'ந்யாய ஸ¨த்ரம்'செய்த கௌதம மஹரிஷிக்கு 'அக்ஷபாதர்'என்று பேர்*.
அவர் அறிவால் ஓயாமல் சிந்தனை பண்ணிக்கொண்டே இருப்பாராதலால் வெளி உலகமே அவர் கண்ணுக்குத் தெரியாதாம். இந்த நாளில் ஸயன்டிஸ்டுகளும் புரொஃபஸர்களும்
எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பதால் absent mind மீபீஆக இருக்கிறார்கள் என்கிறோம் அல்லவா?இப்படி விகடத்துனுக்குகள்கூட நிறையப் போடுகிறார்கள். கௌதமர் இப்படித்தான் இருந்தார். அதனால் எதையோ பலமாக யோசித்துக் கொண்டே போய் ஒரு கிணற்றிலே விழுந்து விட்டாராம். அப்போது பகவானே அவரை மேலே ஏற்றி விட்டு அவருடைய காலிலேயே கண்ணை வைத்துவிட்டாராம்!கால் தானாக, involuntary - யாக, நடக்கிற போது அதிலுள்ள கண்ணும் தானாகப் பார்த்து விடும்படி அனுக்ரஹம் செய்தாராம். பாதத்திலே அக்ஷம் (கண்) ஏற்பட்டதால் இவருக்கு அக்ஷபாதர் என்று பேர் வந்தது என்று கதை.
இவருடைய ஸ¨த்ரத்துக்குப் பாஷ்யம் எழுதியவர் வாத்ஸ்யாயனர். வார்த்திகம் செய்தவர் உத்யேதகரர். பரம அத்வைதியான வாசஸ்பதி மிச்ரர் இந்த வார்திகத்துக்கு ஒரு விளக்கம் எழுதியிருக்கிறார். ந்யாய - வார்த்திக - தாத்பர்ய டீகா என்று அதற்குப் பெயர். இந்த விளக்கத்துக்கு விளக்கம் எழுதியிருக்கிறார் உதயனாசாரியார். தாத்பாய - டீகா - பரிசுத்தி என்று அதற்குப் பெயர். ந்யாய குஸுமாஞ்ஜலி என்றும் உதயனர் ஒரு புஸ்தகம் எழுதியிருக்கிறார். இவர்தான் புத்த மதத்தைக் கண்டனம் பண்ணி நம் தேசத்தில் இல்லாமல் பண்ணியவர்களில் முக்கியமான ஒருவர். 'ந்யாய ஸுத்ர'த்துக்கு ஜயந்தர் எழுதிய 'ந்யாய மஞ்ஜரி'என்ற பாஷ்யமும் இருக்கிறது. அன்னம் பட்டர் என்பவர் தர்க்க ஸங்கிரஹம் என்றும் அதற்குத் தாமே விரிவுரையாக ஓரு 'தீபிகை'யும் எழுதியிருக்கிறார். ஸாதாரணமாக ந்யாய சாஸ்திரம் படிக்கிறவர்கள் (கடைசியில் சொன்ன) இந்த இரண்டு புஸ்தகங்களோடு தான் ஆரம்பிக்கிறார்கள்.
கணாத மஹரிஷி எழுதிய வைசேஷிக ஸுத்ர த்துக்கு ராவண பாஷ்யம் என்று ஒன்று இருந்து காணாமற் போய்விட்டதாகச் சொல்கிறார்கள். பாஷ்யம் மாதிரியாகப் பிரசஸ்தபாதர் எழுதிய 'பதார்த்த - தர்ம - ஸங்க்ரஹம்'நமக்குக் கிடைத்திருக்கிறது. இதற்கு உதயனர் வியாக்கியானம் எழுதியிருக்கிறார். ஸமீபத்தில் உத்தமூர் வீரராகவாச்சாரியார் வைசேஷிக ரஸாயனம் என்ற நூலை எழுதியிருக்கிறார்.
வைசேஷிகத்துக்கு ஒளலூக்ய தர்சனம் என்றும் ஒரு பெயர் உள்ளது. 'உலுகம்'என்றால் ஆந்தை. 'உலூ'தான் இங்கிலீஷில் 'OWL' என்று ஆயிற்று. ஆந்தை சம்பந்தப்பட்டது ஒளலூக்யம். கணாதருக்கே 'உலூகம்'என்று பேர் வந்ததாகச் சொல்கிறார்கள்!கௌதமர் யோசனையிலேயே இருந்ததால் கண் தெரியாமல் கிணற்றில் விழுந்தார் என்றால்,கணாதர் பகலெல்லாம் ஆராய்ச்சியிலேயே இருந்துவிட்டு இரவுக்குப் பின்தான் பி¬க்ஷக்குப் புறப்படுவாராம். பகலில் கண்ணுக்கு அகப்படாமல் ராத்ரியிலேயே இவர் சஞ்சாரம் செய்ததால்,'ஆந்தை'என்று nick - name பெற்றதாகச் சொல்கிறார்கள். அஞ்ஞானியின் ராத்திரி ஞானிக்குப் பகலாயிருக்கிறது என்று கீதையில் பகவான் சொல்லும்போது எல்லா ஞானிகளையுமே ஆந்தையாகத்தான் சொல்லிவிட்டார்!
கணாதர் ஸ்தாபித்ததால் காணாத சாஸ்திரம் என்றும் வைசேஷிகத்துக்குப் பெயர். 'தமிழ் 'காணாத'அல்ல;எல்லாவற்றையும் 'கண்டு'சொன்னவர்'என்று ஒரு பண்டிதர் வேடிக்கையாகச் சொன்னார்*. மற்ற எந்த சாஸ்திரத்தையும் படித்து அறிவதற்கு வியாகரணமும் வைசேஷிகமும் நிரம்ப ஒத்தாசை செய்கின்றன என்பது வித்வான்களின் அபிப்பிராயம். இதனால்.
காணாதம் பாணினீயம் ச ஸர்வசாஸ்த்ரோபகாரகம் என்று வசனமும் இருக்கிறது.
(காணாதம் - வைசேஷிகம்;பாணினீயம் - வியாகரணம்.)
வியாகரணம் நடராஜாவின் டமருவிலிருந்து வந்தது என்றால் நியாய - வைசேஷிக சாஸ்திரங்களும் சிவ பெருமான் ஸம்பந்தமுடையவை. வைசேஷிக சாஸ்திரங்களில் மஹேச்வரனையே பரமாத்மாவாகச் சொல்லி நமஸ்காரம் பண்ணியிருக்கிறது. ஜகத்துக்கு ஈச்வரன் 'நிமித்த காரணம்'என்று கொள்வதில் சைவ மதங்கள் நியாய சாஸ்திரத்தையே பின்பற்றுகின்றன எனலாம்.