சூர்ண கல்பனை
நகர வாழ்க்கையில் மிக்ஸியும், கிரைண்டரும் பிடித்துள்ள இடத்தைப் பார்க்கும்போது அம்மியும் ஆட்டுக்கல்லும் இன்று தேவையற்ற பொருளாகவும் கைவலி தரும் கல்லாகவும் கருதப்படுகின்றன. ஆனால் அம்மியிலும் ஆட்டுக்கல்லிலும் அரைபடும் பதார்த்தங்களின் சுவை வேறு எதிலும் கிட்டாது என்பது நாம் அறியவேண்டிய விஷயமாகும். சுவை பெரிதல்ல, உடல் அலுங்காமல் வேலை செய்கிறதே என்று எண்ணும் நகரத்தார், ஒரு சிறப்பான உடற்பயிற்சியை இழந்து விட்டனர் என்பது தெளிவாகப் புரிகிறது. முன் காலங்களில் மூலிகைகளை நன்கு உலர்த்தியெடுத்து நன்றாகப் பொடி செய்து வஸ்திரகாளிதம் (துணியினால் சலித்து) செய்து 'சூர்ணம்' செய்து கொள்வார்கள். நோய் நிலைக்குத் தகுந்தவாறு வெல்லம், சர்கக்ரை, நெய், தேன் போன்றவற்றைச் சேர்த்து சாப்பிடுவார்கள். இவ்வகை வேலைகளால் அவர்கள் பிறர் பிணியை நீக்கி, தங்களையும் உடல் உழைப்பால் பாதுகாத்துக்கொண்டனர்.
இன்று ஒருவரிடம் 'சூர்ணம்' செய்து சாப்பிடுங்கள்' என்று கூறினால் மறுமுறை நம் பக்கம தலைகூட வைத்துப்படுக்கமாட்டார். அதனால் மூலிகைகளை அரைத்துத் தர சில மாவு மில்லுகள் உள்ளன. அங்கே சென்று அரைத்து துணியினால் சலித்து நம்மால் எளிதாகப் பயன்படுத்த முடியம். அவ்வகையில் சில சக்தி வாய்ந்த மூலிகைப் பொடிகளை பற்றி நாம் அறிந்து கொள்வோம்.
சூர்ணங்களையுபயோகிக்கும் பொது அளவு கால் பலமாகும் (1 கிராம்) . சூர்ணத்தில் வெல்லத்தை ஸமயெடையாகவும், சர்க்கரையை இரண்டு மடங்காகவும் சேர்க்க வேண்டும், சூர்ணங்களில் பெருங்காயத்தைப் பொரித்துச் சேர்த்தால் உபயோகிப்பவருக்குக் குமட்டல் உண்டாகமலிருக்கும்.சூர்ணங்களை லேஹ்யம் போல் உட்கொள்ள வேண்டுமானால், அவற்றுடன் நெய்முதலிய எந்தவித பதார்த்தங்களையும் இரண்டு மடங்காக உபயோகிக்க வேண்டும். சூர்ண்ங்களை திரவபதார்த்தங்களில் கரைத்துப் பருக வேண்டுமானால் அத்திரவ பதார்த்தங்களைச் சூர்ணங்களிலும் நான்கு மடங்கு அகிகமாக உபயோகிக்க வேண்டும. சூர்ணம், லேஹ்யம, குளிகைகள், கல்கம் இவற்றிற்கு உபயோகிக்கும் திரவ பதார்த்தங்கள் வாதரோகங்களில் மூன்று பலமாகவும் (180 IL) , பித்த ரோகங்களில் இரண்டுபலமாகவும் (120 IL) , கபரோகங்களில் ஒரு பலமாகவும் (60 IL) எடுத்துக் கொள்ளவேண்டும்.
தண்ணீரில் விடப்பட்ட தைலம் நொடிப் பொழுதில் அந்நீரிலெங்கும் பரவிவிடுவதுபோல் மருந்துடன் சேர்த்து சாப்பிடப்படும் திரவப் பொருளினால் உடலில் நன்கு பரவுகின்றது. சூர்ணங்களை சில திரவ பதார்த்தங்களில் ஊற வைப்பதுண்டு. அதற்கு பாவனையெனப் பெயர். பாவனை செய்வதற்கான சூர்ணமனைததும் அமிழ்ந்து ஊறக்கூய அளவு திரவத்தில் அதைச் சேர்க்க வேண்டும், இது சூர்ணங்களை பாவனை செய்ய பொது அளவாகும்.ஆமலகாதி சூர்ணம் - நெல்லிக்காய், சித்திரமூலம், கடுக்காய், திப்பிலி இந்துப்பு இவற்றைக்கூட்டி சூர்ணம் செய்யவும். இது ஸர்வஸ்ஜ்வரங்களையும்,ருசியின்மையையும் நிவ்ருத்தி செய்யும். கபத்தைப்போக்கும். மலமிளக்கியும். பசியை நன்கு தூண்டி விடும் சக்தியும் கொண்டது.
பிப்பலி சூர்ணம் - திப்பிலியை மாத்திரம் சூர்ணம் செய்து, தேன் கலந்து லேஹ்யம் போல் உட்கொள்ள இருமல், ஜ்வரம், விக்கல், மூச்சுத்திணறல் மண்ணீரல் (Spleer) நோய் தீரும், தொண்டைக்கு நல்ல வலிமை தரும். குழந்தைகளுக்கு மேல் கூறிய நோய்களில் இச்சூர்ணத்தை உபயோகிக்கலாம்.
த்ரிபலா சூர்ணம் - ஒரு கடுக்காய், இரண்டு தான்றிக்காய், நான்கு நெல்லிக்காய் இவற்றின் கூட்டுக்கு 'த்ரிபலை' எனப் பெயர். இந்த த்ரிபலையை சூர்ணம் செய்து உபயோகிக்க சர்க்கரை வியாதி, வீக்கம், விட்டு விட்டுவரும் முறைக் காய்ச்சல், குஷ்டம் இவை தீரும், பசியைத் தூண்டும், கபத்தைக் குறைக்கும், பித்தத்தின் சீற்றத்தை அடக்கும், போஷாக்கைத் தரும். இரவில் தேன் நெய்யுடன் குழைத்து சாப்பிட்டால் கண் நோயை நீக்கிவிடும்.
த்ரியூஷண சூர்ணம் - திப்பிலி, மிளகு, சுக்கு இவற்றின் கூட்டுக்கு, 'த்ரியூஷணம்' அல்லது 'த்ரிகடு' எனப் பெயர். இச்சூர்ணம் உடல் பருமன், குஷ்டம், ஜலதோஷம், ருசியின்மை, தொண்டை நோய், நீரழிவு இவற்றைப் போக்கும். கபத்தைப் போக்கி, பசியை ¢தூண்டி விடும்.
வ்யாக்ரியாதி சூர்ணம் - கண்டங்கத்திரி, ஜீரகம், நெல்லிக்காய் இவற்றை சூர்ணம் செய்து தேனிற் குழைத்து உபயோகிக்க மூச்சுத்திணறல் உடனே குறைத்து விடும்.
ஸிதோபலாதி சூர்ணம் - கற்கண்டு பதினாறு பங்கும், மூங்கிலுப்பு எட்டு பங்கும், திப்பிலி நாலு பங்கும், ஏலக்காய் இரண்டு பங்கும், இலவங்கப்பட்டை ஒரு பங்கும் சேர்த்து சூர்ணம் செய்யவும். 'ஸிதோபலாதி சூர்ணம்' எனப்படும் இதை தேன் அல்லது நெய்யோடு கலந்து உட்கொள்ள மூச்சுத்திணறல், இருமல், உடல் இளைப்பு, கை கால் எரிச்சல், பசியின்மை, நாக்கில் திமிர்ப்பு, விலாபக்கவலி, ருசியின்மை, ஜ்வரம், இரத்த வாந்தி, இரத்த பேதி இவை எளிதில் தீரும்.பிப்பல்யாதி சூர்ணம் - கால் பலம் திப்பலியும், ஒரு பலம் கற்கண்டும் சேர்த்து சூர்ணம் செய்து கால் பலம் (15 IL) தேனில் குழைத்து உட்கொள்ள வயிற்றுப் பொருமல், மலச்சிக்கல், கபரோகங்கள் குடல் வலி இவை தீரும்.பஞ்ச ஸம சூர்ணம் - சுக்கு கடுக்காய், திப்பிலி, சிவதைவேர், சவுட்டுப்பு இவற்றை ஸமயெடையாகச் சேர்தது சூர்ணம் செய்யவும், 'பஞ்ச ஸம ஸுர்ணம்' என்கிற இது வயிற்று வலி, வயிற்றுப்பொருமல், மூலம், பூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம் இவற்றைப் போக்கும்.
மரிசாதி சூர்ணம் - மிளகு, சித்திரமூலம், சவுட்டுப்பு இவற்றின் சூர்ணத்தைப் புளித்த மோரோடு தினந்தோறும் உட்கொள்ள உணவ ஜெரக்காமல் வெளியேறும் கிரஹணி ரோகம், பசியின்மை, குடல் வாயு, மூலம் இவை குணமாகும்.