நோயின் வகைகள்
ஆயுர்வேதம் பிணியை ஏழுவகையாக அஷ்டாங்க ஸங்க்ரஹம் என்னும் நூலில் எடுத்துரைக்கிறது.
1. பிறவியிலேயே ஏற்படும் நோய்கள் - கணவன் மனைவிக்கு உடலிலுள்ள கோளாறுகளால் குழந்தைக்கு குஷ்டம், மூலநோய், நீரழிவு போன்றவை ஏற்படும்.
2. கருவளர்ச்சியில் ஏற்படும் நோய்கள் - தாய் கருவூற்றிருக்கும் போது உண்ணும் தவறான உணவினாலும் நடவடிக்கையினாலும், உடல் ஊனமுற்றல், நொண்டி, நிறமாற்றம் வெண்குஷ்டம் போன்ற பிணிகள் தோன்றுகின்றன. உணவினால் ஏற்படும் கோளாறும், கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படும் தாயின் மனக்குறையும் இதற்குக் காரணமாகும்.
3. பிறந்தபின் ஏற்படும் நோய்கள் - குழந்தை பிறந்தபின் அதன் உடலுக்கும் உள்ளத்திற்கும் உவகை அளிப்பதும் உடல் வளர்ச்சிக்கும் காரணமான உணவு அல்லது உடல் வளர்ச்சிக் குறைவுக்கு காரணமான உணவு, செயல்கள் முதலியவற்றால் துன்புறும் போதும் நோய்கள் தோன்றுகின்றன.
4.காயம் போன்றவற்றால் ஏற்படும் நோய்கள் -இந்நோய்கள் அடிபடுதல், எலும்பு முறிதல் போன்ற உடல் சிதைவு ஏற்படுதல் ஒரு வகை, சினம் துன்பம், பயம் போன்றவை மனதில் தோன்றுவன என இருவகைப்படும்.
5. பருவங்களால் ஏற்படும் நோய்கள் பருவகாலங்களில் கோளாறுகளால் ஏற்படும் காய்ச்சல், கழிச்சல் போன்றவை ஒருவகை. காற்று, நீர், கேடடைந்த உணவு வகைகளின் உபயோகத்தினால் ஏற்படுபவை. இவை இரண்டும் தவிர்க்க முடியாதவைகளாகும்.
6. தெய்வக்குற்றம், ஆசிரியரின் புன்மொழி இவற்றால் தோன்றும் நோய்கள் - தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றாமலும், ஆசிரியரின் சாபத்தாலும் ஏற்பட்டது முதலாவது வகை. அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ள சூன்யம், ஏவல் இவற்றால் தோன்றும் காய்ச்சல், பிசாசு முதலியவற்றால் உண்டாகும் நோய்கள் இரண்டாவது வகை.
7. பசி, தாகம் போன்ற இயற்கையினால் ஏற்படும் நோய்கள் - உடலை நன்கு காப்பாற்றியும் ஏற்படும் நோய், காலத்தினால் ஏற்படும் முதல் வகை நோய். உடலை நன்கு கவனித்துக் கொள்ளாததால் தோன்றும் நோய், காலத்தினாலல்லாது தான் செய்யும் குற்றங்களினால் ஏற்படுவது, இரண்டாவது வகை.
மேற்கண்ட நோயின் ஏழு பிரிவுகளும் சுருக்கமாக மறுபடியும் இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
ஒன்று இவ்வுடலினால் செய்யப்பட்ட வினைப்பயனால் ஏற்பட்டது. மற்றொன்று, முன் பிறவிகளில் செய்யப்பட்ட வினைப்பயனால் ஏற்பட்டது. அறிந்தோ, அறியாமலோ நல்லோர் கட்டளையை மீறுவதாலும், அவர்களால் தடுக்கப்பட்ட செயல்களை செய்வதினாலும் ஏற்படும் நோய்கள் இவ்வுடலினால் நெய்யப்பட்ட வினைப்பயனால் ஏற்படும் நோய்களெனக் கருதப்படும்.
வெளிப்படையாகத் தெரியும் காரணங்களால் தோன்றும் நோய்கள் இவ்வுடலினால் செய்யப்பட்ட வினைப்பயனால் ஏற்பட்டவை என்றும், காரணம் தெரியாமல் ஏற்படும் நோய்களை முன்பிறவிகளின் வினைப்பயனால் ஏற்பட்டவை எனவும் சுருக்கமாகத் தெளிவுற வேண்டும்.
சிறு காரணங்களால் மிகுந்த துண்பமுண்டாக்கும் நோய்கள், இப்பிறவியிலும், முற்பிறவிகளிலும் செய்யப்பட்ட வினைப்பயன்கள் இவை இரண்டின் சேர்க்கையால் உண்டானவை எனக்கண்டு கொள்ள வேண்டும்.
இவற்றில் இவ்வுடலினால் செய்யப்பட்ட வினைப்பயனால் ஏற்பட்ட நோய்களின் காரணத்தை அறிந்து அதற்கு எதிரிடையானதும், நோய்க்கு எதிரிடை -யானதுமான சிகித்ஸைகளைச் செய்வதால் கணிகின்றன. முன்பிறவிகளில் செய்யப்பட்ட வினைப்பயனால் ஏற்பட்ட நோய்கள் சிகித்ஸையினாலும், வினைப்பயன்கள் நீங்கச் செய்யும் செயல்களினாலும் தான் நீங்கும்.
மற்றும் சிலர் பிறரால் செய்யப்பட்ட ஏவல், பில்லி சூன்யம் போன்றவற்றையும் இவ்வுடலினால் செய்யப்பட்ட வினைப்பயனால் ஏற்பட்டவை எனக் கூறுகின்றனர். தன் செய்கையினாலேயே எல்லாம் நடப்பதாயிருந்தால் அறிவாளி, பிறர் செய்த உதவியினால் மகிழவும், தீங்கினால் வருத்தமடைந்து அவர்களிடம் விரோதம் பாராட்டவும் மாட்டான் அல்லவா?
ஆகையினால் இப்பிறவியில் இவ்வுடலினால் ஏற்பட்ட வினைப்பயன் காரணமாகத் தோன்றியவை, முன்பிறவிகளின் வினைப்பயன்களால் ஏற்பட்டவை என்று இருவகையினாலும், பிறர் செய்கையினாலும் ஏற்பட்டவை என்பதுடன் சேர்த்து நோய்களை மூவகையாகப்பிரிக்க வேண்டும் என்பது சிலர் கருத்து.
வாதத்தினால் தோன்றியவை, பித்தத்தினால் தோன்றியவை, கபத்தினால் தோன்றியவை, வாதம் - பித்தம் இரண்டின் சேர்க்கையினால் ஏற்பட்டவை, வாதம் - கபம் இவற்றினால் தோன்றியவை, பித்தம் - கபம் இரண்டின் சேர்க்கையினால் தோன்றியவை, வாதம் - பித்தம் - கபம் இம்மூன்றின் சேர்க்கையினால் தோன்றியவை என தோஷங்கள் மூலம் ஏற்படும் நோய்கள் ஏழுவகையாகப் பிரிகின்றன.
எல்லா நோய்களுக்கும் சிகித்ஸை ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. விதிவசமாக தக்க காரணத்தினால் ஏற்படுகிற நோயும் நீடித்த ஆயுள் உள்ளவனுக்கும் மருத்துவர் கூறியபடி நடப்பவனுக்கும் தீவிரமாக உண்டாவதில்லை. அப்படி உண்டானாலும் பொறுத்துக் கொள்ளும் நிலையில் ஏற்படுகிறது.
எந்த நோய்க்கும் சிகித்ஸை செய்யாவிடில் அது நோயாளிக்கு மரணத்தை உண்டாக்குகிறது. தெய்வாதீனமாக மிகக்குறைந்த காரணங்களினால் உண்டான நோய் துன்பத்தை அளிப்பதில்லை. தானாகவே கூடத் தணிந்து விடுகிறது.
தெய்வபலம் உள்ளவனுக்கு உடலக்கு உகந்த இதமான உணவு செயல்முறை களைக் கடைபிடிப்பதால் நோய் அவனை அணுகவதற்கே சந்தர்பமில்லாமல் போய்விடுகிறது.
ஆகையால் தன்னிறைவும், புலனடக்கமுள்ளவன் நன்மை தீமை பயக்கும் செய்ல்களை எப்பொழுதும் சமமான பலன்களையே தரவல்லது என்ற எண்ணம் உடையவனாக இருக்கக்கூடாது. அதனால் ஆரோக்யமாக வாழவிரும்புபவன், அதற்கான முறைகளை கடைபிடிக்க வேண்டும். நோயுற்றிருக்கும் நிலையில் அதற்கான சிகித்ஸைகளைச் செய்து கொள்ள வேண்டும்.
நோய்கள் குறைவானது, நடுத்தரமானது? அதிகமானது என மூவகைகளாகவும் பிரிக்கப்படுகின்றன.
முறையே நோய்க்குள்ள அறிகுறிகள் குறைந்த அளவில் காணப்பட்டால் அந்நோய் குறைவான பலமுள்ளது என்றும், நோய்க்குறிகள் குறைவாகவோ, அதிகமாகவோ இல்லாமல் நோயின் அறிகுறிகள் அதிகம் காணப்பட்டால் அது அதிகமான பலம்பெற்றது என்றும் அறிய வேண்டும்.
எளிதில் சிகித்ஸை செய்யக்கூடியவை, ஆயுதத்தினால் சிகித்ஸை செய்ய வேண்டியவை, மருந்தை அளித்து காலம் கடத்தக்கூடியவை, சிகித்ஸைக்கு அடங்காதவை என நோய்கள் நான்கு விதமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
நோய்களின் பலவிதப்பிரிவுகளும் நிஜம், ஆகந்துகம் என்ற இரு பிரிவுகளுக்குள்ளேயே அடங்கிவிடுகின்றன.
நிஜம் என்பது உடலைப் பற்றிய வாதம் முதலிய தோஷங்களால் ஏற்படுபவை. அவற்றில் முதலில் வாத - பித்த - கபங்கள் கோளாறடைந்து பிறகு நோய்களை உண்டாக்குகின்றன.
வெளித்தாக்குதல் காரணங்களால் ஏற்படுபவை, 'ஆகந்துகம்' எனப் பெயர் கொண்டவை. அவற்றில் உடலில் நோய்கள் முன்புண்டாகி பிறகு தோஷங்கள் கோளாறடைகின்றன.நோயின் கரணம், இடம் (உடல்) , அறிகுறிகள், நிறம், பெயர், வேதனை, நோயின் சக்தி, சிகித்ஸை இவற்றின் வேறுபாட்டினால் நோய்கள் பெருமளவில் கணக்கற்றவைகளாகப் பேசப்படுகின்றன.
வாதம், பித்தம், கபம் என்ற இந்த தோஷங்கள்தான் எல்லா நோய்களுக்கும் காரணமாகும். பறவைகள் கடல், ஆறு, மலை போன்ற இடங்களிலும், நாற்புறங்களிலும் நாள்முழுவதும் பறந்தாலும் தன் நிழலை விட்டுப் பிரிவதில்லை. இவ்வுலகில் உள்ள எல்லா மாறுபாடுகளும், உலகம் முழுவதும் பரவியிருந்த போதிலும் ஸத்துவம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களை விட்டுப் பிரிவதில்லை.
அதுபோல் நோய் வகைகள் எல்லாம் வாதம் - பித்தம் - கபம் என்ற இம்மூன்று தோஷங்களிலிருந்து தனித்துப் பிரிவது கிடையாது.
வானத்தில் எப்பொழுதும் இருக்கும் மின்னல், மழை, வானவில் போன்றவை காரணமில்லாமல் வெளிப்படுவதில்லை. காரணம் ஏற்படும் போது அவசியம் வெளியில் தென்படுகின்றன.
நீரில் அலைகளும், குமிழிகளும் எப்பொழுதும் இருந்தாலும் காரணமில்லாமல்
அவை வெளிப்படுவதில்லை. காரணமிருந்தால்தான் ஏற்படுகின்றன.
அதுபோல் உடலில் தோஷங்கள், எப்பொழுதும் கலந்து இருந்தாலும், காரணமில்லாமல் அவை நோய்களாக புலப்படுவதில்லை.