Page load depends on your network speed. Thank you for your patience.

Loading...

ஜன்ம விமோசனமே அளிப்பது ”பர

ஜன்ம விமோசனமே அளிப்பது

”பரமாத்மாவையே நமஸ்காரம் என்று பாவித்து உபாஸியுங்கள்; அப்போது எல்லாக் காமங்களும் உங்களை நமஸ்கரிக்க ஆரம்பித்து விடும்” என்று வேதம் சொல்லியிருக்கிறது*. என்ன அர்த்தம்? பலவிதமான காமங்களின் – அதாவது, விருப்பங்களின் – நிறைவேற்றத்தை வேண்டித்தான் பொதுவாக நாம் நமஸ்கரிப்பது. அதெல்லாம் நிறைவேறுவது ஸாத்யமா? நம் கர்மா அதற்கு விடுமா? அப்படியே நிறைவேறினாலும் அதனால் ஆத்மாவின் நிறைந்த நிறைவைப் பெற முடியுமா? “ஆசைக்கோரளவில்லை” என்றபடி இந்த விதமான ப்ரார்த்தனைக்கு முடிவேயில்லாமல் ஒன்று விட்டால் இன்னொன்று என்று பிடுங்கி எடுத்தபடிதான் போகும். ஆனபடியால் புத்திசாலித்தனமாக ப்ரார்த்திப்பதென்றால் எல்லாக் காமனைகளையும் (விருப்பங்களையும்) விட்டு விட்ட விடுதலை நிலைக்காகத்தான் வேண்டிக் கொள்ளவேண்டும். “வேண்டாமை வேண்டி” என்று இதை அழகாகச் சொல்வார்கள். அந்த விடுபட்ட நிலையைத்தான் ‘காமங்கள் இவனை நமஸ்கரிக்கும் ஸ்திதி’ என்று வேதத்தில் சொன்னது. இவன் ஒரு காமனைப் பூர்த்திக்காகவும் அடி பணியவில்லை; காமனைகள்தான், ‘எங்களை இப்படித் திரஸ்காரம் பண்ணி விட்டீர்களே! கொஞ்சம் கண் திறந்து பாருங்களேன்!” என்று இவனுக்கு அடிபணியுமாம்! ச்ருதி வாக்யம் இதைத்தான் கவிநயத்தோடு சொல்கிறது!

‘வயதானவர்களை – அதாவது யோக்யாதம்சம் நிரம்பிய பெரியவர்களை – தினமும் அணுகிப் பணிவிடை பண்ணி நமஸ்கரிக்கும் ஒழுக்கமுள்ளவனுக்கு நாலு ச்ரேயஸ்கரமான விஷயங்கள். மேலும் மேலும் வளர்கின்றன’ என்று ‘மநுஸ்ம்ருதி’யில் சொல்லி, அந்த நாலு ஆயுஸ், வித்யை, யசஸ் (புகழ்), பலம் என்று விளக்கியிருக்கிறது.

*தைத்திரீய உபநிஷத் – 3.10.4

அபிவாதநசீலஸ்ய நித்யம் வ்ருத்தோபஸேவித: |

சத்வாரி தஸ்ய வர்தந்தே ஆயுர்-வித்யா-யசோ-பலம் || **

** 2.121

’ஆயு: ப்ரஜ்ஞா’ என்றும் பாடபேதம் இருக்கிறது. ‘வித்யா’வுக்குப் பதில் ‘ப்ரஜ்ஞா’, ‘ப்ரஜ்ஞா’ என்றால் உசந்த அறிவு. ‘வித்யா’ என்பதற்கும் கல்வி என்பதோடுகூட இந்த அர்த்தமும் உண்டு.

‘நிலத்திலே கழி மாதிரி தண்டனிட்டுக் கிடக்கிறவன் அடைகிற ச்ரேயஸை நூறு யாகம் பண்ணினவனும் அடைய முடியாது’; ‘ஒரு நமஸ்காரம் பத்து அச்வமேதத்திற்கு ஸமம் என்பதுகூட ஸரியில்லை. ஏனென்றால் அந்தப் பத்து அச்வமேதக்காரனுக்குப் புனர்ஜன்மா உண்டு. நமஸ்காரமோ ஜன்ம விமோசனத்தையே தருகிறது’ என்றெல்லாம் தர்ம சாஸ்த்ரங்களில் நமஸ்கார பலனைச் சொல்லியிருக்கிறது.

நமஸ்காரம் ஜன்ம விமோசனமே தருகிறது என்ற அபிப்ராயத்தை ஒரு பெரியவர் ரொம்பவும் கவி நயத்தோடு பரமேச்வரனிடம் ப்ரார்த்தனையாகத் தெரிவிக்கிறார்:

வபு: ப்ராதுர்பாவாத் அநுமிதமிதம் ஜன்மனி புரா

புராரே ந க்வாபி க்வசிதபி பவந்தம் ப்ரணதவான் |

நமந்முக்த: ஸம்ப்ரத்யஹமதநு: அக்ரேப்யந்திமான்

ஈதீச க்ஷந்தவ்யம் ததிதம் அபராத த்வயமபி || ***

*** ஸ்ரீ அப்பய்ய தீக்‌ஷிதர், ‘குவலயாநந்தம்’.

”என்ன அந்த இரண்டு?” என்றால், “ஒன்று, போன ஜன்மாவில் நான் உனக்கு நமஸ்காரம் பண்ணாதது. அது எப்படி எனக்குத் தெரிந்தது என்றால், இப்போது இந்த சரீரத்தில் ஜன்மா எடுத்திருக்கிறேனோல்லியோ, அதிலிருந்தே தெரிகிறது! அதெப்படி என்றால் நான் மட்டும் போன ஜன்மாவில் உன்னை நமஸ்கரித்திருந்தேனானால் இப்படியொரு புனர்ஜன்மாவே வந்திருக்காதே!”

“ஸரி, இன்னொரு அபராதம் என்ன?” என்றால் “அடுத்த ஜன்மாவில் நான் உனக்கு நமஸ்காரம் பண்ணப் போவதில்லை என்பதுதான்”.

“ஏனப்படிப் பண்ணாமலிருக்கணும்” என்றால், “அதுதான் இந்த ஜன்மாவில் இந்த சரீரத்தை உன் முன்னே போட்டு விட்டேனே! அதனால் இந்த சரீரம் விழுந்த விட்டு இன்னொரு சரீரம் எடுக்க முடியாமல் ஜன்ம நிவிருத்தி பெற்றுக்கொண்டு விட்டேனே! மறு ஜன்மாவே இல்லை என்கிறபோது அதில் நமஸ்காரம் பண்ணுவது என்பதற்கு ஏது இடம்?” என்றிப்படி ரொம்பவும் சாதுர்யமாக நமஸ்கார மஹிமையைச் சொல்லியிருக்கிறார்.

பாகவதத்தின் முடிவிலே முடிந்த முடிவாக ச்லோகம் இருக்கிறது:

நாம ஸங்கீர்த்தநம் யஸ்ய ஸர்வபாப-ப்ரணாசநம் |

ப்ரணாமோ து:கசமநஸ்-தம் நமாமி ஹரிம் பரம் ||

நாமம்’ என்று முன்பாதி ஆரம்பம்; ‘ப்ர-நாமம்’ (ப்ரணாம) என்று பின்பாதி ஆரம்பம்; நடுவிலே ‘ப்ர-நாசம்’ (ப்ரணாசனம்).நாமம்-ப்ரணாமம்-ப்ரணாசம்’ அழகான சப்த ஜாலம்!

அது இருக்கட்டும். அர்த்த விசேஷம், குறிப்பாக நமஸ்கார விசேஷம், பார்க்கலாம்.

பரவஸ்துவான ஹரியுடைய நாம ஸங்கீர்த்தனம் ஸகல பாபத்தையும் நன்றாக நசிப்பிக்கிறது என்று முன் பாதி சொல்கிறது. அதோடேயே க்ரந்தத்தைப் பூர்த்தி செய்திருக்கலாம். அதற்கு ஸகல ந்யாயமுமிருக்கிறது. ஆனால் அப்படி முடிக்காமல் நமஸ்கார மஹிமையைப் பின் பாதியாகச் சொல்லியே பூர்த்தி செய்திருக்கிறது.

        ப்ரணாமோ து:கசமந:

அவனுக்கு நமஸ்காரம் பண்ணுவது துக்கத்தை சமனம் செய்கிறது. ஸகல துக்கத்தையும் போக்குகிறது’.

       தம் நமாமி ஹரிம் பரம்

ஆகையினால் பரவஸ்துவான அந்த ஹரியை நமஸ்காரம் பண்ணுகிறேன்.’

‘எந்தப் பரவஸ்துவான ஹரியின் நாம கீர்த்தனம் ஸகல பாபத்தையும் நசிப்பிக்குமோ, எவனை நமஸ்கரிப்பது துக்கத்தைப் போக்குமோ, அவனை நமஸ்கரிக்கிறேன்’ என்று முழு ச்லோக அர்த்தம்.

பாபம் போனாலே துக்கமும் போகாதா என்றால் பாபம் போனால் ரொம்பவும் தார்மிகமாக, நேர்மையாக இருந்து கொண்டிருக்கலாம். ஆனால் அதுவே துக்க சமனம் இல்லை. என்ன துக்கம்? அவனோடு சேரவில்லையே என்ற துக்கந்தான். அவனோடு சேராத மட்டும், அவனிடமிருந்து பிரிந்து வந்த ஜீவனுக்கு அடிமனஸில் துக்கந்தான். தர்மமாக, righteous-ஆக, நல்லொழுக்க morality-யோடு வாழுவதால் மாத்திரம் நிறைவு கண்டுவிட முடியாது. நிறைவு இல்லை என்றால் குறைவுதான். குறை என்றால் துக்கந்தானே? அது அவனோடு கலந்தாலொழியத் தீராது. அதை அளிக்கவல்லது நமஸ்காரந்தான்.    இதையே ச்லோகம் சொல்கிறது.

நாம கீர்த்தனம் என்று கார்யமாகப் பண்ணுவதெல்லாமும் ஓய்ந்து போய் ஒன்றும் பண்ணாமல் சரணாகதி என்று விழுவது நமஸ்காரத்தில்தான். அதனால் தான் அதற்கே அத்யுன்னத (அதி உன்னத) ஸ்தானம் தந்து ஸ்ரீமத்பாகவதத்தை சுகாசார்யாள் பூர்த்தி செய்திருக்கிறார்.

பாபம் என்று கார்யமாகப் பண்ணியதைப் போக்கடிக்க நாம கீர்த்தனம் என்ற கார்யத்தைப் பண்ணியாக வேண்டும். அப்படிப் பாபத்தைப் போக்கிக் கொண்டால்தான் அவனைச் சேருகிற தாபம் நன்றாக மூண்டு, அப்புறம் ”நாமாகச் சேர முடியாது. அவன் தான் சேர்த்துக் கொள்ளணும். அது அவன் கார்யந்தான். அவனுடைய கார்யம் மாத்ரமேதான். நாம் கார்யமேயில்லாமல் சரணாகதி என்று கிடந்தால்தான் அவன் அந்தக் கார்யத்தைப் பண்ணுவான்” என்ற ஞானம் பிறந்து, சரணாகதிக்கே க்ரியையாக – நம்முடைய கடைசிக் கார்யமாக – அவன் காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணி அப்படியே கிடப்போம்.

இது பாகவதத்தின் கடைசி ச்லோகம். கீதையின் கடைசி ச்லோகத்தில்* பாகவதத்தின் நாயகனாக உள்ள அந்த பகவானே அர்ஜுனனை – அதாவது ஸகல ஜீவ லோகத்தையும் – சரணாகதிதான் பண்ணச் சொல்கிறார். அப்படிப் பண்ணினால்,

அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி”

”நான் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்” என்கிறார். அதுதான் பாகவதத்தில் நாம் பார்த்த ‘ஸர்வ பாப ப்ரணாசனம்’.

*18.66 இதற்குப் பிறகும் சில ச்லோகங்கள் இருப்பினும் இதுவே பகவானுடைய உபதேசம் முடியும் ச்லோகம்.

அப்புறம் பகவானின் முடிவான மங்கள்வாக்காக

”மா சுச:”

துக்கப்படாதேப்பா!” என்கிறார். பாகவதத்தில் பார்த்த ‘து:க சமனம்’.

சரணாகதி சாஸ்திரமாகவே பாகவதத்தையும் முடிக்க வேண்டும் என்று சுகாசார்யாள் பண்ணினபோது, அதைக் குறிப்பிட நமஸ்காரத்தையே சொல்லியிருக்கிறார்.

எதைவிட பெரிய பலன் இல்லையோ அந்த பகவத் ஐக்கியத்தையே நமஸ்காரம் – நிஜமான நமஸ்காரம் – கொடுத்துவிடுகிறது.