நாம் எல்லோரும் கோயிலுக்குச் செல்லுகிறோம். அங்கு நாம் இறைவனிடம் வேண்டுவது என்ன. ஒரு சுலர் பொருள் வேண்டிப் பிரார்த்திக்கிறோம். சிலர் பட்டம், பதவி ஆகியவற்றை வேண்டுகிறோம். இன்னும் சிலர் தமக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் விலகவேண்டும் என்று விண்ணப்பிக்கிறோம். இங்ஙகனமாக நாம் நம்முடைய நலன்களையே பகவானிடத்தில் வேண்டுகிறோம்.
ஆனால் நம் பாரத தேசத்தில் அவதரித்த மகான்கள், பக்தர்கள்-ஆழ்வார்களும், நாயன்மார்களும், ஆசார்யர்களும்-ஆண்டவனிடம் வேண்டிய வரம் யாது என்பதைக் காண்போம். அரசனாயிருந்தும் திருமாலின் திருவடிக்கே தம்மை அர்ப்பணம் செய்துகொண்ட குலசேகர ஆழ்வார் வேண்டுகிறார்.
கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில்வேங்கட மலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையோன் ஆவனே
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயிலின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடத்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவள வாய்க் காண்பேனே.
திருமாலே, வேங்டவா. பொன்னும் பொருளும் அரச போகமும் யான் வேம்டிலேன். உன் திருக்கோயில் முன் ஒரு ஸ்தம்பகமாகவோ, அல்லது நின் அடியார்கள் பாத மலர்கள் மிதிக்கின்ற ஒரு படியாகவோ நான் இருந்து உன் பவளவாய் கண்டு உன் அருள்பெற வேண்டுகிறேன்.
எனக்குத் தரிமத்திலோ, பொருள் சேர்பதிலோ, காமத்திலோ ஈடுபாடு இல்லை. அவை என் பூர்வ ஜென்ம கர்மாக்களுக்கு ஏற்ப அமையட்டும். ஹே கிருஷ்ணா. ஒன்றை மட்டும் நான் மிக மதிப்புடையதாக உன்னிடத்தில் யாசிக்கிறேன். எத்தனை அசையாத பக்தி இருக்கட்டும்.
ஆகவே, நாம் எவற்றை யெல்லாம் வேண்டுகிறோமோ, அவற்றை யெல்லாம் அவர்கள் புறக்கணித்து விடுகின்றதைக் காண்கிறோம். அடியார்கள் ஆண்டவனிடத்து வேண்டிய வரமெல்லாம், அவனிடத்து மாறாத பக்தி வேம்டும் என்பது தான்.
மனிதப் பிறவியில் மட்டுமல்ல. மற்றைய பிறவிகளிலும் அற்பமான புழுவாகப பிறப்பினும் - சிவபெருமானின் திருக்கழல்களை நினைக்க வேண்டி வரம் கேட்கிறார் அப்பர் பெருமான்.
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே
வழுவாதிருக்க வரம் தரல் வேண்டும் இவ்வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி அருள்செய் திருப்பாதிரிப்புலியூர்
செழுநீர்க் கங்கை செஞ்சடை மேல் வைத்த தீவண்ணனே.
ஆண்டாள் கண்ணனிடம்,
.......எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்றோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாமாட் செய்வோம்.
மற்றை நம் காமங்கள் மற்றேலோர் எம்பாவாய்.
மாலே மணிவண்ணா, இப்பிறவியில் மட்டுமல்ல இன்னும் ஏழேழ் பிறவிகள் எடுப்பதாயிருந்தாலும் நீயே எம் நாயகன். உனக்கே நாம் ஆட்செய்வோம் என்று தன் உள்ளக் கருத்தை வெளியிடுகிறாள்.
பக்தி ஒன்றையே பரம்பொருளிடத்தில் வேண்டும் இறைவனடியார்கள், தம்முடைய உடல் உறுப்புகளெல்லாம் இறைவன் பொருட்டே ஈடுபட வேண்டும் என்று கூறுகின்றனர்.
நாவே, கேசவனது கீர்த்தியைப்பாடு. மனமே முராரியைப் பஜனை செய். கைகளே, ஸ்ரீ தரனுக்கே அர்ச்சனை செய்யுங்கள். காதுகளே அச்சுதனின் கதையைக் கேளுங்கள். கண்களே, கிருஷ்ணனைப் பாருங்கள். கால்களே, ஹரியின் ஆலயத்திற்குச் செல்லுங்கள். மூக்கே, முகுந்தனது பாத துளசியை முகருவாய். தலையே, இந்திரியங்களை அடக்கிய இறைவனை வணங்கு என்று கட்டளையிடுகிறார்.
கண்ணில் ஸ்கந்தன் உருவம், காதில் முருகன் புகழ், என்வாக்கில் பரிசுத்தமான அவன் சரித்திரம், கையில் அவன் கார்யங்கள், உடல் அவன் சேவைக்கும் ஆகி, என்னுடைய எல்லா எண்ணங்களும் குஹனிடத்தே லயமடைந்தவைகளாகட்டும். என்று பிரார்த்திக்கிறார்.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம். என்பது நம் முன்னோர் வாக்கு. ஆனந்த ஸாகர ஸ்தவத்தில் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்கள் அன்னை மீனாக்ஷியிடம் வேண்டுகிறார்.
தாயே உன்னுடைய திருவுருவம் இல்லாத தேசம் எனக்கு வேண்டாம். உன் பெருமையை புகட்டாத கவி எனக்கு வேண்டாம். உன்னைத் தியானிக்காத ஆயுளும் எனக்கு வேண்டாம்.
இங்கனம் தெய்வத் திருத்தொண்டில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட பெரியோர்கள் விரும்பிய சங்கம் எது என்பதைக் காண்போம். அருட்பெரும் ஜோதியாகிய வள்ளலார் இராமலிங்க ஸ்வாமிகள்.
ஒருமையுடன் நினது திருவடி மலரினை நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண்டும் உள்ளோன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்.
என்று முருகப் பெருமானிடம் கூறுகிறார். அடியார்களின் திருக்கூட்டத்தில் சேர வேண்டும் என்பதையே முதலில் கூறிவிட்டு, பின்னரே, மதி வேண்டும். நின் கருணை GF வேண்டும். நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்..... என்றெல்லாம் பிரார்த்திக்கிறார்.
அன்னை பார்வதி தேவி. தந்தை சிவ பெருமான். உறவினர் சிவபக்தர். மூவுலகும் நமது தேசம் என்று அன்னபூரணி அஷ்டகத்தில் தெரிவிக்கிறார்.
உன் சரணல்லால் சரணில்லை என்று பகவானிடத்தில் தீவிர பக்தியும், ஆழ்ந்த நம்பிக்கையும் கொண்ட பக்தர்கள் இயல்பாகவே தன்னலமற்றவர்களாகவும், மனத்திட்பம் ( Will Power ) உடையவர்களாயும் விளங்கினார். அதனால் அவர்கள் தங்கள் பக்திக்கு ஏற்பட்ட இடையூறுகளை யெல்லாம் வென்றனர்.
திருநாவுக்கரசரை, சமணராயிருந்த பல்லவ மன்னன் தண்டிக்க வேண்டி அவரைக் கல்லில் கட்டி கடலில் இடுமாறு உத்தரவிட்டான் அப்பொழுது அப்பெருமான், கற்றுனை பூட்டியோர் கடலிற் பாய்ச்சியினும் நற்றுணையாவது நமச்சிவவாயவே என்று கூறி அக்கலையே தோணியாகக் கொண்டு கரையேற்றினார் என்பது வரலாறு.
நாராயண மந்திரத்தையே ஜபம் செய்தான் பிரகலாதன். தன் தந்தை இரணியன் சீற்றத்திற்கு ஆளாகிப் பல இன்னல்களை எதிர் நோக்கினான். தன் பக்தியால் அவற்றை விலக்கி இறுதியில், எங்குமுள்ள கண்ணன் என்றும் மகளைக் காய்த்த, இரணியனுக்கு ஒரு தூணில் சிங்கப்பெருமானாக நாராயணனைக் காட்டி, அங்கு அப்பொழுதே அவன் வீயச் செய்தான்.
தன்னையே நம்பிச் சரணடைந்த பக்தர்களுக்கு, அவர்கள் யாசிக்காவிட்டாலும் பொன்னையும் பொருளையும் கொடுத்து அவர்கள் பிழைகளையெல்லாம் பொருத்து அருளிச் செய்கிறான் பகவான்.
இதனையே சுந்தர மூர்த்தி சுவாமிகள் கூறுகிறார்.
பொன்னும் மெய்ப் பெருளும் தருவானை போகமும்திருவும் புணப்பானை
பின்னை எம்பிழைபொறுப்பானை பிழையெல்லாந் தவிரபணிப்பானை
இன்ன தம்மையந் என்றறிவொண்ணா எம்மானை, எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்து அணி ஆரூரனை மறக்கலுமாமே.
ஆகவே இறைவனிடத்தில் மாறாத பக்தி வேண்டும் என்பதே நாம் கேட்கும் வரமாக இருத்தல் வேண்டும். இதுவே நம் முன்னோர்கள் கண்ட நெறி. அந்நெறி நின்று, என்கடன் பணி செய்து கிடப்பதே என்று உணர்ந்து வாழ்வோமாயின், தன் கடன் அடியாரைத் தாங்குதல் என்று இறைவன் நம்மை உய்விக்கிறான்.