ஆயுர்வேதத்தின் அறிவுரைகள் "ஜீவராசிகள் அனைத்தும் இன்பம் பெறவே முற்படுகின்றன இன்பம் பெறுவதற்கான முயற்சிகள் பலன் தர நேர்மையின் துணை தேவை அவரவரது கடமை வரம்பினுள் அட

ஆயுர்வேதத்தின் அறிவுரைகள்

"ஜீவராசிகள் அனைத்தும் இன்பம் பெறவே முற்படுகின்றன. இன்பம் பெறுவதற்கான முயற்சிகள் பலன் தர நேர்மையின் துணை தேவை. அவரவரது கடமை வரம்பினுள் அடங்கி, தனக்கும் பிறர்க்கம் பிற்கேடுகள் விளையாதபடி மன வாக்காயங்கள் நேர்மையுடன் பணிபுரிய வாழ்வை அமைத்துக் கொள்வதில் தீவிரமாக ஈடுபடுவது அதற்கு அவசியம்" - வாக்படர்.

"உடலையும் மனதையும் பாதிக்கவல்லவை என அறிந்தே அதில் ஈடுபடுதலாகிய அறிவுத் தடுமாற்றமின்றி பொறிகளை அடக்கி, நல்ல நினைவுடன், தேசத்திற்கும் காலத்திற்கும் தன் உடல்நிலைக்கும் ஏற்றவற்றை உணர்ந்து, நன்னடத்தையைத் தொடர்ந்து கையாள்வதொன்றே நோய் வராமல் பாதுகாக்க உதவக்கூடியது"- சரகஸம்ஹிதை.

"நல்லதும் கெட்டதும் மனதில் பதிகிறது. மனதில் பதிந்தவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தமில்லை. தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்க்கவும், ஏற்க வேண்டியவற்றை ஏற்கவும் சிந்தித்து பகுத்தறிந்து செயல்படும் புத்தி உண்டு. மனம் கொண்டவற்றை எல்லாம் ஏற்கும் சபலம் இந்த புத்தியை தடுமாறச் செய்யலாம். பகுத்தறிவுடன் சிந்தித்து ஏற்றதைச் செயளவில் கொண்டு செலுத்தும் திறமையை திருதி என்பர். மனச்சபலம் இதனையும் கவிழ்க்கும். பகுத்தறிந்தவை நமக்கு - இந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவையா என எடைபோட முன் அனுபவம் உதவும். இந்த முன் அனுபவத்தை அறிவுக்கண்முன் கொண்டு வருவது ஸ்மிருதி எனும் ஞாபகசக்தி. மனச்சபலம் இந்த ஸ்மிருதியைப் புறக்கணிக்கத் தூண்டும். இதனை பிரஜ்ஞாபராதம் - அறிவுத் தடுமாற்றம் என்பர். இந்தத் தடுமாற்றம் தொடர்ந்து தவறான வழியில் செல்லத்தூண்டும். பின்விளைவு - மனமும் உடலும் எப்போதும் நோய் வாய்ப்படக் காரணமான உடல்நிலை சீர்கேடு." - வாக்படர்.

"உடல், மனம், ஆத்மா என்ற மூன்றின் சேர்க்கை ஆயுள். இந்தச் சேர்க்கை நல்ல முறையில் நீடித்திருத்தல் வாழ்வாகும். நீண்ட ஆயுளை கெடுப்பதற்கு எதிரிகள் பல. அவை எப்போதும் இடைவெளியை எதிர்பார்த்து நிற்கின்றன. தன்னைச் சூழ்ந்து நிற்கும் அவற்றை நன்கு உணர்ந்து அவைகளுக்கு இடமளிக்காமல் ஒவ்வொரு நொடியிலும் ஆயத்தனாக இருந்து மனத்திடத்துடன் தன் நடைமுறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்" - சரகர்.

"நன்மை எது என்பதனைக் கருத்துடன் விசாரித்துத் தேர்ந்து எடுப்பவனுக்குக் கல்வி, அறிவு, ஞாபகசக்தி, செயல்திறன், மனோதிடம், நன்மை பயப்பதையே நாடும் சீரிய மனப்பாங்கு, சொல்தூய்மை, மணவடக்கம், தைரியம் இவை எப்போதும் துணை நின்று கை கொடுக்கும். மனதிற்குப் பிடித்ததை நாடுபவனுக்கு இவை துணை நிற்கமாட்டா." - சரகர்.

"மனிதனுக்கு வேர் தலையில், கீழுடல் முழுவதும் அதன் கிளை என முற்றுணர்ந்தவர் கூறுகின்றனர். அதனால் வேரைப் பாதிக்கும் நோய்களை விரைவில் குணப்படுத்த வேண்டும். எல்லாப் புலன்களும் பிராணசக்தியும் தலையிலேயே பொருந்தியுள்ளன. அதனால் அதைக் காப்பதில் மிகக் கருத்துடனிருக்க வேண்டும்." - வாக்படர்.

"உணவும் பானங்களும் உடலிலுள்ள வாயு, பித்தம், கபம், ரத்தம் இவைகளைத் தனித்தும் சேர்த்தும் கெடுத்து உடல் நோய்களை ஏற்படுத்துகின்றன. விருப்பும் வெறுப்பும் பல்வேறு உருப்பெற்று, கோபம், சோகம், பயம், மகிழ்ச்சி, துயரம், பொறாமை, அசூயை, ரக்கம், அழுக்காறு, வேட்கை, பேராசை முதலிய மனக்கிளர்ச்சிகளை ஏற்படுத்தி மன நோய்களை ஏற்படுத்துகின்றன." - ஸுச்ருதர்.

"நீடித்த ஆயுள் மட்டும் இருந்து, வாழ வசதிகள் இல்லாதிருந்தால் அதனைவிடக் கொடிய வினை ஏதுமில்லை. வாழ்க்கை வசதிகளைப் பெறச் சிறந்த ஜீவனோபாயத்தைக் கையாள்வது அவசியம். நேர்மையுடன் தொடர்ந்து வாழும் நல்லோர்கள் குறை காணாதவாறு ஜீவனோபாயத்தை அமைத்துக் கொள்ளுதல் நலம். அப்படி வாழ்க்கையைச் சீராக்கிக் கொள்பவன், மதிப்புக் குறையாமல் வெகு நாட்கள் எதனையும் சாதிக்க வல்லவனாக வாழ்வான்". - சரகர்.

"சரீரம் மனம் இந்திரியங்கள் ஆத்மா என்று நான்கு கூட்டுப் பொருள்கள் அடங்கியது வாழும் இந்த உடல். இந்த நான்கின் கூட்டையே பிராணன் என்று குறிப்பிடுவார்கள். பிராணன் உடலில் தங்கவும் பிராணனின் இயக்கம் உடலில் சரியே நடக்கவும் உடலுக்கு நெய்ப்பு தேவைப்படுகிறது. உடலில் இந்த நெய்ப்பு உள்ளவரைதான் உறுப்புகள் உரசல் இல்லாமல் மெதுவாக ஒன்றுக்கொன்று பிடிப்புடன் இருக்கின்றன. உயிரே இதனால்தான் உடலில் தரிக்கிறது" - ஸ¨ஸ்ருதர்.

"வாய்மை, ஜீவகாருண்யம், கொடை, தெய்விக வழிபாடு, ஆரோக்ய வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுதல், புலனடக்கம், மணிமந்திரங்களால் தைவிகப் பாதுகாப்பு, ஆரோக்கியத்திற்கேற்ற வாசஸ்தலங்களில் தங்குதல் இவை ஆயுளை நீடித்துக் காப்பாற்றும் மருத்துவ முறைகளில் சிறப்பானவை". - சரகர்.