மூளை - மனம் - சிந்தனை சுக துக்கங்களை அறிய காரணமாயிருப்பது மனம் என்று தர்க்க சாஸ்திரம் கூறுகிறது (சாட்சாத்காரே சுக துக்காநாம் கரணம் மன உச்யதே) ஆனால் அந்த மனம் என்ன எ

மூளை - மனம் - சிந்தனை

சுக துக்கங்களை அறிய காரணமாயிருப்பது மனம் என்று தர்க்க சாஸ்திரம் கூறுகிறது (சாட்சாத்காரே சுக துக்காநாம் கரணம் மன உச்யதே) . ஆனால் அந்த மனம் என்ன என்பதை ஒருவரும் சொல்ல வில்லை. சிந்தனா சக்தி மூளையில் ஆரம்பமாவதாக விஞ்ஞானங்கள் கூறுகின்றன. வியாதியின் பாதிப்பால் மூளையின் வேலை திறன் குன்றினாலோ, தலைக்காயத்தினால் மூளை பாதிப்படைந்தாலோ மனதின் பாதிப்பை அம்மனிதனின் செயல்கள் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. அதனால் மூளைக்கும் மனதிற்கும் சம்பந்தம் உள்ளது, ஆனால் என்ன வகையான சம்பந்தம் என்றுதான் தெரியவில்லை. பித்தம் கல்லீரல் பகுதியிலிருந்து சுரந்து தன்னுடைய செயலை செய்கிறது. அதுபோல உடலில் பல கணையங்களிலிருந்து வெளிப்படும் திரவங்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை சரிவர செய்கின்றன. அதே போன்று மூளையிலிருந்து மனமும் சிந்தனையும் உண்டாகிறதா? அது திரவமா? அல்லது காரியத்தின் வாயிலாக அறியக்கூடியதா? என்பது சரியாகத் தெரியவில்லை.

உணர்ச்சிக்கு மூல காரணமாக இருப்பது மூளை என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். இந்த உணர்வு பல காரணங்களால் மாறக்கூடும். உடலில் சில உறுப்புகளாகிய இதயம், மூச்சுக்காற்றை இயக்கும் நுரையீரல் தம் தம் வேலைகளை செய்துகொண்டிருந்த போதும் ஞானேந்திரியங்களாகிய கண், காது, மூக்கு போன்றவற்றின் செயல்கள் தடைப்பட்டிருக்கும் போது, மனிதன் உணர்வற்றவனாகிவிட்டான் என்று கூறுகிறோம். இந்நிலைமைதான் மதம் அல்லது மூர்ச்சை என்று சொல்கிறோம். இந்நிலைமை மது அருந்துவதாலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானாலும், அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்களைக் கேட்டாலோ, பார்ப்பதாலோ வரக்கூடும். ஆக, உடலுக்குத் தேவைப்படாத விஷவஸ்துக்கள் அதிகரித்தால் மூளை பாதிப்பு ஏற்பட்டு சுயநினைவை இழக்க நேரிடுகிறது. ரத்தத்திலும், பிற உடலின் திரவங்களிலும் இருக்கும் ரஸாயனப்பொருள்கள் மூளையை பாதிக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.

மூளையைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டேயிருந்தாலும் அதன் ஆளுமை சக்தி பற்றிய விபரங்கள் போதவில்லை. ஆனால் மூளை சதா உழைத்துக் கொண்டேதான் இருக்கிறது. தூக்கத்திலும் கூட அது உழைக்கிறது. அதற்கு ஓய்வு தேவையில்லை என்று விஞ்ஞானபூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். அதிலும் யோகிகளைத் தவிர மற்றவர்கள் அதன் தொழிலைத் தடுக்கவோ குறைக்கவோ முடியாதென்னும் தெரிவிக்கிறார்கள். அது எப்போதும் சர்வ ஜாக்கிரதையாக உடலை பாதுகாக்கிறது. சர்க்கரையின் அளவு ரத்தத்தில் கூடும் போது pancreas (பேன்கிரியாஸ்) எனும் கிரந்திக்குச் செய்திகளை அனுப்பிவீ Insulin திரவத்தை அதிக அளவில் பெருக்கி சர்க்கரையின் அளவை அதிரடியாகக் குறைக்கச் செய்கிறது. சர்க்கரை அளவை மிகவும் குறைந்துவிட்டால்

கல்லீரலுக்கு செய்தி அனுப்பி அதனிடமிருக்கிற சர்க்கரையின் மூலப் பொருளை அதிகரிக்கச் செய்கிறது. உடலுக்கு எது தேவையோ அதனிடத்தில் விருப்பம் உண்டாக்குகிறது. உடலுக்கு எது தேவையில்லையோ, எது இருந்தால் நோய்க்குக் காரணமாகிறதோ அதன் மேல் வெறுப்பை உண்டாக்குகிறது.

மூளையை சுற்றி பல வகைப்பட்ட திரவங்களும் ரத்தமும், கிரந்திகளும் அமைந்துள்ளன. மூளைக்கும் உடலுக்கும் இருவிதமான நரம்புத் தொடர்களால் சம்பந்தம் ஏற்படுகிறது. மூளையிலிருந்து உடலுக்குச் செல்லும் செய்தி மற்றும் செயல்கள் அனைத்தும் ஆஜ்ஞாவஹ நாடிகளில் நடை பெறுகின்றன. சம்ஜ்ஞாவஹ நாடிகள் செய்தி மற்றும் செயல்களை உடலிலிருந்து மூளைக்கு கொண்டு செல்கின்றன. மூளை தலைமை ஸ்தாபனமாகவும் அங்கிருந்த படியே பல பிரிவுகளை உடைய நரம்புக் கூட்டங்கள் மூலம் ஜாக்கிரதை உணர்வையும், வேலையை தடுக்கவோ, அதிகரிக்கவோ செய்கிறது.

மூளையின் ஒவ்வொரு பாகமும் தனித் தனியே வேலை செய்கிறது. கைகளை இயக்க ஒரு பகுதி, கால்களை இயக்க மற்றொரு பகுதி, பார்வைக்கு ஒரு பகுதி, பேச்சிற்கு ஒரு பகுதி என்று, மூளையை செயல் இழப்பு அந்தந்த பகுதிகளை பாதிக்கிறது.

ஒரு சிலர் அறிவாளியாக திகழ்வதற்குக் காரணம் மூளையின் மேற்புறத்தில் () அநேக வளைவுகள் அளவு கூடுவதால்தான். இவ்வளைவுகளில் கோடிக்கணக்கான கோசாணு (Brain cells) க்களிருக்கின்றன. ஒவ்வொரு கோசாணுவிற்கும் இரண்டிரண்டு படர் கொடிகளி (Tendrils) ருக்கின்றன. இவைகளின் மூலமாக ஒன்றிருந்து மற்றொரு கோசாணுவிற்கு மின் ரசாயனச் (electro chemicals) செய்திகள் பரவுகின்றன. இந்த வலி ஞாபகம் முதலியவைகள் இந்த அணுக்கள் மூலம் மின் ரசாயனச் செய்திகளால்தான் நடைபெறுகின்றன.

உடல் பலத்திற்கு தேகப்பயிற்சி தேவை. அதுபோல அறிவு வளர்ச்சிக்குப் பயிற்சி தேவை. அறிவுக்கு எவ்வளவு பயிற்சி அளிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அது சிறப்பாகக் கூடும், பலம் பொருந்தியாதாகும். அறிவை தாய் தந்தையர் மூலம் ஓரளவுக்கு கிடைத்துள்ளது. அதைக் கொண்டு ஒருவன் மேதாவியாவது ஒருவனின் சூழ்நிலையும் பயிற்சியும் சிறப்பாக அமைவதில்தான் உள்ளது. அறிவு வளர்ச்சிக்கு மூல காரணம் கவனித்தலும் சர்ச்சை செய்வதும் ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்குமிருக்கும் சம்பந்தா சம்பந்தத்தை அறிந்து கொள்வதும் ஆகும். அறிவு வளர்ச்சி, நேர்மையான சிநத்னையாலும், தர்க்க ரீதியாக பேசுவதாலும், மனதின் பண்பாட்டாலும் ஏற்படும். அறிவு வளர்ச்சிக்குப் பசுவின் நெய் உதவுகிறது. மூளையின் பெரும்பாகம் ஒரு வகை கொழுப்பு (phospholipods) உள்ளதாகயிருக்கிறது. அதுவே ஆகாரமாகவுமாகிறது. அதற்கு வேண்டிய ஆகாரவஸ்து பசுவின் நெய்யிலிருந்து உண்டாகிறது. அதனால்தான் ஆயுர்வதேத்தில், பசு நெய்யின் குணங்களைச் சொல்லுமிடத்து புத்தி, ஞாபகசக்தி, தாரணாசக்தி முதலியவைகளுக்கு உதவும் என்று சொல்லப்படுகிறது. அதாவது விஷயங்களை அறிவதற்கும், அறிந்த பொருள்களை திரும்புவம் ஞாபகப்படுத்துவதற்கும், தெரிந்த விஷயங்களை மனத்திலேயே தேக்கி வைத்துக் கொள்வதற்கும் பசுவின் நெய் உதவுகிறது.

சிலருக்கு ஞாபக சக்தி குறைவதற்குக் காரணம் அறிகின்ற விஷயத்தைப் பற்றிய முழு உணர்வுடன் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் அறியத் தவறுவதால் மூளையில் பதிவுகள் குறைவதால்தான். வயதான காலத்தில் ஞாபக சக்தியோ தாரண சக்தியோ குறையக்கூடும் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லை. அறிவு வளர்ச்சிக்கு வயோதிகத் தன்மை கூடாது என்பதற்கும் தேவையான சான்றுகள் கிடையாது. மூளைக்குப் போகின்ற ரத்தக் குழாய்கள் சரியாக வேலை செய்தாலும் போதுமான ஆகார வகைகள் இருந்தாலும் மூளையின் வேலை சரியாகவே நடக்கும். சர்க்கரை நோய், பாண்டு, சோகை போன்றவற்றால் மூளையின் தொழில் குறையக்டும். கிழத்தன்மையில் இந்திரியங்கள் சரிவர வேலை செய்வதற்கென்றே சில 'ரசாயனங்கள்' என்கிற மருந்துகளை சாப்பிட வேண்டியுள்ளது. இவைகளால் ஓரளவு இழந்த சுறுசுறுப்பைத் திரும்பவும் பெற முடியும். மூளைக்கு அதிக ஓய்வு கொடுத்தால் அதை மறுபடியும் இயங்கச் செய்வது கடினமாகக்கூடும். உடலில் ஒரு அங்கத்தின் செயலை சிலகாலம் நிறுத்திவைத்தால் அதன் தசை நார்கள் வலுவிழப்பதுபோல் மூளையும் தூண்டுதல் சக்தியைக் கொடுக்காமலிருந்தால் மழுங்கி விடும் தன்மையை அடைந்துவிடும்.