நன்றாகப் பசித்து ருசித்துப் சாப்பிடுபவருக்குத் தான் ஆரோக்கியத்தை நிலை நிறுத்த இயலும். நீங்கள் உணவில் முற்பாதி பருப்புப் பொடி, மிளகு ஜீரகப் பொடி, ஜங்காயப் பொடி ஆகியவற்றில் ஒன்றைச் சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெயுடன் கலந்து சாப்பிடவும். இது எளிதில் ஜீரணமாகக் கூடியது. வயிற்றில் கன உணர்வையும் ஏற்படுத்தாது. அதன் பிறகு, ஜீரக ரசம் சூடான சாதத்தில் கலந்து உண்ணவும். முற்றிய மாங்கொட்டையினுள் உள்ள மாம்பருப்பை உலர்த்தி வைத்துக் கொண்டு அத்துடன் கறிவேப்பிலையும் சிறிது மிளகும் சேர்த்து அரைத்து மோரில் கரைத்தச் சூடாக்கித் தாளித்து சிறிது உப்புச் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும். மாந்தளிரையும் மாம்பருப்பின் இடத்தில் உபயோகிக்கலாம். அடிக்கடி மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் தொந்தரவு நீங்கி நல்ல ருசியும் பசியும் ஏற்படுத்தும் உணவு முறை இது.
மருந்துகளில் வில்வாதி லேகியம் 5 கிராம் அளவில் காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் நக்கிச் சாப்பிடவும். உணவிற்குப் பிறகு ஜீரகாரிஷ்டம் 30 I.L. அளவில் காலை, இரவு சாப்பிடவும்.
யூரினால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு வழி என்ன? அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டுமா?
வயோதிகத்தில் வாத தோஷத்தின் சில குணங்களாகிய வறட்சி, குளிர்ச்சி போன்றவை இயற்கையாகவே மனித உடலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவ்வகைக் குணங்களால் குடல் மற்றும் உள்உறுப்புகளில் நெய்ப்புத் தன்மை குறைந்து அவற்றின் செயல்திறனில் தொய்வு ஏற்படுகிறது. இந்தத் தொய்வினால் உறுப்புகள் கெட்டித்துப் போய் விடுகின்றன. நெய்ப்புத் தன்மை குறையாமலும், உறுப்புகள் சுறுசுறுப்புடன் என்றும் செயல்பட எண்ணெய்க் குளியலும், சிறிய அளவில் நெய்யை உருக்கி சாதத்துடன் சாப்பிடுவதும் சிறந்தது. நீங்கள் தொப்புளுக்குக் கீழ் வயிற்றுப் பகுதியில் மேலிருந்து கீழாக விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் கலந்து வெதுவெதுப்பாகத் தடவி அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை ஊறி வெந்நீரில் குளிக்கவும். இவ்வாறு செய்வதால் குடலில் வாயுவின் ஓட்டம் சீராகி அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு நீங்கி விடும். பிராஸ்டேட் கிளாண்ட் மறுபடியும் சாதாரண நிலைக்கு வர சுகுமார கிருதம் எனும் நெய்யை ஒரு ஸ்பூன் அளவில் உருக்கி காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும். காரம், கசப்பு, துவர்ப்பு சுவை கொண்ட உணவு வகைகள் வாயுவின் சீற்றத்தை அதிகப்படுத்தும். அவற்றைத் தவிர்த்து வாதத்தைக் குறைக்கும் இனிப்பு, புளிப்பு சிறந்தவை. உப்பைச் சிறிய அளவில் சேர்க்கலாம். எந்த உணவையும் மறு முறை சூடாக்கிச் சாப்பிடக் கூடாது.
நெஞ்சில் கோழை அதிகம் இருப்பதன் காரணம் என்ன?
ரத்தப்பரிசோதனையில் 'ஈஸனோபில்' என்ற நுண்ணணுக்களின் எண்ணிக்கை இருக்க வேண்டியதைவிட அதிகமாகத் தங்களுக்குக் காணக்கூடும்.
இந்த நிலையில், ஆயுர்வேத மருத்துவ முறை மெச்சத்தக்க பயன் அளிக்கிறது. மருந்துகள், உணவுமுறை, பழக்க வழக்கங்கள் ஆகியவை முக்கியமாக ரத்தத்தைச் சீராக்குவதாகவும், அதன் மூலம் இருமல், கோழை போன்றவற்றைக் குறைக்க உதவுவதாகவும் அமைய வேண்டும். வெறும் மருந்தை மட்டும் சாப்பிட்டு, கட்டுப்பாடில்லாத உணவும் பழக்க வழக்கங்களும் கொண்டிருந்தால், அது ஓட்டைத் தொட்டியில் நீர் நிரப்புவதற்குச் சமம். இதனால் வியாதி அகலாது.
உணவு - பழக்க வழக்கங்கள் - மாப்பண்டம், புது அரிசி, இனிப்புகள், எண்ணெய்ப் பண்டங்கள், ஐஸ் கலந்த பானங்கள், ஐஸ்கிரீம், தயிர், அசைவ உணவு, கொதிக்காத தண்ணீர், குளிர்ந்த நீரில் குளிப்பது, உலாவுவது, ஜன நெருக்கமுள்ள இடங்களிலும் நீர்த் தேக்கமுள்ள இடங்களிலும் வசிப்பது, பகலில் படுத்து உறங்குவது போன்றவை இந்த நோயை அதிகப்படுத்தும் இயல்பு உடையவை. ஆகையால், இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
மருந்துகள் - (பெரிய) மஞ்சிஷ்டாதி கசாயம் ஒன்றரை ஸ்பூனுடன் (7.5 IL) தச மூல கடுத்ரயாதி கசாயம் ஒன்றரை ஸ்பூன் கலந்து 12 ஸ்பூன் (60I.L) கொதித்து ஆறிய தண்ணீர் கலந்து தாளீசபத்ராதி சூர்ணம் 2 கிராம், மதுஸ்னுஹீ சூர்ணம் 1 கிராம்ட, பிரவாள பஞ்சாமிர்தம் 2 அரிசி எடை, சீதாமசுரஸம் 1 மாத்திரை, தேன் அரை ஸ்பூன் ஆகியவற்றைக் காலை, மாலை 6 மணிக்குச் சாப்பிடவும். சாப்பிட்ட ஒரிரு வாரங்களில் நல்ல குணம் கிடைக்கும்.