பற்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நம்மால் பல வியாதிகளை நெருங்கவிடாமல் பாதுகாக்க முடியும். நமது தலையிலிருக்கும் மூளை - கண் - காது - மூக்கு - நாக்கு - வாக்கு ஆகியவற்றுடன் பற்களுக்கு மிகவும் நெருங்கிய தொடர்புள்ளது பற்களை தூய்மையாக வைத்திருப்பவர்களுக்கு மேற்கூறிய இந்திரியங்களை சீராக அவைகளின் வேலைகளைத் திறம்பட செய்திட முடியும். பற்கள் இயற்கையாகவே சிலருக்கு அழகாய், வெண்மையாய், வரிசையாய், உறுதியாய், கடினமான பொருட்களையும் உடைத்து கூழாக்கும் சக்தியுடன் அமைகின்றன. ஆனால் வேறு சிலருக்கு பலவித கோணல்களுடன் வீபரீதமாக அமைந்துள்ளன. பல் அழகாக வரிசையாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் பல் கிளிப்புகள் அணிகின்றனர். துருத்தி நிற்கும் பற்களை பலமாக உள்ளே இழுக்கும் இது போன்ற கிளிப் முறைகளால் முகத்தில் அமைந்துள்ள நரம்புகளிலும் ரத்தக்குழாய்களிலும் அழுத்தம் அதிகமாகி மிகுந்த பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இவ்வகை வைத்ய முறையை தவிர்ப்பது நலம்.
குழந்தைப் பருவம் முதலே பற்களின் பராமரிப்பில் முழு கவனமும் செலுத்தினால் பற்கள் அழகாகவும் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும். அதைப் பெறுவதற்கு உள்ளும் வெளியுமாக உணவும் மருந்துகளும் உதவுகின்றன.
எலும்பு தாதுவிலிருந்துதான் பற்கள் வலிமை பெறுகின்றன. அதனால் நமது உடலில் எலும்பை பலப்படுத்தும் உணவும் பானமும் மருந்துகளும் சிறுவயது முதலே உட்கொள்ளத் தொடங்கினால் எலும்புடன் பற்களும் உறுதிப்படுகின்றன. உணவில் பால் - தயிர் - மோர் - வெண்ணெய் - நெய் மருந்துகளில் - சிருங்கம் (மான் கொம்பு) - பிரவாளம் (பவிழம்) - முத்து - முத்துச்சிப்பி - சோழி - அப்ரகம் - அயஸ் (இரும்பு) ஆகியவற்றை புடம் மற்றும் பாவன முறைகளாக சுத்தி செய்து உள்ளுக்குச் சாப்பிட பற்கள் விரைவில் பலம் பெறுகின்றன.
வெளிவழியாக பற்களை நம்மால் இருவழிகளில் பாதுகாக்க முடியும். அவை 1. சோதனம் (சுத்தி முறைகள்) 2. கண்டூஷ கவளங்கள் (வாய் கொப்பளித்தல்)
பற்களை திடமாக வைப்பதில் நல்லெண்ணெய்க்கு நிகராக எதுவுமில்லை. தினமும் காலையில் பல்துலக்கியதும் அரைவாய் நிறையும் அளவு நல்லெண்ணெயை வாயில் விட்டுக் கொண்டு 10 -15 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு துப்ப வேண்டும். இதை தைல கண்டூஷம் என்று ஆயுர்வேதம் வர்ணிக்கின்றது. தொடர்ந்து இதை உபயோகிப்பதன் மூலம் பற்கள் தேய்வை அடையாமலும், ஈறுகளும் வேர்களும் உறுதியும் பெறுகின்றன. வலி வராமலும், புளிப்புச் சுவையினால் ஏற்படும் கூச்சமும் உண்டாகாது. கடினமான உணவுகளையும் எளிதில் உடைத்து சுவைத்துச் சாப்பிட நல்லெண்ணெய் கண்டூஷம் உதவுகிறது.
பல் துலக்கும் முறையும், எப்போதெல்லாம் பல் துலக்க வேண்டும் என்ற விஷயத்தையும் சிரத்தையுடன் அனுஷ்டிப்பதன் மூலம் ஊத்தை அழுக்கு ஆகியவற்றை முழுமையாக அகற்ற முடியும். அவ்வாறு சுத்தமாக வைத்திருந்தால்தான் உணவின் சாரத்தை பற்கள் முழு அளவில் பெற்று பயனடையும்.
காலையில் கண்விழித்ததும் மலஜலங்களை போக்கி வாயை நன்கு தண்ணீரினால் கொப்பளித்து பிறகு பல் துலக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் உணவு உண்டதும் பல் துலக்க வேண்டும். ஆனால் இன்று அது நடைமுறை சாத்யம் அல்லாததால் இரவில் படுக்கும்முன் பல் துலக்குவது நல்ல பழக்கமாகும். இரவில் பல் தேய்த்த பிறகு கால்சியம் சத்து நிறைந்த பால், பழ ரஸங்களை அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் பற்களில் சத்து படிவதால் பலவித பல்நோய்களும் பசியைத் தூண்டும். நெருப்பும் கெட்டுவிடும். ராத்திரி முழுவதும் வாயில் பற்களின் இடுக்குகளில் எவ்வித பண்டமும் தங்கும்படியாக விடக்கூடாது.
இன்று நாம் பிரஷ்தான் பல் தேய்க்க பயன் படுத்துகிறோம். நம் முன்னோர்கள் ஈரமுள்ள ஆல், அத்தி, எருக்கு, கருவேல், இலந்தை மரக்குச்சிகளை உபயோகித்து பற்களை பாதுகாத்தனர். இவ்வகை குச்சிகள் துவர்ப்பு, கசப்பு, காரம் போன்ற சுவை நிரம்பியவை, வாய் மற்றும் பற்களில் அழுக்கு சேராதபடி பாதுகாப்பதில் இச்சுவைகள் பெரிதும் உதவுகின்றன. ஆலங்குச்சியினால் காந்தி, புங்கங் குச்சியினால் விஜயம், இச்சியினால் பொருள் விருத்தி, இலந்தையினால் இனிமையான குரல்வளம், கருங்காலியினால் நல்ல வாஸனை, அத்தியினால் வாக்ஸித்தி, இலுப்பையினால் திடமான செவி, நாயுருவியினால் தைர்யமும், புத்தி கூர்மையும், மருத மரத்தினால் ஆயுள் விருத்தி, தலைமயிர் நரையின்மை, போன்றவை ஏற்படுவதாக பழைய நூல்களில் காண்கின்றன.
அரச மரக்குச்சி மங்களகரமானது. பல் தேய்க்க பயன்படுத்தக்கூடாது. ஆலம் விழுதுகள் பல் தேய்ப்பதற்கு உத்தமமானது. பற்களை உறுதிப்படுத்துவதில் நிகரற்றது. நகர வாழ்க்கையில் குச்சிகள் சாத்தியமில்லை என்ற எண்ணம் உள்ளது. பிரஷ் உபயோகிப்பதால் குச்சிகளின் நன்மை எதுவும் கிடைக்காதென்றாலும் வேறவழியில்லாது பயன்படுத்துபவர்கள் அதில் அழுக்கு சிறிதும் சேராதவாறு அடிக்கடி வெந்நீரில் சுத்தப்படுத்த வேண்டும்.
பல்பொடிகளை பற்களில் தேய்க்கும் போது கை நடுவிரல் மற்றும் கட்டை விரல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மிகவும் அவஸர ஸமயங்களில் மட்டுமே விரலை பல் தேய்க்க பயன்படுத்தலாம். வைத்ய சாஸ்திரம் மட்டுமல்ல, தர்ம சாஸ்திரங்கள் கூட விரலினால் பல் துலக்குவதைப் பாபம் என்று கண்டிக்கின்றன.
பல் துலக்கும் முறையில் அதிக அழுத்தம் கொடுத்து பற்களை தேய்க்கக்கூடாது. ஈறுகளில் பிரஷ் படாதவாறு நிதானமாகத் தேய்க்க வேண்டும். மேல் வாய்ப் பற்களை தேய்க்கும்போது மேலிருந்து கீழாகவும், கீழ்வாய்ப் பற்களை கீழிருந்து மேலாகவும் தேய்க்க வேண்டும். பல் தேய்த்ததும் வாயில் நிறைய தண்ணீர் விட்டு கொப்பளிக்க வேண்டும்.
ஆயுர்வேத மருந்துகளில் பல் பாதுகாப்பிற்கு அரிமேதஸ் தைலம், 10 சொட்டு வெந்நீருடன் காலை, இரவு பல் தேய்த்த பிறகு கொப்பளிக்க பயன்படுத்துதல் நலம் தரும்.