Latin Name - Azadirachta indica
Meliaceae family .
English - Neem tree, Margosa tree, Indian lilac
தமிழ் - வேம்பு, வேப்பு
பாரதமெங்கும் வளரும் மரமாகும். 15-20 மீட்டர் உயரம் வளரும். வேப்பம்பட்டை, இலைகள், பூக்கள், விதைகள், எண்ணெய் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை.
வேப்பம் பட்டை கசப்பு, துவர்ப்பு, சிறிது காரம் ஆகிய சுவை கொண்டது. குளிர்ச்சியைத் தரும். ரத்த சுத்திக்கு சிறந்தது, குடல் பூச்சிகளை அழிக்கவல்லது, கல்லீரலுக்கு சிறந்ததும், கபத்தை நீர்த்து வெளியாக்குவதும், குஷ்டம் மற்றும் இதர தோல் வியாதிகளை நீக்குவதிலும், அரிப்பை போக்குவதிலும் சிறந்தது. மலேரியா காய்ச்சல், புண், உட.ல் எரிச்சல், பசியின்மை, வாந்தி, அஜீர்ணம், இருமல், தன்னை அறியாமல் சிறுநீர் கழித்தல், சர்க்கரை வியாதி, இடுப்பு வில, மூலம், காதுவலி, மற்றும் ஜனன உறுப்பில் ஏற்படும் தினவு போன்றவைகளில் பட்டை அருமருந்தாக பயன்படும். இலைகளும் இது போனற் நோய்களில் பயன்தருபவை.
பூ கசப்புச் சுவை நிறைந்தது. குளிர்ச்சியைத் தரும். கண்களுக்கு பலம் தருபவை. குடல் புழுக்களால் வயிற்று வலி. ஏற்படும் நிலையில் பூவை உள்ளுக்கு சாப்பிடுவதால் புழுக்கள் அழிந்து விடும். விதை கசப்பானது. சூட்டை உடலில் அதிகரிக்கும். பேதியாகும். வலிநிவாரிணி, பல்வலியை நீக்கும், சர்க்கரை வியாதியை குறைக்கும்.
குணம் - எளிதில் ஜீர்ணமாகும்
சுவை - கசப்பு, துவர்ப்பு
ஜீர்ணத்தின் இறுதியில் - காரமாக மாறிவிடும்
வீர்யம் - குளிர்ச்சியானது.
செயல்கள் - கொழுந்து நிலையை வெந்நீர்விட்டு அரைத்து கொட்டைப் பாக்கு அளவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட கபபித்த தோஷங்களின் சீற்றம் குறைந்து விடும்.வேப்பிலையை அரைத்து சீழ்கட்டிகள், புண் இவைகளில் பற்று இடுதல் நலம் தரும். தோல் அரிப்பில் வேப்பிலை கொதிக்க வைத்த தண்ணீரில் குளிப்பது நல்லது.
வேப்பெண்ணெய் மிகுந்த நாற்றத்தைத் தந்தாலும் அபார மருத்துவ குணங்கள் நிறைந்தது. அதிக குளிர்ச்சியையும், அதிக சூட்டையும் உடலில் கிளப்பி விடாது. வெட்டுக்காயம், அழுகிய நிலையில் புண்களில் இருந்து வெளியாகும் புழுக்கள் ஆகியவற்றை அடியோடு அகற்றிவிடும். முட்டியிலும், மற்ற பூட்டுகளில் கப வாத தோஷங்களினால் ஏற்படும் நீர் சுரந்து ஏற்படும் வீக்கம்
மற்றும் வேதனைகளில் எண்ணெயை சூடு செய்து தேய்த்து வெந்நீர் ஒத்தடம் கொடுக்க சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். நாட்பட்ட தலைவலி, தலைபாரத்தில் வேப்பெண்ணெயை சிறிது சூடாக தலையில் தேய்த்து சில நாட்கள் குளித்துவர நல்ல பலன் கிடைக்கும். வாத கபதோஷங்களால் நெஞ்சில் சளி உறைந்து மூச்சு திணறல் ஏற்பட்டு அவதியுறும் நிலையில் வேப்பெண்ணெயை சூடு செய்து நெஞ்சில் தடவி, வறத்த கொள்ளு தான்யத்தை துணியில் கட்டி நெஞ்சில் ஒத்தடம் கொடுக்க கபம் இளகி உருகி வெளியாவதால் மூச்சுத் திணறல் குறைந்து விடும்.
தலையில் பேன், ஈறு ஆகிய உபத்திரவங்களில் வேப்பெண்ணெயை தலைக்கு தேய்த்துக் குளித்தல் மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீர்ணம், கப வாத ஜ்வரம், நாக்குப் பூச்சி, மலச்சிக்கல், விஷவாயு மூல மாக ஏற்படும் குளிர்காற்று ஆகியவைகளால் உண்டாகும் உடல் உதறல், நடுக்கம், வலிப்பு, இழுப்பு, மூச்சுத்திணறல் ஆகியவற்றில் வேப்பெண்ணெயை உடலில் தேய்ப்பதாலும், உள் உபயோகத்தாலும், ஆசனவாய் வழியாக செலுத்தும் எனிமா மூலமாகவும் கை கண்ட பலனை நாம் பெறலாம்.
முடி நரைத்தல் மற்றும் சொட்டை விழுதல் ஆகியவற்றில் வேப்பெண்ணெயை மூக்கில் 2-4 சொட்டு தினமும் தொடர்ந்து சிறிது நாட்களுக்கு விடுவதன் பலனாக இவ்வகை சிரமங்களை தவிர்க்கலாம்.உடல் எரிச்சலில் வேப்பிலையை அரைத்து நுரையுடன் உடலில் தேய்த்துக் குளிக்க எரிச்சல் அடங்கி விடும்.
ஜீர்ண உறுப்புகளில் - ருசியின்மை, வாந்தி, குடல் கிருமி, கல்லீரல் நோய்களில் வேப்பிலையை இடித்து சாறு பிழிந்து தேன் கலந்து பருகுவதால் அவை நீங்கி விடுகின்றன. புளி ஏப்பம் மற்றும் கபபித்தங்களின் சீற்றத்தால் ஏற்படும். வாந்தியில் உத்தமமான மருந்தாக வேப்பிலை செயல்படுகிறது. ரத்த நோய்களில் - பால்வினை நோய்களாகிய வெள்ளை, வெட்டை, பரங்கி நோய், கிரந்திப்புண் ஆகியவைகளில் வேப்பம்பட்டை கஷாயத்தினால் அலம்புதல், வேப்பிலைப் பூச்சு, வேப்பெண்ணெயை பஞ்சில் நனைத்து ஊற வைத்தல் போன்றவைகளால் சிகித்ஸை அளிக்கலாம்.
மூச்சுக்குழாய்களில் - கக்கு வாய் இருமலில் கால்-அரை ஸ்பூன் வேப்பெண்ணெயை ஒரு நாளில் மூன்று முறை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் விரைவில் குணமாகி விடும். எண்ணெய் உடலெங்கும் தேய்த்து குளிப்பாட்டுவதும் சிறந்ததே.அதிக சிறுநீர் கழித்தல், கஷ்ட பிரசவம், பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் உடல் உபாதைகள் போன்றவற்றில் விதையை தூள் செய்து தேனுடன் சாப்பிட சிறந்த பலனைத் தரும்.பூ மற்றும் இலைச் சாறு கண்நோய்களுக்கு சிறந்தது (கண்களில் ஊற்றவேண்டும்.)