திருமழிசை ஆழ்வார் திருமாலிடம் பேரன்பு உடையவர்களான பார்க்கவர் முதலிய முனிவர்கள் பிரம்மனை அடைந்து, ''பூலோகத்தில் திருமால் எழுந்தருளியிருக்கும் தலங்களில் எத

திருமழிசை ஆழ்வார்

திருமாலிடம் பேரன்பு உடையவர்களான பார்க்கவர் முதலிய முனிவர்கள் பிரம்மனை அடைந்து, ''பூலோகத்தில் திருமால் எழுந்தருளியிருக்கும் தலங்களில் எது விசேஷமான தலம் என்பதைத் தெரிவிக்க வேண்டும்'' என்று கேட்டார்கள். பிரம்மன் 'திருமழிசை' என்னும் திருத்தலத்தைக் குறிப்பிட்டார். பார்க்கவர் தம் குமுவினருடன் திருமழிசைப் பதி வந்தடைந்தார்.

திருமழிசையில் கோயில் கொண்ட திருமாலை வழிப்பட்டு அத்தலத்திலேயே வாழ்ந்திருந்தனர் பார்க்கவர் முதலிய முனிவர்கள். சில நாட்கள் கழித்துப் பார்க்கவர் திருமாலின் பேரருளைப் பெறும் பொருட்டு ஓர் யாகம் செய்தார். யாகத்தின் முடிவில் முனிவர் முன் திருமால் காட்சி தந்தருளினார். ''உன்னுடைய யாகத்தால் மனமுவந்த நாம், நம் அம்சமாக ஒரு புதல்வனை உமக்கு அருளினோம். அப்புதல்வன் உலகம் உய்ய விரைவில் தோன்றுவான்'' என்று முனிவரை நோக்கிக் கூறி மறைந்தார்.

திருமாலின் அருளே உருவாக, பார்க்கவர்க்கு ஒரு புதல்வர் பிறந்தார். தவச் செல்வரான பார்க்கவர் தம் மனைவியுடன் புதல்வரை எடுத்துச் சென்று, ''இறைவன் அருள் காப்பதாக'' என்று கூறி, ஒரு பிரப்பஞ் செடியின் நிழலில் அப் புதல்வனைக் கிடத்திவிட்டுத் தவம் செய்யச்சென்றார்.

பிரப்பஞ் செடி நிழலிற் கிடந்த குழந்தை இறைவன் திருவருளுக்கு ஏங்கி அழுது கொண்டிருந்தது. அந்த காட்டில் வேலை செய்து வந்த திருவாளன் என்னும் திருமாலடியவனும் அவன் மனைவி பங்கஜவல்லிஎன்பவளும் அவ்வழியே வந்தவர்கள், அழுதுகிடக்கும் குழந்தையைக் கண்டார்கள். 'திருமாலின் திருவருள்' என்று அகமகிழ்ந்தார்கள். சிறுவனைத் தம் இல்லத்திற்கு எடுத்துச் சென்றார்கள். அவர்களின் அன்புப் பினைப்பில் சிறுவன் வளர்ந்து வந்தான். அவர்கள் முயற்சிலேயே கல்வி கற்றான். அறிஞர்கள் யாவரும் அவன் அறிவு கண்டு வியப்புற்றார்கள். திருமழிசைப்பிரான் என்று பெயரிட்டனர். இறைவன் திருவருளால் வேத சாஸ்திர வித்தகராக விளங்கினார் திருமழிசைப்பிரான். அவருக்கு நாள்தோறும் அன்புடன் பசுவின் பால் கொடுத்து வந்த ஓர் எளியவன் இவர் உண்ட சேஷத்தை எடுத்துச் சென்று தானும் தம் மனைவியுமாக உண்டு வரலானான். அது காரணமாக அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அக் குழந்தையும் மழிசைப்பிரான் அருளால் வளர்ந்து, கல்வி கற்று புகழ்ப் பெற்றது.

கணிகண்ணனும் திருமழிசைப்பிரானுடன் பிரிவின்றி வாழ்ந்து வரலானான். இருவரும் அறிவுச் செலவம் பெருக பெற்றவர்களாய், உலகில் தெய்வநெறி தழைக்கத் திருவுளம் கொண்டவர்களாய் பல தலங்களுக்கும் சென்றார்கள். பல பலவாகித் தெரிந்த சமயங்களை ஆராய்ந்தும் முடிவுகாண முடியாமல் கலங்கிய மனத்துடன் ஓரிடத்தில் தங்கிஇருந்தார்கள் இருவரும். மழிசைப்பிரணின் மனக் கலக்கம் கண்டு, மறைமுதலான திருமால் அவர் முன்தோன்றி, ''நம் உண்மைத் தத்துவுத்தை அறிந்து, அவ்வுண்மையை உலகறியச் செய்து பக்திசாரர் என்னும் பெயருடன் விரைவில் நம் பதவியடைவாய்'' என்று கூறியருளினார். அதன்பின் திருமழிசைப்பிரான் கணிகண்ணனுடன் வேறு தலங்களுக்கும் சென்று திருமழிசைக்குத் திரும்பினார்.

திருமழிசையில் இவர் தங்கி இருத்தபோது பொய்கைஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் இவரைச் சந்தித்து அளவளாவி இவருடன் புறப்பட்டுத் திருவல்லிக்கேணி என்னும் திருப்பதியை அடைந்து அங்கே கோயில் கொண்டுள்ள எம்பெருமானை வணங்கி வழிபட்டார்கள். பொய்கையார் முதலிய மூவரும் இவருடன் சில நாள் இருந்து, பிரிந்து சென்றார்கள். இவர் அத் திருப்பதியில் பல நாள் இருந்து இறைவன் திருவருளை எங்கும் பரப்பி, காஞ்சியிலுள்ள திருவெஃகா என்னும் திருப்பதியை அடைந்தார். திருவெஃகாவில் பாம்பனைப் பள்ளிகொண்ட பெருமானிடம் பேரன்பு கொண்டு வழிபட்டு, அவ்விடமே தங்கிவிட்டார். இவரிடம் பக்தி கொண்ட கணிகண்ணரும் பிரிவின்றி இவருக்கு தொண்டு செய்து உடன் உறைத்தார்.

திருவெஃகாவில் பள்ளிகொண்ட பெருமானுக்குத் தொண்டு புரிந்து வந்த ஒரு முதிய கிழவியின் பக்தியைக் கண்டு திருமழிசைப்பிரான் மனம் மகிழ்ந்தார். அம் முதியவளுக்கு அருள் செய்ய என்னங்கொண்டார். திருமாலுக்கு இடையறாது தொண்டு புரியும் அவள் என்றும் அதை இன்னலின்றிச் செய்து வரும்படியாக என்றும் மாறாத அவள் இளமையை அவள் அடையுமாறு இறைவனை அருட்பாடலால் வேண்டிக்கொண்டார். அம் முதியவளும் இவர் அருளால் என்றும் மாறாத இளமை எய்தினாள். முன்னிலும் பன்மடங்கு அன்பினால் அவள் இறைவனுக்குத் தொண்டு புரியலானாள்.

உண்மை அறிந்த அந்நகர் வேந்தனான பல்லவன் கணிகண்ணரைத் தருவித்து உபசரித்துத் தன் முதுமையை மாற்றி இளமையளிக்குமாறு திருமழிசைப்பிரானுக்குச் சொல்லும்படியாகக் கேட்டுக்கொண்டான். கணிகண்ணர் அரசனிடம் வெறுப்புக் கொண்டு, ''உன் ஏவலுக்கு யான் அடங்கியவனல்லன். திருமழிசைப்பிரானும் உன் கட்டளைக்குச் செவி சாய்ப்பவரல்லர். இறைவன் ஒருவனுக்கே நாங்கள் அடிமை'' என்று கூறித் திரும்பிவிட்டார்.

அரசன் கோபங் கொண்டான். ''என் விருப்பத்தை நிறைவேற்றாதவர்களுக்கு என் நாட்டில் இருக்க உரிமை இல்லை. இவர்கள் என் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்'' என்று கட்டளையிட்டான். கணிகண்ணருக்கும் உண்மை தெரிந்தது. நிகழ்ந்ததைத் திருமழிசைப்பிரானும் தெரிந்து கொண்டார். உடனே வெஃகாவின் இறைவனிடம் முறையிட்டுக்கொண்டார்.

கணிகன்னன் போகின்றான் காமரு பூங்கச்சி

மணிவண்ணா நீகிடக்க வேண்டா-துணிவுடைய

செந்நாப் புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்

பைந்நாகப் பாய்சூருட்டிக் கொள்

என்ற பாடலைப் பாடினார் உடனே கணிகண்ணருடன் அந்நகர்விட்டு ஏகினார். திருமாலும் பக்தர் உள்ளத்தவரானதால் வெஃகாவில் உள்ள தம் இருக்கையை விட்டுத் திருமழிசைப்பிரானுடன் புறப்பட்டார்.

அரசன் அவர்கள் போய்விட்டதை அறிந்து அகமகிழ்ந்திருக்ககையில் கோயில் அர்ச்சகர்கள், ''வேந்தே! திருமாலும் பெரிய பிராட்டியும் கோயிலினின்றும் வெளிப்போந்தார்கள் என்று முறையிட்டுக் கொண்டார்கள். அரசன் திடுக்கிட்டு மந்திரிகளுடன் ஆலோசித்தான். ''கணிகண்ணருக்குச் செய்த அபசாரமே இது''என்று மந்திரிகள் கூறினார்கள். உடனே அரசன் நடுநடுங்கிப் பரிவாரங்கள் சூழ, கணிகண்ணரையும் திருமழிசைப்பிரானையும் தேடிப் புறப்பட்டான்.

வெஃகாவிற்கு அருகில் ஓரிடத்தில் திருமழிசைப்பிரான் கணிகண்ணருடன் தங்கியிருந்தார். அங்கே சென்று அவர்கள் பாதங்களில் வீழ்ந்து குற்றம் பொறுக்கும்படி கேட்டுக்கொண்டான் அரசன். மழிசைப்பிரான் மன்னனை மன்னித்தார்.

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி

மணிவண்ணா c கிடக்க வேண்டும்-துணிவுடைய

செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயும் உன்றன்

பைந்தாகப் பாய்படுத்துக் கொள்

என்று பாடினார். உடனே அரசருடன் இருவரும் வெஃகாவின் கோயிலுக்குள் சென்றார்கள். இறைவன் திரும்பவும் அப்போது கோயில் கொண்டதைக் கண்டு களிகொண்டான் அரசன். அன்று முதல் அரசனால் பெரிதும் ஆதரிக்கப்பட்டு இருவரும் அங்கேயே தங்கியிருந்தார்கள்.

அதன்பின் வெஃகாவினின்றும் புறப்பட்டுப் பெரும்புலியூர் என்னும் தலத்தை அடைந்தார்கள். அத்தலத்திற்குள் இவர்கள் புகும்போது ஒரு வீட்டின் முன்புறத்தில் வேதம் ஓதிக்கொண்டிருந்த அந்தணர்கள் இவ்விருவரையும் எட்டிப்பார்த்து, ''வேத சப்தம் இவர்கள் செவியில் விழக்கூடாது''என்று எண்ணி. அத்யயனத்தை நிறுத்திவிட்டார்கள். அந்த இடத்திற்கு இவர்கள் சென்று நிற்கவே, அந்தணர்கள் இவ்விருவரையும் எட்டிப்போகும்படி குறிப்பிட்டார்கள். உடனே இருவரும் வேறு புறம் சென்று நின்று கொண்டார்கள். ஆனால் அந்தணர்கள் மேற்கொண்டு அத்யயனம் செய்ய விட்ட இடம் தெரியாமல் திகைத்தார்கள். உடனே உண்மையறிந்த திருமழிசைப்பிரானும் கணிகண்ணரும் அவ்விடம் வந்து கறுப்பு நெல் ஒன்றை நகத்தால் கிழித்து அவர்கள்முன் காட்டவே அந்தக் குறிப்பினால் அந்தணர்களும் விட்ட இடம் தெரிந்துகொண்டு திருமழிசைப்பிரானிடம் மன்னிப்பு வேண்டினார்கள். அதன்பின் திருமழிசைப்பிரானை அவர்கள் பக்திஸாரர் எனப் பெயரிட்டு அழைத்தார்கள்.

ஒரு வேதியர் யாகம் செய்யத் தொடங்கி, இவ்விருவரையும் தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். இல்லத்தில் பக்திஸாரருக்கு அக்ரபூசை செய்து யாகத்தைத் தொடங்கினார் அவ்வேதியர். மற்ற வேதியர்கள் இதைக் கண்டு வெறுப்புற்றார்கள். தங்களுக்குள் நொந்து பேசிக்கொண்டார்கள். அதைக் கண்ட பக்திஸாரர் திருமாலை வணங்கி நினைக்கவே அவர் திருமார்பிலே அனல் பிழம்பு வீசுகின்ற சக்கரம் சுழன்றது. அக்காட்சியை யாவரும் கண்டு, திருமழிசைப்பிரானின் பாதங்களில் வணங்கி மன்னிப்பு வேண்டினார்கள். உடனே அந்தக் காட்சியை மறைத்துக்கொண்டார் திருமழிசைப்பிரான்.

பெரும்புலியூரில் இவ்வாறு பல அற்புதங்கள் செய்த பின்னர் அங்கு விட்டுத் திருக்குடந்தை வந்தடைந்தார். குடந்தையில் பல ஆண்டுகள் தங்கி ஆராவமுதப் பெருமானின் அருஞ் செயல்களைத் திருப்பாக்களால் பாடி வாழ்ந்து வந்தார். நான்முகன் திருவந்தாதி தொண்ணூற்றாறும், திருச்சந்தவிருத்தம் நூற்றிருபதும் அந் நகரிலேயே திருமாலின் திருவடியிற் கலந்தார்.

பூநிலாய ஐந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்,

தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகால் இரண்டுமாய்

மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்

நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே.

-திருச்சந்தவிருத்தம்

தேருங்கால் தேவ னொருவனே என்றுரைப்பர்

ஆரு மறியா ரவன்பெருமை-ஓரும்

பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும்

அருள்முடிவ தாழியான் பால்.

-நான்முகன் திருவந்தாதி