நோயின் காரணங்கள்
அஷ்டாங்க சங்கிரஹம் என்னும் ஆயுர்வேத நூல் நோய்களுக்கான காரணங்களை
1. அஸாத்ம்ய இந்திரியார்த்த ஸம்யோகம் - புலன்களுக்கொவ்வாத செயலில் புலப்பொருள்களை அனுபவித்தலில் ஈடுபடுதல்.
2. பிரக்ஞாபராதம் - அறிவு, உணர்வு, நினைவு இவைகளின் நழுவலால் உடல், சொல், மனம் இவற்றால் செய்யப்படும் தீமை விளைவிக்கும் செயல்கள்.
3. பரிணாமம் - காலத்தினால் ஏற்படும் மாறுபாடு என மூன்று வகையாகப் பிரிக்கின்றது.
இம்மூன்றிலும் ஒவ்வொரு காரணமும் அதியோகம், அயோகம், மித்யாயோகம் என்ற பிரிவுகளால் மூவகையாகப் பிரிகின்றது.
கண்முதலிய புலன்களுக்கு தங்கள் பொருட்களுடன் அதிக அளவில் (அல்லது) அதிக சக்தி வாய்ந்த பொருட்களுடன் சேர்க்கையோ ஏற்பட்டால் அச்சேர்க்கை அதியோகமாகும்.
புலன்களுக்கும், பொருட்களுக்கும் சிறிதளவு சேர்க்கையோ, குன்றிய குணங்களுடைய பொருள்களின் சேர்க்கையோ அல்லது முற்றிலும் சேர்க்கையோ ஏற்படாவிட்டால் அது அயோகம் எனப்படும்.
மிகவும் நுட்பமானதோ, வெகு தொலைவிலோ, அருகில் உள்ளதோ, மிகவும் பளபளப்பான, மிகப்பயங்கரமான, வெறுப்பான, விகாரமுள்ள பொருட்களைப் பார்ப்பதோ முதலியன கண்களின் மித்யாயோகமாகும்.
வெறுக்கப்பட்ட ஒலி, மிக உறத்த ஒலி, பயங்கரமான ஒலி, பயமுறுத்துகின்ற சொற்களை கேட்பது காதுகளின் மித்யாயோகம் எனப்படும்.
துர்நாற்றமுள்ள, தூய்மையற்ற, மிக தீக்ஷ்ணமாயும், உக்ரமாயும் மனதிற்கு பிடிக்காததுமான மணத்தை நுகர்வது மூக்கின் மித்யாயோகமாகும்.
இயற்கை, சேர்க்கை, எண்ணம், பாத்திரம், அளவு போன்ற உணவுகளின், உடலுக்கு ஒவ்வாத பற்பல வித தயாரிப்புகளும், எதிரிடையான சுவையுள்ள பொருட்களை உண்பதும் நாக்கின் மித்யாயோகம் எனப்படும்.
அதிநேரம் நீரில் நீராடல், மிகுந்த குளிர்ச்சி, உஷ்ணமுள்ள பொருட்களை தொடுவது, தூய்மையற்ற காற்று, பூதங்களால் தாக்குதல், நஞ்சு கலந்த காற்று இவற்றின் தொடுதல் தோலின் மித்யோகம் எனப்படும்.
அறிவு, உணர்வு, நினைவு இவை நழுவுவதால் ஏற்படும் உடல், சொல், மனம் இவைகளால் செய்யப்படும் பலவைகயான தீமை விளைவிக்கக் கூடியதுமான செயல்கள் பிரக்ஞாபராதமாகும்.
இவற்றின் உடல், சொல், செயல் இவற்றால் அதிக வேலை செய்வது இவற்றின் அதியோகமாகும்.
சிறிதளவு அல்லது எல்லா வகையிலும் செய்யாமலிருத்தல் இவற்றின் அயோகமாகும்.
மலம், சிறுநீர் முதலான இயற்கை வேகத்தைத் தடுப்பது தகாத முறையில் நிமிர்தல், குனிதல் போன்ற உடல்நல விரோதமான செயல்களைச் செய்வது,வழுக்கி விழுவது, சொறிவது, காயம்படுவது, முறையில்லாமல் மூச்சை அடக்குவது, பிராணாயாமம் செய்வது, பசி, தாகங்களை அடக்குவது, பாதி உண்கிற பொழுது பேசுவது, பயம், வருத்தம், அசூயைப்படுதல், பொறாமைப் படுதல் போன்ற பத்துவகையான தகாத செயல்கள் முறையே உடல், சொல், மனம் இவற்றின் மித்யாயோகங்கள் எனப்படும்.
இயற்கையின் மாறுபாடு காலம் எனப்படுகிறது. அதாவது காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாற்றம் குளிர்ச்சி, உஷ்ணம், மழை என்ற மூவகையுடையது.
இவற்றில் தன் இயற்கையான அறிகுறிகளைக் காட்டிலும் அதிக அளவில் அறிகுறிகள் இருப்பது காலத்தின் அதியோகமாகும்.
தனது லக்ஷணங்களுக்குக் குறைவானது அயோகமாகும். தனது லக்ஷணங்களுக்கு எதிரிடையாக உள்ளது மித்யாயோகம் எனப்படுகிறது.
இந்த அதியோகம், அயோகம், மித்யாயோகம் என்ற இம்மூன்றும் பொதுவாக உடலுக்கு ஒத்துக்கொள்ளாதவை. இம்மூன்றையும் விடாமலிருத்தல் பிரக்ஞாபராதமாகும். புலன்களின் பொருட்கள், அறிவுடன் கூடிய செயல்கள், குளிர்ச்சி, உஷ்ணம், மழை என்ற பருவங்கள் அதனதன் இயற்கைக் குணங்களுடன் விளங்கி இவற்றை நன்றாகப் பயன்படுத்துதல் உடல் நலனுக்குக் காரணமாகிறது. இவற்றில் நாக்கின் சுவை நீங்கலாக கண், காது, மூக்கு? தோல் இந்நான்கு புலன்களுக்குள்ள பொருள்களின் அதியோகம், அயோகம், மித்யாயோகம் அந்தந்தப் புலன்களுக்குக் கேடு விளைவிக்கும். இவற்றை நன்முறையில் பயன்படுத்துதல் புலன்களுக்கு நலன் அளிப்பதாகும்.
மற்ற சுவை, செயல்கள், காலம் இவற்றின் அதியோகம், அயோகம், மித்யாயோகம் ஆகியவை உடலுக்குத் தீமை விளைவிப்பவை.
மேற்கூறிய நோயின் காரணங்களை தவிர்த்து ஆரோக்ய வாழ்விற்கான வழிகளை எடுத்துக் கூறும் ஆயுர்வேதத்தின் அறிவுரைகளை ஒவ்வொருவரும் வாழ்கையில் விடாது கடைபிடிக்கவேண்டும்.