விதியா மதியா - எது வலியது ? ஒ வ்வொருவனுடைய வாழ்க்கையிலும் நடைபெறும் நிகழ்ச்சிகள் விதிப்படிதான் நடக்கின்றனவா?அல்லது விதியை மதியால் வெல்ல முடியுமா?இந்த விவாதம் இன்

விதியா மதியா - எது வலியது ?


வ்வொருவனுடைய வாழ்க்கையிலும் நடைபெறும் நிகழ்ச்சிகள் விதிப்படிதான் நடக்கின்றனவா?அல்லது விதியை மதியால் வெல்ல முடியுமா?இந்த விவாதம் இன்று நேற்று உண்டானதல்ல;இவ்வுலகத்தின்கண் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே ஏற்பட்டதுதான்.

எல்லாமே விதிப்படிதான் நடக்கிறது;நம்மால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டால், மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வாழ்க்கை வாழ்வதில் வேற்றுமையே இல்லை என்ற தவறுதலான நிலைமை அல்லவா ஏற்படும்?மேலும், இந்த நிலைமையை ஒப்புக்கொண்டால், மனிதன் தைரியமாகப் பாவம் செய்வதில் முனையலாம். அன்றியும் குற்றம் செய்தவர்கள் எல்லாரும் விதியின்மேல் பழியைப் போட்டுவிட்டுத் தண்டணையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா?

இந்துமதக் கோட்பாடுகளின்படி, நாமே முன்பு செய்த செயல்களின் விளைவேதான் இப்போது நாம் அநுபவிக்கும் நன்மை அல்லது தீமையே தவிர, விதி என்று ஒன்று கிடையவே கிடையாது. நம்முடைய சாதனைகள் எல்லாம் முன்பு நாம் செய்த செயல்களின் விளைவே. ஆகவே நம் செயல்கள்தாம் நம்முடைய விதி எனப்படுவது. (யோகவாசிட்டம்.)

போன பிறவியில் நமக்கு அளிக்கப்பட்ட செயல் சுதந்தரத்தைச் சரியாகப் பயன்படுத்தாமல் தீயசெயலில் ஈடுபட்டதன் விளைவுதான் இப்போது நமக்கு வாழ்க்கயில் கிடைக்கும் தோல்விகள், ஏமாற்றங்கள், வியாதிகள் முதலியன.

ஒருவன் விதியின் வலிமையால் ஒரு தீய காரியத்தைச் செய்கிறான் என்று வைத்துக்கொள்வோம். விதிப்படிதான் நடக்கிறான் என்றால் அவன் எவ்வித மனத் தடுமாற்றமுமில்லாமல் அல்லவா அதைச் செய்ய வேண்டும்? ஆனால் உண்மையில் நடப்பதென்ன? இதயம் படபடவென்று அடித்துக்கொள்கிறது. 'இது தவறான காரியம்;செய்யாதே'என்று மதி தடுக்கிறது. மனச்சாட்சிக்குப் பணிந்து துணிவுடன் முயன்றால் அவன் அந்தத் தீய காரியத்தைச் செய்யாமல் தவிர்க்கலாம்.

யோகவாசிட்டம் அடித்துக் கூறுகிறது-''விதி என்பது நாம் முன் செய்த நல்ல அல்லது கெட்ட கர்மங்களின் பயனேயன்றி வேறொன்றுமில்லை. அறிவிலிதான் தன்னை விதியின் கைப்பாவை என்று எண்ணி அழிந்து போகிறான்.''

இதையேதான் கர்மத்தின் நியதி (Doctrine of Karma) என்று இந்து மதம் வலியுறுத்துகிறது. ஸ்வாமி அபேதாநந்தா சொல்கிறார்:''கர்மாவின் நியதியில் நம்பிக்கையுள்ளவனுக்குத் தானேதான் தன் விதியை நிர்ணயித்துக் கொள்கிறவன், தன் எண்ணத்தையும் குணத்தையும் உண்டாக்கிக் கொள்பவன் என்று நன்கு தெரியும்.'' (A believer in the law of Karma is a free agent and he knows that he creates his own destiny and moulds his character by his thoughts and deeds. - Doctrine of Karma.)

நம் தலையில் யாரோ ஒருவனோ அல்லது கடவுளோ எழுதவில்லை. ஏனெனில் கடவுள், ''எல்லா உயிர்களிடத்தும் சமமானவர், அவருக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை.'' (கீதை 9-29.) நாமே நம் தலையில் எழுதிக்கொண்டுள்ளோம். இது குருட்டு நம்பிக்கையல்ல;விஞ்ஞான ரீதியான கருத்து. ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உண்டு. (To every action there is an equal and opposite reaction ) . இது தவிர்க்க முடியாதது. செய்த கன்மங்களுக்குப் பயன் வந்தே தீரும். இது விதவையின் கண்ணீருக்கோ அநாதையின் அலறலுக்கோ செவி சாய்க்காது. இதுதான் அந்த நியதி.

டாக்டர் ராதாகிருஷ்ணன் என்ன சொல்கிறார் என்று கவனிப்போம்:- ''ஒருவன் தானே தெரிந்தெடுக்கப்பட்ட நிலையில், தன் குணாதிசயங்களுக்குத் தகுத்தாற்போலுள்ள சூழ்நிலையிலேயே வைக்கப்படுகிறான். தன்னாலேயே உண்டாக்கப்பட்ட உலகத்தில்தான் அவன் பிறக்கிறான்.'' (The individual is placed in an environment, that which answers to his character.- Dr. S. Radhakrishnan in, 'The Brahma

Sutras-the philosoply of spiritual life '.)

தானே தனக்கு ஏற்படுத்திக்கொண்ட ஒன்றுதான் விதி என்று இதிலிருந்து தெரிகிறது. ஆகவே தன்னால் உண்டாக்கப்பட்ட ஒன்றைத் தானே முயன்றால் மாற்ற முடியும் என்கிறது இந்து மதம். அதாவது விதியை மதியால் வெல்லலாம் என்கிறது. மதி என்றால் என்ன?நம் உடல், புலன்கள், மனம் இவற்றுக்கெல்லாம் நுண்ணியமானது, அதிகச் சக்தி வாய்ந்தது. மேலும், விதியின் வலிமை என்ன, அது எப்படி ஏற்பட்டது என்று அறியக்கூடிய சக்தி உள்ளது. விஞ்ஞானரீதியில் அணுகினால், அறியக்கூடிய பொருள் அறியப்பட்ட பொருளைவிடச் சக்தி வாய்ந்தது. தான் செய்த வினைதான் இந்த நிலை என்று அறிகிறவனால், மறுபடியும் அதே சுழலில் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ளக் கண்டிப்பாக முடியும்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் மேலும் கூறுகிறார்:- குணம்தான் விதி. மனிதனின் தற்கால நிலைமை நீண்ட காலத்துச் செய்கைகளின் பயன் தான் என்றால், தான் செய்ததை அவனால் மாற்ற முடியும். அவனுடைய பழைய வாசனைகளும் அவனது தற்காலச் சுற்றமும் சூழ்நிலையும் அவனுக்கு இடையூறுகள் விளைவிக்கலாம். ஆனால் அவனுடைய நல்லுணர்வுக்கும் ஊக்கத்திற்கும் விடாமுயற்சிக்கும் முன் அந்த இடர்கள் யாவும் விலகிப்போகும். வாழ்க்கை என்பது இடைவிடாத சுய உற்பத்தியே. ( Character is destiny. If the present state of man is the product of a long past, he can change what he has made. This past which he has built for himself and his present environment may offer obstacles to him, but they will all yield in the end to the will in him in proportion to its sincerety and insistence. Life is a constant self-creation. Brahma Sutras.)

இதிலிருந்து நம் இந்து மதம் நம்மை விதியின் அடிமை என்று நிச்சயமாகச் சொல்லவில்லை என்று விளங்குகிறது. விதி வலிமை மிக்கதே;ஆனால் அதன் வலிமை உன் வலிமையே என்று உணர்க. நீயே போன ஜன்மத்தில் செய்த வினையின் விளைவுகள் தாம் உன் விதி. நீயே உன் கால்களிலும் கைகளிலும் பலமான கட்டுகள் போட்டுக்கொண்டாய். முயன்றால் நீயே அவிழ்த்துக் கொள்ளலாம். c போட்ட முடிச்சுக்கள் தாமே!ஆனால் முயற்சி செய்யாமல் வாழ்நாளெல்லாம் கத்திக் கதறினாலும் பிரயோசனமில்லை. இதுவே இந்து மதத்தின் தீர்மானமான கொள்கை.

வேதாந்த மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றொரு வாக்கியத்துடன் கட்டுரையை முடிப்போம்-''நமது தற்கால நிலைமை நாம் முன்பு செய்தவற்றின் விளைவுதான் என்றால், நமது வாழ்க்கையை நாம் வேண்டுவது போல் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். கடந்த காலம் போல் வருங்காலம் முற்றுப்பெற்ற பொருள் அல்ல.'' (It what we are is due to what we did, we will be even as we now do. It is open to us to remake our life even as we will have it. The future is not a finished product like the past' Brahma Sutra -the philosophy of spiritual life by Dr. S. Radhakrishnan.)