மருந்தின்வகைகள் மருந்து இருவகைப்படும் ஒன்று ஊர்ஜஸ்கரம் - ஆரோக்யமான உடலுக்கு பலம் சக்தி நிறம் வளர்ச்சி இவற்றை அளிப்பது மற்றொன்று ரோகக்

மருந்தின்வகைகள்

மருந்து இருவகைப்படும். ஒன்று ஊர்ஜஸ்கரம் - ஆரோக்யமான உடலுக்கு பலம் சக்தி நிறம் வளர்ச்சி இவற்றை அளிப்பது.

மற்றொன்று ரோகக்னம் - பிணியை போக்கவல்லது. இருவகை மருந்துகளும் இரண்டுவித நலன்களையும் அளிக்கக்கூடியவை. அதாவது சக்தி, நிறம், வளர்ச்சி இவற்றை அளிக்கும் மருந்து வகை பிணிகளையும் அகற்றும். பிணியை அகற்றும் மருந்து வகை சக்தி, நிறம், வளர்ச்சி போன்றவற்றையும் அளிக்கும்.

இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாடு - எந்த மருந்துவகையில் எந்தக் குணங்கள் அதிக அளவில் உள்ளனவோ அந்த மருந்துவகை அந்தப்பெயரால் அழைக்கப்படுகிறது.

1.

ஊர்ஜஸ்கரம் -------<இரசாயனம் --> விரைவில் முதுமை உண்டாகாமலும் உடலுக்கு வலுவூட்டி நோய்களையும் போக்கக்கூடியது
|
|
|-------------------------> வாஜீகரணம் --> ஆண் பெண் உறவு நன்கு பயன் தரக்கூடிய வகையில் உடலுக்கும்,புலன்களுக்கும் வலிவு அளித்து 'மலடு' நீங்கவும் காரணமாகும்.

2.
ரோகக்னம் -------<பிணியைத்தணிப்பது
|
|
|-------------------------<பிணியை மறுபடியும் தோன்றாமலிருக்கச் செய்வது

அதேபோல் 1.திரவியம் - மூலிகைகள் இரஸாயனப் பொருள்கள் முதலியன. 2. அத்ரவியம் - உபவாசம் (பட்டினியிருத்தல்) முதலியவை, என மருந்துகள் இரண்டு வகைப்படும்.

நிலத்தைச் சார்ந்தது, நிலத்தைப் பிளந்து கொண்டு வருவது (மரம், செடி முதலியன) ஜங்கமம் (பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பொருள்கள்) என திரவியம் மூவகைப்படும்.

இவற்றில் பொன், வெள்ளி, தாமிரம், வெண்கலம், பித்தளை, ஈயம், இரும்பு, இரத்தினம், சங்கு, கடல்நுரை, மயில் துத்தம், உப்பு போன்ற மருந்து வகை வெகுவாக நிலத்தைச் சார்ந்தவைகளே. வனஸ்பதி, வானஸ்பத்யம், வீருதம், ஒளடதம் என நிலத்தைப் பிளந்து கொண்டு வருவனவற்றை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

இவற்றில் பழங்களை மாத்திரம் உடையது வனஸ்பதி எனச் சொல்லப்படுகிறது. மலர்கள், பழங்கள் இவற்றையுடையது வானஸ்பத்யம் ஆகும். கொடி, புதர் இவற்றைச் சார்ந்து வீருதமாகும். பழங்கள் முயற்சி பின் அழியக்கூடிய தாவரங்களை ஒளடதம் எனக்கூறலாம். பிராணிகளிடமிருந்து உண்டாகும் தேன், நெய் போன்ற பொருட்களை ஜங்கமம் என அழைக்கிறோம்.

'அத்ரவ்யம்' - உபவாசம் (பட்டினி இருத்தல்) காற்று, வெயில், நிழல், மந்திரம் (வேதச் சொற்கள்) தேற்றுதல், பிறருக்கு அளித்தல், பயம், மிரட்டுதல், குலுக்கல், மகிழச் செய்தல், அதட்டுதல், தூங்குதல், விழித்தல், உடற்பிடித்தல் முதலியவை அத்ரவியங்கள் வகையைச் சேர்ந்தவை.

(அ) தெய்வத்தைச் சார்ந்தவை. (ஆ) யுக்தியைச் சார்ந்தவை, (இ) நற்குணத்தைச் சார்ந்தவை என மேலும் மருந்து மூவகைப்படும்.

(அ) மந்திரம், ஒளடதம், மணி (ஒருவகை இரத்தினம்) , மங்கலம் (நற்செயல்) , பலி (பலி - பூசை - கிரகங்களுக்குப் பலியிடுதல்) , காணிக்கை (அன்பளிப்பு) , வேள்வி (யாகம்) , நியமம் (கட்டுப்பாடு) , பிராயச்சித்தம் (பாவத்தைக் கழிக்கச் செய்யும் சடங்கு) , பட்டினி கிடத்தல், மங்கலச் சொற்கள் கூறுதல், வணங்குதல், புனிதத்தலங்களில் நீராடச் செல்லுதல் முதலியன தெய்வததைச் சார்ந்தவை.

ஆ) உடல் நிலைக்கு ஏற்றவாறு தேவையான உணவு மருந்து வகைகளைப் பரிசீலித்துக் கொடுப்பது யுக்தி எனப்படும்.

இ) தீமை விளைவிக்கக்கூடிய பொருட்களிடமிருந்து மனத்தைக் கட்டுப்படுத்துவது நற்குணத்தைச் சார்ந்த மருத்துவத்தைச் சாரும்.

மேலும் மூவகை மருந்துகள் -

அபகர்ஷணம் - உடலுக்குள் உள்ள தோஷங்களை வெளியேற்றுதல்.

ப்ரகிருதி விகாதனம் - இயற்கைக்கு எதிரிடையானது.

நிதானத்தியாகம் - நோயின் காரணத்தைத் தவிர்த்தல்.

உடலின் வெளிப்புறத்திலிருப்பது, உடலின் உள்ளே இருப்பது என அபகர்ஷணம் இருவகைப்படும்.

நரம்புச் சுருட்டல், கொப்புளம், கண்களின் கீழ் பகுதியில் தோன்றும் கட்டி, போன்றவை வெளிப்புறத்தில் தோன்றுபவை, அவற்றிற்கு கை, ஆயுதம், இவற்றால் சிகித்ஸை செய்ய வேண்டும்.

உடலின் உள்ளே இருப்பது, வாந்தி பேதி இவற்றால் உண்டாகுபவை.

ப்ரகிருதி விகாதனம் என்ற இயற்கைக்கு எதிரிடையானது என்றால் தோஷங்களை சமநிலைப்படுத்தி குணப்படுத்துதல் என்பது பொருள். இதை சமனம் என்று கூறுவர்.

எண்ணெய் தேய்த்துக் குளித்தல், வியர்வை வெளிப்படுத்துதல், மேற்பூச்சு (பற்றுப்போடுதல்) மருந்து ஊற்றுதல், உடலைப் பிடித்து விடுதல் போன்றவற்றினால் குணப்படுத்தும் முறை பாஹ்யம் (உடலின் மேற்சிகித்ஸை) எனப்படும். உடலுக்குள் சென்று தோஷங்களை மாறுபடச் செய்யாமல் தணிப்பது ஆப்யந்தரம் (உட்சிகித்ஸை) எனப்படும். நிதானத்தியாகம் என்று காரணமின்மை என்பதற்கு நோய்க்குக் காரணமான குளிர், வெப்பம், ஆசனம் போடுதல், உடற்பயிற்சி இவற்றை விடுதல் எனப்பொருள்.

இவற்றில் ஆயுதத்தால் குணப்படுத்தக்கூடிய நரம்புச் சுருட்டல் போன்றவற்றிற்கும் மருந்தை உட்கொள்ளச் செய்யலாம். ஆனால் மருந்தினால் போக்கக்கூடிய நோய்களை நீக்கும் விஷயத்தில் ஆயுதங்களை பயன்படுத்தலாகாது.
மருந்து மேலும் மூன்று வகையுடையது.

அ. காரணத்திற்கு எதிரிடையானது.
ஆ. நோய்க்கு எதிரிடையானது.
இ. நோய், நோயின் காரணம் இரண்டையும் தணிக்கக்கூடியது.

1) இவற்றில் முதலாவதான காரணத்திற்கு எதிரிடையான என்ற மருந்துகள்.- எளிதில் ஜீரணிக்காதததும், எண்ணெய்ப் பசையுள்ளதம், குளிர்ச்சியுடையதுமான பொருள்களால் உண்டாகும் நோய்களுக்கு எளிதில் ஜீரணிக்கச் செய்வதும், வறட்சி, உஷ்ணம் இவற்றை அளிக்கும் மருந்தைக் கொடுப்பது.

2) நோய்க்கு எதிரிடையான சிகித்ஸை - உடலில் எண்ணெய்ப் பசையுண்டு பண்ணக்கூடியது, மருந்து மூலம் வியர்வை உண்டாக்குதல், வாந்தியெடுக்க மருந்து கொடுப்பது, மலங்கழிக்க மருந்து கொடுப்பது, ஆசனவாயின் வழியாக மருந்தைச் செலுத்துதல் என்னும் ஐவகை கர்மங்களும், புகைபிடித்தல், கண்ணில் மையிடுதல், ஒத்தடம் கொடுத்தல், ஆகிய இவையும் நோய்க்கு எதிரிடையான சிகித்ஸை முறைகளாகும்.

மேற்கூரிய வகையில் தோஷங்களை தவிர்த்துக் கொண்டே மற்ற சில விஷயங்களையும் பின்பற்ற வேண்டும்.

எடுத்துக்காட்டாக காய்ச்சலில் கோரைக்கிழங்கு பர்ப்பாடகம், கஞ்சி வகை உணவும் சிறந்தவை.

நீரழிவு நோயில் மஞ்சளும், யவம் எனும் தானியத்தால் செய்யப்பட்ட உணவும் முக்கியமானவை.

3, நோய், நோயின் காரணம், இரண்டையும் குணப்படுத்துவது -

இது தெய்வத்தைச் சேர்ந்த மணி, மந்திரம் போன்றவைகளும், நோயின் தன்மைக்கு எதிரிடையாக ஆகாமல் நோயை குணப்படுத்தலுமாகும்.

அவ்வாறே வாந்தி எடுக்கும் போது வாந்தி எடுக்கும் மருந்தைக் கொடுப்பது, பேதி ஏற்படும்போது பேதி மருந்து அளிப்பது. பித்தம் உள்ளே மறைந்திருந்தாலும், வழி தவறிச் சென்றிருந்தாலும், வியர்வை உண்டாக்கும் முறை, புளிப்பு, உப்பு, கடுமை, உஷ்ணம் இவைகளை அளிக்கும் உணவு வகைகளை அளிப்பது, அதன் மூலம் பித்தத்தை வெளிப்படுத்துவது அல்லது தன்வழிச் செலுத்துவது.

இம்மாதிரி நோய்க்கும் நோயின் காரணத்திற்கும் எதிரிடையில்லாத மருந்துகளும் செய்கைகளும் கூட இவற்றிற்கு எதிரிடையான நிலையை ஏற்படுத்தி நல்ல மருந்தாக வியாதியை குணப்படுத்துகின்றன.