இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள்
5. வடுவூர் கோதண்டராமர்
த ஞ்சாவூர் மன்னார்குடி வழிதடத்தில் மன்னார்குடிக்கு 15 A.e. முன்பாக வகுளாரண்யம் எனப் பெயர் பெற்ற வடுவூர் உள்ளது. ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது. இந்தத் தலத்தைத் தென் அயோத்தி என்றும் கூறுவர். வால்மீகி முனிவர் ராமாயணத்தில் வடிவமைத்த ராமபிரானே வடுவூரில் எழுந்தருளியிருப்பதாகப் புகழும் வண்ணம் இத்தலத்துக் கோதண்டராமர் உள்ளார். முதலில் வடுவூரிலுள்ள இந்தக் கோவில் வேணுகோபால ஸ்வாமிக்கே உரியதாக இருந்ததாம். மன்னார்குடி ராஜகோபல ஸ்வாமியைச் ஸேவிப்பவர்கள் இந்த ராமபிரானைச் ஸேவிக்காமல் செல்லமாட்டார்கள். கோபாலன் ஸந்நிதியில் ராமபிரான் எழுந்தருளிய வரலாற்றைச் சிறிது பார்ப்போம். திருத்துறைப் பூண்டிக்கருகில் உள்ள தலைஞாயிறு என்ற இடத்தில் ராமர், ஸீதை, லக்ஷ்மணன், பரதன், அனுமன் ஆகிய மூர்த்திகள் புதைந்து கிடப்பதாகத் தஞ்சை மன்னன் சரபோஜி கனவு கண்டார். முதலில் இந்த விக்ரஹங்களைத் தஞ்சை அருகில் உள்ள கோவிலில் வைத்துப் பேணிக்காத்தார். பிறகு வடுவூர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்கி எல்லா மூர்த்திகளையும் வடுவூர் வேணுகோபாலர் கோவிலிலேயே எழுந்தருளச் செய்தார்.
மூலவராகக் கோதண்டராமர் கம்பீரமாக ஸேவை ஸாதிக்கிறார். உற்சவ மூர்த்திகளான கோதண்டராமர், ஸீதை, லக்ஷ்மணன், மாருதி மிகவும் அழகு வாய்ந்தவர்கள். அந்தராம ஸெளந்தர்யம் என்னால் அறிந்து சொல்லப்போமா அம்மா என்ற அருணாசலக் கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனை இவரை வைத்தே பாடப்பட்டதோ என்று வியக்குமளவிற்கு நம்மைச் சொக்க வைக்கும் பேரழகர் இந்த ராமபிரான். தனி ஸந்நிதியில் முதல் மூர்த்தியாக இருந்த கோபாலன் எழுந்தருளியுள்ளார். மற்றும் ராமானுஜர், தேசிகர், ஹயக்ரீவர் தனி ஸந்நிதிகளில் உள்ளனர். தனித் தாயார் ஸந்நிதி இல்லை. கண்வ மஹர்ஷி, குலசேகர ஆழ்வாருக்கு மிகவும் உகந்தவர் இந்த ராமபிரான்.
தீர்த்தமாக ஹரித்ரா நதியும், ஸரயு புஷ்கரிணியும் உள்ளன. விமானம் புஷ்பக விமானம் என்ற பெயரைத்தாங்கி இத்தலத்தை ராமாயண காவியத்தோடு தொடர்புபடுத்துகிறது. இவ்வூரில் அஹோபில மடம் உள்ளது. வேதவிற்பன்னர்களுக்குத் தஞ்சை மன்னர்களால் ஓர் ஏகாதசி தினத்தன்று மான்யமாக இந்த தலம் வழங்கப்பட்டதால் இதற்கு ஏகாதசி க்ராமம் என்றும் பெயர். பங்குனி மாதம் ஸ்ரீராமநவமி சேர ஒன்பது நாட்கள் இங்கு ப்ரம்மோற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஐந்தாம் நாள் உத்ஸவமாகக் காலை கண்ணாடிபல்லக்கும், மாலை யானை வாஹனமும் நடைபெற்றதும் இரவில் ஸீதாராம திருக்கல்யாணம் நிகழ்வதைக் காண அநேக மக்கள் திரண்டு வருவது இன்றும் கண்கூடாகக் காணப்படும் உண்மை.