ஆயுர்வேத மருந்துகளைச் சாப்பிட்டுக் கொண்டே சர்க்கரை நோய்க்கான ஆங்கில மருந்துகள், இன்சுலின் இஞ்ஜெக்ட்சன் போன்றவற்றையும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை வியாதியில் ஆயுர்வேத மருந்துகளின் குறிக்கோள். உடலில் தாதுக்களிலுள்ள நெருப்பினைத் தூண்டி உணவின் சாராம்சத்தை சக்தியாக மாற்றுவதும், வாத பித்த கபங்களாகிய மூன்று தோஷங்களால் எது கூடியுள்ளதோ, அவற்றின் சீற்றத்தைச் சீராக்குவதும், தாதுக்களில் ஏற்படும் குறைவைத் தடுத்து நிறுத்தி பலப்படுத்துவதும்தான். இவ்விதச் செயல்களால் நோயின் வேரையே அழித்து உடலை மருந்துகளின் மூலம் பாதுகாக்கலாம். ஆங்கில மருந்துகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நல்ல கட்டுப்பாட்டில் வைக்கும் திறம் வாய்ந்தவை. அதனால் ஆயுர்வேத மருந்துகளுடன் ஆங்கில மருந்துகளைச் சர்க்கரை வியாதிக்குச் சேர்த்துச் சாப்பிடுவதால் தோஷமில்லை. ஆனால் உபயோகிக்கும் தறுவாயில் ஆயுர்வேத மருந்துகளின் உபயோகம் அவற்றின் வீரியத்தைக் குன்றச் செய்து விடுகின்றது.
சிறுகுறிஞ்சான் மட்டும் சாப்பிட்டால் நோய் குறையும் என்று சொல்வதற்கில்லை. ஆயுர்வேத மருத்துவம் எப்போதும் நோயாளிக்குத்தானே தவிர நோய்க்கு அல்ல. பசியின்மை, உணவில் உள்ள தவறுகள், உடற்பயிற்சியின்மை, பகலில் அதிக உறக்கம் போன்றவை சர்க்கரை வியாதிக்கு காரணமாக அமையலாம். மருத்துவரை அணுகி உடல் கோளாறுகளை நன்கு எடுத்துரைத்து மருந்துகளைச் சாப்பிட்டால்தான் நோய் தீருமே தவிர, பொதுவாக ஒரு மூலிகை எல்லாவித சர்க்கரை வியாதிகளையும் குணப்படுத்தாது.
குறைந்த ரத்த அழுத்தம், உடல் இளைப்பு இதற்கு மருந்து என்ன?
மருந்தைவிட நோயில்லாதிருக்கக்கூடிய வழிகளை அறிந்து அதன்படி திடமான மனதுடன் நடந்தால் நோயே வராது. அச்வினி தேவதைகள் என்னும் இரட்டையர், தேவர்களுக்கு வைத்தியர். இந்திரனுக்கும் ஆயுர் வேத குரு என்ற பெருமை அவர்களுக்கு உண்டு. வேதத்திலும் புராணங்களிலும் இவர்கள் நிகழ்த்திய பல அற்புத சிகிச்சைகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தின் அடிப்படை உண்மைகள் எவ்வளவு தூரம் அறியப்பட்டுள்ளன என்பதை அறிய ஆசை ஏற்பட்டு இரு பறவைகளாக மாறி பாரததேசமெங்கும் சுற்றி வந்தனராம். மருத்துவர்கள் வசிக்கும் வீடுகளிலுள்ள மரத்தில் அமர்ந்து கோ (அ) ருக் கோ (அ) ருக் என்று ஒலி எழுப்பினர். (க:எவன் அருக்:நோயற்றவன் - க:அருக் - கோருக்) . பறவையின் குரல் என இதை ஒருவரும் மதிக்கவில்லை. பறவைகளும் விடாமல் தங்களது பரிட்சை முறையைத் தொடர்ந்தன. கேரள தேசத்தில் வெட்டம் (வடபுரம்) என்ற ஊரிலிருந்து வைத்தியர் பறவைகளின் ஒலியைக் கேட்டதும் சிறிது திகைத்தார். நேயாற்றவன் எவன்? நோய் வராமலிருக்கக் கூடியவன் எவன்? எவ்விதமிருந்தால் நோய் அணுகாது என்று பறவைகளின் கேள்விக்கு உடன் பதிலைத் தந்தார்.
காலே ஹித மிதபோஜூ க்ருத சங்கிரமண: கிரமேண வாமசய:
அவித்ருத மூத்ரபுரிஷ:ஸ்திரிஷ§ ஜிதாத்மா ச ஸோருக்
ஸோ ருக்:- ஸ:அருக்; எவன் நோயுற்றிருக்க முடியும்? சரியான நேரத்தில் உடலுக்கு நன்மை தரக்கூடியதும் தன் இரைப்பையின் அளவிற்கேற்றபடியும் உள்ள உணவை உண்பவனும், சாப்பிட்டதும் தன் சக்தியை உணர்ந்து அதற்கேற்ப நடை கொள்பவனும், இடது புறமாக ஒருக்களித்துப் படுத்துத் தூங்குபவனும், மலம் சிறு நீர் போன்ற இயற்கை உபாதைகளை அடக்காமல் உரிய நேரத்தில் வெளியேற்றுபவனும், சிற்றின்ப விஷயத்தில் தன்னடக்கம் உள்ளவனும்தான் நோயுற்றிருப்பான் என்பதே வைத்தியர் அளித்த பதில்.
வாழ்க்கை முறையில் மிக முக்கியத்துவம் பெற்ற சில விஷயங்களில் இருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் அனைத்தையும் தொகுத்து தரும் இந்த பதிலால் அச்வினி தேவதைகள் மிகவும் திருப்தி அடைந்து பறவை உருவை விட்டு இரு சீடர்களாக வேஷமணிந்து அந்த வைத்தியருக்கே சிகித்ஸை ரகசியங்களைக் காண்பித்து பின் சுய உருவைக்காட்டி குரு தட்சிணையாக வைத்ய சாஸ்திர நூல் ஒன்றையும் தந்து சென்றனர்.
மூக்கு அடைப்பு, சளி வெள்ளையாக வருதல், தலைவலி போன்றவற்றிற்கு ஆயுர்வேத மருந்துகள் என்னென்ன?
மஞ்சள், சாம்பிராணி, ஏலக்காய், வாய்விளங்கம், நாயுருவி விதை இந்த ஐந்து சரக்குகளை நன்கு இடித்து வைத்துக் கொள்ளவும். ஐந்தும் கிடைக்காவிட்டால் கிடைத்த மட்டில் போதும். ஒரு மெல்லிய சுத்தமான வெள்ளைத் துணியில் ஒரு ஸ்பூன் அளவு தூளைப் பரப்பி அந்த துணியைப் பென்ஸில் போல அழுத்திச் சுருட்டிக் கொள்ளவும். சிலர் ஐந்து சரக்குகளையும் தண்ணீர் விட்டரைத்துத் துணிமேல் மெல்லியதாகப் பூசித் திரிபோலச் சுருட்டிக் காயவைத்துக்கொள்வர். இந்தத் திரியின் மேல் 4-5 சொட்டு நல்லெண்ணெய்யையோ, நெய்யையோ விட்டு அதைக் கொளுத்த வேண்டும். எரியும் போது ஊதி அணைத்துவிட்டால் அந்தத் FK புகையும். அந்தப் புகையை லேசாக முகர்ந்தால் தும்மல் வரும். சளியும் உடைபட்டுத் தலைவலி நிற்கும். அவசியமானால் தினம் இருமுறை இதைச் செய்யலாம். லேசாக இழுத்தால் போதுமானது. அதிக அளவில் புகையை உள்ளே இழுத்தால் நெடி தாங்காமல் திணறல் ஏற்படும்.