English - Bael tree, Holy fruit tree, Sanskrit - Vilvah, Sivadruma,
Sriphalah, Latin name - Aegle marmelos
தமிழ் - கூவிளம், வில்வம்
உடல் பலவீனமான நிலையில் நாம் பழங்களை நாடுகிறோம். பழவிற்பனைக் கடைகளில் ஆப்பிள், மாதுளம், திராட்சை, வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற பழங்களை அதிக விலை கொடுத்து வாங்கிச் சாப்பிடுகிறோம். விலை பற்றி கவலைப்படாமல் பழங்களை நாம் வாங்குவதற்குக் காரணம் அவை அனைத்தும் உயர்ந்த சத்துள்ளவை என்ற எண்ணம்தான். ஆனால் நம்மால் சுலபமாக பயிராக்கப்பட்டு மற்ற பழங்களை விட அதிக சத்துள்ளதும், மிகக் குறைந்த விலையில் சத்துக்கள் நிரம்பப் பெற்றதுமான வில்வப்பழம் நம் உணவில் அன்றாடம் சேர்க்கப்படவேண்டும்.
வீடுகளின் தோட்டத்தில் வளர்வதைக் காட்டிலும வில்வமரம் கோயில் பிரகாரங்கள், பழத்தோட்ட்ம் போன்ற இடங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. ஜூன் ஜூலை, மாதங்களில் பழுத்த வில்வப் பழத்தின் விதையை போட்டு ஆரம்பத்தில் சற்று கவனத்தோடு கவனித்து, மழைக்கு பிறகு வேப்பம் பிண்ணாக்கு , மரச்சாம்பல், முதலிய நல்ல எருப்பொருள்களை கலந்து எருவிட்டு, அவ்வப்போது நீர்ப் பாய்ச்சி வர, ஐந்து ஆண்டுகளில் வில்வமரம் காய்க்கத் தொடங்கிவிடும். ஒரு மரத்தில் ஆண்டிற்கு 400 பழங்கள் வரை கிடைக்கும். பெரிய பழமாக இருந்தால் சுமார் 250 பழங்கள் வரை கிடைக்கும். ஒரு மரத்திலிருந்து எட்டு மடங்கு பழமாவது கிடைக்கும்.
வில்வத்தில் அபாரமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன. "சரக்கொன்றை மரத்திலும் வில்வத்திலும் சிவபெருமானே இருக்கிறார்" என்று வடமொழிச் சுலோகம் கூறுகின்றது. சிவபெருமானுக்குப் பிடித்த இந்த மங்களகரமான வில்வத்தின் இலை, காய், பழம், வேர் போன்றவை அருமருந்தாகப் பயன்படுகின்றன.
வில்வக் காயைப் பறித்துப் பார்த்தால் உருண்டையாகவும், ஒடு கடினமாயுமிருக்கும். பார்ப்பதற்கு மங்களான மஞ்சள் நிறத்துடன் கூடியது. அதிக துவர்ப்பான சுவை கொண்டது. பழம் குடற்கோளாறுகளை நீக்கிவிடுடும். நன்றாக கனிந்த பழம் சாப்பிட சுவைநிறைந்ததும், உடல் சூட்டைத் தணித்து, மலக்கட்டை நீக்கி சுறுசுறுப்பைத் தருகிறது. உடல் பலம் தருவோதடன்றி, மூல ரோகத்தை நிவிருத்தி செய்கிறது.வாசனை நிறைந்த வில்வப்பழம் சாப்பிட இனிப்பாக இருக்கும். பழத்தை சர்ப்பதாக தயார் செய்து பருகினால் சுகமாக மலக்கழிவு ஏற்பட்டு சுறுசுறுப்பைத் தரும்.
குணம்
எளிதில் ஜீர்ணமாகும், ஜீர்ணத்தின் இறுதியில் காரமான சுவை கொண்டது. பழத்தில் தசை வளர்ச்சிக்கு உதவும் Begtin என்ற சத்தும் சர்க்கரை Tannin (டானின்) அமிலமும் விசேஷமாக பழத்தில் நிறம்பியுள்ளன. தோஷங்களில் - வறட்சி, எளிதில் ஜீர்ணமாகும் தன்மை, துவர்ப்பு மற்றும் கசப்பு சுவை முதுலியவற்றால் கபத்தையும், சூடான வீர்யத்தினால் வாதத்தையும் கண்டிக்கும்.
வில்வ இலைக் கஷாயம் பருகக் கைகால் பிடிப்பு, உடல்வலி முதலியவை குணமாகிவிடும். கோமூத்திரம் விட்டு இலைகளை இடித்து பிழிந்து வடிகட்டி 40-50 IL வரை காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட ரத்த சோகை, காமாலை போன்ற நோய்கள் நீங்கும். பத்தியமாக இருக்க வேண்டும். அது போல இலையை தண்ணீரில் நன்கு கொதிக்க விட்டு வலி வீக்கம் உள்ள உடல் பகுதிகளில் ஊற்றினால் அவைகள் குறைந்துவிடும். வில்வ வேர்க் கஷாயம் பருக நாடி நரம்புகளில் ஏற்படும் அதிர்வுகளை நீக்கி சாந்தமடையச் செய்யும்.பாதி பழுத்தும் பழுக்காத நிலையிலுமுள்ள வில்வக் காய்களை ஒட்டுடன் துண்டு துண்டாக உடைத்து வெயிலில் உலர்த்தி, இடித்து- சுத்தமான வெள்ளைத் துணியில் சலித்து சூர்ணத்தை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். சீதேபேதி, ரத்தபேதியில் இரண்டு பெரிய மேசைக்கரண்டி வெந்நீரில் போட்டு கெட்டியாக கூழ் போலச் செய்து ஆறிய பிறகு சாப்பிட வியக்கும்படியாகக் குணமாகும். காய் பசியை தூண்டிவிடும், மலத்தைக் கட்டும். குடல் கிருமிகளை நீக்கும். பழம் துவர்ப்பு, இனிப்புச் சுவை கொண்டது. மலத்தை இளக்கி சுகமாக கழியச் செய்யும். பழத்தை பாலுடன் கலந்து சிறிது மீளகுப் பொடி சேர்த்து இரவு சாப்பாட்டிற்குப் பிறகு சாப்பிட தாது புஷ்டி உண்டாகும். மூலநோயும் நீங்கும். வில்வ இலைச் சாறு கல்லீரலின் செயல்களை தூண்டிவிட்டு பித்தத்தை தெளிவுறச் செய்யும்.வேர் ஹருதயத்திற்கு உகந்ததும், பழம் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதிலும் வில்வம் சிறந்தது.கபத்தின் அடைப்பினால் மூச்சுத் திணறல் ஏற்படும் நேரங்களில் இலைச்சாறு சாப்பிட கபத்தை கரைத்து விடும், ஜலதோஷம், இருமல், ஆஸ்த்மா நிவ்ருத்தியாகும். இலைச்சாறு சிறுநீரை சுண்டச் செய்யும் கர்ப்பபையில் ஏற்படும் தடிப்பு, வெள்ளைப்டுதல் போன்றவை வில்வத்தின் உபயோகத்தில் குணமடைந்து விடும்.
வில்வத்தின் வேர்த்தோல் விஷஜ்வரம் எனும் முறைக்காய்ச்சலை நீக்கும். இலைச்சாறும் ஜ்வரத்தை நீக்கிவிடும். வில்வப்கஷாயம் பேதி, கபம், வாந்தி, குமுட்டலை குணப்படுத்தும்.புரோட்டின், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, உலோகச்சத்து,மாச்சத்து, கலோரி - உஷ்ணம் போன்றவை ஆப்பில், மாதுளை, பழங்களில் இருக்கும் அளவு சத்தை விட அதிகம் வில்வ பழத்திலுண்டு என்பதை அறிய வியப்பாக உள்ளது.