ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
ஆச்சாரமும் ஒழுக்கமும்
ஆசாரம், ஒழுக்கம் இவை இரண்டும் ஒரே பொருளைக் குறிக்கும். ஆசாரமென்பது நம் முன்னோர்களின் நல்லொழுக்கத்தைக் குறிக்கும். இத்தகைய நல்லொழுக்க முள்ளவர்களைப் பார்த்து ரிஷிகளும் புகழ்கின்றனர்.
ஆசாரத்தால் நீண்ட ஆயுளை அடையலாம். ஆசாரத்தால் நாம் விரும்பும் பிரஜைகளை அடையலாம். ஆசாரத்தால் அழிவற்ற தனம் பெறலாம். ஆசாரம் அலக்ஷ்மியைத் தடுக்கும். கெட்ட ஒழுக்கமுள்ளவன் உலகத்தில் நித்திக்கப்படுவான். அவன் எப்பொழுதும் துக்கத்தையடைந்து வியாதியுள்ளவனாகவும் ஆவான் என்று மனு ஸம்ருதியில் கூறப்பட்டிருக்கிறது. ஒருவன் ஆசாரமில்லாமல் எவ்வளவு கற்றவனாக இருந்த போதிலும் அவனையாறும் மதிப்பதில்லையென்பது நிச்சயமான அனுபவம். மண்டையோட்டிலுள்ள தண்ணீரும், தோலால் செய்த பையிலிருக்கும் பாலும் எவ்விதம் பாத்திரத்தின் தோஷத்தால் கெட்டுவிடுகின்றனவோ, அவ்விதமே ஆசாரமில்லாதவன் அனுஷ்டிக்கும் விரதம், நியமம், உபவாசம் முதலியன பிரயோஜனமற்றவையாகி விடுகின்றன.
சௌரியம், வீர்யம், குணம், தவம், ஞானம், ஆசாரம் இவை இல்லாத புத்திரன் புத்திரனல்ல. தாயின் மலமூத்திரங்களுக்கு ஸமானமானவன் என்பது பிருஹஸ்பதி வாக்யம்.
ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில், வர்ணங்களுக்கும் ஆச்ரமங்களுக்கும் எல்லை என்னால் வகுக்கப்பட்டிருக்கின்றது. அதை சரிவர அனுஷ்டிப்பவர்களிடத்திலே எனக்குப் பிரீத்தியிருக்கும் என்று கூறியிருக்கிறார்.
இவ்விதம் ஆசாரத்தை அனுஷ்டிப்பவன் அடையும் பிரயோஜனங்களைப் பற்றி நாரதர் கூறுகிறார்.
நெல் வயலுக்கிறைத்த நீர் எவ்விதம் வழியிலுள்ள புல் பூண்டுகளையும் வளர்க்கிறதோ, அவ்விதமே தர்ம மார்க்கத்தில் வழுவாமல் செல்லும் மனிதன் மோக்ஷத்தை அடைவதோடு, இம்மையிலும் கீர்த்தி, தனம், தான்யம் மற்றும் தான் விரும்பும் அனைத்தையும் அடைகிறான். ஆசாரமில்லாதவன் ஜன்மம் வீணே. அவனுக்கு இஹத்திலும் பரத்திலும் சுகம் கிடைக்காது என்பதே நம் ஸாத்திரங்களின் ஸித்தாந்தம். தோக்ஷமற்றவர்கள் தான் ஸத் எனப்படுவர். ஸத் என்றால் நல்லது என்று பொருள். ஸத் துக்களின் நடத்தையே ஸதாசாரமெனப்படும். எந்தத் தேசத்தில் எந்த ஆசாரமானது பரம்பரையாக ஸாதுக்களால் தர்மஸாஸ்திரங்களுக்கு விரோதமில்லாமல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறதோ அதே ஸதாசாரமாகும்.
நம் முன்னோர்களின் தேகம் பரிசுத்தமானது. அவர்களிடத்தில் தவறு ஏதாவது ஏற்பட்டாலும் அது தாமரையிலையில் ஜலம்போல் அவர்களிடம் ஒட்டாது. உதாரணமாக ஒரு பெரிய காட்டுத்தீ, பக்கத்தில் ஒரு நதி, அதனருகில் ஒரு சிறிய குட்டை இவை மூன்றுமிருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு பெரிய காற்றடித்து குப்பைகளை கொண்டுவந்து தள்ளிற்று. காட்டுத்தீ அக்குப்பைகளையும் சேர்த்து எரித்து இன்னும் பலமடைந்தது. நதி தன் வெள்ளத்தில் குப்பைகளை அடித்துக் கொண்டுபோய்ச் சமுத்திரத்தில் தள்ளிவிட்டது. ஆனால் சிறு குட்டையோ குப்பைகளைல் மூடப்பட்டு அதிலிருந்த கொஞ்சம் ஜலமும் வற்றிவிட்டது. இதுபோல் தவலிமையுள்ளவர்களிடம் ஏதாவது குற்றம் இருந்தாலும் அது அவர்களைப் பாதிக்காது. ஆனால் தவலிமையற்ற நாம் அவ்வழியைப் பின்பற்றினால் நமக்குக் குட்டைக்கான் கதிதான். பரமசிவன் கொடிய விஷத்தையுன்டார். அது அவரை ஒன்றும் செய்யவில்லை. நாமும் அப்படிச் செய்தால் நம் கதியென்ன.
நாம் எவை எவற்றைப் பின்பற்ற வேண்டுமென்பதற்கு நமக்கு ஒரு வழிகாட்டி வேண்டும். இவ்வழிகளை நம் முன்னோர்க்கான மஹரிஷிகள் தங்கள் தவத்தின் மஹிமையால் கண்டறிந்து நமக்குச் சாஸ்திர ரூபமாக அளித்திருக்கிறார்கள். அவற்றை நாம் நன்கு ஆராய்ந்து அவற்றின் விஷயங்களை நன்றாகத் தெரிந்துகொண்டு அதன்படி நடக்காமல் இவையெல்லாம் பண்டைக் காலத்துக் கதைகள். நமது முன்னேற்றத்திற்கு இவை தடை. இவையெல்லாம் சமயல் அறை ஆசாரம். "Kitchen religion " (Sri Nehru - Speech on Hindu Code Bill 2-10-1951) என்றெல்லாம் வாதித்துப் புறக்கணிப்பது நமது பேதமையைக் காட்டும்.
ஆசாரமென்பது ஸ்நானம் செய்து உலர்ந்த வஸ்திரம் தரிப்பது மாத்திரமல்ல. அதில் சுத்தி சிரத்தை, பக்தி இவை யாவும் அடங்கியிருக்கின்றன. சுத்தியென்பது வெளியில் தோன்றுவது உள்ளுக்குள் மனத்தில் தோன்றுவது என இருவகைப்படும்.
ஸ்நானம் முக்கியமாகத் தேக சுத்திக்காக ஏற்பட்டது. சுத்தமான தண்ணீரில், நதியிருந்தால் நதியில், அல்லது சுத்தமான குளம், ஏரி இவற்றில், இவைகள் ஒன்றுமில்லாவிட்டால் கிணற்றில் ஸ்நானம் செய்யவேண்டும். இதனால் உடனே ஏற்படக் கூடியது தேகசுத்தி. ஆனால் சூர்யோதயத்திற்கு முன்பு குளிர்ந்த காலை வேளையில் குளிர்ந்து ஜலத்தில் ஸ்நானம் செய்வதென்ற வழக்கத்தால் அவ்வப்பொழுது தேகசுத்தி ஏற்படுவதோடு புத்திக்கு தெளிவும் ஊக்கமும் ஏற்படுகின்றன. விக்ஞான சாஸ்திரப்படி நம் மேல்தோலும், மூளை நரம்புகளும்கூடத் கெட்டிக்கப்படுகின்றன. நரம்பு சம்பந்தமான வியாதிகளுக்குச் சிகிச்சை செய்பவர்கள் உடம்பிலே தைலத்தைப்பூசி வைத்யம் செய்து சௌகரியப்படுத்துகிறார்களென்பது எல்லோர்க்கும் தெரிந்த விஷயம். இதையட்டியே காலையில் சூர்யோதயத்திற்குமூன் நாம் ஸ்நானம் செய்தபிறகு தான் மற்ற எந்த நல்லகாரியமும் செய்யலாமென்று விதித்திருக்கிறது.
தேகசுத்தியோடு மன சுத்தியும் ஏற்பட வேண்டியது மிகவும் அவசியம். இதற்காகவே ஸ்நானம், ஜபம், பூஜை முதலியவைகளை மௌனமாகவும், சிரத்தையோடும், விதிப்படியும் செய்யவேண்டும். நம் வீட்டில் வரும் விருந்தாளிக்கு எவ்வளவு விதமான பதார்தங்கள் செய்து போட்டாலும் அன்பும் பிரியமுள்ள வார்த்தையுமில்லாவிட்டால் விருந்தாளிக்கு எப்படித் திருப்தியுன்டாகாதோ, அதேவிதம் பக்தி சிரத்தையில்லாமல் நாம் எந்தக் கர்யம் செய்தாலும் பயனற்றதாக ஆகும்.
தேகசுத்தியோடு மன சசுத்தியும் வேண்டுமென்று சொன்னோம். மனம் சுத்தியடைவதற்கு தேகசுத்தியிருந்தால் மாத்திரம் போதாது. ஆகாரசசுத்தியும் வேண்டும். ஆகார சுத்தியிருந்தால்தான் மன சுத்தி ஏற்படும். ஆகார சுத்தியிருந்தால்தான் நமது புத்தியும் சுத்தமாகும். கண்டவிடங்களில் நாவின் ருசியை முக்கியமாகக் கொண்டு கண்ட ஆகாரங்கள் சாப்பிடுவதால் சதையை வளர்த்து வியாதிக்குக் காரணமாகுமேயன்றி மன சுத்தியையும், சாந்தியையும் கொடுக்காது. எவ்வளவு ருசியான பதார்த்தம் சாப்பிட்டாலும் அது தொண்டையளவே. அதோடு மறுபடியும் பசிக்காமலிருப்பதில்லை. இதையட்டித்தான் ஸ்ரீ சங்கராச்சார்யாரவர்கள், க்ஷ§த் வியாதிஸ்ர சிகித்ஸ்யதாம். என்று ஸோபான பஞ்சாங்கத்தில் சொல்லியிருக்கிறார்கள். இதன் கருத்து பசி யென்னும் வியாதிக்கு சிகிச்சை செய்யவும் என்பது எப்படி வியாதி வந்தால் வியாதிக்குத் தக்க மருந்து சாப்பிடுகிறோமோ, எப்படி மருந்தின் ருசியைக் கவனிக்காமல் அதனால் ஏற்படப்போகும் குணத்தையே கவனிக்கிறோமோ, அவ்விதமே ஆகாரத்திலும் நமக்கு நியமம் வேண்டும்.
நமது சாஸ்திரமானது நம்முடைய க்ஷேமத்திற்காகவும், சுகத்திற்காகவும் ஏற்பட்டதே தவிர நம்மை அடிமையாக்கவோ, அல்லது கஷ்டத்திற்குள்ளாகவோ அல்ல. அதிகாலையில் ஸ்நானம், பின்பு தெய்வ வழிபாடு, ஆகாரத்தில் கட்டுப்பாடு இவைகளை நாம் அனுஷ்டிப்பதால் நோய் நொடியில்லாமல் சந்தோஷமாக வாழ்வோம். ஆனால் காலை நேரங்கழித்து எழுந்து ஒருவித சுத்தியுமில்லாமல் (வெளிசுத்திகூடச் சில சமயம் இல்லாமல்) கண்ட வியங்களில் கண்ட ஆகாரங்களை உண்டு மேல் நாட்டவர்களின் பழக்கங்களே நாகரீகத்திற்கு அறிகுறி என்று எண்ணி, ஒரே துணியைப் பல நாள் துவைக்காமல் அணிந்து வருவதால் நமது தேகம் கெட்டுப் புதிதுபுதிதான வியாதிகளுக்குட்பட்டு நமது சக்தியும் கெட்டுச் சமூகத்தையும் கெடுக்கிறோம்.
கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்வது போல் செய்யாமல், நம் ஆசாரங்களைக் குஞ்சம்கூட ஆராய்ந்து பார்க்காமல் முன்னேற்ற மெனும் பிரம்மையால் அநேக கெட்ட பழக்கங்களைக் கைக்கொண்டு நாம் கஷ்டப்படாமல், நம் முன்னோர்களின் ஆசாரங்களைப் பின்பற்றி மேன்மையடடையும்படி ஈச்வரன் நமக்குப் புத்தியளித்து அருள்புரிவாராக.