தாய் வழியில் ரிஷிகளின் பெயர்கள்; ஆசார்யாள் காட்டும் அன்னை மகிமை

தாய் வழியில் ரிஷிகளின் பெயர்கள்;ஆசார்யாள் காட்டும் அன்னை மகிமை

ரொம்ப வித்யாஸமாக ஒரு இடத்தில் பார்க்கிறோம். எந்த இடத்திலென்றால், தசோபநிஷத்துக்கள் என்று ப்ரஸித்தமாக நம்முடைய வேதாந்த மதத்திற்கே அஸ்திவாரமாக இருக்கப்பட்ட பத்தில் (பத்து உபநிஷத்துக்களில்) முடிவாக வரும் ப்ருஹதாரண்யகத்தில் 'வம்ச ப்ராஹ்மணம்' என்ற முடிவான பாகத்தில்தான். அதிலே அந்த உபநிஷத்தை ஆதியிலிருந்து வழி வழியாக உபதேசித்து ரக்ஷித்துக் கொடுத்திருக்கிற, அதாவது குருமார்களான, அத்தனை ரிஷிகளுக்கும் பேர் சொல்லி அவர்கள் இன்னின்ன வம்சம் என்று லிஸ்ட் கொடுத்திருக்கிறது, வேறே உபதேசம் இல்லை, வம்சாவளி மட்டுந்தான். ஒவ்வொரு KS பேரையும் சொல்லி, அவர் இன்னார் புத்ரன் என்று சொல்லியிருக்கிறது.

ஒருத்தர் அம்மா - அப்பா இரண்டு பேருக்கும் புத்ரராயிருந்தாலும், லோகம் பூராவிலுமே வழக்கத்தில் அப்பாதான் Head of the family -யாகக் கருதப்படுவதற்கேற்க, 'இன்ன அப்பாவுடைய புத்ரர்' என்றுதான் சொல்வதாக இருக்கிறது. பத்திரமோ, அப்ளிகேஷன் ஃபாரமோ எதுவானாலும் இன்றைக்கும் father's name -தான் கேட்கிறார்கள்!இனிஷியலும் அப்படித்தான் போட்டுக் கொள்வதாக இருக்கிறது!இந்த விஷயத்தில் இப்போதும் ஸ்த்ரீ ஸமத்வப் போராட்டக்காரர்கள் கூடப் போராட்டம், agitation ஆரம்பித்ததாகத் தெரியவில்லை ஒருவேளை இப்போது நானேதான் இதைச் சொல்லி அது வேறு ஒன்று கிளறிக்கொடுக்கிறேனோ, என்னவோ?...

வேதம் - உபநிஷத் ஆகியவற்றில் வரும் ரிஷிகளின் பிதாக்கள் பிதாவாக மட்டுமில்லாமல் குருவாகவும் இருந்திருப்பதால் அவர்களை வைத்தே புத்ரரைச் சொல்வது வழக்கம். நாமுங்கூட அபிவாதனத்தில் நம்முடைய கோத்ர ப்ரவர்த்தகர்களான (கோத்திரத்தைத் தொடங்கியவர்களான) ரிஷிகளின் - புருஷ ஜாதியே ஆனவர்களின் - பெயர்களைத்தானே அப்பா - பிள்ளை வரிசையில் சொல்கிறோம்? 'ஏதோ ஒப்பிக்கிறோம். இது நம்முடைய கோத்ரத்தின் பூர்வ ரிஷிகளின் பெயர்களா?' என்று இப்போதுதான் தெரிந்து கொண்டவர்களும் இருக்கலாம்!...

லோகம் பூரா பரவியுள்ள இந்த வழக்குக்கு வித்யாஸமாக, நான் சொன்ன அந்த இடத்தில் (ப்ருஹதாரண்யக உபநிஷத்தின் முடிவுப் பகுதியில்) லிஸ்ட் ஆரம்பத்திலிருந்து ரொம்ப தூரம் வரை ஒவ்வொரு ரிஷியின் பேரையும் அவர் 'இந்த அம்மாவின் புத்ரர், இந்த அம்மாவின் புத்ரர்' என்பதாகத் தாயார்மார்களின் பேர்களை வைத்தே கொடுத்திருக்கிறது.

'இதென்ன, இப்படிப் பண்ணியிருக்கிறதே' என்பதற்குப் பதில் ஆசார்யாளின் பாஷ்யத்திலிருந்து தெரிகிறது. என்ன சொல்கிறாரென்றால், "புத்ரன் குணவானாக இருப்பதற்கு ஸ்த்ரீயே - அதாவது அவனுடைய தாயாரே - ப்ரதானமான காரணம் என்பது வெகுவாகப் புகழ்ந்து சொல்லப்படும் விஷயம். ஸ்த்ரீ ஜாதிக்குள்ள அந்த விசேஷத்தினாலேயே புத்ரன் விசேஷம் பெறுவதால்தான் இங்கே ஆசார்ய பரம்பரை இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது" என்கிறார்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is பித்ருவம்சமே குருவம்சமாகவும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  பெண்டிரும் பிரம்மவித்தையும்
Next