முதுகு தண்டுவடத்தில் வலி என்பது முன்பெல்லாம் வயதானவர்கள் தான் கூறுவர். ஆனால் இன்று இளம் வயதினரையும் அது தாக்கியுள்ளது. கழுத்து, நடுமுதுகு மற்றும் இடுப்பு வலி என்று ஏதேனும் ஒரு இடத்திலோ அல்லது எல்லா இடத்திலும் சிறுவர்கள் கூட கூறுகின்றனர். இதற்கு என்ன காரணம்? வராமல் இருப்பதற்கான வழிகள் என்ன? வந்துவிட்டால் சரி செய்து கொள்வதற்கான மருந்துகள், உணவு வகை மற்றும் தினசரி நடவடிக்கைகள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
நமது உடலை தாங்கி சரியான நிலையில் வைத்திருக்க வாதம், பித்தம், கபம் எனும் மூன்று தோஷங்கள் உதவுகின்றன. கபம் உடல் பலத்தைத் தோற்றுவிக்கும், பித்தம் வலிமையைக் கிரகித்துக் கொள்ளும், வாதம், குளுமை, சூடு ஆகியவற்றை உடலில் பரவச் செய்யும். உடல் நிலை பெற்றிருக்க இவ்வாறு இம்மூன்று தோஷங்களும் நமக்கு உதவுகின்றன. ஆனால் இம்மூன்றும் சீற்றம் அடைந்து விட்டால் நோய்கள் உருவாகின்றன. உடலில் வலி வருவதற்கு வாதமும், எரிச்சலை தோற்றுவிப்பது பித்தமும், உடல் அரிப்பைத் தருவதில் கபமும் அவைகளின் சீற்றத்தில் முக்கிய குறிகளாக தென்படும்.
தண்டுவட வலி ஏற்படுவதில் வாத தோஷம் முக்கிய பங்கு வகிப்பதை அறிகிறோம். வாதம் எதனால் சீற்றம் கொள்கிறது. என்பதை தெரிந்து கொள்வதை நலம் பயக்கும்.
தன் உடல் சக்திக்கு மீறிய செயல்களை செய்தல் (உதாரணம் - மிகுந்த சிரமத்துடன் படிக்கட்டுகளில் தண்ணீரை வாளியில் பிடித்து எடுத்துச் செல்லுதல்)
அளவுக்கு மீறிய உடற்பயிற்சி.
சிற்றின்பத்தில் அதிக ஆர்வத்துடன் கூடிய செயல்பாடு.
மிகவும் உயர்ந்த இடத்திலிருந்து கீழே விழுதல்.
ஓடுதல், உடலுறுப்புகளை மிகுதியாகத் துன்பறுத்துதல்.
கீழே விழுந்து அடிபடுதல்
பெருங்குழி முதலியவற்றைத் தாண்டுதல், குதித்துக் கொண்டே நடத்தல்
அதிக தூரம் நீந்துதல், இரவு கண் விழித்தல், பளு சுமத்தல், நாற்காலியில் கால்மேல் காலைப் போட்டு அமர்தல்,
இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரவாகனங்களில் வெகுதூரம் பயணம் செய்தல், மிகுந்த தூரம் நடத்தல்.
காரம், துவர்ப்பு, கசப்புச்சுவையுள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுதல்
எண்ணெய்ப் பசையில்லாத, எளிதில் ஜீரணமாகக் கூடிய, குளுமையான வீரியம் கொண்ட பொருள்களை உணவாக சாப்பிடுதல்,
உலர்ந்த காய்கறிகள், வரகு என்னும் அரிசி, காட்டுத்திணை, பயறு, சிறுபயறு, துவரம்பருப்பு, பட்டாணி, மொச்சை போன்றவற்றை அதிகமாக சாப்பிடுதல்.
பட்டினி கிடத்தல், அதிகமாகவோ, அளவில் குறைந்தோ, குறிப்பிட்ட நேரத்திலல்லாமலோ உணவை உண்பது, உடலிலிருந்து வெளியேறும் காற்று, சிறுநீர், மலம், விந்து, வாந்தி, தும்மல், ஏப்பம் துக்கத்தால் தோன்றும் கண்ணீர் முதலியவற்றை வெளியேற்றாமல் அடக்குதல் முதலிய காரணங்களால் வாதம்
சீற்றமடைந்து தண்டு வடத்தை பாதிக்கலாம்.
மேலும் குளிர்காலம், வானத்தில் மேகமூட்டம் ஏற்படுதல், காற்று மிகுதியாக வீசுதல், அதிக மழைபெய்யும் நேரம் ஆகிய காலங்களில் வாதம் சீற்றம் பெறும். விடியற்காலை, பிற்பகல் நேரங்களிலும், உணவு செரிமானமடைந்த பின்னும் வாதத்தின் சீற்றத்தால் தண்டுவடத்தில் வலி அதிகமாவதைக் காணமுடியும்.
மேற்கூறிய பழக்கங்களை தவிர்த்தல், உணவில் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையை சேர்த்தல், நெய்கலந்த சூடான புஷ்டி தரும் உணவு, சூடான வீர்யத்தினை உடைய உணவு வகைகள், சரியான நேரத்தில் அதாவத பசி ஏற்பட்டவுடன் அதிகம் பட்டினியில்லாமல் உணவை உண்பது, உஷ்ணப்பாங்கான விரிப்புகளில் படுத்தல் போன்ற செயல்களாலும், இயற்கை உபாதைகளை அடக்காமல் அவைகளின் உந்துதல் ஏற்பட்டவுடன் வெளியேற்றுதல் போன்றவை மூலம் வாதம் சீற்றமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தண்டுவடத்தில் Disc bulging, Disc Prolapse , தேய்மானம், disc compression in nerve root போன்ற வலி உபாதைகளில் பல வைத்ய முறைகளை ஆயுர்வேதம் விரிவாக எடுத்துரைக்கிறது.
முதலில் நல்ல ஓய்வு. கம்பளி போன்ற உஷ்ணப் பாங்கான விரிப்பு கொண்ட படுக்கையில் உடலை அசைக்காமல் படுத்திருப்பதும் (மல்லாந்து கால்களை நீட்டி) நல்லது. தசைகள் விரைத்திருப்பதும் தசைகளை இயக்கும் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தமும்தான் தண்டு வட வலிக்கு முக்கிய காரணம்.
தத்தூராதி தைலம் - மிக எளிய முறை. கருஊமத்தை இலை அல்லது சாதாரண ஊமத்தையை இடித்துப் பிழிந்த சாறு 200 IL. நல்லெண்ணெய் 400 IL. ஆகிய இரண்டையும் அடுப்பிலேற்றிச் சாறு சுண்டிக் கசண்டாகும் வரை காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். சற்று ஆறியதும் கட்டிச்சூடம் 10 கிராம் தூளாக்கிப் போட்டு கலக்கிவிடவும். இந்தத் தைலத்தை வலியுள்ள பகுதிகளில் தடவிக் கோதுமை தவிட்டை வறுத்து ஒத்தடம் கொடுக்கவும். தினம் மூன்று வேளை ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஒத்தடம் கொடுத்த பின் ஏற்படும் வியர்வையையும் எண்ணெய்ப் பிசுக்கையும் துணியால் துடைத்துவிட்டு ஓய்வு தரவும். பிறகு மெல்லிய பூச்சாக இம் மருந்தை தடவி விடுவதும் நல்லதே. சிலருக்கு சூடான தைலத்திலிருந்து வரும் ஊமத்தை மணம் குமட்டல், நமைச்சல் தரும். அவர்களது தேகவாகு அப்படி. அப்போது இதை நிறுத்தவும்.
சசிஸார தைலம் - ஓமம் 400 கிராம். 4 லிட்டர் தண்ணீரில் கஷாயமிட்டு 1 லிட்டர் மிதமாகக் காய்ச்சி முன்போல எண்ணெய்யுடன் காய்ச்சி எடுத்துக் கற்பூரம் கலந்து கொள்ளவும். தத்தூராதி தைலம் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு இது நல்லது.
ஆஸ்பத்திரியில் தங்கி சிகித்ஸை பெற்றால்தான் குணமடைய முடியும் என்ற அளவுக்கு நோயின் தன்மையிருந்தால் முதலில் நோயாளிக்கு ருசியும், பசியும், மலம் சிறுநீர் நன்கு வெளியேறுவதற்கான மருந்துகள் தரப்படும். பிறகு குடலில் வாயுவின் சீற்றத்தை குறைக்கும் வகையில் Enema முறையில் (ஆஸனவாய் வழியாக) கஷாய வஸ்தி எண்ணெய் வஸ்தி என்று மாறி மாறிப் பிரயோகம்
செய்யப்படும். அதன் பிறகு தலைமுதல் பாதம் வரை மூலிகை எண்ணெய்யால் மசாஜ் (உடலெங்கும் தேய்த்து இதமாகப் பிடித்துவிடுதல்) செய்யப்படும். முக்கியமாக தண்டுவடப் பகுதியில் இதமாக தசைகளின் இறுக்கம் தளர்வுரும் வரை எண்ணெயால் தேய்த்து நோய்க்குத் தகுந்தவாறு வியர்வை முறைகளை செய்து வாதத்தின் சீற்றம் குறைக்கப்படும். பிறகு வலியுள்ள தண்டவடப்பகுதிக்கு வெளியே உளுந்து மாவைப் பின்சந்து வரம்பு கட்டுக் கட்டி வரம்பினுள்ளே பஞ்சை தோலின் மீது போட்டு அதன்மேலே மூலிகை எண்ணெய்யை வெதுவெதுப்பாக விட்டு அரை மணி முதல் முக்கால் மணி வரை ஊற வைத்து பிறகு எண்ணெய்யையும் வரம்பையும் எடுத்து விடும் சிகித்ஸை முறைகளால் முதுகு தண்டுவட வலிகள் நீங்கி விடுகின்றன. பத்திய உணவுகளும் உள் மருந்துகளும் நோயின் தண்மைக்கேற்ப வழங்கப்படும்.