இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள் 10 திருப்புள்ள பூதங்குடி வல்வில்லிராமர் சோ ழ நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழும்

இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள்

10. திருப்புள்ள பூதங்குடி வல்வில்லிராமர்

சோ ழ நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழும் இந்தத்தலம் கும்பகோணத்திலிருந்து ஸ்வாமிமலை செல்லும் பாதையில் சென்று பின்னர் பிரிந்து திருவையாறு செல்லும் பாதையில் ஸுமார் 12 A.e. தொலைவில் உள்ளது. செல்லும் பாதை அவ்வளவு சீராக இல்லை என்றே கூறவேண்டும். ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் நமக்குப் பகவானின் பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற ஐந்து நிலைகளையும் உணர்த்துவதாகவே தோன்றுகின்றது. இதனையே பெருமாள் தலம் என்றும் அருகிலுள்ள திருமண்டங்குடியை ஆழ்வார் தலம் என்றும் மக்கள் அழைக்கின்றனர். இத்தலத்தின் விவரம் விரிவாகப் பாத்ம புராணம், ப்ரும்மாண்ட புராணம் இரண்டிலும் கூறப்பட்டுள்ளதாம். இங்கு ராமபிரான் சயன கோலத்தில் ஸேவை ஸாதிக்கிறார். அதன் காரணத்தைப் புராணங்கள் வாயிலாக அறிந்து கொள்வோம்.

ஸீதையைக் அபகரித்த ராவணனுடன் போரிட்டுக் குற்றுயிராகக் கிடந்த ஜடாயுவைத் தேடிக்கொண்டு வந்த ராம, லக்ஷ்மணர்கள் அவரது அபயக் குரலைக் கேட்டு, அவரிடமிருந்து ஸீதை கவர்ந்து செல்லப்பட்ட விவரமறிந்து உயிர் துறந்த அவருக்கு இறுதிக் கடன்களை இத்தலத்தில் செய்ததால் இது புள்ளபூதங்குடி என்று பெயர் பெற்றது. தன் தகப்பனாரான தசரத மன்னருக்கு இறுதிக் கடன்களைச் செய்ய முடியாமற் போனாலும் புள்ளாகிய ஜடாயுவிற்கு அந்திம க்ரியைகள் செய்த த்ருப்தியினாலும், சிரமத்தினாலும் ராமபிரான் இங்கு சயனம் கொண்டுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதனாலேயே இத்தலத்து இறைவன் வல்வில்லிராமன் என்று அழைக்கப்படுகிறார். மயிலாடுதுறை அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் புள்ளிருக்குவேளூர் என வழங்கப் பெற்று ஜடாயுவை தகனம் செய்த இடமாகக் கருதப்படுவதாலும், அதற்கருகாமையிலேயே இத்தலம் உள்ளதால் இங்கேயே ராமபிரான் அந்திம க்ரியைகள் செய்தது பொருத்தமாகிறது. தொண்டைநாட்டில் திருப்புட்குழி என்ற தலமும் ஜடாயுவுக்கு க்ரியைகள் செய்த இடமாகக் கூறப்படுகிறது. என்பதை நினைவில் இருத்திக் கொள்வோம்.

புஜங்க சயனராகச் சக்கரவர்த்தித் திருமகன் இருகரங்களுடன் கிடந்த வண்ணத்தில் காட்சி. இவரைப் பாலசயனர் என்றும் கூறுவர். இவர் திண்டின் மேல் சயனம், ஆதிசேஷன் மேல் இல்லை. இவரே பரமபதநாதன் என்பதை அறிவிக்க நாபியில் ப்ரும்மா உள்ளார். ஆனால் ஸீதையைப் பிரிந்த ஸமயத்தில் இந்த சம்பவம் நடந்ததால் ஸ்ரீதேவி மூலவர் ஸந்நிதியில் இல்லை. பூமாதேவி மட்டும் அமர்ந்துள்ளார். மற்றும் மூலவராக லக்ஷ்மணன், ஆஞ்சனேயர், ஜடாயு உள்ளனர். பூமிப்பிராட்டி தள்ளி அமர்ந்திருப்பதால் இவரை யோக சயனர் என்றும் கூறுகின்றனர். உத்ஸவரும் வல்வில்லிராமன் என்ற திருநாமத்துடன் சதுர்புஜதாரியாக ஸ்ரீதேவி, பூதேவி உடன் நின்ற கோஸத்தில் உள்ளார். மற்றும் நரஸிம்ஹர் தனியாக எழுந்தருளி உள்ளார்.

தனி ஸந்நிதியில் தாயார் ஹேமாப்ஜநாயகி, ஹேமாம்புஜவல்லி, பொற்றாமரையாள் என்ற திருநாமங்களுடன் எழுந்தருளி உள்ளார் மூலவராகவும், உத்ஸவராகவும். இது அஹோபில மடத்தின் நிர்வாஹத்தில் உள்ள திருக்கோவில். திருமங்கை ஆழ்வாருக்கு இத்தலத்து இறைவன் சதுர்புஜ ராமபிரானாகக் காட்சி அளிக்கவே அவர் வியப்புற்று இவரை மங்களாசாஸனம் செய்துள்ளார் பத்து பாசுரங்களால். இக்கோவிலின் விமானம் சோபன விமானம். தீர்த்தம் ஜடாயு தீர்த்தம். பங்குனி மாதம் ப்ரும்மோத்சவம் ராமபிரானின் ஏனைய கோவில்களைப் போல் இங்கு நடைபெறுகிறது.

வெற்பால் மாரிய பழுதாக்கி விறல் வாளரக்கர் தலைவன் தன்

வற்பார் திரள் தோள் ஐந்நான்கும் துணித்த வல்வில்லிராமனிடம்

என்பது திருமங்கை ஆழ்வாரின் அனுபவம்.