கல்க கல்பனை மூலிகை வைத்ய முறைகளில் மிகவும் சுலபமானது கல்க கல்பனையாகும் மிகவும் உபத்திரவங்களை தரக்கூடிய வியாதிகளையும் தீர்க்க வல்லது அதை எவ்வாறு தயாரித்து உபய

கல்க கல்பனை

மூலிகை வைத்ய முறைகளில் மிகவும் சுலபமானது கல்க கல்பனையாகும். மிகவும் உபத்திரவங்களை தரக்கூடிய வியாதிகளையும் தீர்க்க வல்லது. அதை எவ்வாறு தயாரித்து உபயோகிப்பது? என்ற விஷயத்தை சற்று ஆராய்வோம்.

ஈரமான அல்லது உலர்ந்த மூலிகைகளை கல்லில் அரைத்தொடுத்தால் அது 'கல்கம்' எனப்படும், இதற்கே 'ப்ரக்ஷேபம்', 'ஆவாபம்' என்றும் பெயர், கல்கங்களை கால்பலம் (15 கிராம்) அளவில் ஜலத்துடன் உட்கொள்ளலாம்.

கல்கத்தில் சரக்குகளைச் சேர்க்க அளவுகள் - கல்கத்தில் தேன், நெய், எண்ணெய் இவற்றை இரு மடங்கு சேர்க்க வேண்டும், சர்க்கரை, வெல்லம் இவற்றை கல்கத்திற்கு ஸமயெடை சேர்க்க வேண்டும், வேறு திரவ பதார்த்தங்களை கல்கத்தினும் நான்கு மடங்காகச் சேர்க்கலாம்.

பிப்பலீவர்த்தமாநகம் - முதல் நாள் மூன்று திப்பிலிகளையும், இரண்டாம் நாள் ஆறு திப்பிலிகைளயும், மூன்றாம் நாள் ஒன்பது திப்பிலிகளையும் கல்கமாக அரைத்து உபயோகிக்கலாம், இவ்விதமே பத்தாம் நாள் வரையில் தினத்திற்கு மூன்று திப்பிலி வீதமாக உயர்த்திக்கொண்டே வரவேண்டும், இதை நிறுத்த வேண்டுமானால், முதலில் உபயோகித்த கிரமப்படியே தினம் ஒன்றக்கு மூன்று திப்பிலி வீதமாக முறையே குறைத்துக்கொண்டுவர வேண்டும். இவ்விதம் முதல் பத்து நாட்கள் வரையில் தினந்தோறும் மூன்று மூன்றாக திப்பிலிகளை அதிகமாயு பயோகித்து வந்து, அப்பால் பத்துநாட்கள் வரையில் கிரமமாகக் குறைத்து, இம்மருந்து பிரயோகத்தை இருபது நாட்களில் முடிக்கலாம், இம்முறைக்கு 'பிப்பிலீ வர்த்த மாநம்கம்' என்று பெயர். இதனால் பாண்டே ராகம், உடல்பூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம், இருமல், மூச்சுத் திணறல், ருசியின்மை, ஜ்வரம், மஹோதரம் எனும் வயிற்றில் நீர்ப்பெருக்கம், மூலம், உடல் இளைப்பு, கபத்தின் கோளாறுகள், வாதரோகம், நெஞ்சுப் பிடிப்பு இவை நிவ்ருத்தியாகும்.

நிம்ப பத்ர கல்கம் - வேப்பிலியை கல்கமாக அரைத்து, அதைத் தடவினால் விரணங்களிலுள்ள (புண்கள்) தோஷங்களைப் போக்கி அவற்றை ஆற்றும். இதே கல்கத்தை உட்கொள்ள வாந்தி, குஷ்டம், பித்தககோளாறுகள், கிருமிகள் இவை தீரும்.

மஹா நிம்ப ஜடா கல்கம் -மிகவும் முதிர்ந்த வேப்பம் வேரின்பட்டையையெடுத்து கல்கம் செய்து உபயோகித்தால் க்ருத்ரஸீ எனும் Sciatica வாதரோகம் குணமாகும்.

பிப்பல்யாதி கல்கம் - திப்பிலி, மோடி, சுத்தி செய்த சேராங்கொட்டை இவற்றின் கல்கத்தைத் தேனுடன் உபயோகித்தால் ஊருஸ்தம்பம் எனும் தொடைப்பிடிப்பு, தொடை வீக்கம் வலி தீரும்.

விஷ்ணுக்ராந்த ஜடாகல்கம் -விஷ்ணு க்ராந்தி வேரின் கல்கத்தை சர்க்கரை,தேன், நெய் இவற்றில் கலந்து கொண்டு வந்தால் ஏழு நாட்களில் பரிணாம சூலை எனும் உணவு ஜீர்ணத்தில் ஏற்படும் வயிறுவலி நிவ்ருத்தியாகும்.

சுண்ட்யாதி கல்கம் - சுக்கு, எள், வெல்லம் இவற்றின் கல்கத்தைப் பாலுடன் உட்கொள்ள பரிணாம சூலையும் ஆமவாதம் எனும் மூட்டு வீக்கம், வலியும் குணமாகும்.

அபாமார்கபீஜ கல்கம் - நாயுருவி விதைகளின் கல்கத்தை அரிசி கழுவிய நீருடன் உட்கொண்டு வந்தால் இரத்தக்கசிவுடன் கூடிய மூலரோகம் நிச்சயமாய் நிவ்ரூத்தியாகும்.

பதரீமூலாதிகல்கம் - இலந்தைவேர் கல்கத்தையும், எள்ளின் கல்கத்தையும் கலந்து தேனையும் பாலையும் சேர்த்து உபயோகிக்க ரத்தபேதி நின்று விடும்.

லாக்ஷ£ கல்கம் - செவ்வரக்கை கல்கம்செய்து, பூசணி ஸ்வரஸத்துடன் கால்பலம் (15 கிராம்) அளவில் உட்கொள்ள இரத்தக் குறைவு, தொடர் இருமலில் ஏற்படும் ரத்தக் கசிவு ஆகியவை நிவாரணமாகும்.

அங்கோல மூல கல்கம் - அழிஞ்சில் வேரின் கல்கத்தைத் தேன் கலந்து அரிசி கழுவிய நீரோடு உபயோகித்தால் பேதியும் விஷ ஸம்பந்தமான தீங்குகளும் போகுமென்று அறியப்படுகிறது.

வந்த்யாகர்கோடகீ கல்கம் முதலியது -பேய்த்தும்மட்டிவேர், மாதிரி வேர், பில்வவேர் இம்மூன்றில் ஏதேனும் ஒன்றை கல்கமாகச் செய்து, நெய்யுடன் உபயோகித்தால் விஷச் செடிகளாலும் விஷ ஜந்துக்களாலுண்டாகும் தீங்குகள் நிவாரணமாகும்.

அபயாதி கல்கம் - கடுக்காய், இந்துப்பு, திப்பிலி, சுக்கு இவற்றின் கல்கத்தையபயோகித்தால் வாத பித்த கபத்தினாலுண்டாகும் கெடுதிகள் தீரும்.

அபயாதி கல்கம் இரண்டாவது -கடுக்காய், இந்துப்பு, சுக்கு இம்மூன்றையும் கல்கமாகச் செய்துஉட்கொள்ளலாம். இதற்கு பசியை தூண்டிவிடும் சக்தியும், ஜீர்ணமாகாமல் கிடக்கும் உணவை நன்கு ஜெரித்து விடும் சக்தியுமுண்டு.

த்ரிவ்ருதாதி கல்கம் - கரஞ்சிவிதைவேர், பலாசம் விதை, குராசானியோம், கம்பில்லம் எனும் தாதுப்பொருள், வாய்விடங்கம், வெல்லம் இவற்றை ஸமபாகமாகச் சேர்த்து கல்கமாகச் செய்து, புளித்த மோரோடு உட்கொள்ள வயிற்றில் சேர்ந்துள்ள எல்லா கிருமிகளும் அழியும்.

நவநீதாதி கல்கம் - வண்ணெயையும் எள்ளையும் சேர்த்து கல்கம் செய்துபயோகித்தாலும், வெண்ணெய், சர்க்கரை, நாகப்பூ இவற்றின் கல்கத்தையுட்கொண்டாலும் இரத்தக் கசிவுடன் கூடிய மூல நோய் குணமாகி விடும்.

சுண்டீசலாடு கல்கம் முதலியது - 1) இஞ்சியின் கல்கத்தை கடலைப்பருப்பின் கஞ்சியுடனாவது 2) கண்டங்கத்திரிக்காயின் கல்கத்தை மோருடனாவது உட்கொள்ள, உண்ட உணவு ஜெரிக்காது அப்படியே வெளியேறும் கிரஹணி எனும் ரோகம் தீரும்.