சிவனுக்கு மட்டுமே ‘ஸதா’ அடைமொழி அந்த ஸதா

சிவனுக்கு மட்டுமே ‘ஸதா’ அடைமொழி

அந்த ஸதாசிவனைப் பற்றிச் சொல்லலாம் என்றுதான் ஆரம்பித்தேன். ‘ஸதாசிவ ஸமாரம்பம்’ என்று குரு பரம்பரை ஆரம்பிப்பதைச் சொல்லி ஆரம்பித்தேன்.

மஹாவிஷ்ணு மாதிரி மஹாசிவன் இல்லை; ஸதாசிவன் தான்.

’மஹாசிவன்’ இல்லை என்று குறைப்பட்டுக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் ‘ஸதா’சிவனுக்கு அப்படிப்பட்ட ஒரு ஸ்பெஷாலிடி இருக்கிறது; uniqueness என்கிறார்களே, அப்படிப்பட்ட தனித் தன்மை! ‘மஹா’வுக்கு இல்லாததாக, ‘ஸதா’வுக்கு மட்டுமே உள்ள யுனீக்னெஸ்!

விஷ்ணுவுக்கு மாத்திரம் என்றில்லாமல் இன்னும் அநேக தெய்வங்களுக்கும் ‘மஹா’ அடைமொழி உண்டு. தாயார் லக்ஷ்மியையே மஹாலக்ஷ்மி, மஹாலக்ஷ்மி என்றுதானே சொல்கிறோம்?  துர்கா தேவி, சண்டிகை என்றிருக்கிற அம்பாளுக்கும் ஒரு மஹாலக்ஷ்மி ஸ்வரூபம் உண்டு. மஹிஷாஸுர வதம் செய்தது அந்த மஹாலக்ஷ்மி துர்கை தான். மஹாகாளி, மஹாஸரஸ்வதி என்ற இன்னும் இரு ‘மஹா’ பட்டம் பெற்ற தேவிகளாகவும் அவளுக்கு ரூபமுண்டு. மஹாகணபதி இருக்கிறார். மஹா சாஸ்தா இருக்கிறார். ‘மாசாத்தான்’ என்பார்கள். ஸுப்ரம்மண்ய ஸ்வாமிக்கும் மஹாஸேனன் என்று ஒரு ‘மஹா’ பெயர் இருக்கிறது. ‘மஹாசிவன்’ இல்லாவிட்டாலும் சிவமூர்த்திகள் ஸம்பந்தமாகவே மஹாதேவன், மஹாலிங்கம், மஹேச்வரன் இத்யாதி இருப்பதையும் சொன்னேன்.

ஆனால் ‘ஸதா’ மட்டும் ‘யுனீக்’காக சிவநாமா ஒன்றோடுதான் சேர்ந்து ‘ஸதாசிவன்’ என்று இருக்கிறது. வேறே எந்த ஸ்வாமி பேருக்காவது ஸதா அடைமொழி இருக்கிறதா? ‘ஸதாவிஷ்ணு’ உண்டா? ‘ஸதாராமன்’?

ராமன் பேர் இத்தனை அடைமொழிகளுடன் தான் சேர்கிறது என்று கணக்கு வழக்கு சொல்ல முடியாமல் எத்தனையோ ‘ராம’ப் பெயர்கள் இருக்கின்றன. கணபதிராமன், ராம ஸுப்ரம்மண்யன், சிவராமன், வேதராமன், கேவல்ராம், ஆனந்த்ராம், சாந்தாராம்.. ராமலக்ஷ்மி என்றே கூட… (சிரித்து) ஆயாராம், கயாராம்**வரை ஏகப்பட்ட ஒட்டுப் போட்டுக் கொண்டு அந்த ராமசந்திரமூர்த்திக்குப் பெயர்கள் இருக்கின்றன. ஆனாலும் ’ஸதாராமன்’ என்று பேர் காணோம்!

** அரசியலில் ஒரு கட்சியிலிருந்து இன்னொன்றுக்கு வந்தவர் ‘ஆயாராம்’. ஒரு கட்சியிலிருந்து இன்னொன்றுக்குப் போனவர் ‘கயாராம்’.

எந்தப் புருஷ தெய்வப் பேருடனோ, ஸ்திரீ தெய்வப் பேருடனோ ‘ஸதா’ ஒட்டுப் போட்டுக் கொள்ளவில்லை. சிவன் ஒரு பெயருக்கே அந்த அடைமொழி சேர்ந்து ஸதாசிவ நாமா உண்டாயிருக்கிறது.

சிவன், சிவன் என்று ஸ்வாமி பெயரைத் தனியாகச் சொல்லிக் கொண்டு போவது எனக்கே ’என்னவோ மாதிரி’ இருக்கிறது! ஸாதாரணமாக அந்த நாமாவை அப்படிச் சொல்கிற வழக்கமில்லை. தமிழில் ’சிவபெருமான்’ என்று ‘பெருமான்’ சேர்த்தே சொல்வார்கள். ஸம்ஸ்கிருதத்தில் எதனாலோ அந்த ஸ்வாமியைப் பரம உத்க்ருஷ்டமான (உயர்வு மிக்க) சிவ சப்தத்தால் சொல்லாமல் ‘ஈச்வரன்’ ‘பரமேச்வரன்’ என்றே அதிகம் குறிப்பிடுவதாக ஏற்பட்டிருக்கிறது. அப்படித்தான் நானும் சொல்வது. ஆனால் இன்றைக்கு ஸதாசிவனைச் சொல்ல நினைத்ததால் சிவ நாமாவாகவே லோகமங்களமான அந்த இரட்டை அக்ஷரத்தை நிறையச் சொல்லணுமென்று தோன்றி மெனக்கிட்டு அப்படிச் சொல்லிக் கொண்டு போகிறேன்…