இரு புனிதக் கைப்பிடித்தல்கள் மிருக இயற்கையான பசுதர்மம் என்பதைக் கூட, ஸ்த்ரீ-புருஷ ஸம்பந்தத்தையேகூட ர

இரு புனிதக் கைப்பிடித்தல்கள்

மிருக இயற்கையான பசுதர்மம் என்பதைக் கூட, ஸ்த்ரீ-புருஷ ஸம்பந்தத்தையேகூட ரொம்பவும் சக்தியுள்ள மந்த்ரங்களின் பலத்தினால் பரிசுத்தப்படுத்தி வைதிக ஸம்ஸ்காரங்களாகத் தந்திருக்கிற அஸாதாரணமான பெருமை நம்முடைய மதத்துக்கு உண்டு. அந்த ரீதியிலே கரஸ்பர்சத்தையும் – வெறும் ஸ்பர்சமில்லை; கெட்டியாகவே பிடித்துக் கொள்வதை – பரிசுத்தி செய்வதாக இரண்டு உசந்த ஸம்ஸ்காரங்களில் மட்டும் பார்க்கிறோம்.

ஒன்று பாணிக்ரஹணம் – விவாஹ ஸம்ஸ்காரத்தில் முக்ய ஸ்தானம் பெறுகிற கர்மா, மற்றது….

(இப்பகுதிக்கு ஆதாரமான உரையாடலின்போது உடனிருந்தவர்கள் ஒவ்வொருவரையும் ‘தெரியுமா?’ என்ற கேள்விக் குறியுடன் பார்க்கிறார். அவர்களும் கேள்விக்குறியுடனேயே விடையை அவரிடமிருந்தே எதிர்பார்க்க, சிரித்தபடித் தொடர்கிறார்.)

உபநயனந்தான். அநேகமாக இங்கே உள்ள எல்லோருக்குமே உபநயனமாகியிருக்கிறது. அப்போது இந்த (சிரித்து) ‘பாணிக்ரஹண’மும் நடந்துதானிருக்கிறது. ஆனாலும் எதனாலோ விவாஹத்தில் பாணிக்ரஹணம் முக்யம் என்று தெரிந்திருப்பதுபோல் உபநயனத்திலும் இருக்கிறது என்று தெரியக் காணோம்! விவாஹத்தின் ‘பர்பஸ்’ தாம்பத்யம்தான் என்று நினைத்துக் கொண்டு  - வாஸ்தவத்தில் வேதப்படி ஸ்வதர்ம – கர்மாநுஷ்டானம் பண்ணுவதற்கு ஒரு ஸகியைத் துணை சேர்த்துக் கொள்வது தான் பர்பஸ் என்பதை மறந்து தாம்பத்ய ஸுகத்துக்காகத் தான் அது என்று நினைத்துக் கொண்டு – ஆகக்கூடி, ஏதோ ஒரு விதத்தில் விவாஹ ஸம்ஸ்காரம் ஆனபின் அதனுடைய உத்தேசத்தைத் தாங்கள் நிஜமாகவே பூர்த்தி செய்வதாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பதால்தான் அதில் நடக்கிற பாணிக்ரஹணத்தைக் கவனத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. அதிலே ச்ருங்கார ரஸமும் இருப்பதாகத் தப்பாக நினைத்துக் கொண்டிருப்பது காரணமாயிருக்கலாம்.

உபநயன லக்ஷ்யமான ப்ரஹ்மசர்ய தர்மங்களையோ, அதாவது சுத்தனாக இந்த்ரிய நிக்ரஹத்துடன் இருந்து கொண்டு, ஆசார்யனுடனேயே வஸித்துக் கொண்டு, அவனுக்கு ஸேவை செய்துகொண்டு வைதிக வித்யையை அப்யஸிப்பது, பிக்ஷாசர்யம் செய்வது (பிக்ஷையெடுத்து உண்பது) ஆகிய தர்மங்களையோ செய்வதான அபிப்ராயம் தற்போது எவருக்கும் லவலேசங்கூட இல்லாததால் அதற்கான (உபநயன) ஸம்ஸ்காரத்திலுள்ள அங்கங்களைப் பற்றியும் கவனமில்லாமல் ஆகியிருக்கிறது. அதனால்தான் இதிலேயும் ஒரு பாணிக்ரஹணம் இருப்பது ஒரு விஷயமாகவே எவர் மனஸிலேயும் நிற்கவில்லை.

விவாஹத்தில் வரன் (மணமகன்) வதூவின் (மணமகளின்) கையைப் பிடிக்கிறாற் போலவே உபநயனத்திலும் ஆசார்யன் – அவன் தான் ஒரு பையனுக்கு உபநயனம் பண்ணுவித்து அப்புறம் அவனைத் தன் குருகுலத்தில் தன்னோடேயே வைத்துக் கொண்டு வேதாப்யாஸம் பண்ணப் போகிறவன்; தற்காலத்தில் உப்புக்குச் சப்பாணியாக உபநயனம் என்று ஒரு ‘ஷோ’ பண்ணுவதில் காயத்ரி அநுஷ்டானமேயில்லாத அப்பாக்காரன் தான் அந்த ஆசார்யன். அப்படிப்பட்டவன் – வடு (vatu) என்கிற உபநயனப் பையனின் கையைப் பிடிக்கவேண்டும்.

உபநயனத்திலே அநேக தேவதைகளே தனக்குள்ளே இருந்துகொண்டு தன் கைப்பிடிப்பினால் வடுவின் கையைப் பிடித்துக் கொண்டு ரக்ஷிக்கிறார்கள் என்று ஆசார்யன் சொல்லி அவனை தேவதைகளிடம் ஒப்படைப்பதாக மந்த்ரம் சொல்கிறார். விவாஹத்தில் வதூவை அநேக தேவதைகளே தனக்குக் கொடுத்திருப்பதாக வரன் சொல்லி தாங்களிருவரும் க்ருஹஸ்த தர்மத்தை நன்றாக அநுஷ்டிப்பதற்காக தேவதா ப்ரஸாதத்தை ப்ரார்த்திக்கிறான். இரண்டிலும் அடிப்படைக் கருத்தும் லக்ஷ்யமும் ஒன்றேதான். அதாவது: அந்தந்த ஆச்ரமத்திற்கான தர்மத்தைப் பரமேச்வரனே தேவதைகள் என்ற தன்னுடைய அதிகாரிகளின் மூலம் ஒரு ஜீவனுக்குக் கொடுத்திருக்கிறான். இவன் பக்தியுடன் உபாசித்தால் அந்தந்த தர்மத்தை முறைப்படி ரக்ஷிப்பதற்கு அந்த தேவதைகள் கை கொடுத்து, அதன் மூலம் ஆத்ம லக்ஷ்யத்தில் அவன் முன்னேறுகிறதற்கு கையைப் பிடித்து அதாவது, பாணிக்ரஹணம் பண்ணிக் கொண்டு அழைத்துப் போகிறார்கள்; வழிநடத்திப் போகிறார்கள் என்பதே பொதுவான அடிப்படையும் லக்ஷ்யமும்.

‘புருஷ ப்ரஜைக்கு உபநயனம் எப்படியோ அப்படியேதான் ஸ்த்ரீ ப்ரஜைக்கு விவாஹம்’ என்பதற்கு இது போன்ற அம்சங்கள் நிரூபணம். ஒரு ஆண் குழந்தை குருவிடம் சரணாகதி செய்து அவன் கைப்பிடிப்பில் லக்ஷ்ய மார்க்கத்தில் போகிறதுபோலவே ஒரு பெண் குழந்தை பதி என்ற குருவின் மூலம் பண்ணவேண்டும் என்பதுதான் சாஸ்த்ர அபிப்ராயம்.

இந்த இரண்டிலுமே, shake-hand-ல் போல் பரஸ்பரம் இரண்டு பேருமே ஒருத்தர் கையை மற்றவர் பிடித்துக் கொண்டிருப்பதாக இல்லை. ஆசார்யன் தான் – உபநயனத்தில் ஆசார்யன் என்றே இருப்பவர்; விவாஹத்தில் வரன் என்ற பெயரில் உள்ள ஆசார்யன்; அவனொருத்தன் தான் – அந்த வடுவின் கையையும், வதூவின் கையையும் தன் கையால் அழுந்த மூடிக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவன். அங்கே (கை குலுக்கலில்) ஸமத்வம்; அதனால் பரஸ்பரம் ஒரே போலப் பண்ணுவது. இங்கேயோ (உபநயன, விவாஹங்களிலோ) சரணாகதி; சிஷ்யனாக உள்ள வடுவும், சிஷ்யையாக உள்ள வதூவும் விநயமாகக் கீழ் ஸ்தானத்திலிருந்து கொண்டு சரணாகதி செய்து, தன் செயலே இல்லை என்று இருக்கிறவர்கள். தன் செயலே இல்லாததால் பதிலுக்குக் கையைப் பிடித்துக் குலுக்குகிற கார்யமும் இல்லை! மனோ-வாக்-காயங்களை குருவுக்கே அர்ப்பணிப்பதற்கு அடையாளமாகக் கார்யத்திற்கெல்லாம் கருவியாயுள்ள கையை, ஆசார்ய ஸ்தானத்திலிருக்கிறவரிடம் ஒப்புவித்துவிட்டு அதைச் சும்மாயிருக்க விடுகிறார்கள். சரணாகதனை ரக்ஷித்துப் பூர்ணமாக அங்கீகரித்துக் கையைப் பிடித்து வழி நடத்திப் போவதற்கு அடையாளமாக ஆசார்யனே, அவன் மட்டுமே, சிஷ்ய ஜீவனின் கையைப் பிடித்துக் கொள்கிறான்.