என் கடமை : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வேதத்தை ரக்ஷிக்க வேண்டியதுதான் உங்களுடைய பெரிய கடமை என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பதுதான் என் கடமை. நீங்கள் நான் சொல்வதைக் கேட்டாலும், கேட்காவிட்டாலும், உங்களை காரியம் பண்ணும்படி செய்ய எனக்குச் சக்தியில்லாவிட்டாலும், “இதுதான் உங்கள் காரியம்; இதுதான் உங்கள் கடமை” என்று வாய் வார்த்தையாகச் சொல்லவாவது எனக்குச் சக்தி இருக்கிற மட்டும் ஓயாமல் ஒழியாமல், நச்சு நச்சென்று, இதை நான் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். வேதத்துக்காகத்தான் ஆசார்யாள் இந்த மடத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவர் பெயரை வைத்துக்கொண்டு உங்களைப் பாக்கி எப்படியெல்லாம் நான் ஏமாற்றினாலும், இந்த வேதங்களைக் காப்பாற்றிக் கொடுக்கும்படியான பொறுப்பையாவது ‘ஸின்ஸிய’ராக பண்ணிவிட்டால், அது ஓரளவு தோஷ நிவிருத்தியாகும். இதையும் பண்ணாவிட்டால் மஹா பெரிய தோஷமாகிவிடும். அதனால்தான் அலுப்புத் தட்டினாலும் ஸரி என்று, திரும்பத் திரும்ப வேத ரக்ஷணத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

வெறுமே சொல்வதோடு இல்லாமல், மேலே சொன்ன மாதிரி ஸ்தூலமாகப் பல திட்டங்களும் போட்டு நடத்தி வருகிறது. இதற்காக உங்களிடம் யாசகம் பண்ணுகிறேன். ‘யாசகம்” என்று இல்லாவிட்டால், “ஆக்ஞை” என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். எப்படியோ ஓரப்படி, என் காரியம் நடந்தாக வேண்டும்!

வேதம் ஓதிய வேதியர்க் கோர் மழை

நீதி மன்னர் நெறியினர்க் கோர் மழை

மாதர் கற்புடை மங்கயர்க் கோர் மழை

மாதம் மூன்று மழை எனப் பெய்யுமே

என்று சொல்லியிருக்கிறது. மாதம் மும்மாரி பெய்தால்தான் எப்போதும் பூமி குளிர்ந்து, பயிர் பச்சை ஸம்ருத்தி (வளம்) இருக்கும். பிராமணர் முறைப்படி வேத அத்யயனம் பண்ணினால் அதற்காக மாஸம் ஒரு மழையும், ராஜா நீதி தவறாமல் ராஜ்யபாரம் பண்ணினால் அதற்காக ஒன்றும், ஸ்திரீகள் பதிவ்ரதா தர்மம் தப்பாமலிருந்தால் அதற்காக ஒன்றுமாக, இப்படி மும்மாரி பொழிகிறது என்று சொல்லியிருக்கிறது.

இந்த மூன்றில் “நீதி மன்னர் நெறி” – அதாவது ராஜாங்கத்தார் நீதி தவறாமல் ராஜ்யம் பாலனம் பண்ணும் விஷயம் – அடியோடு என் கையிலில்லாதது. ஆட்சி விஷயத்தில் (ஸந்நியாஸிகளான) எங்களுக்கு ஸம்பந்தம் இல்லை. ஆனபடியால் இதிலே எனக்குப் பொறுப்பு இல்லை.

ஆனால் பாக்கி இரண்டிலும், தர்மத்தை ரக்ஷித்துத் தர வேண்டிய ஒரு மடத்தின் சாமியார் என்கிற முறையில், எனக்கு நிரம்பப் பொறுப்பு இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். மாதர் கற்பை மதத் தலைவர் என்ன காப்பாற்றுவது என்றால், இப்போது ஸ்தீரீ தர்மத்துக்கு விரோதமான பல போக்குகள் வந்துவிட்டதால், “குரு” பட்டம் சூட்டிக்கொண்டிருக்கிற நான்தான் அந்தத் தப்புக்களை எடுத்துச் சொல்லிப் பெண்களுடைய நடத்தைக்குக் கெடுதல் வராமல் எச்சரிக்க வேண்டியிருக்கிறது. பால்ய விவாஹ காலத்தில் பெண்கள் தப்பிப் போவதற்கு ரொம்பவும் குறைச்சலாகதான் chance இருந்தது. ஒரு பெண்ணுக்குத் தாம்பத்ய எண்ணம் வருகிறபோதே அவளுக்குப் பதி என்ற ஒருத்தன் இருந்துவிட்டதால், அவனிடம் மட்டுமே அவளுடைய மனஸ் போயிற்று. இந்த எண்ணம் ஏற்பட்ட வயஸுக்கப்புறமும் கலியாணமாகாமல் இருப்பது என்று ஏற்பட்டால், அப்போது மனஸ் பல தினுஸாகப் போகிறது; சித்த விகாரம் ஏற்படுகிறது. ஆனால் இப்படி சாரதாச் சட்டத்திலிருந்து ராஜாங்க ரீதியாகவே ஏற்பட்டு விட்டதால், எங்கள் கையைக் கட்டி போட்டுவிட்ட மாதிரிதான் ஆகிவிட்டது. ஆனாலும் நினைத்து நினைத்து எத்தனையோ சட்டங்களை மாற்றுகிற மாதிரி, இதையும் மாற்றுவதற்கு அவர்களை (ஸர்க்காரை)த் தூண்டிவிடுகிற ரீதியில் public opinion-‍ஐ create பண்ண [வெகு ஜன அபிப்ராயத்தை உண்டு பண்ணி] முடியுமா என்பதால்தான், இந்த விஷயத்தில் நான் முழுக்கக் கை கழுவாமல் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் பெண்களுடைய மனோபாவம், பெண்ணைப் பெற்றவர்களுடைய மனோபாவம் எல்லாமே இப்போது விபரீதமாக மாறி, கல்யாணத்துக்கு முயற்சி பண்ணாமல் காலேஜில் co-education முறையில் [ஆண் மாணவர்களோடு கூட்டுப் படிப்பு] படிப்பது, அப்புறம் புருஷர்களோடு உத்யோகம் பண்ணுவது என்றெல்லாம் ஆகி வருகிறதைப் பார்க்கிற போது, உள்ளுக்குள்ளே ரத்தக் கண்ணீர் விட்டுக் கொள்வதைத் தவிர, ஏதாவது பண்ணமுடியுமா என்று நம்பிக்கை போய்க் கொண்டுதான் இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் முதலில் சொன்னபடி, வேதியர் வேதம் ஓதுவதற்கானதைப் பண்ணி விட்டாலே ராஜதண்டம், பாதிவ்ரத்ய தர்மம் [கற்பு நெறி] இந்த இரண்டுங்கூடத் தன்னால் ஸரியாகிவிடும் என்ற நம்பிக்கையில்தான், வேத ரக்ஷணத்தில் தீவிரமாக முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

இதற்கு உங்கள் பசங்களைக் கொடுக்க வேண்டும். பணத்தையும் கொடுக்கவேண்டும். பணமில்லாத குடும்பத்துப் பசங்கள் வேதவித்யைக்கு வருவதற்காக அவர்களுக்குத் தர வேண்டிய நிதி உதவியானது உங்களில் பணமுள்ளவர்களிடமிருந்துதான் வரவேண்டும். கற்றுக் கொடுக்கும் வாத்தியார் சம்பளம், புஸ்தகச் செலவு, பாடசாலைப் பராமரிப்பு எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும். இதற்காக ரொம்பவும் ஸ்வல்ப அளவிலேயே ஆரம்பித்து காணிக்கைத் திட்டம் வைத்திருக்கிறோம். மாஸம் ஒரே ஒரு ருபாய்* செலுத்தினால் போதும். அதற்குப் பிரதியாக, நீங்கள் வேதமாதாவுக்குச் செய்கிற கைங்கரியத்தின் புண்ணிய பலனோடுகூட, இங்கே மடத்தில் நடக்கிற சந்திர மெளளீச்வர பூஜாப் பிரஸாதம் (விபூதி, குங்குமம், மந்திராக்ஷதை) உங்களுக்குத் தபாலில் அனுப்பப்படும். உங்கள் நக்ஷத்திரத்தைத் தெரிவித்துப் பணம் அனுப்பினீர்களானால், மாஸம்தோறும் உங்கள் நக்ஷத்திரத்திலேயே பிரஸாதம் அனுப்பப்படும். அதனால் இதற்கு ‘நக்ஷத்ரக் காணிக்கை’ என்றே பெயர் வைத்திருக்கிறது. திருப்பதி வேங்கடாசலபதி பேரைச் சொல்லி chain letter என்று போடுகிறார்களே – “இந்த லெட்டரைக் காப்பி பண்ணி இத்தனை பேருக்கு அனுப்பாவிட்டால் கண்போய்விடும், கால் போய்விடும்” என்று மிரட்டி எழுதுகிறார்களே, வேங்கட ரமண ஸ்வாமியின் பேருக்கு பயந்து கொண்டு, அநேகம் பேர் காப்பி பண்ணி அனுப்புகிறார்களே – அந்த மாதிரி ஏதாவது மிரட்டி உருட்டியாவது இந்த வேத தர்மத்துக்கு வசூல் பண்ண முடியுமா என்று எனக்கு இருக்கிறது!

அதிகம் வேண்டாம்! மாஸத்துக்குத் தலைக்கு ஒரு ரூபாய் தான் கேட்கிறேன். பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ ஸர்கார் வரி போட்டு விட்டால் கொடுக்கிறீர்களா இல்லையா? அப்படி இதை நான் போட்டிருக்கிற tax என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் நடத்துகிற கடுகத்தனை ஸர்காருக்குத் தர வேண்டிய வரி இது. இதற்காக பீச்சு, சினிமா இத்யாதியில் துளி குறைத்துக் கொண்டால் போதும். உங்கள் கடமை, என் கடமை இரண்டிலும் ஒரு பங்காவது பூர்த்தியானதாக ஆகும்.


*தற்போதைய சந்தா விவரமும் அதனை அனுப்பிவைக்க வேண்டிய வேத ரக்ஷண நிதி டிரஸ்டின் முகவரியும், “ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கர மடம், காஞ்சீபுரம்” என்ற முகவரிக்கு எழுதிப் பெற்றுக்கொள்ளலாம்.