அன்பே சிவம்
அன்பும் சிவனும் இரண் டென்பரறிவிலார்
அன்பே சிவ மாவதற்கும் அறிகிலார்
அன்பே சிவ மாவதாகும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே............என்றார்.
அன்பும் தெய்வமும் இரண்டு என்று கூறுவது அறியாமை. அன்புதான் தெய்வம் என்பதனை ஒருவரும் அறிந்திலர். அவ்வாறு அன்பும் சிவமும் ஒன்று என்ற உண்மையை அறிந்தவர்கள் அன்பிலே தெய்வத்தைக் கண்டு அந்தப் பேரின்பத்திலே நிலைநிற்பர்.
இறைவனின் தோற்றங்களுக்கும் பெயர்களும் பல உள்ளன. அது போன்றே அன்பும் பலவகைத்தோற்றங்களையும் பெயர்களையும் கொண்டுள்ளது. நாம் தாய் தந்தையரிடத்தில் செலுத்தும் அன்பு பாசம் என்றும், நாயகன் நாயகியிடம் கொண்டுள்ள அன்பு காதலென்றும், அடியார்கள் ஆண்டவனிடம் கொண்டுள்ள அன்பு பக்தி என்றும் ஆண்டவன் அடியார்களிடத்துக் காட்டும் அன்பு கருணை யெனறும் பலவாரகக் கூறப்படுகிறது. இத்தகைய பலவிதத் தோற்றங்களாலும் இறைவனைத் தியானித்து வழிபட்டனர் அடியார்கள் அம்மையே அப்பா அருட்பெரும் ஜோதியே, என்று தாயாகவும், தந்தையாகவும் விளித்துப் பாடினர். இறைவனைக் குழந்தையாக பாவித்து, பிள்ளைத் தமிழ்பாடி மகிழ்ந்தனர். ஆண்டனையே நாயகனாக உறுவகப்படுத்திய அடியார்கள் தங்களை நாயகிகளாக நினைத்து அவனறுள் வேண்டினர்.
அன்பு எந்த உள்ளத்தில் பூர்ணமாக நிறைந்துள்ளதோ அங்கு இறைவன் கோயில் கொண்டு வீற்றிருக்கிறான். இதனால்தான் திருமூலர், உள்ளப் பெருங் கோயில்
என்றார். அன்பின் வலிமை அளவிடர்க்கரியது இதனையே வள்ளுவர்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண் தீர் பூசல் தரும் என்றார்.
மகாபாரதத்தில ஒர் அழகிய காட்சி
பாரதப்போர் தொடங்கும் முன்பு கண்ணபிரான் சகாதேவனிடம் போரை நிருத்துவதற்கு என்ன செய்யவேண்டும் என்று வினவுகிறான், அதற்குச் சகாதேவன் அர்ஜுனனைக் கொள்ள வேண்டும். திரௌபதி கூந்தளைக் களைய வேண்டும். மேலும் உன்னையும் கட்டிப் போடவேண்டும என்று பதில் கூறுகிறான். அதற்குக் கண்ணன் c முதலில் கூரிய இரண்டையும் செய்ய முடியுமே தவிர, இருதியில் c கூரிய செயல் என்னைக் கட்டுவ தென்பது உன்னால் முடியாத கார்யம் என்று கூறி, ஆயர்பாடி கோபிகைகளுக்குக் காட்சி யளித்து போன்று பல்லாயிரம் கண்ணனாக உருக்கொண்டு தோன்றுகின்றான். ஆனால் அதற்குச் சிறிதும் அஞ்சாத சகாதேவன் தன் உள்ளத்தில் கண்ணனைத் தீவிரமாக தியானம் செய்கிறான். தன்னுடைய தோற்றங்கள் எல்லாம் மறைந்தவனாகக் கண்ணன் சகாதேவனுடைய அன்புக் கயிற்றால் கட்டுண்டு வருகிறான்.
இங்ஙனமாக அன்பின் ஆற்றல் ஆண்டவனையே கட்டிவிடுகிறது. அன்புள்ளம் கொண்ட அடியார்கள் கொடுக்கும் பொருள் எத்துனைத் தன்மையதாயினும் அதனை ஆண்டவன் ஏற்றுக் கொள்கிறான். இராமாயணத்தில் சபரி அன்புடன் கொடுத்த கனிகளை உண்டு இராமபிரான் அவர்களுக்கு அருள் செய்கிறான் என்பதைக காண்கிறோம். கீதையிலும் ஸ்ரீ கிருஷ்ணன் கூறுகிறான்.
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருத மண்நாமி ப்ரயதாத்மந
யார் ஒருவன் எனக்கு இலை, மலர், கனி அல்லது நீர் இவற்றைப் பக்தியோடு படைக்கின்றானோ, அத் துய மனதானது அன்பளிப்பை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
எவ்வுயிருக்கும் அன்பா யிருக்கவேண்டும். என்பதே அடியார்கள் இறைவனிடம் வேண்டும் வரம். அருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் அப்பா, நான் வேண்டுதல் கேட்டு அருள் புரியவேண்டும். ஆருயிர்கட்கெல்லாம் தான் அன்பு செயல்வேண்டும்........... என்றும்,
மண்ணுலகில் உயிர்கள் தாம்
வருந்தும் வருத்தத்தைக்
கண்ணுரப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
எண்ணுறும் எனக்கே நின் அருள்
வளத்தால் இசைந்தபோது இசைத்த போதெல்லாம்
நண்ணும் அவ்வருத்தந் தவிர்க்க
நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.
என்றும் இறைவிடம் வேண்டுகிறார்.
தாயுமானவர், எல்லோரும் இன்புற்றிருக்கவே வேண்டுவதே யல்லாமல் வேறொன்றரியேன் பராபரமே. என்று தம் வேண்டுகோளைக் கூறுகிறார்.
பகைவனுக்கும் பரிவு காட்டும் பண்பினர் அன்புள்ளம் கொண்ட
அடியார்கள்.
பகைவனுக்கு அருள்வாய்-நன்னெஞ்சே
பகைவனுக் கருள்வாய்
கை நடுவினில் தீயிருப்பதை பூமியில் கண்டோமே-நன்னெஞ்சே
பூமியில் கண்டோமே.
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே
பரமன் வாழ்கின்றான்
தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன் நெஞ்சே
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினன்
அவளைக் கும்பிடுவாய்-நன் நெஞ்சே
என்பது மகாகவி பாரதியின் வாக்கு
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர் நின்ற உடம்பாகும். அன்பு இல்லாதவர்களுக்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பாகும்.
அன்பின் வழியது உயர் நிலை அஃதில்லார்க்கு
என்பதோல் போர்த்த வுடம்பு
என்ற குறலில் பொய்யாமொழிப் புலவர் இக் கருத்தை அறிவுறுத்துகிறார்.
அன்பு நெறியில் இவ்வுலகம் இயங்குமானால், அங்கு ஏற்றத் தாழ்விற்கோ, பொறாமை பூசல்களுக்கோ இடமில்லை. அன்பு அழிவற்றது. இந்பத்தையும் சோர்வையும் போக்க வல்லது.
துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம்
அன்பில் அழியுமடீ. கிளியே-அன்புக் கழிவில்லை காண்.
என்ற மகா கவியின் அருள்வாக்கை மனத்தில் நிறுத்தி வாழ்வோமாக.