v நானத்தைப் பொதுவாக முக்கிய ஸ்நானம், கௌண ஸ்நானம் என இரண்டு
விதமாகப் பிரித்து, அவற்றுள் முக்கிய ஸ்நானம் ஆறு விதம் என விவரிக்கப்பட்டுள்ளது. ஜலத்தில் செய்யப்படும் ஸ்நானமே முக்கிய ஸ்நானமாம். அது (1) நித்யம், (2) நைமித்திகம், (3) காம்யம், (4) க்ரியாங்கம், (5) மலாபகர்ஷணம், (6) க்ரியா ஸ்நானம் என ஆறு விதம்.
(1) நித்ய ஸ்நானம் :- ஸ்நானம் செய்யாதவன் ஜபம், ஹோமம் முதலிய எந்த வைதிக கர்மாவுக்கும் தகுதியற்றவனாகையால் அவற்றிற்காகப் பிரதிதினம் காலையில் தவறாமல் செய்யப்படும் ஸ்நானம் நித்யம்.
(2) நைமித்திக ஸ்நானம் :- ஸ்பரிசிக்கத் தகாததை ஸ்பரிசித்தல், சந்திர சூரியக் கிரகணம் முதலிய பலவித நிமித்தங்களை முன்னிட்டுச் செய்யப்பெறும் ஸ்நானம் நைமித்தகம்.
(3) காம்ய ஸ்நானம் :- தர்மசாஸ்திரத்திலும் ஜோதிட நூல்களிலும் பலவிதப் பயன்களைப் பெறுவதற்கென விதிக்கப்பட்டுள்ள ஸ்நானம் காம்யம். அந்தப் பயனை விரும்பாதவர்கள் இதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
(4) க்ரியாங்க ஸ்நானம் :- மந்த்ரஜபம், பித்ருதர்ப்பணம், தேவபூஜை முதலியவற்றைச் செய்வதற்கென அவற்றிற்கு முன் செய்யப்படும் ஸ்நானம் க்ரியாங்கம். ஜபம், தர்ப்பணம் முதலியவற்றிற்கு இந்த ஸ்நானமும் ஓர் அங்கம். அமாவாஸ்யை முதலிய தினங்களில் தர்ப்பணம் செய்வதற்கு முன்பு அதற்கு அங்கமாக ப்ராத:ஸ்நானத்தைத் தவிர வேறு ஒரு ஸ்நானத்தைச் செய்வதுதான் முறை.
(5) மலாபகர்ஷண ஸ்நானம் :- உடலில் அழுக்குப் போவதற்கென எண்ணெய் தேய்த்து மூழ்குதல் முதலியவை மலாபகர்ஷணம்.
(6) க்ரியா ஸ்நானம் :- புஷ்கரிணிகள், புண்யதீர்த்தங்கள் முதலியவற்றில் செய்யப்படும் ஸ்நானம் க்ரியாஸ்நானம். இங்கு ஸ்நானம் என்பதே ஒரு க்ரியை அதனாலேயே புண்ணியம் கிட்டும்.
சக்தியுள்ளவன் மாத்யாஹ்நிகம் செய்வதற்கு முன்பு பிரதிதினம் ஸ்நானம் செய்யவேண்டுமென விதிக்கப்பட்டுள்ளதும் நித்ய ஸ்நானத்தில் சேரும். ஆனால் வியாதி முதலியவற்றால் உடல்நலமற்றவன் அக்காலத்தில் முக்ய ஸ்நானத்திற்குப் பதிலாகப் பின் கூறப்படும் கௌண ஸ்நானங்களில் ஏதாவது ஒன்றைச் செய்யலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மந்திரங்களைச் சொல்லி முறைப்படி ஸ்நானம் செய்தால்தான் ஸ்நானபலன் கிடைக்கும். மீன் ஆமை தவளை முதலியவை போல் ஜலத்தில் பல தடவை மூழ்கி எழுந்திருப்பதுமட்டும் புண்ணியத்தை அளிக்காது. மூவர்ணத்தவர்களுக்கும் மந்த்ரவத்தாகவே ஸ்நானம் விதிக்கப்பட்டுள்ளது. நான்காவது வர்ணத்தவர்களுக்கும் ஸ்திரீகளும் மந்த்ரம் முதலியவை இல்லாமலே ஸ்நானம் செய்து பயனைப் பெறலாம்.
ஸ்நானத்திற்கு உரிய ஜலாசயங்கள்:- மகாநதி, நதி, நதம், கர்த்தம், ஸ்ரோதஸ், ஸரஸ், தேவகாதம், நாளம், தடாகம், குண்டம், தாரை, கூபம், என ஜலாசயங்கள் பல விதப்படும்.
மலையில் தோன்றிக் கிழக்கு நோக்கி ஓடிச் சமுத்திரத்தில் ஸங்கமமாகும் ஜலப்ரவாஹத்திற்கு மகாநதி என்று பெயர். காவேரி முதலியவை மகாநதிகள். சாந்த்ராயணம், மூன்று க்ருச்ரங்கள், முப்பதினாயிரம் தடவை காயத்ரீ ஜபம், மகாநதி ஸ்நானம் இந்நான்கும் சமமான புண்ணியத்தை அளிக்கக்கூடியவை. எண்ணாயிரம் விற்கடைதூரம் தொடர்ந்து ஓடும் பிரவாகத்திற்கு நதி என்றும், அவ்வளவு தூரம் ஓடாத பிரவாகத்திற்கு கர்த்தம் அல்லது குல்யா என்று பெயர். கிழக்கு மலையில் தோன்றிச் மேற்குச் சமுத்திரத்தில் கலக்கும் பிரவாகம் நதம். மலையிலோ பூமியிலோ தோன்றி ஒரு நதியுடன் கலக்கின்றதும், அல்லது தரையிலேயே ஏதாவது ஓர் இடத்தில் மறைகின்றதுமான பிரவாகம் ஸ்ரோதஸ். மலையின் உச்சியிலோ தாழ்வரையிலோ உள்ள வர்த்துலமாயும், வற்றாததாயும், விசாலமாயும், தாமரையுடன் கூடியதுமான ஜலாசயம் ஸரஸ். பூமியிலோ மலையிலோ கரையளவு எப்பொழுதும் வற்றாத நீருள்ள தேக்கம் தேவகாதம். அது அளவில் சிறியதாகவும் இருக்கலாம், பெரியதாகவும் இருக்கலாம். கிரமாத்திற்காகவோ பயிர்களுக்காகவோ நதி முதலிய ஜலாசயங்களிலிருந்து மனிதர்களால் தோண்டப்பட்ட ஜலாசயங்கள் நாளம். கிராமத்திலோ வனத்திலோ மலையிலோ இருக்கின்ற அர்த்தசந்திரன் போன்ற வடிவமுள்ள நீர்த்தேக்கம் தடாகம். நான்கு மூலைகளுள்ளதும், கற்களால் கட்டப்பட்ட படிகளுடையதும், கீழே ஜலமுள்ளதுமான நீர்தேக்கம், சிறியதானாலும் பெரியதானாலும் குண்டம். மலைப்பொந்துகளிலிருந்து தோன்றிக் கீழே பூமியில் விழும் நீர்வீழ்ச்சி தாரை. ஐந்து முழ அகலமுள்ளதும், அடியில் ஜலமுள்ளதும், மனிதர்களால் வெட்டப்பட்டுக் கட்டை செங்கல் முதலியவற்றால் கட்டப்பட்ட ஜலாசயம் கூபம்.
இவை எல்லாவற்றின் ஜலமும் ஸ்நானத்திற்குத் தகுதியுள்ளது. கூபஜலமானால் அதை எடுத்துக் கரையில் நின்று ஸ்நானம் செய்யவேண்டும். எடுக்கப்பட்ட ஜலத்தைவிடப் பூமியிலுள்ள ஜலம், அதைவிட மலையருவி ஜலம், அதைவிட ஸரஸ்ஸின் ஜலம், அதைக்காட்டிலும் நதீநத ஜலம், அதைவிட ரிஷிகளாலும் மகான்களாலும் ஸேவிக்கப்பட்ட ஜலம், எல்லாவற்றையும் விட கங்கா ஜலம் அதிகப் புண்ணியத்தை அளிக்கவல்லதாம். எல்லாப் புண்ய தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்வதனால் விளையும் பயன் கங்கா ஸ்நானம் ஒன்றினாலேயே கிடைக்கும். பிரம்மலோகத்திலிருந்தும் பரமேஸ்வர சிரஸ்ஸிலிருந்தும் கங்கை பூமிக்கு வந்ததனால் அதற்கு அவ்வளவு மஹிமையாம். கங்காஜலம் பூமியில் இருந்தாலும், பாத்திரத்தில் எடுக்கப்பட்டாலும், சீதமானாலும், மரணம்வரை அனுபவிக்க வேண்டிய பாவங்களை உடனே போக்கிவிடும்.
பிறருக்குச் சொந்தமான குளம் முதலியவற்றில் ஒருபொழுதும் ஸ்நானம் செய்யலாகாது. செய்தால் அவற்றை வெட்டியவர்களின் பாவத்தில் நான்கில் ஒரு பங்கு ஸ்நானம் செய்கிறவனைச் சேரும். ஒருகால் வேறு ஜலமே கிடைக்காமல் பிறருடைய ஜலாசயங்களில் ஸ்நானம் செய்ய நேரிட்டால் அவற்றிலிருந்து சக்திக்கேற்றவாறு 10, 5, 4 அல்லது 3 மண்ணுருண்டைகளைக் கரையில் எடுத்துப் போட்டுவிட்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.
மூக்கில்லாத குடங்களால் ஸ்நானம் செய்யலாகாது. ''முறத்தின் காற்று, நுனிநகத்தின் ஜலம், ஸ்நான வஸ்திரம், மூக்கில்லாத குடத்தின் ஜலம், துடைப்பதால் எழும் புழுதி, மயிர் ஜலம் இவை ஒருவன் மேல் பட்டால் அவனது பூர்வபுண்ணியங்களைப் போக்கிவிடும்.''
சூர்யாஸ்தமனத்திற்குப் பின்பு நதியில் ஸ்நானம் செய்யக்கூடாது என்பது பொதுவிதி. இதற்குப் பல விலக்குகள் உண்டு. ஒரு நதியில் இருந்துகொண்டு மற்றொரு நதியையும், ஒரு மலையில் இருந்துகொண்டு மற்றொரு மலையையும், ஓர் ஆலயத்தில் இருந்துகொண்டு மற்றோர் ஆலயத்தையும் புகழலாகாது. ஆனால் எங்கு ஸ்நானம் செய்தாலும் குருக்ஷேத்திரம், கயை, கங்கை, ப்ரபாஸம், நைமிசம், ஸமுத்திர ஸங்கமம் இந்தப் புண்ணிய தீர்த்தங்களை ஸ்மரித்துக்கொள்ள வேண்டும்.
நதியிலிருந்து பிரிந்த பிறகு அதன் தொடர்பற்ற ஜலம், ஓடித் திரும்பி வரும் ஜலம், வண்ணான் துறைக்குச் சமீபமுள்ள ஜலம், முதலை முதலிய கொடிய ஜந்துக்கள் வாழும் ஜலம், மயானத்திற்குச் சமீபமுள்ள ஜலம், அணைபோட்டுத் தடுக்கப்பட்ட ஜலம், யாருடையதென்று தெரியாத குளம் முதலியவை இவற்றில் ஸ்நானம் செய்யலாகாது.
ஸ்திரீகள், நாஸ்திகர்கள், சிறுவர்கள், ரோகிகள், அசுத்தமான மனிதர்கள் இவர்களுடன் சேர்ந்து ஸ்நானம் செய்யக் கூடாது. அற்ப நதிகளிலும் குளங்களிலும் புதிதாக ஜலம் வந்து பத்து நாட்களுக்குப் பின்பே ஸ்நானம் செய்ய வேண்டும்.
வெந்நீர் ஸ்நானம் :- வெந்நீரில் ஸ்நானம் செய்வதனால் உடல் சுத்தமானாலும் ஸ்நானத்தின் புண்ணியம் கிட்டாது. ''வெந்நீரில் ஸ்நானம், வேதசம்பந்தமில்லாத மந்த்ர ஜபம், வேதாத்யயனம் செய்யாதவனுக்கு அளிக்கப்படும் தானம், வேறு யாரும் ஸாக்ஷியாக இல்லாமல் தனிமையில் புசித்தல் இந்த நான்கும் பயனற்றவை.''சில ஸம்ருதிகளில், ''ஜலம் இயற்கையாகவே சுத்தமானது. அதற்கு அக்னி சம்பந்தமும் ஏற்படுவதனால் வெந்நீர் அதைவிடச் சுத்தமானது''என்று புகழ்ந்திருப்பது வியாதிஸ்தர்கள் அதை உபயோகிக்கலாம் என்பதற்காக. வேறு எந்த விதமான ஜலமும் அறவே கிடைக்கவில்லையானால் அந்தச் சந்தர்ப்பங்களில் மட்டும் வெந்நீரையும், பிறருடைய ஜலத்தையும் உபயோகிக்கலாம். மற்றச் சமயங்களில் கூடாது.
மரணம், ஜனனம், ஸங்கிரமணம், சிராத்தம், ஜன்மதினம், தொடக்கூடாதவற்றின் ஸ்பரிசம், ஞாயிற்றுக்கிழமை, ஸப்தமி, அமாவாஸ்யை, பௌர்ணமி, கிரகணம் இந்தக் காலங்களில் நதி முதலியவை இல்லாத இடங்களில் பிறருடைய குளங்களிலோ, கிணற்றிலிருந்து எடுத்த ஜலத்திலோ ஸ்நானம் செய்ய வேண்டுமே அல்லாமல் வெந்நீரில் செய்யவே கூடாது. அதனால் விசேஷப் பாவம் சம்பவிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
வெந்நீரில் ஸ்நானம் செய்யும் போது சொற்ப ஜலத்தில் வெந்நீரைக் கலந்து கொஞ்சம் மண்ணை அதில் போட்டு மந்த்ரங்களைச் சொல்லி ஸ்நானம் செய்ய வேண்டும். சிவ விஷ்ணு ஆலய சமீபத்தில் உள்ள ஜலம் முறையே சிவகங்கை, விஷ்ணுகங்கை என அழைக்கப்படும். சுத்தமானாலும் அசுத்தமானாலும் அவற்றில் ஸ்நானம் செய்தால் மகாபாதகங்கள் கூட விலகும்.
இந்த எல்லா விதிகளுக்கும் விலக்கு ஒன்று உண்டு;அதாவது இந்த விதிகளைப் பின்பற்ற முடியாமற் போனாலும் நித்ய கர்மாக்களைச் செய்வதற்கு முன்பு எப்படியாவது ஒரு முறை கட்டாயம் ஸ்நானம் செய்துவிடவேண்டும்.
ஸமுத்திர ஸ்நானம் :- ஒருவன் ஸமுத்திரஜலத்தில் முறைப்படி ஸ்நானம் செய்தால் பல ஜன்மங்களில் செய்த பாவங்கள் விலகும். பொதுவாக ஸமுத்திர ஸ்நானம் பர்வகாலங்களில்தான் செய்யலாம். மற்றக் காலங்களில் ஸமுத்திரத்தை ஸேவிக்கலாமல்லாமல் தொடலாகாது. '' அரச மரத்தைச் சனிக்கிழமை களிலும், ஸமுத்திரத்தைப் பர்வகாலங்களிலும் தொடலாம். மற்றச் சமயங்களில் ஸேவிக்கலாம்''என்பது விதி. மனைவி கர்ப்பிணியாக இருக்கும்போது ஸமுத்திர ஸ்நானம், வபனம் (முடிவெட்டிக்கொள்ளுதல்) , தூரதேச யாத்திரை, சவவஹனம் (இறந்தவர்களுடன் செல்லுதல்) இவற்றைச் செய்யலாகாது. ஆனால் கிரகணம் நேர்ந்தால் எல்லாக் கிழமைகளிலும் செய்யலாம். சதுர்த்தசி கலந்த பர்வம் செவ்வாய்கிழமையில் சம்பவித்தால் அன்று சதுர்த்தசி உள்ளவரையில் விலக்கிப் பிறகு பர்வகாலத்தில் ஸமுத்திரத்தில் ஸ்நானம் செய்யலாம். இது கங்கா ஸ்நானத்திற்குச் சமமாம். செவ்வாய்கிழமைகளில் பர்வ ஸம்பந்தமில்லாத கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசி வந்தால் அன்று செய்யப்படும் ஸமுத்திர ஸ்நானம் பல ஜன்மங்களில் செய்த பாவங்களை அழிக்கும்.
ஆனால் ஸேது (இராமேஸ்வரம்) காவேரி ஸங்கமம் கங்கா ஸங்கமம் இந்த ஸ்தலங்களில் ஸ்நானம் செய்ய எந்தவித வாரதோஷமும் இல்லை. பிரதிதினம் எக்காலத்திலும் ஸ்நானம் செய்யலாம்.
''அக்னிசயனம் செய்தவன், காராம்பசு, ஸத்ரயாகத்தில் ஈடுபட்டவன், ஸந்நியாசி ஸமுத்திரம் ஆகியவற்றைப் பிரதிதினம் பார்ப்பதே மிகவும் புண்ணியம்.
ஸமுத்திரத்தில் ஸ்நானம் செய்தாலும் வேறு ஜலத்தைக் கொண்டுதான் ஆசமனம் செய்ய வேண்டும். தர்ப்பணம் முதலியவற்றை ஸமுத்திர ஜலத்தாலேயே செய்யலாம்.