ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
ஜகத்குரு ஸ்ரீமகாஸ்வாமிகள் அருளுரை அமுதம்
மனிதர்களுக்கு ஆறுதல் கிடைக்கும்படி செய்வது, நோயை குணப்படுத்துவது, கல்வி அறிவு தருவது எல்லாமே பரம உத்தமமான பணிதான், அதில் பகவான் நிச்சயமாகப் HgF அடைகிறான் என்பதும் உண்மைதான், ஆனால்யோசித்துப் பார்க்கும்போது, *மனித சேவை, பகவத்சேவை* என்பதையே திருப்பி வைத்துச் சொல்வதும் ரொம்ப உண்மை என்று தெரிகிறது, அதாவது பகவத் சேவை செய்வதும் மனிதர்களின் நன்மைக்காகத்தான் என்று தெரிகிறது, அதுவே மற்ற சேவைகளைக் காட்டிலும் மனிதனுக்கு நிரந்தரமான நலனைத் தருவதாகும்.
ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளைச் சொஸ்தம் செய்து அனுப்புகிறோம் அவர்கள் அப்புறம் நல்லவர்களாக வாழ வேண்டாமா? லோகத்துக்குக் கெடுதல் செய்கிறவர்களாகவும், தங்களுக்கே அனர்த்தம் செய்து கொள்பவர்களாகவும் இருப்பவர்கள் சொஸ்தமடைந்து, திரும்பி வந்து அக்கிரமமான காரியங்களைத் தொடர்வதால் லோகத்துக்கு என்ன பயன்? அந்த வியாதி அனுபவம் அவர்களுக்குத் தெய்வ சோதனையாக வந்து அவர்களைப் புனிதப்படுத்துவது என்ற பலன் கிடைக்க வேண்டாமா? அதற்கு ஆலயம் உதவும் அல்லவா? ஆஸ்பத்திரி வைத்து நோயாளியின் உடல் வியாதியைத் தீர்ப்பது போதாது, நோயாளிகளது மனத்தில் கெட்ட எண்ணங்கள் என்ற வியாதி இல்லாமல் செய்வதே அதைவிட முக்கியம்.
இவ்வாறேதான் பள்ளிக் கூடத்தை வைத்துப் படிப்பை விருத்தி செய்வதும் ஆகும். படித்து வெளியே வந்தவர்கள் யோக்கியர்களாக இல்லாவிட்டால் பள்ளிக்கூடம் வைத்த பயன்நமக்கு ஏது? பக்தி, கட்டுப்பாடு, தியாகம் முதலானவை இல்லாமல், படிப்பில் வெறும் புத்தியை மட்டும் வளர்த்துக் கொண்டால், சாதுரியமாக அயோக்கியத்தனங்கள் செய்தும் தப்பித்துக் கொள்வதற்குத் தான் வழியாகிறது. வித்யா சாலையோடும் மனிதனின் வாழ்வு முடிந்து விடுவதில்லை, அவன் நல்லவனாகவும் இருக்க வேண்டியது முக்கியம், இப்படி நல்லவனாக்கும் நிலையங்களாக ஆலயங்கள் விளங்குகின்றன.
ஓரு மரத்தை நிழல் தழைக்காமற் செய்யவேண்டுமானால் முடியாது, அடி மரத்தையே வெட்ட வேண்டும், வீட்டுக் கூரையிலே திரும்பத் திரும்பக் கரையான் புற்று உண்டாகிறது என்றால் மேலெழுந்தவாரியாக அந்தக் கூட்டைப் பெயர்த்தால் முடியுமா? அதற்கு மூலகாரணமான தாய்பூய்ச்சியை அகற்றினால் தான் மீண்டும் புற்று எழும்பாமல் இருக்கும். அதுபோல பாபத்துக்கு மூலகாரணத்தை அறிந்து அதையே அழிக்க வேண்டும். பாபத்துக்கு மூலம் என்ன? கெட்ட காரியத்தினுடைய பலன்தான் பாபம். கெட்ட காரியம்தான் பாப மூலம்.
துவேஷமும் ஆசையும் நமக்கு அந்நியமாக, நம்மைவிட வேறாக, இரண்டாவதாக இருக்கும் வஸ்துகளிடத்தில்தான் உண்டாகின்றன. நம்மிடத்தியலேயே நமக்கு ஆசையும் உண்டாவதில்லை வெறுப்பும் உண்டாவதில்லை. இப்போது வேறு என்று இருக்கும் பொருட்களிடத்தில் ஆசை
உண்டாவதால், அவற்றையும் நாமாகவே பண்ணி விட்டால் ஆசை உண்டாகாது அல்லவா...? ஆசை இல்லாவிட்டால் கெட்டப் பிரயத்தனம் இல்லை. அதனால் பாபம் இல்லை. அது இல்லாவிட்டால்... துக்கம், கவலைகள் எதுவும் இல்லை ,வாழ்நாள் முழுவதும் எவ்வளவு பிரயத்தனம் பண்ணினாலும் கிடைக்காத மன அமைதி இப்படி நமக்கு வேறாக - இரண்டாவது இல்லை என்று ஆக்கிக் கொள்ளும்போது, நமக்குக் கிடைத்து விடுகிறது. இதுவே இரண்டாவது இல்லை என்றுநாம் உறுதிப்டுத்திக் கொள்ளும் அத்வைதம்.
ஜுரம் வந்தால் நம்முடைய சரீரத்தால் நிற்கவும், நடக்கவும் முடிவதில்லை. இந்த ஜன்மாவே பெரிய ஜீரமாக வந்திருக்கிறது. இதிலிருந்து நம்மைக் கடைத்தேற்றுவதற்காக, நமக்கு வந்திருக்கிற சம்சார ஜீரத்தைப் புரிந்து கொண்டு, அதற்கு அடையாளமாக சுவாமியின் முன் தண்டாகாரமாக விழுந்து நமஸ்கரிக
நாம் செய்கிறோம், என்கிற எண்ணம் போய்விட்டால், அதுவே சதாகால நமஸ்காரம். அந்த அனுபவம் நமக்குச் சித்திக்காத போதிலும் ஈசுவர சந்நிதியிலாவது அப்படிப் பாவித்து வணங்கித் தரையோடு தரையாக, எளிமையாகக் கிடக்க வேண்டும். இங்கே வணங்கி விட்டால் அப்புறம் வெளியே எங்கேயும் வணங்காமல் இருக்கலாம்.
மனப்பூர்வமாக ஈசுவரனை நமஸ்காரம் செய்துவிட்டால் போதும். அவர் ஜனன, மரண சக்கரத்திலிருந்து நம்மை விடுவித்து விடுவார். நம்முடைய பாவங்களை எல்லாம் போக்கி முக்தியை அளித்து விடுவார்,
தமிழ்நாட்டைத் தெலுங்கர்கள் அரவநாடு என்று சொல்வார்கள். ஆந்திரப்பிரதேசத்தின் கீழே உள்ள சிறிய பகுதிக்கு அரவதேசம் எள்று பெயர். அப்புறம் வரும் பகுதிகளுக்கும் அதே பெயரை வைத்து விட்டார்கள். இதே ரீதியில்தான் சிந்துப்பிரதேசத்தைக் கண்ட அந்நியர்களும், அதை அடுத்து வந்த பாரத தேசத்தை ஹிந்து தேசமாக்கி விட்டார்கள். அங்கே உள்ள மக்களின் மதமும் இந்து மதம் என்று பெயர் பெற்று விட்டது.
ஆனால் ஹிந்து என்பது நம்முடைய பூர்விகப் பெயர் அல்ல. வைதிக மதம், சனாதன தர்மம் என்றெல்லாம் சொல்லுகிறோமே, அவைதான் பெயரா என்றால், அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும்போது இந்து மதத்துக்கு எந்தப் பெயருமே குறிப்பிடப் படவில்லை நம் மதத்துக்கு ஏன் பெயர் இல்லை?
பல்வேறு மதங்கள் இருக்கிற போதுதான், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு வித்தியாசம் தெரிவதற்காகப் பெயர் கொடுக்க வேண்டும், ஒரே மதம் தான் இருந்தது என்றால் அதற்குப் பெயர் எதற்கு? மற்ற மதங்கள் உண்டாவதற்கு முன்பே நமது மதம் இருந்திருக்கிறது. இந்த ஒரு மதமே உலகமெல்லாம் பரவி இருந்திருக்கிறது. இதைத் தவிர வேறு மதம் இல்லாததால், இதற்குப் பெயர் குறிப்பிட வேண்டிய அவசியமே இருக்கவில்லை.
அநேகமாக எல்லாச் சிவாலயங்களிலும் லிங்கத்துக்குப் பின்புறம் லிங்கோத்பவமூர்த்தி சுவரில் காணப்படுவார். இவர் யார்? பார்த்தால் மூர்த்தியின் ஜடாமகுடம் லிங்க வட்டத்துக்குள் முடியாமலே இருக்கும், அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது. இந்த மூர்த்திக்குக் கீழே ஒருவராக மூர்த்தியைப் பார்க்கலாம், மேலே ஹம்ஸருபத்தில் ஒரு மூர்த்தி காணப்படுவார்
இவர் தான் லிங்கோத்பவமூர்த்தி, அடிமுடி எல்லை இல்லாமல் அவர் ஜோதி சொரூபமாக அங்கே நிற்கிறார். இப்படி ஜோதிர்லிங்கமாக ஆகாயத்துக்கும் பூமிக்குமாகப் பரமசிவன் உத்பவித்த இரவே சிவராத்திரியாகும்.
சகல பிரபஞ்சமும் அடங்கி இருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மகாசதுர்த்தி இரவில், நாம் அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் அடங்கி இருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் வேறெதுவும் இல்லை.
சிஷ்யன் சுயேச்சைப்படிப் போகவிடாமல், ஆசாரியனிடம் கேட்டு அவருடைய வார்த்தைப்படியேதான் நடக்க வேண்டும் என்று சாத்திரம் சொல்லுகிறது. இதற்காக எப்போதும் உர்ரென்று உருட்டி மிரட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லவில்லை, பிரியத்தோடு நடத்தும்படியும், அதேசமயம் சுவாதீனமாகப் போய்விடாமல் பார்த்துக் கொள்ளும்படியும் சொல்லி இருக்கிறது. அப்படித்தான் ஒழுங்குபடுத்த வேண்டும். உபநிஷத்துக்களில் ஆரம்பித்துப் புராண இதிகாசங்களைப் பார்த்தால், குருவும் சிஷ்யனும் ஒருவருக்கொருவர் பிரியத்திலேயே கட்டுப்பட்டிருந்ததற்கு நிறைய திருஷ்டாந்தங்கள் கிடைக்கின்றன.
ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வொரு அங்கத்தில் அதிகக் கௌரவம் இருக்கும் சவுரிமான் என்று ஒரு மான் இருக்கிறது, அதன் கௌரவம் அழகான வாலில் உள்ளது. மயில் என்றால் அதற்குத் தோகை விசேஷம். தோகையை அதனால் மயில் ஜாக்கிரதையாக ரட்சிக்கும். யானை எதை ரட்சிக்கும்? தனது தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று வைத்துக் கொண்டிருக்கும். இந்தப் பிள்ளையார் என்ன செய்கிறார்? யானைத் தலையில் உள்ள தந்தங்களில் (கொம்புகளில்) ஒன்றையே ஒடித்து, அதனால் மகாபாரதம் எழுதுகிறார். தர்மத்தைச் சொல்லுகிற ஒன்று தான் பெரிது என்பதை இவ்வாறு காட்டுகிறார். நியாயத்துக்காக, தர்மத்துக்காக, வித்தைக்காக எதையும் தியாகம் பன்ன வேண்டும். என்பதைத்தானே தந்தத்தைத் தியாகம் பண்ணிக் காட்டி இருக்கிறார்.
விட்டகுறை தொட்டகுறை என்று சொல்லுவார்கள் அதாவது, பூர்வ ஜென்மத்தில் விட்ட இடத்தில், இந்த ஜென்மத்தின் அனுபவங்கள் ஆரம்பிக்கின்றன என்று அதற்குப் பொருள். அவர்கள் முன் ஜென்மத்திலேயே, அதற்கு முற்பிறவிகளிலேயே கர்மா, பக்தி நிறையப் பண்ணி இருப்பார்கள். அதனால் சித்தசுத்தியும், அருட்பேறும் பெற்றிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களிலும் கூட சிலருக்கு அப்போது இருந்த லௌகீக ஆசைகள் கொஞ்சம் மிச்சம் இருந்திருக்க வேண்டும். அவை ஒன்றுதிரண்டு தான் இந்த ஜன்மாவில் ஒரு குறிப்பிட்ட வயது வரை, அதன் பலனாக அவர்கள் லொகீக ஆசைகளை அனுபவித்துத் தீர்க்கும்படியாக இருந்திருக்கும். அப்புறம் கெட்ட வாசனை தீர்ந்தவுடன், மேகம் விலகிச் சூரியன் பிரகாசிப்பதைப் போல, சட்டென்று ஞானப் பிரகாசம் ஏற்பட்டிருக்கும்.
திருமாலுக்கு மூன்று புதல்வர்கள் உண்டு. நாபிக்கமலத்திலிருந்து தோன்றியவர் பிரம்மா, அவருக்குக் கமலஜர் என்றும் பெயருண்டு. மனத்திலிருந்து தோன்றியவன் மன்மதன், அதனால் மானஸீஜர் என்றும் அவனுக்குப் பெயர் இருக்கிறது. திருமால் மோகினி அவதாரம் எடுத்தபோது, சிவபெருமானுக்கும் அவருக்கும் பிறந்தவர் சாஸ்தா. அவருக்கு இன்று நாடெங்கும் வழிபாடு நடக்கிறது. ஆனால் பிரம்மாவுக்கோ, மன்மதனுக்கோ வழிபாடு ஏதும் இல்லை, கோயிலும் கிடையாது.
மன்மதன் ஒரு சிசு உற்பத்தியாவதற்குத் தேவையான காமத்தைத் தூண்டுபவன், பிரம்மாவோ ஜீவன் எந்தப் பிண்டத்தில் பிறக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து பிறவியை அளிப்பவர். மாயப் பிறப்புக்கும் தெய்வம் என்று இறைவனை வழிபடுவதே நம்முடைய சம்பிரதாயம். பிறப்புக்குக் காரணமான இந்த இருவருக்கும் அதனால் கோயில் இல்லை
சரசுவதி அறிவை அருளுபவள் அல்லவா? அவளை வழிபடத்தானே வேண்டும்? அது நியாயம்தான். அதனால் சரஸ்வதி பூஜை என்றே ஒரு நாளைக்கொண்டாடுகிறோம். சிறு குழந்தையிலிருந்து பெரியோர்வரை சரசுவதி தேவியைத் துதிபாடுகிறார்கள். ஆனால் ஏன் கோயில் இல்லை? பதிவிரதையாக இருப்பது தான் பெண்களுக்குச் சிறப்பு. மானுடர்களாகிய நமக்கே முக்கியம் என்று கருதப்படும் இந்தப் பண்பை நாம் தேவியிடம் எதிர்பார்க்க வேண்டாமா? பிரம்மனின் நாவில் உறையும் நாமகள் அவள், பிரம்மனுக்குக் கோயில் இல்லை என்றதும், கணவனுக்கு இல்லை யென்றால் எனக்கும் வேண்டாம்! அவருடைய நாவிலேயே நான் குடியிருக்கிறேனே, அது போதும்!என்று ஒதுங்கி விட்டாள். அதனால் தான் சரசுவதி தேவிக்குத் தனிக்கோயில் இல்லை.
மாந்திரிகத்தில், கேட்டலே பயப்படுகிற மாதிரி விளைவுகளை உண்டாக்குகிறார்கள், கெட்டதைச் செய்ய ஒரு சில சப்தக் கூடங்களுக்கு சக்தி இருக்குமானால், நல்லதைச் செய்யவும் ஏன் ஒரு சில சப்தக் கூட்டங்களுக்கு உண்டான மந்திரங்கள் இருக்கக் கூடாது. வருணஜபம் செய்தால் மழை வரும் என்ற தத்துவத்தின் அடிப்படை இதுதான்.
நம் ஊரில் வருணஜபம் செய்து, மழை வருவதைப் பார்த்திருக்கிறோம். இன்னோர் இடத்தில் அப்படிச் செய்தும் மழைவராமல் போயிருக்கிலாம். அதனால் மந்திரத்தையே சக்தி இல்லாதது என்று தள்ளி விடக்கூடாது. மருந்துகளைச் சாப்பிட்டு உடல்நலம் பெறுகிறவர்களும் இருக்கிறார்கள்!குணமடையாதவர்களும் இருக்கிறார்கள். அதனால் மருந்தே தப்பு என்று சொல்லலாமா? மருந்து பலிக்காவிட்டால் வியாதி ரொம்ப முற்றி இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். அதைப்போல கர்மா ரொம்ப பலமாக இருந்தால், எந்த மந்திரமும் பலன் தராமல் போகலாம். இன்னொரு காரணமும் உண்டு. பத்தியம் தப்பினால் மருந்து பலன் தராது. அதைப்போல, மந்திரசக்தி சித்திப்பதற்குச் சில நியமங்களைப் பத்தியம் போல வைத்திருக்கிறார்கள். இந்த நியமங்களில் தப்பு வந்தால், மந்திரங்களிலிருந்து உத்தேச பலன் கிடைக்காது.
யோக சாஸ்திரம் ஒரு சயன்ஸ். சயன்ஸ் பரிசோதனை விதிகளைச் சோதனைச் சாலையில் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அதை மீறினால் கோளாறுகள் வரும். மின்சாரத்தில் வேலை செய்யும்போது, ரப்பரில் கையுறையைப் போட்டுக் கொள்ள மாட்டேன், மரத்தில் நிற்கமாட்டேன், என்றெல்லாம் சொன்னால், என்ன ஆவது. அதைப் போல யோகசாஸ்திரத்தைப் பயன்படுத்தினால், அதன் விதிகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
பரமாத்மா பலவாகத் தோன்றி இருக்கிறார் தோன்றிய பின்னும் சமுத்திரம் மாதிரி கூடாமல், குறையாமல் இருக்கிறார். நமக்குக் கூடுதல், குறைவு எல்லாம் உண்டாவதாகத் தோன்றுகிறது. ஆனால் உள்ளது ஒன்றேதான் என்ற ஞானம் வந்தால் எங்குமே கூடுதல் இல்லை குறைவு இல்லை.
ஜலத்தை திருஷ்டாந்தமாக வைத்துப் பரமாத்ம, ஜீவாத்ம சம்பந்தத்தைச் சொல்லும் போது, நதிகளைப் பற்றி விசேஷமாகச் சொல்ல வேண்டும். சமுத்திர ஜலம் மழையாகி அதிலிருந்து ஏரியும், குளமும், குட்டையும் கிணறும் உண்டாகின்றன. இவை மறுபடியும் சமுத்திரத்தில் கலப்பதில்லை, ஆனால் எல்லா நதிகளும் மீண்டும் சமுத்திரத்தையே தேடி வந்து கலந்து விடுகின்றன.
வடக்கே ஸோன், என்று ஒரு நதிக்குப் பெயர். சோணம் என்றால் சிவப்பு என்று அர்த்தம். இந்த நதி சிவப்பு மண் வழியே ஒடி வருகிறது. கங்கை என்றால் வெளுப்பு. இதுவும் அது ஓடி வருகின்ற பிரதேசத்தைப் பொறுத்து ஏற்பட்ட பெயர்தான். யமுனை கறுப்பு. இவை மூன்றும் ஒரே சமுத்திரத்தில்தான் கலக்கின்றன. சிவப்பு ரஜோகுணம், கறுப்பு தமோகுணம், வெளுப்பு சத்வகுணம், மனசானது முக்குணங்களில் எதில் பாய்கிறதோ, அதை ஒட்டி ஜீவாத்மாவின் சுபாவம் அமைகிறது. எப்படியானாலும் கடைசியில் பரமாத்மா என்கிற சமுத்திரத்தைத்தான் அடைந்தாக வேண்டும்.
தொடர்புடைய நீர்போக்கு, ஒரே மட்டத்தில்தான் இருக்க முடியும் என்பார்கள். மலையுச்சியில் மழை பொழிந்து நதி உண்டாகிறது. அங்கிருந்து கீழே கனவேகமாக, ஒரே இரைச்சலுடன் விழுந்து ஒடுகிறது. பூமியில் ஒடும்போது அத்தனை சத்தம் இல்லை. முடிவில் சமுத்திரத்தில் கலந்தபின் சத்தமே இல்லை. அப்போது தான் நதி தன் லெவலுக்கு வந்த பிறகு பரம சாந்தமாகிறது. எதிலுமே சரி லெவல்- அதாவது, அளவு அறிந்து அந்த மட்டத்தோடு நிற்கிற மனோபாவம் வந்தால் தான் சாந்தம் உண்டாகும். இதுவே சத்துவகுணம். கடைசியில் இதைத்தான் பெற வேண்டும்.
ஜாதியினால் சண்டை வருவதற்குக் காரணம் அவற்றுக்கிடையே உசத்தி, தாழ்த்தி என்ற பேதம் இருப்பதாக நினைப்பதுதான். வாஸ்தவத்தில் இப்படி ஒரு வேறுபாடு இல்லவே இல்லை. அவரவருடைய பண்பு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை இவற்றை ஒட்டித்தான் ஜாதிகள் ஏற்பட்டிருக்கின்றன. பழைய தர்மமான இந்த முறைக்கு ஒரு தலைவலி மாதிரி சண்டை வருகிறது என்பதனால் தலைவலியை நீக்கத் தலையையே வெட்டி விடுவதைப் போல, மூலதர்மத்தையே எடுத்துவிடலாம் என்று சொல்வது அசம்பாவிதம்.
ஒரே ஜாதி உள்ளமேல் நாடுகளில் சண்டையோ சச்சரவோ ஏற்படவில்லையா?
ஒரே ஜாதிமக்கள் உள்ள பகுதிகளில் இன்று மொழி காரணமாகச் சண்டைகள் வரலில்லையா? பாஷையினால் வரும் கண்டைகளைப் பார்த்தால் ஜாதிச் சண்டை அதற்கு உறைபோடக் காணாது. தமிழுக்கும், தெலுங்குக்கும், பெங்காலிக்கும், பிஹாரிக்கும், ஆங்கிலத்துக்கும் இந்திக்கும் எத்தனை சண்டைகள்? பல பாஷைகள் இருப்பதனால் தான் இத்தனை சண்டைகள் வருகின்றன. பாஷைகளையே அழித்துவிட்டு, ஊமையாக இருக்கலாம் என்று கூறிவிட முடியுமா?
வாஸ்தவத்தில் தனக்கென ஒரு சமூகப் பொறுப்பும் இல்லாமல், பெயரளவில் வைத்துக் கொண்டிருக்கிற ஜாதிகளை வெறும் சுயாபிமானத்துக்காக வளர்ப்பதில் நியாயம் இல்லை. ஆனால் சமூக நன்மைக்காக, ஒவ்வொரு கூட்டத்தாரிடமும் பாரம்பரியமாக ஒரு காரியத்தைக் கொடுத்து, அவர்களை அந்தப் பொறுப்பைக் கடமையாகச் செய்யும்படி வைப்பதற்குத்தான் ஜாதிகளை ஏற்ப்படுத்தினார்கள். இந்தக் கண்ணோட்டத்துடன் ஏற்றுக் கொண்டால் ஜாதிகள் நமக்குள் சண்டையை ஏற்படுத்தாது.
உலக வாழ்க்கையில் பணம் இல்லாதவர்கள் கஷ்டப்படுகிறார்கள். பதவிக்காக ஆசப்படுகிறவர்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் இவர்களுடைய கஷ்டம் மிக அளவானது. அவை இல்லாவிட்டால் படுகிற சிரமும் மிகக் குறைவானது. ஆனால் பணக்காரனை, பதவியில் உள்ளவனைக் கேட்டால்தான் அவன் எவ்வளவு கஷ்டப்படுகிறான் என்று தெரியும். ஏனென்றால், அவனால் அந்தப் பணமோ - பதவியோ போய்விட்டால் அப்புறம் வாழவே முடியாது. நாம் திண்ணையில் உட்கார்திருக்கிறோம். அதனால் விழுந்தால் சிராய்ப்புடனோ,, சுளுக்குடனோ போய்விடும். பணக்காரனும் பதவிக்காரனும் மாடிமேல் இருக்கிறான். எனவே அவன் விழுந்தால் எலும்பெல்லாம் முறிந்து போகும். பிராணாபத்து உண்டாகும். ஆகவே, பணமும் பதவியும் உள்ளபோது சிறிது சுகமோ - திருப்தியோ கிடைக்கலாம். ஆனால் அவை வந்து விட்டாலோ, போய்விடக் கூடாதே என்ற கவலை தான் சுகத்தைவிட அதிகமாக இருக்கிறது. அவற்றை இழந்து விட்டாலோ தாங்க முடியாத துக்கம் உண்டாகி விடுகிறது. இப்படி, இருந்தாலும் கவலை போனாலும் துக்கம் என்கிற பணமும் பதவியும் இருப்பதைவிட, அவற்றைத் துறப்பதால், அவற்றுக்கு ஆசைப்படாமல் இருப்பதால் பெறுகிற அமைதியே மேலானது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
யாகங்கள் பிரசித்தி பெற்ற தமிழ் மன்னர்களால் பெரும் அளவில் செய்யப்பட்டன. அவர்கள் வைதிகமதத்தை மனமார வளர்த்தார்கள். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்றே ஒரு சங்ககால அரசனுக்குப் பெயர் இருக்கிறது. பிற்காலத்திலும் கல்வெட்டுக்களில் எங்குப் பார்த்தாலும் தமிழரசர்கள் வேதவித்துக்களுக்கு வரி இல்லாத இறையிலியாக நிலத்தைச் சாசனம் செய்திருக்கிறார்கள். நான் மறைகளின் வளர்ச்சிக்காகவே தானமாக வழங்கப்பட்ட கிராமங்கள் சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் உள்ளன.
வெளிநாட்டு விஷயம் ஒன்று நம் நாட்டுக்கு வந்தால் அதற்கு உள்ளுர் பாஷையில் வார்த்தை இருப்பதில்லை, வெளிநாட்டடிலிருந்து நம்முடைய தேசத்துக்கு வந்த ரேடியோ, டெலிபோன், பஸ் முதலியவற்றுக்கெல்லாம் நம்முடைய பாஷையில் வார்த்தை இல்லை. தமிழில் நாம் புதிதாகப் பெயர்களை உண்டாக்கி இருந்தாலும். பழக்கத்தில் ஆங்கிலப் பெயர்களையே சரளமாக உபயோகிக்கிறோம்.
வேதம், யாகம் முதலியன சிலர் சொல்லுவதைப் போல, தமிழ்நாட்டின் ஆதிசைவத்துக்குப் புறம்பானவை பிற்பாடு வந்தவை என்றால், யாகம்- வேதம் முதலிய பதங்களுக்குச் சரியான தமிழ் வார்த்தை இருக்க முடியாது. ஆனால் மிகப் பழைய தமிழ் இலக்கியங்களிலேயே, வேதம் என்பது மறை என்றும் யாகம் என்பது வேள்வி என்றும் புகழ்ந்து பேசப்படுகின்றன. இவை மிகவும் அர்த்தபுஷ்டியுள்ள பதங்கள் என்பதைச் சமஸ்கிருத பண்டிதர்கள், தமிழ்ப் புலவர்கள் இருவருமே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். வேட்டலிலிருந்து வேள்வி வந்திருக்கிறது. எல்லா தர்மத்துக்கும் வேரான வேதம் வேரைப் போலவே வெளியே தெரியாமல், அதாவது எல்லோரிடமும் புழக்கத்துக்கு வராமல், அதை ரட்சிப்பதற்கான கடும் நியதிகளைப் பின்பற்றும் சிலரிடமே மறைந்திருக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தைச் சொல்லும் வார்த்தையாக மறை எனப்படுகிறது. வைதிகப் பண்பாடும், யக்ஞ அனுஷ்டானமும் தமிழ்நாட்டில் ஊறிப்போயிருந்தா லொழிய அந்த நாகரிகத்தைக் காட்ட இத்தனை அழகான சொந்த மொழி வார்த்தைகள் உண்டாகி இருக்க முடியாது. வேதத்தை எழுதி வைத்துப் படிக்காமல், தலைமுறை, தத்துவமாக, வாயால் சொல்லிக் காதால் கேட்டே, கற்க வேண்டும் என்பதால், தமிழில் எழுதாக் கிளவி என்ற பெயரும் வேதத்துக்கு உள்ளது. கேள்வியாலேயே பாடம் பண்ணுவதால்தான், வேதத்துக்குச் சமஸ்கிருதத்திலும் ஸ்மிருதி என்று பெயர். மறை என்பதைப் போல வேத லக்ஷணத்தைப் பளிச்சென்று சொல்கின்ற வார்த்தை சமஸ்கிருதத்திலேயே இல்லை.
சரித்திரங்கள் நடந்த வரலாற்றைக் கூறுகின்றன. சரித்திரம் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி நடக்கின்றன என்று சொல்லுகிறார்கள். அதனால் நடந்த சரித்திரத்தைத்
தெரிந்து கொண்டால், அதிலிருந்து எதிர்காலத்தில் நடக்கப் போவதற்கு ஒரு படிப்பினையைப் பெறலாம். இப்படி இப்படி சூஞ்நிலை உருவானால் யுத்தம் ஏற்பட்டு மக்கள் வாழ்வு கெட்டுப் போகும், ஒரு பெரிய நாகரிகம் விழுந்து விடும் என்பது சரித்திரத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. இதனால் அதே மாதிரியான சூழ்நிலைகள் உருவானால், அவற்றை முதலிலேயே உஷாராக இருந்து தடுத்துவிட வசதியாக இருக்கும். இது சரித்திரத்தின் ஒரு பிரயோஜனம் என்கிறார்கள்.
கல்பத்துக்குக் கல்பம் ஒரே மாதிரியாக சம்பவங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு கல்பத்திலும் ராமாயணம், பாகவதம், தசாவதாரம் மற்றும் எல்லாப் புராணங்களும் நடக்கின்றன என்று நம் சாஸ்திரங்கள் சொல்லி இருப்பதைத்தான், சரித்திரம் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி நடக்கிறது என்று சற்று மாறுதலான அபிப்பிராயத்தோடு சொல்லுகிறார்கள்.
ஆனால் நடைமுறையில் ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கிற சரித்திரத்தில் இப்படிப் பலன் கிடைக்கிறதா என்று பார்க்கப் போனால், அதுதான் இல்லை!செங்கிஸ்கான், தைமூர், கஜினி, மாலிக்காபூர் போலப் பல பேர் அவ்வப்போது தோன்றி நாட்டைச் சூறையாடி ஹதாஹதம் செய்திருக்கிறார்கள் என்று சரித்திரத்தினால் தெரிகிறது. தெரிந்து கொண்டதால் மட்டும் இப்படிப்பட்ட வெறிப் போக்குக்களைத் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறதா என்ன? உலக யுத்தம் நடக்கவில்லையா, ஓர் அரசு தவறான வழிகளில் அரசாண்டு தேர்தலில் தோற்றுப் போகிறது. புதிதாக வரும் அரசு அந்தப் படிப்பினையை ஏற்றுக் கொள்கிறதா என்ன? அதே தவறுகளை இவர்களும் அதே தவறுகளை இவர்களும் செய்ததாக ஏற்பட்டு, அடுத்த தேர்தலில் இவர்களுக்கும் அதே கதி ஏற்படுகிறது. ஆக இப்படி என்று தெரிந்து கொண்டு, ஒரு பலனும் கிடைப்பதில்லை. தர்மத்தை நாம் ஏற்கும்படியாகச் சரித்திரத்துடன் குழைத்துக் கொடுத்தால் தான், அது நம்மை நல்வழிப்படுத்தப் பயன்படும்.
ஆத்ம ஞானத்தை அளிக்கும் கல்வியைப் பரவித்யை எனவும் மற்றவற்றை அபர வித்யை எனவும் கூறினர். பரவித்யை எனும் பிரும்ம ஞானம் நேரான பலனை அளிக்கிறது. அஞ்ஞான இருளைப் போக்குகின்றது.
பாரத நாட்டில் தற்காலம் நமது மக்கள் பெரும்பாலும் சிறு பிராயம் முதலே ஒழுக்கம், இறை வணக்கம் இவ்விதமான பழக்கமே இல்லாமலும், கலாசாரம், விஞ்ஞானம் இவைகளைப் பயில்வதில் வெளிநாட்டாரது பழக்கங்களையே பின்பற்றியும் வருகின்றனர். இதனால் மக்களுக்கு இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் பேரின்ப வழியை அடையத் தடை ஏற்படுகிறதென்பது தெளிவு. அதனால் ஆஸ்திகப் பரம்பரையில் தோன்றிய நமது குழந்தைகளுக்குச் சிறு வயது முதலே நமது பண்புக்குரிய தருமம், ஒழுக்கம், உண்மை முதலியவைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்க வேண்டும்.
ஒருவர் தனது பையனைப் பட்டணத்தில் படிக்கவைத்திருந்தார். அவன் பரீட்சைக்குப் பணம் கட்ட வேண்டி இருந்தது. உடனே அப்பாவுக்கு, தந்தி மணியார்டரில் பணம் அனுப்பும்படி எழுதி இருந்தான். அப்பா தபாலாபீசுக்குப் போனார். ரூபாயைக் கொடுத்து விட்டுத் தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார். தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஓட்டை பண்ணிக் கம்பியில் கட்டி அனுப்பிவிடுவார் என்று எண்ணினார். ஆனால் அந்தக் குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டுச் சரி உம்முடைய பணம் போய்ச் சேர்ந்துவிடும். ரசீது கொடுத்தாகி விட்டது என்றார் குமாஸ்தா பணத்தை வாங்கிப் போட்டுக் கொண்டதையும், ரூபாயைக் ஒட்டை பண்ணிக் கம்பியில் கோர்த்துவிடாமல் இருப்பதையும் பார்த்த அப்பா, என்னுடைய பணம் இங்கேதான் இருக்கிறது. அதை நீர் கோத்து அனுப்பவில்லையே என்று கேட்டார். அது போய்ச் சேர்ந்துவிடும் என்று குமாஸ்தா சொன்னார். மறுபடியும் தொடர்ந்து கட்டுக்கடகட என்று தந்தியும் தொடர்ந்தது. ஏதோ லொட்டு லொட்டு தட்டுகிறார். பணம் இங்கேயே இருக்கிறது. இது எப்படிப் போய்ச் சேரும் என அவர் சந்தேகப்பட்டுக் கொண்டே போனார். ஆனாலும் பணம் போய்ச் சேர்ந்துவிட்டது.
தர்ப்பணம் முதலியன பண்ணுவதும் அந்த மாதிரிதான். நாம் எதைக் கொடுத்தாலும் அதற்குரிய சட்டப்படி கொடுத்தால், அது போய்ச் சேர்ந்துவிடும். சாஸ்திரம் என்ற சட்டப்படி நாம் கொடுக்கும்போது பிதுர்தேவதைகள் அது யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்துவிடுவார்கள்.
விறகுக் கட்டையை அக்னியானது பஸ்பமாக்குவதைப் போல, ஞானம் என்ற அக்னி எல்லாக் கருமங்களையும் பஸ்மமாக்குகிறது என்று பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் உபதேசம் செய்கிறார். பஸ்பமாகிய விபூதி இவ்வாறு கர்மங்களை எரித்தபின் நிற்கும் ஞானத்துக்கே அடையாளமாகும். விபூதி பூதிரைச்வர்யம் என்று அமரகோசத்தில் உள்ளது. அதாவது, விபூதி என்பதும் ஜஸ்வர்யம் என்பதும் ஒரே பொருளைத் தரும். எந்தப் பொருளையும் தீயில் இட்டால் முதலில் அது கருப்பாக ஆகும். பிறகு இன்னும் அக்கினிப்புடம் போட்டால் நீற்றுப் போகும் அதன் பின் சுத்த வெளுப்பாக ஆகிவிடும். அப்புறம் தீயில் போட்டாலும் அதுமாறாது. அதுவே முடிவான நிலை.
வைஷ்ணவர்கள் திருமண்ணை இட்டுக் கொள்வார்கள் துளசிச் செடியின் அடியில் உள்ள மண்ணை எடுத்து இட்டுக் கொள்வது வழக்கம். மண்ணை இட்டுக் கொள்வதும், திருநீற்றை இட்டுக் கொள்வதும் நமக்கு மிக உயர்ந்து தத்துவத்தை விளக்குகிறது. மன்னனும், மாசற்றோனும் இறுதியில் பிடி சாம்பலாகத்தான் வேண்டும். நாம் கடைசியில் சாம்பலாகத்தான் முடியப் போகிறோம் அதுவே முடிவான நிலை. இதைத்தான் அது ஞாபகப்படுத்துகிறது. மண்ணிலே பிறந்த நாம் மண்ணிலேயே தான் கலக்கப் போகிறோம் என்பதையே திருமண் நினைவுப்படுத்துகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப்போகிற இந்தத் தத்துவத்தை அன்றாடம் நாம் ஞாபகப்படுத்திக் கொண்டால், அடக்கமாக வாழ்வோம், ஸ்ரீரங்கத்தில் மிருத்ஸஸ்ரஹணம் செய்யும்போது வில்வவிருஷ மண்ணை எடுக்கிறார்கள்.
நாம் ஒவ்வொருவரும் குலாசாரத்தை அனுசரித்து திருநீற்றையோ, திருமண்ணையோ இட்டுக் கொள்ள வேண்டும். திருமண் இவற்றைத் தரிப்பது பரமாத்மஸ்வரூபத்தின் உண்மையையும், உலகில் உள்ள பொருட்களின் அனித்தியமான நிலையையும் நமக்குக் காட்டுகிறது.
விவாஹ உத்தேசம் மூன்று. முதலாவது நல்ல பிரஜை உண்டாக வேண்டும். சரீர புஷ்டியோடு லாவண்யமும் புத்தியும் உடையவர்களாக இருக்க வேண்டும். எந்த மாதிரி இருக்க வேண்டுமோ அப்படி இருக்க வேண்டும். இரண்டாவது, ஸ்திரீகளுக்குச் சித்த பரிசுத்தி ஏற்பட்டு ஒன்றைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதன் மூலமாகக் கடைத்தேற வேண்டும். அதற்காக விவாஹம் பண்ண வேண்டும். மூன்றாவது உத்தேசம்,புருஷனுக்குக் கிருஹஸ்தாசிரமத்திலிருந்து ஸ்வதர்மானுஷ்டானம் பண்ணி சிரேயஸை அடைய ஒரு ஸஹாயம் வேண்டும். இப்படி மூன்று உத்தேசங்கள் இருக்கின்றன. புருஷனுக்கு, பரிபக்குவமடையாத நிலையில் தர்மானுஷ்டானத்திற்காகவும் ஸ்திரிகளுக்கு வேறு வழி கிடையாதாகையால் அவர்கள் கடைத்தேற ஒரு அவலம்பனம் வேண்டியதற்காகவும் லோகத்திற்கு நல்ல பிரஜைகள் உண்டாவதற்காகவும் இப்படி மூன்று உத்தேசங்களுக்காக விவாஹமாக வேண்டும்
மஹாமகக் குளத்தில் ஊற்றுப் போட்டு ஜலம் இறைத்தால் வெள்ளைக்காரன் கூட ஸ்நானம் பண்ணுவான். எவ்வளவு சேறானாலும் அது தீர்த்தம் என்று முழுகினால் அப்பொழுதுதான் உண்மையான பக்தி இருக்கிறதென்று தெரியும்.
மாடியிலிருந்து விழுந்தால் பூமி தாங்கும். மரத்தில் இருந்து விழுந்தால் பூமிதான் தாங்கும் ஈசுவராபசாரத்தைக் குருவினிடம் சொல்லித் தீர்த்துக் கொள்ளலாம். குருவினிடம் அபசாரம் பண்ணினால், எங்கே அபசாரம் பண்ணினோமோ அங்கேயே போக வேண்டும்.
அக்கினியில் பரமேசுவரனை ஆராதிக்க வேண்டும். தீப சிகையில் பரமேசுவரன் இருக்கிறார், அது ஜோதிர்லிங்கம், தேஜோரூபமானது. அந்த
மகாலிங்கம் அந்தகாரத்தை நிவர்த்திக்கிறது. அந்தத் தீப சிகையில் மூன்று வர்ணம் காணப்படும். பச்சை, மஞ்சள், சிவப்பு என்ற மூன்று வர்ணங்களும் தீப சிகையில் இருக்கின்றன. அந்த மூன்றைப் போலத்தான் லிங்காகாரத்தில் பிரம்ம விஷ்ணு ருத்திர மூர்த்திகளாகப் பாகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. காயத்திரியிலும் ஸ¨ர்யனிலும் அக்கினியிலும் சம்பு இரக்கிறார் என்று நம்முடைய ஸ்ரீ ஆசார்யர்கள் சொல்லியிருக்கிறார்கள். திருவண்ணாமலையில் பரமேசுவரனை அக்கினி ஸ்வரூபியாக ஆராதிக்கிறார்கள். கேரளத்தில் விளக்கேற்றி வைத்து அதில் அம்பாளை ஆராதிக்கிறார்கள். பகவதீ ஸேவை என்று அதைச் சொல்லுவார்கள்.
இப்பொழுது எவ்வளவோ பிராம்மணர்கள் வீட்டில் பேய் முதலியவைகளால் கஷ்டப்படுபவர்களை வேப்பிலையால் அடித்து மந்திரிக்கிறார்கள். பிரம்பால் அடிக்கிறார்கள் வைதிக அக்னி வீட்டில் இருந்து வந்தால் இவைகளெல்லாம் வேண்டாம். நாம் அதை வைத்துக் கொண்டிருந்தால் அந்த ர¬க்ஷயே நமக்குப் போதும். ஒரு உபத்திரவமும் வராது.
விவாஹத்திற்காகப் பண்ண வேண்டிய செலவு ஒன்றும் சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை. முன் நாளில் பெண் குழந்தைகளுக்கு நிறையப் பணங் கொடுத்தார்கள். இப்பொழுது பிள்ளைக்கு கொடுக்கிறார்கள். அந்தக் காலத்தில் பணம் வாங்குகிறவர்கள் பெண் வீட்டுக்காரர். ஆகையால் கொஞ்சமாகச் செலவு பண்ணிக் கொண்டு பாக்கியை வைத்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது பணம்
கொடுக்கிறபோது விவாஹச் செலவும் அதிகமாக இருக்கிறது. சாஸ்திரப் பிரகாரம் அலங்கிருத கன்னிகாதானம் பண்ண வேண்டும். தானத்துக்குத் தக்ஷினை உண்டு. கன்னிகைக்குப் பணம் வாங்குவது சாஸ்திர ஸம்மதமில்லை. சில ஜாதியில் இப்பொழுது கன்னிகைக்குப் பணம் வாங்குகிறார்கள். குருக்கள், வைகாநஸர்கள், தெலுங்கர்களில் சில ஜாதியார் இவர்களில் கன்னிகைகள் குறைவு, அதனால் கன்னிகைக்காகப் பணம் வாங்குகிறார்கள்.
வரசுல்கத்தால் அதிக ஸங்கடங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பிள்ளை வீட்டுக்காரர்கள் வாங்குகிற பணம் இப்பொழுது வீணாகத்தான் செலவழிகிறது. வாங்காவிட்டால் கௌரவம் இல்லை என்று நினைக்கிறார்கள். இந்தக் கஷ்டம் தீர்வதற்கு எவ்வளவோ பிரயத்தனம் பண்ணி வருகிறார்கள். தாரித்திரியம் வந்தால் தீரும்.
எனக்கு ஒரு மருந்து தோன்றியது. சொல்ல நினைத்தேன். இப்பொழுது சமயம் வாய்த்தது. இந்தக் கஷ்டம் தீர அது ஒரு வழி என்று எண்ணியிருக்கிறேன். முன் நாளில் ஏன் பணம் கொடுத்தார்கள். இப்பொழுது ஏன் இப்படி மாறியிருக்கிறது.
கன்னிகை ஒன்று பிறந்தால் அவளை எப்படியாவது ஒருவனிடத்தில் ஒப்புவிக்க வேண்டும். இந்த அவசியம் இருக்கிறவரை வாங்கிக் கொள்கிற வரனைத் தேட வேண்டும். வரன்கள் அதிகமாக இருந்தால் கன்னிகையின் பிதாவிடம் வந்து பிரார்த்தித்துக் கொண்டு கன்னிகையைப் பெற்றுக் கொண்டு போவான் பணம் கேட்க மாட்டான். ஆகவே கன்னிகைகள் குறைவாக இருந்தால் இந்த வரதக்ஷினை கஷ்டம் இல்லாமற் போகும். விவாஹம் வியாபார விஷயமாகி
விட்டது. அதிகமாக இருக்கிற ஸாமானுக்குக் கிராக்கியில்லை. குறைந்திருந்தால் நான்கு ஐந்து பேர் வந்தால் எது ஸெளகரியம் என்று பார்ப்பார்கள். ஸஹஜமாக அர்த்த ஸெளகர்யத்தைத்தான் பார்ப்பார்கள்.
கன்னிகைகள் குறைவாகப் பிறக்க வேண்டும். அதற்கு என்ன பண்ணுவது? சாஸ்திர ரீதியாக என்ன பண்ணுவது? முன் காலத்தில் பிள்ளை வீட்டுக்காரர்களுக்குக் கஷ்டம் இல்லையா என்றால் அப்பொழுது இவ்வளவு அவஸரமில்லை. பெண்களுக்குத்தான் அவஸரமாகக் கல்யாணம் பண்ண வேண்டும். அந்தக் காலத்தில் கல்யாணம் பண்ணாமலும் இருக்கவில்லை. அப்பொழுது வரர்கள் அதிகம் இருந்ததார்கள், எதனால் அதிகம் இருந்தார்கள். அதற்கு அந்தக் காலத்தில் என்ன செய்தார்கள்? அதுமாதிரி இப்பொழுதும் செய்தால் அப்படி ஆகுமல்லவா? புத்திரர்கள் என்ன காரணத்தால் அதிகமானார்கள்? அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அதைக் கண்டு பிடிக்க வேண்டும். அந்தக் காரணம் தர்ம சாஸ்திரத்திலும் வைத்திய சாஸ்திரத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.
பிராசீனமான ஆசாரம் உடையவர்களுக்குத் துர்பலம் இல்லை. வியாதி இல்லை. பிராசீன ஆசாரத்தை இப்பொழுது அநுஷ்டித்து இருக்கிறவர்கள் ஸ்திரீகள்தாம். அவர்களிடம் ஸ்வல்பப் பழக்கமாவது இருக்கிறது. அதனால் அவர்களிடம் உண்டாகிறவர்கள் பெண்களாக இருக்கிறார்கள். புருஷர்கள் அதிகமாக பிராசீன ஆசாரத்தை வைத்துக் கொண்டிருந்தால் ஆண் ஸந்ததி அதிகமாக உண்டாகும். ஸ்தல தரிசனம், தீர்த்த ஸ்நானம், ஒளபாஸனம் முதலியவைகளைப் புருஷர்கள் பண்ணி வந்தார்கள். இப்பொழுது அவர்களும் சேர்த்து ஸ்திரீகள் பண்ணுகிறார்கள். புருஷர்கள் ஆசாரத்தை விட்டதனால் புருஷப் பிரஜைகள் குறைவாக ஆகிவிட்டார்கள். அவர்கள் பிராசீன ஆசாரத்தை வைத்துக் கொண்டிருந்தால் புருஷப் பிரஜைகள் பிறப்பார்கள். இப்பொழுது பாட்மிண்டன், டென்னிஸ் முதலியவற்றை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவைகளுக்குப் பதிலாக ஆசார அநுஷ்டானங்களை வைத்துக் கொள்ள வேண்டும். தாரித்திரிய நிவர்த்திக்கும் வரசுல்க நிவர்த்திக்கும் ஆசார அநுஷ்டானந்தான் வழி.
கூட்டம் கூடி யோசிக்காமல் கையெழுத்துப் போடுகிறார்கள். அந்த மாதிரி காரியங்களெல்லாம் தற்கால சாந்தியானவையே. நிரந்தரமாக இருப்பதற்கு இதுதான் மருந்து. பிராசீன தர்மத்தோடு இருந்து லௌகிகமான விஷங்களை விட்டுவிட வேண்டும். பிராத ஸ்நானம் பண்ணுகிறவன் அகால மரணம் முதலியவற்றைப் பார்க்கமாட்டான் என்று சொல்லியிருக்கிறார். அதனால் டாக்டர் பில் குறையும். பிராதஸ்நானம், ஸ்வாமிதரிசனம், காயத்திரீ ஜபம், நாமாக நமது வேஷ்டியைத் துவைத்துக் கொள்வது முதலியவைகளை வைத்துக் கொள்ள வேண்டும். இவைகளுக்காக கிளப்பிற்குப் போவது, பீச்சுக்குப் போவது முதலியவைகைளக் குறைத்துக் கொள்ளலாம்.
முன்பு சொன்ன காரியங்கள் நியாயமாகப் பண்ண வேண்டும். நம்முடைய தாரித்திரியத்தைப் போக்கிக் கொள்ள ஒரு ஸங்கள்பம் பண்ணிக் கொள்ள வேண்டும். ஒரு நாள் கல்யாணமும் மூன்று நாள் அக்னி காரியமும் பண்ண வேண்டும். கடைசித்தரமாக உள்ள வஸ்திரத்தைக் கட்டிக் கொள்ள வேண்டும்.
ஆசார அநுஷ்டானங்கள் செய்துவர வேண்டும். ஒளபாஸனம் செய்து வர வேண்டும். அதனால் புத்திரப் பிரதிபந்தம் நீங்கும். பிசாசு முதலியவைகளால் ஏற்படும் தோஷங்கள் இல்லாமற் போகும். புத்திரபிரதிபந்த தோஷம் இல்லையென்றால் வரசுல்க கஷ்டமும் மாறும்.