திருக்கடவூர்
அமுதகடேசர் :-
கடவுளுடைய பக்தியினால் கால பயத்தையும் போக்கிவிடலாம் என்பதற்க்கு மார்க்கண்டேயர் சாட்சி. இறைவன் அருளால் என்றும் பதினாராக இருக்கும் வரம் பெற்றார் அவர். அவர் காலனுக்கு அஞ்சிஇறைவனைச் சரண் அடைய, இறைவன் காலனை உதைத்து வீழ்த்தினார். இந்த வீரச்செயல் திருக்கடவூர் என்ற தலத்தில் நடைபெற்றது. அட்ட வீரட்டத் தலங்களுள் இதுவும் ஒன்று. அமுதத்தைக் கடைந்தெடுத்த அமரர்கள் அதனை ஒரு குடத்துக்குள் இட்டு இத்தலத்தில் வைத்து நீராடுவதற்குச் சென்றார்கள். நீராடிவிட்டு வந்து குடத்தை எடுக்கும்போது அதை எடுக்க முடியவில்லை. அக்குடத்தினுள் இருந்த அமுதம் இலிங்க உருவம் பெற்றுத் திகழ்ந்தது. அமரர்கள் அப்பெருமானைப் பூசித்து, அமுதம் பெற்று உண்டார்கள். அமுதம் வைத்திருந்த குடத்திலிருந்து தோண்றியமையால் அமுதகடேசர், அமுதலிங்கர் என்ற திருநாமங்கள் இங்குள்ள சிவபெருமானுக்கு வழங்குகின்றன. கடம் என்பது குடத்தின் பெயர் அமுதகடம் வைத்த இடமாதலால் இதற்குக் கடவூர் என பெயர் வந்தது.
திருக்கடவூர் ஆலையம் மிக அழகானது. மூன்று பிரகாரங்கள் அமைந்தது. ஆலையத்துக்குள்ளே நூற்றுக்கால் மண்டபமும் அதன் கீழ்பால் நந்தவனமும் முனீஸ்வரர் கோபுரமும் திருக்குளமும் இருக்கின்றன. சுலாமி சந்நிதியில் சங்கு மண்டபமும் இருக்கிறது.
காலசங்கார மூர்த்தி.
மகாமண்டபத்திற்கு வடக்கே மிகவும் அழகாக அமைந்த சபையில் காலசங்கார மூர்த்தி தென்முகம் நோக்கி எழுந்தருளியிருக்கிறார். அம் மூர்த்தியின் திருக்கரங்களில் சூலமும் மழுவும் பாசமும் முத்திரையும் உள்ளன. அவரால் உதையுன்ட யமன் தலைகீழாக விழுந்து கிடக்கிறான். காலசங்காரமூர்த்தியின் இடப்பக்கத்தில் திருமகலும் கலைமகளுமாகிய சேடியர்களுடன் பாலாம்பிகை எழுந்தருளியிருக்கிறார். இந்த மூர்த்திக்கு எதிரே யமனுடைய உற்சவமூர்த்தியும் இருக்கிறது. இந்தத் திருவுருவத்திற்கும் அபிஷேக ஆராதனைகள் உண்டு.
அபிராமபட்டர்
இந்தத் தலத்தில் எழுந்தருளிய அம்பிகைக்கு அபிராமி என்பது திருநாமம். அம்பிகைக்கு தனியே திருக்கோயில் இருக்கிறது. அபிராமி அன்னையைப்பற்றி அந்தாதி ஒன்று உண்டு. அபிராமப்பட்டர் என்ற தேவி உபாசகர் இயற்றியது அது.
அபிராமபட்டர் அம்பிகையை உபாசித்திவர். எப்பொழுதும் அப்பெருமாட்டியின் தியானமாகவே இருப்பவர். ஒருநாள் தஞ்சையில் இருந்த மகாராஹ்டிர மன்னரான சரபோஜி இத்திருக்கோயிலுக்கு வந்து அமுதகடேசரைத் தரிசனம் செய்தார். பிறகு அபிராமியம்மையின் சந்நிதிக்கு வந்தார். அப்போது அபிராமிபட்டர் சன்னிதியில் தம் கண்ணைமூடிக்கொண்டு அம்பிகையைத்தியானித்த வண்ணம் இருந்தார். மன்னரும்
பிறகும், அங்கே வருவதை அவர் உணரவில்லை.
அம்பிகையை தரிசித்த சரபோஜி மன்னர், அங்கே இருந்த அபிராமபட்டரைக் கவனித்தார். மற்றவர்கள் மன்னரைக் கண்டு விலகி மரியாதை செய்ய, அவர் மாத்திரம் கண்ணைத்திறவாமல் தியானத்தில் ஆழ்ந்து இருப்பதைக் கண்டு வியந்தார்.அருகில் இருந்தவர்களை, இவர் யார் ? என்று கேட்டார் அரசர். அபிராமிபட்டரின் பக்தித்திறனை உணராதவர்கள் அவர்கள். ஆதலின் இவர் வாமமதத்தினர் மது உண்டு மயங்குபவர் என்று சொன்னார்கள். சரபோஜி மன்னர் உண்மையை அறிய விரும்பினார்.
அபிராமபட்டரும் தம் தியானத்திலிருந்து விழித்தார். அந்தச் சமயத்தில் அரசர் " இன்று FF என்ன ? என்று கேட்டார். தம்முடைய தியானத்தில் ஒளிமயமான சூழ்நிலையில் அம்பிகையின் திருவுருவத்தைக் கண்டு இன்புற்று விழித்த நிலையில் இந்தக் கேள்வி காதில் விழவும் அபிராமிபட்டர் பௌர்ணமி என்று சொல்லிவிட்டார். அருகில் இருந்தவர்கள் சிரித்தார்கள் ! அன்று அம்மாவாசைக்கு அடுத்த பிரதமை ஆகவே, அரசருக்கு அங்குள்ளவர்கள் சொன்னதே உண்மை எனப்பட்டது. அதனால் சினங்கொண்டு பொர்ணமியாயின் மாலையில் பூரிணநிலவை நீர் காட்ட வேண்டும். இல்லையேல் தகுந்த சி¬க்ஷக்கு உரியவராவீர் என்று சொன்னார் அரசர்.
அபிராமி அந்தாதி .
சரபோஜி போய்விட்டார். அபிராமிபட்டருக்கு தம் உணர்வு வந்தது. தாம் பௌர்ணமி என்று கூறியது தவறென்றுபட்டது. ஆயினும், அம்பிகையின் அருள் நிலையிலிருந்து சொல்லியதை எண்ணி மெய்பிக்க எண்ணினார். அம்பிகையின் திருமுன் ஓரு பெரிய குண்டம் வெட்டி அதில் அக்கினியை மூட்டி அதற்க்கு மேல் நூறுபுரியைக் கொண்ட பெரிய உறியைக் கட்டி அதில் ஏறி அமர்ந்தார். அபிராமி அன்னையின் மேல் ஒர் அந்தாதியைப் பாடத் தொடங்கி ஒரு பாடலுக்கு ஒரு புரியாகப் பாடலின் முடிவுதோரும் அறுத்து வந்தார். ஐம்பது பாடலுக்கு மேல் பாடிவிட்டார்.
மாலை ஆயிற்று. அம்பிகை தன் காதில் உள்ள தோட்டை எடுத்துக் கீழ்த்திசையை நோக்கி வீச அது அங்கே சென்று பூரணசந்திரனாகப் பிராகாசித்தது. அதைக் கண்டு சரபோஜி மன்னர் ஆச்சரியப்பட்டு அபிராமபட்டருடைய பெருமையை உணர்ந்து பட்டர் அம்மையின் திருவருளை உணர்ந்து அருகில் வந்து வணங்கி, தம்மை மன்னிக்க வேண்டினார். அபிராமிபட்டரின் அம்மையின் திருவருளை வியந்து உருகி, அந்தாதி நூறு பாடலையும் பாடி முடித்தார். மன்னர் அவருக்கு சில நிலங்களை வழங்கினார். இத்தகைய தெய்வத்தன்மை வாய்ந்த நூலாக இருப்பதினால் அபிராமி அந்தாதியைப் பலரும் பாராயணம் செய்கிறார்கள்.
தலச்சிறப்பு
இத்தலத்தின் தல விருட்சம் ஜாதி மல்லிகை. அதற்குப் " பிஞ்சிலம் " என்பது வடமொழிப்பெயர். ஆதலால் இத்தலத்திற்க்கு மூவர் தேவாரமும் திருப்புகழ் பாடல்களும் உண்டு. இந்த ஆலையம் தர்மபுரி ஆதீனத்தின் பரிபாலனத்திற்க்கு உட்பட்டது. கார்த்திகை மாதம் சோமவாரங்களில் இங்கு சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெரும். சுற்றுப்புறங்களிலிருந்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவாரகள்.