இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள்
7. நீடாமங்கலம் சந்தானராமர்
F ருவாரூர் - தஞ்சாவூர் மார்க்கத்தில் திருவாரூரிலிருந்து ஸுமார் 25 A.e. தொலைவில் உள்ளது நீடாமங்கலம் என்ற திருத்தலம். அருகிலுள்ள பெரிய ஊர் கொரடாச்சேரி. பேரூந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே உள்ள தெருவின் வழியே சென்றால் ஸ்ரீ ஸந்தான ராமஸ்வாமி திருக்கோவிலை அடையலாம். இக்கோவிலுக்குச் செல்லும் வழியில் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவிலும் இருக்கிறது. பெரிய, பழமையான திருக்கோவில் ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. குடமுழுக்கு நிகழக் காத்திருக்கிறது. என்று கண்டிப்பாகச் சொல்லலாம். நீடாமங்கலத்திற்கு அதிலும் இந்தக் கோவில் உள்ள இடத்திற்கு யமுனாம்பாள்புரம் என்ற பெயர் வழங்கிற்று என்பதைத் திருக்கோவில் சென்றதும் நாம் அறிகிறோம். திருக்கோவிலில் பலகையில் எழுதப்பட்டுள்ள விவரங்களைச் சிறிது நோக்குவோம்.
அருள்மிகு ஸந்தான ராமஸ்வாமி திருக்கோவில்
நீடாமங்கலம் - 614 404.
இடம் நீடாமங்கலம். (யமுனாம்பாள்புரம்)
க்ஷேத்ரம் சாகேத க்ஷேத்ரம்.
விமானம் திருவரங்க விமானம்.
தீர்த்தம் சாகேத புஷ்கரிணி, இதுவே திருக்குளம்.
மற்றைய தீர்த்தம் வெண்ணாறு.
முக்கிய விழாக்கள் ஆடித்தெப்ப விழா, பங்குனி ஸ்ரீராம நவமி
ப்ரம்மோத்சவ விழா
காலம் தஞ்சையை ஆண்ட மஹாராஷ்ட்ர மன்னன் ப்ரதாப் ஸிம்மன் (ப்ரதாப் சிங்) முயற்சியால் 1761-ல் நிர்மாணிக்கப்பட்ட கோவில்.
தலப்பெருமை தஞ்சை ப்ராதப் ஸிம்ம மன்னருக்கு நீண்ட நாட்கள் ஸந்தானப் பேறில்லாமல் இந்த மூர்த்தியை வழிபட்டு ஸந்தானம் கிடைக்கப்பெற்றது. அதனால் அரசி யமுனாம்பாள் பெயர் உடைய இந்த இடத்திலேயே கோவில் எழுப்பப்பெற்றது.
புத்ர ஸந்தானங்கள் இல்லாதவர் இவ்வூர் திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீ ஸந்தான ராமரை வழிபட்டு ஸந்தான கோபால ஜபமும் செய்து புத்ரப் பேறு அடையப் பெற்றனர். ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அவர்களால் ஸந்தான ராமஸ்வாமினம் சகுண நிர்க்குண ஸ்வரூபம் பஜரே என்று ஹிந்தோள வஸந்த ராகக் கீர்த்தனையால் புகழ் அஞ்சலி செய்யப்பட்ட மூர்த்தி. இந்தக் கோவிலின் குடமுழுக்கு 1924-ல் ஒரு முறையும் பின்னர் 18-10-1956-ல் மற்றொரு முறையும் நடைபெற்றது. இக்கோவில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும் என்றறிகிறோம்.
முதலில் ஸந்ததி கருடனை வணங்கி த்வாரபாலகர்களின் அனுமதி பெற்று ஸந்தான ராமரை தர்சிக்கச் செல்லலாம். ஸந்நிதிக்கு அருகிலேயே விஷ்வக்ஸேனரும், ஆஞ்சனேயரும் எழுந்தருளியுள்ளனர். ப்ரகாரச்சுற்றில் நிகமாந்த மஹாதேசிகர், ராமானுஜர், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் உள்ளனர். சென்ற தினம் தேசிகர் திருநட்சத்திரம் திருவோணம் ஆதலால் புத்தாடை புனைந்து போலிவுடன் அவர் திகழ்ந்தார். இது ஒரு வடகலை ஸம்ப்ரதாயக் கோவில். 21-09-1964 அன்று கோவில் மண்டபத் திறப்பு விழா அந்நாள் முதலமைச்சர் திரு எம். பக்தவத்சலம் அவர்களால் நடைபெற்றுள்ளது.
மூலவராக ஸ்ரீ ஸந்தான ராமர், ஸீதாப்பிராட்டியை வலப்புறம் கொண்டு, லக்ஷ்மணனை இடப்புறம் கொண்டு ஸேவை ஸாதிக்கிறார். உத்ஸவ ஸந்தான ராமர் கோதண்டராமராக வலது கரத்தில் அம்பும், இடது கரத்தில் கோதண்டவில்லுடனும் அழகுக்கு அழகு சேர்க்கும் வண்ணம் பிராட்டி ஸீதையோடும், லக்ஷ்மணனோடும், ஆஞ்சனேயரோடும் நம்மை வஸீகரிக்கிறார். கும்பகோணம் சாரங்கபாணியும், வடுவூர் ராமபிரானும் சேர்ந்தாற்போல் அவ்வளவு எழில் கொஞ்சும் கோலமாக இந்த ஸந்தான ராமர் உள்ளார். மற்றும் ஸந்நிதியில் யாகபேரர், பலிபேரர், தீர்த்தபேரர், செல்வர் உள்ளனர். ராமபிரானின் திருக்கோவில்களில் அவரோடு சேர்ந்தே ஸீதாபிராட்டி அருள் பாலிப்பதால் தனித் தாயார் ஸந்நிதி இங்கும் இல்லை. இனி ப்ராகார வலம் வரும்போது தும்பிக்கை ஆழ்வார் (விநாயகர்) , பக்ஷிராஜன், விஷ்ணு துர்க்கை ஆகியோரை ஸேவிக்கலாம். வாகனமண்டபத்தில் குதிரை வாகனம், யானை வாகனம், சூரியப்ரபை உள்ளன. நம்மை மிகவும் கவர்திழுப்பது இக்கோவிலின் அனுமந்த வாகனமே. மாருதி தத்ரூபமாகக் காட்சி அளிக்கிறார் இந்த வாகனத்தில். ராமபிரானின் நூற்றெட்டு நாமாவளிகள் எழுதப்பட்டுள்ளன. வஸந்த மண்டபமும் உள்ளது. அறங்காவலர் அலுவலகமும் கோவில் உள்ளேயே செயல்படுகின்றது.
ராமர் ஸந்நிதிக்கு முன்பாக உள்ள மண்டபத்தில் மேலே சுதைச் சிற்பங்களாக க்ஷீராப்திநாதன், ஸீதாகல்யாணம், பட்டாபிராமர், ஸேதுபந்தனம், அகல்யா சாப விமோசனம் உள்ளன. ஸந்நிதி கோபுரத்தில் நரஸிம்ஹர், பட்டாபிராமர், பரமபதநாதன் இருக்கின்றனர்.
கோவிலுக்கு எதிரிலுள்ள சாகேத புஷ்கரிணி என்ற திருக்குளம் நீரால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஸந்தானப் பேற்றினை வேண்டி இன்றும் கோவிலில் தொட்டில் கட்டுவோர் எண்ணிக்கை அதிகமே என்றார் பட்டாசாரியார். ஸந்தானராமர் ஸந்நிதியில் வேண்டுதல் நிறைவேற்றும் பொருட்டு, மகப்பேற்றை அடைந்த தம்பதியர் அளித்த சிறிய வெள்ளித் தொட்டில் வைக்கப்பட்டுள்ளதை அவர் காண்பித்தார். நன்மையும், செல்வமும் நாளும் பெருக நீடாமங்கலநாதன் ஸந்தானராமன் தாள் பணிவோம்.