கோடையை சமாளிக்க
இவ்வருடம் மார்ச் மாத இறுதியிலேயே கோடையின் வெப்பம் தகிக்கத் தொடங்கிவிட்டது. வியர்வை ஆறாகப் பெருகி உடலிலிருந்து வெளியேறுவதால் ஜலத்தினுடைய அளவு குறைவதால் நாவறட்சி, உடற்சூடு அதிகரித்து கண் எரிச்சல், சிறுநீர் மஞ்சள் நிறமாகவும், எரிச்சலுடனும் போக வாய்ப்புகள் அதிகம். உடலின் சூட்டை குறைத்து, ஜலம் வற்றாமல், பசியும் மந்தித்து விடாமலிருக்க வழிகள் யாவை என்று நாம் ஆராய வேண்டும். தவிர்க்க வேண்டிய சுவைகளுள் காரம், புளிப்பு, உப்பு முக்கியமானவை. அதிகம் சேர்க்க வேண்டிய சுவைகளில் இனிப்பு, கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையாகும். முன் குறிப்பிட்ட சுவைகளால் பித்தத்தின் சீற்றம் ஏற்படுவதால் சிறுநீரில் எரிச்சலும் நீர் சுருக்கம் ஏற்படும். பின் குறிப்பிட்ட சுவைகளால் பித்தம் சாந்தமடைகிறது. ஆனால் அவைகளால் பசியை தூண்ட முடியாது என்பதால் குடித்தால் குளிர்ச்சி தரும், ஆனாலும் பசி மந்தித்துப் போகாத பானங்களாகிய எலுமிச்சை சாறும் சர்க்கரை கலந்த தண்ணிரும், வெறும் சர்க்கரை கலந்த ஜலம் மன்மையானவை.
இனிப்பும், கசப்பும் எவ்வகை உணவு பதார்த்தங்களில் நமக்குக் கிடைக்கும் என்று நாம் நன்கு அறிந்துள்ளோம். ஆனால் துவர்ப்புச் சுவைகொண்ட உணவு வகைகள் குறைவு. உதாரணத்திற்கு வாழைப்பூ. வாழைப்பூவை வடைகறி செய்து சாப்பிட்டால் பித்த சாந்தியும், ரத்த சுத்தியும் ஏற்படும் என்பது திண்ணம். சோம்பல் பாராமல் வாரத்திற்கு இருமுறையாவது கோடையில் வாழைப்பூவை ஆஹாரத்தில் சேர்க்க வேண்டும். அதுபோல நீர் காய்களாகிய வெள்ளரிக்காய், புடலங்காய் பூசிணிக்காய் போன்றவற்றை கூட்டு போல் (தேங்காய், மிளகு, ஜீரகம் பொடித்து சேர்த்த) செய்து சாப்பிடுவது. உத்தமம். தயிரைத் தவிர்த்து மோர் பானகமாகச் செய்து உண்பது நலம். இரவு முழுவதும் மண் பானையில் ஊறிய நீராஹாரத்தை (சாதம் ஊறிய ஜலத்தை) காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது கோடையின் உஷ்ணத்தை தணிப்பதில் உத்தமமோ உத்தமம். Refrigerator தண்ணீரைவிட மண்பானை ஜலம் குடிப்பதற்கு உகந்தது.
எங்கேனும் வெளியே செல்ல நேரிடும் போது குடிப்பதற்கு பானை ஜலத்தை ஒரு பாட்டிலில் கொண்டு செல்வது மிகவும் நல்லது. நார்த்தங்காய் சாறு பிழிந்து நல்லெண்ணெயில் சிறிது பெருங்காயம், கடலைப் பருப்பு தாளித்து மஞ்சள் சேர்த்து அன்னத்துடன் கலந்து சாப்பிடவது மிகவும் நலம் தரும். நெல்லிக்கனி புளித்தாலும் வயிற்றில் வேக்காளத்தை உற்பத்தி செய்யாது. அதனால் பித்தமும் சாந்தியாகும். நெல்லிக்கனியை அனைத்து வகையிலும் கோடையில் பயன்படுத்தலாம். குடிப்பதற்கு இளநீர் நல்லது. அது உஷ்ணத்தைக் குறைத்த சிறுநீர் பையை சுத்தம் செய்து சிறுநீர்ச் சுருக்கு, எரிச்சல், மஞ்சள் நிறம் ஆகியவை ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும். கரும்பை யந்திரத்தில் பிழிந்து வரும் சாறை குடிப்பது தவறாகும். ஏனெனில் யந்திரத்தில் அழுக்குகளும் அதைச் சுற்றி ஈக்களுமிருக்கும். கரும்பை அப்படியே கடித்து சாப்பிடுவதால் பற்கள் வலிவடையும். மற்றும் உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். வெட்டிவேர் MCP - மின்விசிறியின் காற்று உடலுக்கு எரிச்சலைத் தருமென்பதால் வெட்டிவேர் (அல்லது) பனைஓலை MCP விசிறிக் கொள்வதற்கு உபயோகப்படுத்தலாம். கைவலிக்குமே? என்று ஒருவர் நினைத்தால் மின்வெட்டு ஏற்படும் சமயங்களிலாவது வெட்டிவேர் விசிறியை தண்ணீரில் நனைத்து விசிறிக்கொள்வது நலமாகும். படுத்துக் கொள்வதற்கு கோரைப்பாயை உபயோகிக்கவேண்டும். நல்ல இலவம் பஞ்சினால் செய்யப்பட்ட மெத்தையாக இருந்தாலும் உபயோகிக்கலாம். இப்போது கலர்கலராக Nylon பாய்கள் வந்துள்ளன. அவைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை கோடையில் பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். Terlin வகைகளை தவிர்க்க வேண்டும். குளிர்ச்சியான சந்தனத்தை அரைத்து உடலெங்கும் பூசிக்கொள்ளலாம். கண்ணில் கட்டி வந்தால் நாமக்கட்டியை குளிர்ந்த நீரில் இழைத்த கட்டியின் மீது போட உடன் குணமாகி விடும். பழவகைளில் இனிப்பானவை நல்லது. மலைப்பழம், பூவன்பழம், நேந்திரம் வாழைப்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம், சப்போட்டா, ஆப்பிள், திராட்சை ஆகியவற்றின் ஜுஃஸ் பசிநிலைக்குத் தகுந்த வாறு குடித்து உடல் சூட்டை தணித்துக் கொள்ளவேண்டும். வெளியே செல்லும்போது வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளகொடையும் காலணியும் உபயோகிக்க வேண்டும். ஸ்படிக மாலை அணிவதற்கு மிகவும் நல்லது. தோலில் அரிப்பும் நிறமாற்றத்தை ஏற்படுத்தும் body spray, Scent ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். Cosmetics வகையறா அனைத்தும் தவிர்த்து தேய்த்துக் குளிப்பதற்கு பச்சைப்பயறு, ஆரஞ்சுபழத்தோல், வேப்பிலையை தூள் செய்து உபயோகிப்பது நல்லது. வாயினில் ஜலத்தை நிரப்பி, கண்ணை நன்கு திறந்து குளிர்ந்த நீரை கண்ணில் தெளித்து விடுவதன் மூலம் கண் எரிச்சலைத் தவிர்க்கலாம்.