மஹாலிங்கம

மஹாலிங்கம்; மஹேச்வரன்

ஆகக்கூடி சிவன் மஹாதேவனாகப் பூர்த்தி ஸ்தானத்தில் வருகிறான்.

மஹாதேவன் என்கிற மாதிரியே மஹாலிங்கம் என்றும், மஹேச்வரன் என்றும் அவனைச் சொல்கிறோம். ஆனாலும் விஷ்ணு-மஹாவிஷ்ணு மாதிரி சிவன் – மஹாசிவன் இல்லை. ஏன் இப்படி?

தேவர்களிலெல்லாம் பெரியவனாதலால் மஹா தேவன். பெருமை, மஹிமை வாய்ந்த லிங்க ரூபமானதால் மஹாலிங்கம். லிங்கம் என்றால் அடையாளம், அறிகுறி என்று அர்த்தம். பரப்ரம்மத்துக்கு இருக்கப்பட்ட அடையாளங்கள்தான் அத்தனை தேவதா ரூபங்களுமே. அவற்றுக்குள்ளே முதல் ஸ்தானத்திலிருக்கிற மஹிமை ‘லிங்கம்’ என்றே சொல்லப்படுகிற மூர்த்திக்குத்தான்! எப்படி?

மூர்த்தி’ என்றேன். ஆனால் கண், மூக்கு, காது, சரீரம் என்றுள்ள மூர்த்தியாகவா இருக்கிறது, நாம் பார்க்கிற சிவலிங்கம்? அப்படிப் பார்த்தால் அமூர்த்திதான், அரூபந்தான்!  ஆனாலும்! வெறும் வெட்டவெளியா, empty space-? அப்படியும் இல்லை. Cosmos என்கிற பிரபஞ்சம் மாதிரியே oval ஆக (நீள்வட்டமாக) ஸகல ஸ்ருஷ்டிக்கும் அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிற ஒரு பிம்பமாகவும் அது இருக்கிறது. விஷயஜ்ஞர்கள் ஸகுணம்-நிர்குணம் இரண்டும் சேர்ந்தது, ஸகளம்-நிஷ்களம் இரண்டும் சேர்ந்தது என்று அதற்குப் பெரிய மஹிமை சொல்வார்கள். அருவுருவம் என்று தமிழில் சொல்வது. இப்படி அருவ-உருவங்களாக ஒருத்தனே ஒருசேர இருப்பதில் அத்வைத-த்வைத தத்வங்கள் அத்தனையும் அடக்கம். அதாவது ஸகல தத்வமும், தத்வாதீதமும், (தத்வத்திற்கு அப்பாற்பட்டது) எல்லாமுமே அடக்கம். அதனால்தான் மஹத்தான அடையாளம், மஹிமை வாய்ந்த அறிகுறி என்று  போற்றி ’மஹாலிங்கம்’ என்பது.

மஹேச்வரன் என்று ஏன் சொல்வது என்றால்; ஈச்வரன் என்ற பதத்துக்கு ஆட்சி செலுத்தும் சக்திமானான தலைவன் என்று அர்த்தம். ‘ஈச்’ என்ற தாதுவுக்கு ரூல் பண்ணுவது, உடைமை படைத்திருப்பது என்று அர்த்தம். இந்த ப்ரபஞ்சம் முழுதையும் தன் உடைமையாக்க் கொண்டு அதன்மீது ஆதிக்க சக்தி காட்டி ஆள்கிற மஹத்தான கார்யத்தைப் பண்ணுகிறவனே ஈச்வரன். மஹத்தான கார்யம் பண்ணுவதால் மஹேச்வரன்.