உ டலுக்கு உயர்ந்தவை உடலில் பலவிதமான செயலைச் செய்வதில் உயர்ந்தவை எவை? என்பதைப் பற்றி ஆயுர்வேதம் சிறப்பாக எடுத்துக்கூறுகிறது அவை பற்றிய குறிப்புகளை சற்ற

டலுக்கு உயர்ந்தவை

உடலில் பலவிதமான செயலைச் செய்வதில் உயர்ந்தவை எவை? என்பதைப் பற்றி ஆயுர்வேதம் சிறப்பாக எடுத்துக்கூறுகிறது. அவை பற்றிய குறிப்புகளை சற்று பார்ப்போம்.

1. களைப்பை நீங்கும் பொருட்களுள் உணர்ந்தது நீராடுதல்.

2. உயிரளிக்கும் பொருட்களில் உயர்ந்தது பால்.

3. தாதுக்களுக்கு ஊட்டமளித்து மகிழ்ச்சியுறச் செய்யும் பொருட்களில் சிறந்தது மாம்பழச் சாறு.

4. உணவுக்கு சுவையளிக்கும் பொருட்களில் சிறந்தது உப்பு.

5. இதயத்திற்கு இன்பமளிக்கும் பொருட்களில் உயர்ந்தது புளிப்புச்சுவை.

6. வாதம், கபம் இவற்றைத் தணிப்பதில் உயர்ந்தது எள்-எண்ணெய்.

7. வாதம், பித்தம் இவற்றைத் தணிப்பவைகளில் மேலானது நெய்.

8. பித்தம், கபம் இவற்றைத் தணிய செய்யும் பொருட்களில் சிறந்தது தேன்.

9. உடலுக்கு மிருதுத்தன்மையளிப்பதில் சிறந்தது வியர்வை உண்டு பண்ணும் முறை.

10. உறக்கம் தரும் பொருட்களில் மேலானது எருமைப்பால்.

11. மலத்தை உண்டு பண்ணுவதில் சிறந்தது யவம் எனும் வாற்கோதுமை.

12. வாதத்தைத் தோற்றுவிப்பவைகளில் நாவற்பழம் சிறந்தது.

13. பித்தம், கபம் இவற்றை ஏற்படுத்துவதில் உளுந்து எள்ளுடன் கலந்த கோதுமை மாவினால் செய்யப்பட்ட

14. சிறுநீரை அதிகம் தோற்றுவிக்கம் பொருட்களில் சிறந்தது கரும்பு.

15. ஜ்வரத்தைப் போக்கவல்லவைகளுள் சிறந்தது உபவாசம் (பட்டினியிருத்தல்)

16. ரத்த வாந்தி, ரத்த பேதி ஆகியவற்றை கண்டிப்பவைகளில் சிறந்தது ஆடாதோடை.

17. இருமலைக் கண்டிப்பவற்றில் கண்டங்கத்திரி சிறந்தது. அப்போதே அடிபட்ட உட்காயங்களை ஆற்றுவதில் சிறந்தது கொம்பரக்கு?

18. எலும்புருக்கி நோய், மார்பிலிருந்து இரத்தம் கசியும் இருமல் நோய் இவற்றிற்குச் சிறந்தது பேராமுட்டி.

19. விக்கல், மூச்சுத்திணறல், இருமல், விலாப்பக்க வலி இவற்றைப் போக்குவதில் சிறந்தது புஷ்கரமூலம்.

20. உடலுருக்கி நோயைப் போக்குவதற்கும், தாய்ப்பாலை வளரச் செய்வதற்கும் ரத்த போக்கை தடுப்பதற்கும் சிறந்தது வெள்ளாட்டின் பால்.

21. வறண்ட மூலத்தை தணிப்பதில் சிறந்தவை சேராங்கொட்டையூம், கொடிவேலியும் ரத்தமூல நோயை போக்குவதில் உயர்ந்த பொருள் வெப்பாலை.

22. மூலம், வீக்கம், ஜீர்ணிக்காமல் உணவு வெளியாகும் கிரஹணி நோய் இவற்றைத் தணிப்பதில் மேலானது மோர்.

23. வாந்தியை நிறுத்துவதில் சிறந்தது நெல்பொறி.

24. மலத்தை இறுக்கி, பசியைத் தூண்டி, ஜெரிக்காத உணவை ஜெரிக்கவும் செய்யச் சிறந்தது கோரைக் கிழங்கு.

25. மலத்தை இறுக்கி, பசியைத் தூண்டி, வாதம் கபம் இவற்றை தணிக்கும் பொருள்களில் வில்வம் சிறந்ததாகும்.

26. மலக்கட்டை அகற்றுவதிலும், வலிவை அளிப்பதிலும், வாதத்தைப் போக்குவதிலும் நிகரற்றது சித்தாமூட்டி.

27. நோயளிக்குள்ள குணங்களுள் மேலானது மருத்துவர் சொற்படி நடத்தல்.

28. நீரழிவு நோயைக் கண்டிக்கும் பொருட்களில் உயர்ந்தது மஞ்சள்.

29. கஷ்டத்தைப் போக்கவல்ல பொருட்களில் மேலானது கருங்காலி.

30. உடலில் உள்ள பூச்சிகளை அழிப்பதில் வாயுவிடங்கம் சிறந்த மருந்துப் பொருள்.

31. வாதத்தைத் தணிப்பதில் சித்தரத்தை சிறந்தது.

32. எளிதில் மலம் வெளிவரச் செய்வதில் சிறந்து விளங்குவது சிவதை வேர்.

33. பார்வையை மறைக்கும கண்புரை நோயை நீக்குவதில் உயர்ந்தது திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்)

34. நஞ்சை நீக்கும் பொருட்களில் வாகை சிறந்தது.

35. தாதுக்களுக்குப் பலமளித்து ஆயுளை நிலை நிறுத்துவதற்குச் சிறந்த பொருள் நெல்லிக்கனி.

36. பற்களுக்கு உறுதியளிப்பதிலும், சுவையூட்டுவதிலும் நல்லெண்ணெயைக் கொப்பளித்தல் சிறந்த வழியாகும்.

37. எரிச்சலைத் தணிக்கச் செய்யவும் பூச்சுப் பொருட்களில் உயர்ந்தவை சந்தனமும் அத்தியுமாகும். குளிர்ச்சியை நீக்கும் பூச்சுப் பொருட்களில் சித்தரத்தை, அகில்கட்டை சிறந்த மருந்துகளாகும்.

38. எரிச்சல், தோல்வியாதி, வியர்வை இவற்றை நீக்கும் பூச்சுப் பொருள்களில் விலாமிச்சைவேரும் வெட்டிவேரும் உயர்ந்தவை.

39. கண், ஆண்மை, கூந்தல் வளர்ச்சி, குரல்வளம், வலிவு, நிற வளர்ச்சி, உடல் மினுமினுப்பு, காயமாற்றுதல் இவற்றிற்கு பயன்படுத்தும் பொருட்களில் அதிமதுரம் சிறந்தது.

40. ஒரே இடத்தில் அமர்ந்து உண்பது, நன்றாகப் படுத்து உறங்குதல், உண்ணும் உணவு நன்கு ஜீர்ணமடையச் செய்வதில் சிறந்தன.

41. உடலின் ஆரோக்யத்திற்கு ஏற்றவகைகளில் குறிப்பிட்ட காலத்தில் உண்பது முதன்மையானது. நல்ல உணவைக் காண்பது, உண்பதில் ஆர்வம் விளைவிப்பனவற்றில் சிறந்தது.

42. சிறுநீர், மலம், இவற்றைப் போன்ற இயற்கை வேகங்களை அடக்குதல், உடல் நலமின்மையைத் தோற்றுவிப்பனவற்றில் முதன்மையானது.

43. உணவினால் ஏற்படும் குணங்களில் போதும் என்ற எண்ணம் மேலானது. உண்ணாமலிருத்தல் ஆயுளை அளிக்கும் வழிகளுள் உயர்வானது. மனிதனை இளைக்கச் செய்வதில் மிகக்குறைந்த அளவோடு புசித்தலும், காட்டுக்கோதுமை உணவும் சிறந்தவையாகும். வறட்சியைத் தோற்றுவிக்கும் வகையில் தேன் கலந்த உணவு மேலானது.

44. தன்வலிவிற்கு மீறிய செயல்களைச் செய்தால் உயிரிழக்க செய்யும் காரணங்களில் முக்கியமானதாகக் கருதப்படும். நோயை வளர்க்கும் பொருட்களுள், வருந்துதல் குறிப்பிடத்தக்க காரணமாகும்.

45. சோம்பலை வளர்ப்பதில் தூக்கமும், வலிவை உண்டாக்குவதில் அறுசுவையுள்ள அன்னத்தைப் பயன்படுத்துதலும் காரணமாம்,

46. மிருதுவான மருந்தை அருந்தச் செய்வதில் சிறுவர்கள் முக்கியமானவர்கள். தீராத நோய்களுக்கு மருந்தைக் கொடுத்து காலத்தைக் கழிக்க வேண்டியவர்களுள் முதியவர்கள் முக்கியமானவர்கள்.

47. உடன் வரக்கூடிய நோய்களில் காய்ச்சலும் ,நீடித்த நோய்களில் குஷ்டமும், பிணிக்கூட்டங்களில் எலும்புருக்கி நோயும் முதன்மையானவையாகும். தொடர்ந்து இருக்கக்கூடியவற்றில் நீரிழிவு நோயும், தீமைவிளைவிக்கும் கருவிகளில் ஆஸனத்துவாரத்தின் வழியாக உடலக்குள் மருந்தைச் செலுத்தும் பீச்சாங்குழல் போன்ற கருவியும் முதன்மையானவை.