ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
பிரதோஷம்
முன்பு ஒரு காலத்தில் சிவபக்தரான துர்வாச முனிவர் கைலாயம் சென்றிருந்தார். அங்கு அவருக்குத் தேவிமேல் சாற்றிய பூமாலை ஒன்று கிடைத்தது. அதை அன்புடன் பெற்றுக்கொண்டு இந்திர லோகம் வந்திருந்தார். எதிரில் இந்திரன் வெள்ளையானையின் மீதேரி வந்துகொண்டிருந்தான். துர்வாச முனிவர் முகத் தூய்மையான தேவி நிர்மால்யத்தை இந்திரனுக்குத் தர எண்ணினார். செல்வச் செருக்கில் மூழ்கிய இந்திரன் முனிவரின் கருணையும், மாலையின் மகிமையையும் உணரவில்லை. முனிவரைக் கண்டு வணங்கவும் இல்லை. யானையின் மீதிருந்தபடியே யானையோட்டும் அங்குசத்தால் அம்மாலையை வாங்கினான். அலக்ஷியமாக யானையின் மத்தகத்தின் மீது வைத்தான். யானை அம்மாலையைக் கீழே தள்ளி காலால் மிதித்தது. அதனைக் கண்ணுற்ற துர்வாச முனிவர் இந்திரனை நோக்கி, இந்திரா உனக்குள்ள செல்வமெல்லாம் தேவியின் அருளால் கிடைத்தது எனபதை c சிறிதும் உணரவில்லை. தேவியின் திருவடித் தாமரைகளில் சாற்றிய இம்மாலையை c சாமான்யமாக மதித்தாய். தேவர்களுக்கு தலைவன் என்ற பதவி மோகத்தால் யானை மீதிருந்தே இம்மாலையை அங்குசத்தால் வாங்கினாய். அசட்டையாக யானையின் மத்தகத்தில் வைத்தாய். யானையும் கீழே தள்ளித் காலால் மிதித்தது. அது கண்டும் c வருந்தவில்லை. இவ்வளவு கர்வத்திற்கும் காரணம் உன்னிடமுள்ள இச்செல்வம்தான். ஆதலால் காமதேனு, கல்பதரு, சிந்தாமணி முதலிய உன் செல்வமெல்லாம் உன்னைவிட்டு நீங்கக் கடவது. என்று சபித்தார்.
அவ்விதமே செல்வங்களெல்லாம் இந்திரனைவிட்டு நீங்கின. திருப்பாற்கடலில் சென்று ஒழிந்தன. இந்திரனும் அவனைச் சார்ந்த தேவர்களும் ஏழைகளாயினர். வலிமை இழந்தார்கள். தேவர்கள் நிலையை அசுரர்கள் உணர்ந்தனர். தேவர்களுடன் போர்புரிய வந்தார்கள். எல்லாம் இழந்த தேவர்கள் புறங்காட்டி ஒதுங்கினார்கள். அசுரர்களின் கொடுமை தாங்க முடியவில்லை. தேவர்கள் ஒன்றுகூடி பிரமனிடம் முறையிட்டார்கள். பிரமன் தேவர்களை அழைத்துக் கொண்டு திருமாலிடம் சென்றான். தேவர்களின் துன்பங்களைக்
கூறினான். திருமால், தேவர்களே. நீங்கள் திருப்பார்க் கடலைக் கடைந்து அதிலுள்ள அமுதத்தைப் பருகினால் நீங்கள் போரில் சாகாது வெற்றியடைவீர்கள் என்று கூறினார். அது கேட்ட தேவர்கள் அசுரர்களையும் துணையாகச் சேர்த்துக்கொண்டனர். வெற்றி பெரும் உபாயம் தெரிந்து விட்டது. விரோதிகளான அசுரர்களும் வெற்றிக்கு சம்மதித்து விட்டார்கள். இந்நிலையில் தேவர்களின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. இந்த ஆனந்தத்தில் எல்லாம் வல்ல இறைவனை மறந்தார்கள். மந்தார மலையைக் கடையும் மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிராகவும் அமைத்துக் கொண்டார்கள். பாம்பின் தலைப்பக்கம் அசுரர்களும், வால் பக்கம் தேவர்களுமாக நின்றார்கள். கடையத் தொடங்கினார்கள். மந்தாரமலை அழுந்தாமல் இருக்க, திருமால் ஆமை உருவம் கொண்டனர். மலையின் அடியில் நின்று தம் முதுகால் மலையைத் தாங்கினார். மலை அசைந்தது. வெகுநாள்வரை கடைந்தார்கள். பலன் இல்லை. திருமாலும் சேர்த்து இழுத்தார். கடையும்போது வாசுகி என்ற பாம்புக்கு மிக்க துன்பம் உண்டாயிற்று. வலி தாங்காமல் தனது நஞ்சை உமிழ்ந்தது. அந்த நஞ்சு மிகக் கொடிதாக இருந்தது. அது கண்ட தேவர்கள் பயந்து ஒடினார்கள். கொடிய நஞ்சின் ஜ்வாலை பரவியது. ஆறாத் தயரம் வந்த பிறகுதானே அன்னையை நினைக்கிறோம். வேறு அடைக்கலமில்லாத் தேவர்கள் கைலாய மலையை அடைந்தார்கள். அம்மையப்பனிடம் சரணடைந்தார்கள். பிள்ளைகள் எவ்வளவு குற்றம் செய்திருந்தாலும், துன்பமடைந்த காலத்தில் மக்களைக் காப்பாற்ற, பெற்றோர்கள் தவறுவதில்லை. கருணையே உருவான அம்மையப்பன் தம்மைச் சரணடைந்த தேவர்களை நோக்கி அஞ்சாதீர்கள் என்று கூறினார்.
அக் கயிலை மலையில் சுந்திரர் என்ற ஒரு பக்தர் இருந்தார். அவர் தினமும் நறுமலர்கள் கொய்து அம்மையப்பனை அர்சித்து வழிபட்டு வருபவர். நிர்மால்யத்தின் பெருமையை நன்கு உணர்ந்தவர். ஈசர் அவர்களை அருகில் அழைத்தார். அவரிடம், c சென்று அக் கொடிய விஷத்தை எடுத்து வா என்று கூறினார். சுந்திரரும் அவ்விதமே சென்றார். விஷத்தின் வேகம் சுந்தரனிடம் பலிக்கவில்லை. விஷத்தை உருட்டி நாவற்பழ அளவாக செய்து கொண்டார். சிவபெருமானிடம் கொண்டுவந்தார். இப்போது தேவர்கள் துணிவுடன் விஷத்தின் பக்கலில் வந்தார்கள். சிவ பெருமான் தேவர்களை நோக்கி, இதை என்ன செய்வது. என்று கேட்டார். தேவர்கள் பெருமானே இது விஷமாய் இருந்தாலும் முதற் பாகம் தங்களுக்கே உரியது. ஆதலால், தாங்களே இதை அமுது செய்தல் வேண்டும் என்று வேண்டினர். அண்டினவர்களின் துன்பங்களை நீக்குவதையே நோன்பாகக் கொண்ட ஈசன் விஷத்தை உண்டார். தேவர்களையும் அசுரர்களையும் காப்பாற்றினார். அதனால் சிவபெருமான் திருநீலகண்டர் எனப் பெயர் பெற்றார்.
எல்லா உயிர்களிலும் உயிருக்குயிராக விளங்கும் சிவ பெருமான் உண்டவிஷம் எல்லோரையும் வருத்தாது இருக்கும் பொருட்டு ஈசன் மௌனமாக வீற்றிருந்தார். அப்போது எல்லோரும் உணவருந்தாது அம்மையப்பனை பூசித்தனர். அந்த நாள்தான் ஏகாதசி எனப்படுகிறது. தேவர்கள் செய்த பூஜைக்கிறங்கி அமுதம் வழங்கினார். மறுநாள் தேவர்கள் தங்கள் பூஜையை முடித்துக் கொண்டு உணவருந்தினர். அந்தநாளே துவாதசியாம். அடுத்தநாள் சூர்ய அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகைக்குள் திரயோதசிகூடிய நாளிலே, இதுவரை துன்பத்திலே ஆழிந்து வருந்திய தேவர்களும் அசுரர்களும் இன்பம் அடைந்ததர் பொருட்டு சிவபெருமான் கையில் டமருகம் ஏந்தி அம்பிகையின் முன்னால் ஒருஜாமம் (ஏழரை நாழிகை) நிருத்தம் செய்தருளினார். அந்த காலமே பிரதோஷ காலம் எனப்படும்.
இக்காலத்தில் மாணவர்கள் படிப்பதும், இல்லரத்தார் வெளிவேலைகளில் ஈடுபடுவதும்கூடாது.
இப்பிரதோஷ காலம் சிவபூஜைக்கெனவே ஏற்பட்டதாகும். இது மாதம் இருமுறை வருவது. ப்ரதோஷத்தன்று சனிக்கிழமையும் சேர்ந்து வருவது மிகச்சிறந்ததாகும். ப்ரதோஷ விரதத்தினால் எல்லா நன்மைகளும் அடையலாம்.