகேட்’ ஸ்ருஷ்டி பண்ணிவிட்டார். ஒரு வருஷம் முழுக்க அந்த டூப்ளிகேட் ஸ்ருஷ்டியையேதான் கோகுலத்திலே இருந்த தாய், தகப்பன்மார்களெல்லாம் ‘ஒரிஜினல்’ என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்! பரிபாலனை தெய்வமான கிருஷ்ணரால் இப்படி ஸ்ருஷ்டி செய்ய முடிந்தாலும், ஸ்ருஷ்டிக்குத் தெய்வமான ப்ரம்மாவால் தாம் கடத்திக் கொண்டுபோன பசுக் கூட்டத்தையும், இடைப் பசங்களையும் பரிபாலித்துச் சமாளிக்க முடியவில்லை! தெரியாத காரியத்தை இழுத்துப் போட்டுக் கொண்டு திண்டாடினார். ஸம்ஹாரம் செய்து விடலாமா என்றால், ப்ரம்மா ஸம்ஹார மூர்த்தியுமில்லையே! கிருஷ்ணர் பச்சைக் குழந்தையாயிருந்ததிலிருந்து அநேக அஸுரர்களை வதம் செய்திருக்கிறாரே, அப்படிச் செய்ய ப்ரம்மாவுக்கு ஸம்ஹார சக்தியுமில்லை; மனஸும் இல்லை.  அப்போதுதான் அவருக்கு மும்மூர்த்தி என்றிருந்தாலும், தாம் தகப்பனாருக்குக் கொஞ்சங்கூட ஸமதையில்லை. தம் ஸ்ருஷ்டி சக்திகூட தகப்பனாரின் அநுக்ரஹத்தினால் கிடைத்ததுதான் என்று தெரிந்தது. ‘தகப்பனார் எந்த மாயைக்கும் ஆளாகவில்லை. மாயை எவருக்கு அடிமையாக வேலை செய்கிறதோ அப்படிப்பட்ட ப்ரபு அவர். இதைப் புரிந்து கொள்ளாதபடி நம்மைத்தான் மாயை மூடியிருந்தது’ என்று பிரம்மாவுக்கு அறிவு பிறந்தது. அவர் தாம் கடத்திக் கொண்டு போனவர்களையெல்லாம் கிருஷ்ணரிடமே கொண்டு வந்து கொடுத்து, ஏகமாக ஸ்தோத்திரம் பண்ணி, மன்னிப்புக் கேட்டுக்கொண்டு போனார்.

ப்ரம்மா தப்புப் பண்ணின போது, பெற்ற பிள்ளையென்றும் பாராமல் அவரை இப்படித் திணறப் பண்ணின கிருஷ்ணர்தான் வெளியிலே என்ன வேஷம் போட்டாலும் உள்ளூர பந்து-மித்ரர் என்ற பந்த பாசமே இல்லாமல் தர்ம நியாயப்படி பண்ணுகிறவர்; இவரால்தான் புத்திரன் என்றும் பார்க்காமல் நரகாஸுரனைக் கொல்ல முடியும் என்று இந்திரனுக்குத் தீர்மானமாயிற்று.  ஆனாலும், அவதாரம் பண்ணின நாளிலிருந்து எப்போது பார்த்தாலும் அஸுர ஸம்ஹாரத்துக்கே அவரை இழுத்து ச்ரமப்படுத்துவதா என்று இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொண்டிருந்தான்.

கம்ஸ வதமாகி, ஜராஸந்தனைத் துரத்திவிட்டு, பகவான் துவாரகாபுரியை நிர்மாணம் பண்ணிக்கொண்டு அங்கே கொஞ்ச காலம் விச்ராந்தியாக இருந்தார். அப்புறம் ருக்மிணியின் உறவுக்காரர்களோடு சண்டை போடு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். அதற்கப்புறம் ஸத்யபாமா முதலான அநேக பத்னிகளையும் விவாஹம் செய்து கொண்டார். இதிலெல்லாமும் நடுவே சண்டைகள் வந்தன. அப்புறம் கொஞ்ச காலம் எந்தச் சண்டையுமில்லாமல் பத்தினிகளோடு ஸந்தோஷமாக, சாஸ்திரோக்தமான கிருஹஸ்த தர்மங்களைச் செய்துகொண்டு துவாரகையில் வாழ்ந்து வந்தார்.

இனிமேல் அவரை உபத்திரவப்படுத்தினால் பரவாயில்லை என்று இந்திரன் அவரிடம் வந்து நரகாஸுரனுடைய ஹிம்ஸையைப் பற்றி முறையிட்டான்.